"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
மணத்தக்காளி - Manathakkali - Types of Nightshade Plant.

மணத்தக்காளி - Manathakkali - Types of Nightshade Plant.

மணத்தக்காளி.

Types of Nightshade  Plant.

[PART - 3]

மணத்தக்காளி என்னும் மூலிகையின் தன்மைகளை பற்றியும், இந்த தாவரத்தினால் மனிதனுக்கு கிடைக்கும் சாதக பாதகங்களை பற்றியும் தொடர் பதிவாக பார்த்துவருகிறோம். அந்த வகையில் இது மூன்றாவது [PART - 3] பகுதி.

மணத்தக்காளியில் ஒன்றல்ல இரண்டல்ல பத்திற்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.

ஆனால் அவைகள் அனைத்துமே உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தப்படுவது இல்லை. மாறாக வெறும் 7 வகையான மணத்தக்காளி இனங்களே மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. அவைகளாவன..

 1. Solanum americanum (சோலனம் அமெரிக்கனும்).
 2. Solanum nigrum (சோலனம் நிக்ரம்).
 3. Solanum douglasii (சோலனம் டக்ளசி).
 4. Solanum opacum (சோலனம் ஒபாகம்).
 5. Solanum ptychanthum (சோலனம் பிடிச்சாந்தும்).
 6. Solanum scabrum (சோலனம் ஸ்கேப்ரம்).
 7. Solanum villosum (சோலனம் வில்லோசம்).

மேற்குறிப்பிட்டுள்ள 7 வகையான தாவரங்களில் முதல் மூன்று தாவரங்களைபற்றி ஏற்கனவே நாம் இக்கட்டுரையின் இரண்டாவது பகுதியாகிய [PART - 2] "மணத்தக்காளி - Manathakkali - Types of Solanum Plant." என்னும் பதிவில் பார்த்துவிட்டோம்.

எனவே,... இந்த மூன்றாவது பகுதியில் அடுத்துள்ள 4 வகையான மணத்தக்காளி இனங்களைப்பற்றி அறிந்துகொள்வோம் வாருங்கள்.

இக்கட்டுரையின் முதல்பகுதியை [Part 1] படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சுட்டுங்க...

>> மணத்தக்காளி - Manathakkali - Black nightshade - Solanum. <<


  Manathakkali.

  Solanum opacum.

  தாயகம் - ஆஸ்திரேலியா (Australia).

  ஆங்கில பெயர் - Green berry nightshade (கிரீன் பெர்ரி நைட்ஷேட்). Morelle verte (மோரெல்லே வெர்டே).

  தாவரவியல் பெயர் - Solanum opacum (சோலனம் ஒபாகம்).

  குடும்பம் - Solanaceae - சோலனேசியே (Nightshade - நைட்ஷேட்).

  பேரினம் - Solanum (சோலனம்).

  இனம் - Solanum opacum (சோலனம் ஒபாகம்).

  Solanum-Opacum-Green-Berry-Nightshade

  சோலனம் ஒபாகம்.

  பெயர்க்காரணம்.

  இந்த சோலனம் ஒபாகத்திற்கு ஆங்கிலத்தில் "Green berry nightshade" (கிரீன் பெர்ரி நைட்ஷேட்) என்று பெயர். இதில் "berry" என்பது ரசம் நிறைந்த சிறிய பழம் என்பதைக் குறிக்கும். "Green berry nightshade" என்றால் "பச்சை நிறமான சிறிய பழத்தைக்கொண்ட தாவரம்" என்று பொருள்.

  மணத்தக்காளியின் பழங்கள் அடர்ந்த ஊதா நிறம் அல்லது கருப்பு நிறத்தில்தானே இருக்கும் அப்படியிருக்கும்போது இதற்கு மட்டும் எப்படி "பச்சை நிறமான பழத்தைக்கொண்ட தாவரம்" என பெயர்வைக்கப்பட்டுள்ளது என்கின்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம்.

  ஆனால்... பெயர் வைத்ததில் எந்த தவறும் இல்லை... ஏனென்றால் இதன் பழங்கள் பச்சையாகத்தான் இருக்கின்றன.

