அர்த்த சிரசாசனம் - Artha Sirsasana - Half Headstand.

அர்த்த சிரசாசனம்.

Artha Sirsasana.

உடலிற்கும் மனதிற்கும் நலம் பயக்கும் பலவிதமான யோக ஆசனங்களை நாம் அவ்வப்போது தொடர்ந்து பார்த்து வருகிறோம். முந்தைய பதிவில் மூளைக்கு வளம் சேர்க்கும் சிரசாசனத்தைப்பற்றி தெளிவாக பார்த்தோம். ஆனால் இந்த சிரசாசனத்தை அனைவரும் எளிதாக பயில்வது சாத்தியமில்லை.


ஆசன பயிற்சியில் பலவருடம் தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்களாலேயே சிரசாசனத்தை பிழையின்றி பயில முடியும்.

ஆனால், நாம் இப்போது பார்க்கப்போகும் ஆசனமானது அனைவராலும் எளிதாக பயிற்சி செய்யக்கூடியதாகவே அமைந்துள்ளது.

சிரசாசனம் பயிற்சி செய்ய விருப்பமுள்ளவர்கள் ஆரம்பத்தில் நாம் இப்போது பார்க்கப்போகும் ஆசனத்தில் நன்கு தேர்ச்சிபெற்றபின் சிரசாசனம் செய்ய தொடங்கலாம். இதுவும் சிரசாசனம் போலவேதான் என்றாலும் அதில் பாதி.

நாம் இப்போது பயிற்சி செய்யப்போகும் ஆசனத்தின் பெயர் "அர்த்த சிரசாசனம்" (Half Headstand).

"அர்த்த" என்பது வடமொழிச்சொல் இதற்கு பாதி என்று பொருள். "சிரசு" என்றால் தலை என்று பொருள். எனவே அர்த்த சிரசாசனம் என்றால் "பாதி சிரசாசனம்" என்று பொருள்படும்.

சிரசாசனத்தில் முழு உடலும் மேல்நோக்கியபடி அமைந்திருக்கும். ஆனால் இந்த அர்த்த சிரசாசனத்தில் தலையிலிருந்து இடுப்புவரை மட்டுமே மேல்நோக்கி இருக்கும் எனவேதான் இது பாதி சிரசாசனம் என்னும் பொருள்படும்படி "அர்த்த சிரசாசனம்" என அழைக்கப்படுகிறது.

சரி,.. இனி இதை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதை பார்ப்போம்.

Half Headstand Pose.

பயிற்சி முறை.

கெட்டியான ஜமுக்காளத்தை நான்காக மடித்துப்போட்டு அதன்மேல் மண்டியிட்டு உட்காரவும்.

இரு கைகளின் விரல்களையும் பிணைத்து உள்ளங்கைகள் உங்களை நோக்கியிருக்கும் படி விரிப்பின்மீது அமைக்கவும்.

தலையை அந்த இரு உள்ளங்கைகளுக்கும் இடையில் தரையில் ஊன்றி இரு கைகளையும் தலையின் இரு பக்கங்களிலும் முட்டுக்கொடுத்து மூச்சை உள்ளுக்கு இழுத்து நிறுத்திக்கொண்டே இடுப்பை மேல்நோக்கி உயர்த்தவும்.

Artha Sirsasana step by step

இரு கால்களையும் ஒருசேர வைக்கவும். இப்போது உங்கள் உடல் பார்ப்பதற்கு முக்கோண வடிவில் இருக்கும். உங்கள் உடலின் முழு பளுவும் இரு கைகளும், இரு கால்களும் தாங்கியபடி இருக்கவேண்டும். கண்களை மூடிக்கொண்டு மூச்சை சீராக விடவும்.

30 வினாடிகள் இதே நிலையில் இருந்து அதன்பின் கால்களை மடக்கி இயல்புநிலைக்கு வந்து முன்புபோல் மண்டியிட்டு உட்காரவும்.

தரையிலிருந்து தலையை தூக்கும் போது மெதுவாக தூக்கவும். வேகமாக தூக்கினால் சிலருக்கு தலைச்சுற்று ஏற்படலாம்.

சில வினாடிகள் ஓய்வுக்குப்பின் மீண்டும் முன்போல் இதே பயிற்சியை செய்யவும். இப்பயிற்சியை திரும்ப திரும்ப 3 முதல் 7 தடவைகள்வரை செய்துவரலாம்.

Artha Sirsasana - Half Headstand.

பலன்கள்.

இப்பயிற்சியால் தலைப்பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் மூளை சுறுசுறுப்படைந்து ஞாபகசக்தி அதிகரிக்கிறது. தலைசார்ந்த அனைத்து நோய்களும் நீங்குவதுடன் கண், காது, மூக்கு சார்ந்த பிரச்சனைகள் நீங்குவதுடன் கண்களும் கூர்மையடைகின்றன.

தலை, கழுத்து பகுதிகளில் அமைந்துள்ள பிட்யூட்டரி மற்றும் தைராய்டு சுரப்பிகளுக்கு செல்லும் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதால் உடலிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் அகலுவதுடன் உடலும் சுறுசுறுப்படைகின்றன. 

இப்பயிற்சியால் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதோடு கழுத்து, கை, கால், தோள் மற்றும் முதுகெலும்புகள் வலிமையடைகின்றன.

இருதயம் மற்றும் நுரையீரல்களின் செயல்பாடுகளும் அதிகரிக்கின்றன.

குறிப்பு.

சிரசாசனம் செய்ய பழகுவதற்கும் முன்னால் ஓரிரு மாதங்கள் இவ்வாசனத்தை பயிற்சிசெய்துவிட்டு அதன்பின் சிரசாசனத்தை பயிற்சி செய்ய "சிரசாசனம்" செய்வது எளிதாகும்.

எச்சரிக்கை.

ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியை செய்துவரலாம் என்றாலும் தலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள், இரத்த அழுத்த கோளாறு உள்ளவர்கள், கண்நோய், காதுவலி, பல்வலி  முதலியவைகளால் அவதியுறுபவர்கள், படபடப்பாக உணர்பவர்கள், கழுத்து மற்றும் முதுகுத்தண்டில் பிரச்சனை உள்ளவர்கள் இப்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

💢💢💢💢💢

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


கருத்துரையிடுக

4 கருத்துகள்

 1. விளக்கம் அருமை சகோ.

  யோகா கற்றுக் கொண்ட போதே சிரசாசனம், புஜங்காசனம் அர்த்த சிரசாசனம் எல்லாம் செய்ய இயலவில்லை சில உபாதைகளால் என்பதோடு வேண்டாம் என்றும் குருஜி சொல்லியதால்...

  ஜானு சிரசாசனம் செய்வதுண்டு..

  நல்ல பதிவு.

  கீதா

  பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.