  ஆம்... பச்சையாக இருக்கும்போதே பயபுள்ள பழுக்க ஆரம்பித்துவிடுகிறது. நன்கு கனியும்போது மட்டுமே தங்க நிறத்திற்கு மாறுகின்றன. ஆனால் கடைசிவரைக்கும் கருப்பாக மாறுவதே இல்லை.

  காணப்படும் இடங்கள்.

  சதுப்புநில மழைக்காடுகள், ஈரம் நிறைந்த பகுதிகள், நீரோடைகளின் கரைகள் மற்றும் கடற்கரையோரங்களிலும் காணப்படுகின்றன. வடக்கு டாஸ்மேனியா (Northern Tasmania) மற்றும் பாஸ் ஜலசந்தி (bass strait) யை ஒட்டிய அனைத்து தீவுகளிலுமே பரவலாக காணப்படுகின்றன.

  தாவரத்தின் தன்மை.

  இது ஒரு வருடாந்திர மூலிகை. பிற மணத்தக்காளி இனங்களிலிருந்து இது அமைப்பிலும், குணத்திலும் முற்றிலும் வித்தியாசமானது.

  இது பிற மணத்தக்காளி இனங்களைப்போல குத்துச்செடிகளாக வளராமல் குறைவான உயரத்துடன் பக்கவாட்டில்1 மீட்டர் சுற்றளவுவரை தன்னுடைய கிளைகளை பரப்பி வளர்கின்றன.

  இதன் தண்டுகளிலும், இலைகளிலும் சிறிய வெண்மைநிற உரோமங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. ஆனால் குத்தும் முட்கள் எதுவும் காணப்படுவதில்லை.

  இவைகள் மட்டுமே இதனுடைய சிறப்பல்ல. இன்னும் நிறையவே உள்ளது.

  solanum_opacum_sparsely_hairy

  நாம் இந்த பதிவின் முதல் பகுதியில் இந்த மணத்தக்காளி இனமானது நச்சுத்தன்மையுள்ளது எனவே இதனை பச்சையாக சாப்பிடக்கூடாது என்றும் நன்கு சமைத்த பின்பே சாப்பிடவேண்டும் என்றும் பார்த்தோமல்லவா? அந்த கருத்திலிருந்து முற்றிலும் விதிவிலக்கானது இந்த "சோலனம் ஒபாகம்" (Solanum opacum).

  ஆம்,.. சோலனம் ஒபாகம் என்னும் இந்த இனத்தின் இலைகளில் "சோலனைன்" (Solanine) என்னும் நச்சு ஆல்கலாய்டு மிக மிக குறைந்த அளவே உள்ளன. எனவே இதனை பச்சையாகவே உண்ணலாம். எனவேதான் பிற மணத்தக்காளி இனங்களை அசைபோட தயங்கும் கால்நடைகள்கூட இதனைக்கண்டால் மருந்துக்குக்கூட விட்டுவைக்காமல் சகட்டுமேனிக்கு தின்று தீர்க்கின்றன.

  எனவே ஆடுகள், மாடுகள், முயல்கள் மட்டுமல்லாது புழு, பூச்சிகளின் தாக்குதல்களுக்கும் இவைகள் எளிதில் ஆளாகிவிடுகின்றன. அதனாலேயே இந்த தாவரங்கள் எண்ணிக்கையில் சுருங்கிப்போயின.

  ஆனால் இதன் காய்களில் பிற இனங்களில் உள்ளது போல அதே அளவுகளில் நச்சு உள்ளது. எனவே காய்களை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஆனால் பழங்களை சாப்பிடலாம். மருதமான சுவையுடன் இருக்கின்றன.

  இலைகளின் தன்மை.

  இதன் இலைகள் பச்சை நிறத்தில் தடிமனாக உள்ளன. இவைகள் 3 லிருந்து 7 செ.மீ நீளமும், 1 லிருந்து 2 செ.மீ அகலத்தையும் கொண்டுள்ளன. இலையினுடைய காம்புகள் சுமார் 1.4 செ.மீ. நீளத்தை கொண்டுள்ளன. இலைகளின் விளிம்புகள் மெல்லிய நெளிவு சுழிவுகளை பெற்றுள்ளன. இலைகளின் மேற்பகுதி குறைந்த அளவில் மிகச்சிறியதான வெண்ணிற உரோமங்களை கொண்டுள்ளன.

  Solanum opacum leaf

  பூக்களின் தன்மை.

  பூக்கள் மஞ்சரி அமைப்பை சேர்ந்தது. இதழ்களை தாங்கும் புல்லி வட்டத்திலுள்ள பச்சை இதழ்களானது (Calyx) 2 லிருந்து 3 மி.மீ நீளத்தை கொண்டுள்ளன. நட்சத்திர வடிவம்கொண்ட அல்லி வட்டமானது 8 லிருந்து 12 மி.மீ விட்டத்தை கொண்டுள்ளது.

  மஞ்சரிகளில் 2 முதல் 5 மலர்கள் மட்டுமே உள்ளன. ஒவ்வொரு மலர்களும் வெண்ணிற 5 இதழ்களை கொண்டுள்ளன. இதழ்கள் 7 முதல் 10 மி.மீ நீளத்தை கொண்டுள்ளன. இது ஆண்டு முழுவதுமே பூக்கின்றன.

  மலர்களின் நடுவிலுள்ள மகரந்தங்கள் 1.5 மி.மீ முதல் 2 மி.மீ நீள அளவை கொண்டுள்ளன. இந்த மகரந்தம் குவிந்த நிலையிலேயே காணப்படுகின்றன. குவிந்த நிலையில் காணப்படுவதற்கு காரணம் இவைகள் பெரும்பாலும் சுய மகரந்த சேர்க்கையில் ஈடுபடுவதே காரணம். பூச்சிகள்மூலம் அயல் மகரந்த சேர்க்கையும் நடைபெறுவதுண்டு.

  Solanum opacum flower

  காய்களின் தன்மை.

  பசுமை நிறத்தில் காணப்படும் இதன் காய்கள் 8 லிருந்து 10 மி.மீ விட்டத்தை பெற்றுள்ளன. விதைகள் 1.8 லிருந்து 2.2 மி.மீ நீளத்தில் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன.

  காய்களை தள்ளுங்கள்... இதனுடைய பழங்களை பாருங்கள்... இதன் பழங்களை பார்க்கும்போது நம்முடைய பழைய டீன் ஏஜ் நினைவுகளெல்லாம் நம்முடைய மனதில் வந்து பட்டாம்பூச்சிகளாக சிறகடிப்பதை காணலாம்.

  ஆம்,... நம்முடைய பதின்வயதில் ஏற்பட்ட சிலபல அழிக்க முடியாத நினைவுகளை நம் மனக்கண்ணில் ஓடவிட்டு பெருமூச்செறிய வைப்பதே இதன் பழங்களுடைய சிறப்பம்சமாகும்.

  எவ்வாறெனில்... நாம் ஆரம்பத்தில் சொன்னது போல பிற மணத்தக்காளியின் காய்கள் பழுக்கும் தருவாயில் பச்சை நிறத்திலிருந்து விடுபட்டு கருப்பு நிறத்தில் முக்காடு போட்டு தன்னை முழுமையாக மறைத்துக்கொள்கிறது அல்லவா...

  ஆனால்,.. இதன் காய்கள் அப்படியல்ல... இவைகள் பழுக்கும் தருவாயில் அவ்வாறு முக்காடு எதுவும் போடுவதில்லை. அதற்கு மாறாக அடர்ந்த பச்சை நிறத்திருந்து வெளிறிய பச்சை நிறத்திற்கு மாறுகின்றன.. எனவேதான் ஆங்கிலத்தில் இதனை "பச்சை பழ மணத்தக்காளி" - Green berry nightshade (கிரீன் பெர்ரி நைட்ஷேட்) என  அழைக்கின்றனர்.

  ஆனால் நன்கு கனிந்த பழங்கள் பச்சை நிறத்திலிருந்து தங்கத்தை நினைவுபடுத்தும் மின்னும் மஞ்சள் நிறத்திற்கு மாறுகின்றன.

  Green berry nightshade

  முன்பு சொன்னதுபோல பெருமூச்சு வரவைக்கும் இதன் பழங்களிலுள்ள அந்த கிளுகிளுப்பான சிறப்பம்சம் என்னவென்றால்... இது மனதை மயக்கும் அளவிற்கு கிளாமரான தோற்றத்தை கொண்டுள்ளது என்பதே.

  "கிளாமர்" என்றால் நீங்கள் நினைப்பதுபோல சாதாரண கிளாமரல்ல. அதையும் தாண்டி நம்மையெல்லாம் சட்டென்று "ஷகிலா" ரேஞ்சுக்கு சூடேற்றும் அளவு கிளுகிளுப்பான கிளாமரை கொண்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

  gp muthu vs shakila Green berry nightshade

  எந்த அளவிற்கு கிளுகிளுப்பானது என்றால் பழங்களின் உள்ளே மறைவாக இருக்கும் அத்தனையும் அதன் மேல்புற தோல்கள் வழியாக ஊடுருவி அப்பட்டமாக வெளியே தெரியும் அளவுக்கு கிளுகிளுப்பானது.

  gp muthu angry Manathakkali

  உண்மைதான்... ஆரம்பத்தில் அடர்ந்த பச்சைநிறமாக இருக்கும் இதன் மேல் தோல்கள் பதின்வயதை அடையும் பருவத்தில் ஒளி ஊடுருவும் தன்மையை பெற்றுவிடுகின்றன.

  ஆம்... இந்த பழத்தின் மேல் தோல்கள் ஒளி ஊடுருவும் தன்மையை பெற்றுள்ளதால் வெளிச்சத்தில் வைத்து பார்த்தீர்கள் என்றால் மறைவாக இருக்கும் அதன் விதைகள்.. அதாவது அதன் உள்ளிருக்கும் வித்துக்கள் அத்தனையும் உங்கள் கண்களுக்கு காட்சியளித்து பதின்வயது நினைவுகளையெல்லாம் கிளறி உங்களை கடந்தகால நினைவுகளில் மிதக்க வைத்துவிடும்!!! இப்போது சொல்லுங்கள் இப்பழங்கள் கிளாமரா... கிளாமரில்லையா?

  glamour life Manathakkali

  பயன்பாடு.

  காரசாரமான இதன் பழங்கள் காரமான இனிப்புசுவையை கொண்டுள்ளதால் பலராலும் விரும்பி உண்ணப்படுகின்றன.

  சோலனம் பிடிச்சாந்தும்.

  Solanum ptychanthum.

  தாயகம் - வட அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் கரீபியன் தீவு.

  ஆங்கில பெயர் - Eastern black nightshade.

  தாவரவியல் பெயர் - Solanum ptychanthum (சோலனம் பிடிச்சாந்தும்).

  குடும்பம் - Solanaceae - சோலனேசியே (Nightshade - நைட்ஷேட்).

  பேரினம் - Solanum (சோலனம்).

  இனம் - Solanum ptychanthum (சோலனம் பிடிச்சாந்தும்).

  Solanum ptychanthum_nightshade tree

  காணப்படும் நாடுகள்.

  அமெரிக்காவின் சில மாநிலங்களில் மட்டுமே இவைகள் காணப்படுகின்றன. குறிப்பாக வாஷிங்டன் (Washington), ஓரிகன் (Oregon), நெவாடா (Nevada), கலிபோர்னியா (California), அலாஸ்கா (Alaska), ஹவாய் (Hawaii) ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றன.

  கனடாவில் குறிப்பாக ஆல்பர்ட்டா (Alberta), மேரிடைம்ஸ் (Maritime) மற்றும் விர்ஜின் தீவு (virgin Island) களிலும் காணப்படுகின்றன. இந்தியாவிலும்கூட இது காணப்படுகிறது. இதனை வட இந்திய பகுதிகளில் பரவலாக காணலாம்.

  வளரும் இடங்கள்.

  காடுகள், சதுப்பு நிலம், ஆறு, ஏரி, கடலோர பகுதிகளில் பெரும்பாலும் பிற தாவரங்களின் ஊடாக களைச்செடிகளாகவே இவைகள் வளர்கின்றன.

  தக்காளி (Tomato) மற்றும் உருளைக்கிழங்கு (Potato) பயிராகும் இடங்களுக்கு நீங்கள் செல்ல நேர்ந்தால் அங்கு இவைகள் களைச்செடிகளாக வளர்ந்து நிற்பதை காணலாம்.

  எனவே, அங்கெல்லாம் இதனை மருந்து தாவரங்களாக பார்ப்பதைவிட களைச்செடிகளாகவே அதிகம் பார்க்கின்றனர்.

  தாவரத்தின் தன்மை.

  ஓராண்டு வளரும் இத்தாவரமானது 1 முதல் 3 அடி உயரம்வரை பக்கவாட்டில் கிளைகளை பரப்பி வளரும் தன்மையுடையது. தாவரத்தின் முழுப்பகுதியும் சோலனம் என்னும் ஆல்கலாய்டுகளை கொண்டுள்ளது. இதன் உருளை வடிவ தண்டுகளில் பெரிய அளவில் உரோம அமைப்பு இல்லையென்றாலும் மிகச்சிறிய உரோமங்களை கொண்டுள்ளன. மேலும் சிறிய குத்தும் முட்களையும் கொண்டுள்ளன.

  Solanum ptychanthum tree

  இந்த இனத்தின் விசேஷம் என்னவென்றால் இது நிழலான இடங்களில்கூட செழிப்பாக வளரும் தன்மையை பெற்றுள்ளன.

  இலைகளின் அமைப்பு.

  இதன் இலைகள் முக்கோண அமைப்பில் நீள்வட்ட வடிவில் காணப்படுகின்றன. இலைகள் 3 அங்குல நீளத்திலும் 2 அங்குல அகலத்திலும் உள்ளன. இலைகள் நடுத்தர மற்றும் கரும்பச்சை நிறத்தில் உரோமங்களற்று காணப்படுகின்றன. இலையின் இரு விளிம்புகள் ஒழுங்கற்ற பல்விளிம்புகள் போன்ற அமைப்பை கொண்டுள்ளன.

  Solanum ptychanthum_leaf

  இலைகளின் அடிப்பகுதி வெளிர் பச்சை அல்லது ஊதாநிறத்தில் காணப்படுகின்றன.

  பூக்களின் அமைப்பு.

  இதன் பூக்கள் சிறியதாகவும், வெண்மையாகவும் உள்ளன. வெள்ளை மலர்களை மலரச்செய்யும் இவைகள் எப்போதாவது அரிதாக ஊதா வண்ண மலர்களையும் மலரச்செய்வதுண்டு.

  Solanum ptychanthum flower

  இதழ்களை தாங்கிநிற்கும் பச்சைநிற புல்லி இதழ்களானது இணைக்கப்பட்ட 5 இதழ் அமைப்பை கொண்டுள்ளன.

  ஒவ்வொரு மஞ்சரிகளிலும் 3 லிருந்து 7 பூக்கள்வரை காணப்படுகின்றன. பூக்கள் 5 இதழ்களை கொண்டுள்ளன. நடுவே குவிந்த நிலையில் 5 மகரந்த தாள்களும் காணப்படுகின்றன.

  காய்களின் தன்மை.

  சராசரியாக 6 லிருந்து 8 மி.மீ விட்டம் கொண்ட மென்மையான பச்சை நிறம்கொண்ட காய்களை உற்பத்தி செய்கின்றன. இந்த காய்களானது பழுக்கும் தருவாயில் ஊதா கருப்பு நிறத்தை பெறுவதுடன் பளபளப்பாகவும் காட்சியளிக்கின்றன.

  Solanum ptychanthum perry

  பழங்கள் மிதமான இனிப்புத்தன்மையை கொண்டுள்ளது. சில பழங்கள் லேசான கசப்பு சுவையையும் பெற்றிருப்பதுண்டு. முழுமையாக பழுக்காத பழங்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை.

  விதைகளின் தன்மை.

  விதைகள் மிக சிறியது. ஒரு பழத்தினுள் 50 முதல் அதிகப்படியாக 100 விதைகள்வரை உள்ளது. விதைகள் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. ஒரு விதையின் நீளம் 1.5 லிருந்து 2.0 மி.மீ வரையே உள்ளன. அகலம் என்ன தெரியுமா? 1.0 மி.மீ லிருந்து 1.5 மி.மீ மட்டுமே. இவ்வளவு சிறிய விதையை உள்ளது உள்ளபடியே கீழேயுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளதை பாருங்கள்.

  Solanum ptychanthum seeds

  அதெல்லாம் சரிதான்.. விதைகள் மிக சிறியதாக உள்ளதே. அதன் அமைப்பை தெளிவாக பார்க்கமுடியவில்லையே என்று வருத்தமாக உள்ளதா? கவலையை விட்டொழியுங்கள். நாம் இருக்கும்போது நீங்கள் கண்கலங்கலாமா? இதோ உங்களுக்காகவே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட நுண்ணோக்கிமூலம் விதைகள் பன்மடங்கு விரிவுபடுத்தப்பட்டு காட்சிபடுத்தியுள்ளோம் பாருங்கள்... 

  உங்களுக்காக எவ்வளவோ பண்ணுறோம்.. இதை பண்ணமாட்டோமா என்ன?!!!

  உங்களுக்காகவே நுண்ணோக்கி மூலம் 10 மடங்கு (10 X) பெரிதுபடுத்தி எடுக்கப்பட்ட விதைகள்..

  10X Solanum ptychanthum seeds

  உங்களுக்காகவே இன்னும் பெரிதாக (ZOOM) படம்பிடித்துள்ளோம் பாருங்கள்...

  20X Solanum ptychanthum seeds

  உங்களுக்காகவே இன்னும் பெரிதாக...

  32X Solanum ptychanthum seeds

  இன்னும் கொஞ்சம் Zoom பண்ணுவோம்...

  42X Solanum ptychanthum seeds

  இன்னும் கொஞ்சம்... வேண்டாம் இதற்குமேல் பெரிதுபடுத்தினால் "டமார்"ன்னு வெடித்துவிடப்போகிறது...

  அதுசரி... இதில் கூறப்பட்டுள்ள அத்தனை வகை மணத்தக்காளியின் விதைகளும் இதே வடிவமைப்பில்தான் உள்ளனவா என கேட்கிறீர்கள்தானே?.

   அதுதான் இல்லை...

  ஒவ்வொரு இன மணத்தக்காளியின் விதைகளும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தோன்றினாலும் ஒன்றிற்கொன்று சிறிதளவு நிறத்திலும், வடிவத்திலும் வேறுபடுகின்றன. நீங்கள் புரிந்துகொள்வதற்காக Solanum nigrum (சோலனம் நிக்ரம்) என்னும் மணத்தக்காளியின் விதையும், Solanum ptychanthum (சோலனம் பிடிச்சாந்தும்) என்னும் மணத்தக்காளியின் விதையும் அதே பழைய நுண்ணோக்கி மூலம் பெரிதுபடுத்தி காட்டியுள்ளோம் பாருங்கள்...

  எங்கே... இரண்டிற்குமுள்ள ஆறு வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்... பார்க்கலாம்...

  Solanum ptychanthum_Solanum nigrum different seeds

  இனப்பெருக்கம்.

  இவைகள் விதைகள் மூலமாகவே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. விதைகளை தொலைதூரங்களுக்கு எடுத்து செல்வதில் பறவைகளின் பங்கு மிக முக்கியமானது.

  பயன்பாடு.

  பழங்களை தவிர அனைத்து பாகங்களும் உடலுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும் நச்சுத்தன்மைகளை கொண்டுள்ளதால் இதனை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

  ஆனால்,.. இதன் தழைகளை சமைக்கும்போது இதிலுள்ள உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப்பண்புகள் ஓரளவு வெப்பத்தினால் அழிக்கப்படுவதால் நன்கு சமைத்தபின்பே சாப்பிடவேண்டியது அவசியம்.

  அமெரிக்க பழங்குடியின மக்கள் இதன் இளந்தளிர்களை சமைத்து சாப்பிடுகின்றனர். பழங்களையும் உணவாக பயன்படுத்துகின்றனர்.

  சோலனம் ஸ்கேப்ரம்.

  Solanum scabrum.

  தாயகம் - ஆப்பிரிக்க கண்டம்.

  ஆங்கில பெயர் :- garden huckleberry (கார்டன் ஹக்கிள் பெர்ரி).

  வேறு பெயர்கள் :- African nightshade (ஆப்பிரிக்க நைட்ஷேட்).

  தாவரவியல் பெயர் - Solanum scabrum (சோலனம் ஸ்கேப்ரம்).

  குடும்பம் - Solanaceae - சோலனேசியே (Nightshade - நைட்ஷேட்).

  பேரினம் - Solanum (சோலனம்).

  இனம் - Solanum scabrum (சோலனம் ஸ்கேப்ரம்).

  Solanum scabrum tree

  காணப்படும் நாடுகள்.

  ஆப்பிரிக்கா (Africa), அமெரிக்கா (United states of America) மற்றும் சில நாடுகளில் இவைகள் காணப்பட்டாலும் ஆப்பிரிக்காவில்தான் இவைகள் தோட்டப்பயிராக பயிரிடப்படுகின்றன.

  கென்யா (Kenya)வில் இவைகள் பணப்பயிராக பயிர் செய்யப்படுகின்றன.  ஏனெனில் அங்கு இதன் இலைகளை சமையலில் கூட்டுப்பொருளாக சேர்ப்பதோடு இதன் பழங்களை சாயப்பொருள் தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

  மேலும் ஐரோப்பா (Europe), ஆசியா (Asia), ஆஸ்திரேலியா (Australia), நியூஸிலாந்து (New zealand), கரீபியன் (Caribbean) ஆகிய இடங்களிலும் இவைகள் காணப்படுகின்றன.

  வளரும் சூழ்நிலை.

  இது செழிப்பாக வளர்வதற்கு 20-30⁰C வெப்பம் தேவை. மேலும் 500 மி.மீ அல்லது அதற்கும் அதிகமான மழைவளமும் தேவைப்படுகிறது.

  தாவரத்தின் தன்மை.

  இது ஒரு வருடாந்திர புதர் தாவரம். சுமார் 3 லிருந்து அதிகப்படியாக 5 அடி உயரம் வரை வளருகிறது. இதன் தண்டு மற்றும் இலைகளில் வெண்ணிற உரோமம் போன்ற அமைப்புகள் இல்லையென்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில உரோமங்கள் காணப்படத்தான் செய்கின்றன.

  garden huckleberry_African nightshade

  இலைகளின் தன்மை.

  இதன் இலைகள் பொதுவாக 7 லிருந்து 12 செ.மீ நீளமும் 5 லிருந்து 8 செ.மீ அகலத்தையும் கொண்டுள்ளன. இலைக்காம்பினுடைய நீளம் 1.5 லிருந்து 7 செ.மீ வரை இருக்கின்றன.

  Solanum scabrum leaf

  மலர்களின் தன்மை.

  விதை விதைத்து 8 முதல் 11 வாரங்கள் காத்திருந்தால் இதில் உருவாகும் முதல்பூவை நீங்கள் கண்டுகளிக்கலாம். மலர்கள் வழக்கம்போல மஞ்சரி அமைப்பையே கொண்டுள்ளன. மஞ்சரியானது 1.5 செ.மீ லிருந்து 7 செ.மீ வரை பல்வேறு கிளை அமைப்புடன் காணப்படுகின்றன. ஒவ்வொரு மஞ்சரியும் அதிகப்படியாக 9 லிருந்து 12 பூக்களை கொண்டுள்ளன.

  பூக்கள் 10 முதல் 15 மி.மீ விட்டத்தை கொண்டுள்ளன. ஒவ்வொரு பூக்களும் 5 வெள்ளைநிற இதழ்களை கொண்டுள்ளன. சில பூக்கள் வெளிறிய ஊதா வண்ணத்தையும், இன்னும் சில நேரங்களில் பருவநிலைகளை பொறுத்து லேசான மஞ்சளும், பச்சையும் கலந்து வெளிறிய தோற்றத்திலும் காணப்படுவதுண்டு.

  Solanum scabrum flower

  பூக்களில் பெரும்பாலும் சுய மகரந்த சேர்க்கையே நடைபெறுகின்றன. பூச்சிகளால் அயல்மகரந்த சேர்க்கை நடைபெறும் நிகழ்வும் அவ்வப்போது நடப்பதுண்டு.

  காய்களின் தன்மை.

  காய்கள் பசுமையான வண்ணத்தில் காணப்படுகின்றன. இவைகள் சுமார் 10 லிருந்து 16 மி.மீ விட்டத்தை கொண்டுள்ளன.

  Solanum scabrum green fruits

  இதன் பழங்கள் ஊதா கருமை நிறத்தில் கோளவடிவில் உள்ளன. இதன் பழங்கள் சிறிது கசப்புத்தன்மையுடன் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பெரும்பாலும் இது யாராலும் விரும்பப்படுவது இல்லை.

  Solanum scabrum fruits

  இதன் பழங்களிலிருந்து கிடைக்கும் சாறுகளை சாயங்களாக பயன்படுத்துகின்றனர்.

  விதைகளின் தன்மை.

  விதைகள் வெளிர் நிறத்திலும், கறைபடிந்த ஊதா நிறத்திலும் காணப்படுகின்றன. விதைகள் 1.2 மி.மீ லிருந்து 2.2 மி.மீ நீளத்தில் காணப்படுகின்றன.

  பயன்பாடு.

  விதைகள் விதைத்து 3 மாதங்களில் நீங்கள் முதல் அறுவடையை தொடங்கலாம். நன்கு லாபம் தரும் ஒரு பயிரினம்தான். ஏனெனில் ஆப்பிரிக்காவில் இதன் இலைகள் சமைத்து உண்ணப்படுகின்றன. "சூப்" களிலும் இவைகள் பயன்டுத்தப்படுகின்றன.

  கேமரூனிய உணவு வகைகளுள் மிகவும் பிரபலமாக பேசப்படுவது "Njama Njama" என்னும் உணவுப்பொருளாகும். இது பலவகையான இலைதழைகளால் தயாரிக்கப்படும் ஒரு சிறந்த ஆப்பிரிக்க உணவு. இதில் இந்த "சோலனும் ஸ்கேப்ரம்" முக்கியமான இடத்தைப்பிடிக்கிறது.

  Solanum scabrum Njama njama

  இதன் பழங்கள் சிறிது கசப்பு தன்மை பெற்றுள்ளது என்றாலும் கிழக்கு ஆப்பிரிக்காவில் வயிற்றுப்புண் மற்றும் வயிற்றுவலியை குணப்படுத்த இந்த பழங்களை உட்கொள்வது மட்டுமல்லாமல் பச்சைகுத்துவதற்கு தேவைப்படும் சாயங்களையும்கூட இதன் பழங்களிலிருந்தே பெறுகின்றனர்.

  இதன் இலைகள் மற்றும் பழங்களில் "அந்தோசயனின்" (anthocyanin) என்னும் நிறமி உள்ளதால் இலைகளையும், பழங்களையும் சாயம் (Dye) அல்லது மை (Ink) தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்.

  மேலும் ஆப்பிரிக்காவில் இதன் இலைகளை கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்துகிறார்கள்.

  கேமரூன் (Cameroon) நாட்டிலிருந்து அதன் அண்டை நாடுகளான நைஜீரியா (Nigeria), எக்குவடோரியல் கினியா (Equatorial Guinea) மற்றும் காபோன் (Gabon) நாடுகளுக்கு இது ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றால் இதனுடைய முக்கியத்துவத்தைப் பார்த்துக் கொள்ளுங்களேன்.

  இது ஏற்றுமதி செய்யப்படுவதற்கு உணவுப்பொருள் என்பது மட்டுமே காரணம் அல்ல... கூடவே ஒரு "கிக்"கான காரணமும் உள்ளது...

  அது என்ன?!...

  பொதுவாக மணத்தக்காளி இலைகளில் "சோலனம்" என்னும் நச்சுப்பொருள் இருப்பதால் இதனை பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும், சமைக்கும்போது மட்டுமே வெப்பத்தினால் இதன் நச்சு நீக்கப்படுவதால் நன்கு சமைத்தே சாப்பிடவேண்டும் எனவும் பார்த்தோமல்லவா?

  சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டால் என்னவாகும். உடலுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். கூடவே அளவு அதிகரித்தால் ஒருவித மயக்கத்தையும், போதையையும் ஏற்படுத்துகிறது.

  ஆம்,... இந்த போதைக்காகவும் ஆப்பிரிக்காவில் பயிர்செய்யப்பட்டு பலநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

  அதாவது சமைத்து சாப்பிட்டால் இது உணவு... சமைக்காமல் பச்சையாக அதிக அளவில் சாப்பிட்டால் போதைவஸ்து. அவ்வளவுதான்... மேலும் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிப்பதும்கூட.

  சோலனம் வில்லோசம்.

  Solanum villosum.

  தாயகம் - இதன் தாயகம் ஆஸ்திரேலியா (Australia) என நம்பப்படுகிறது. ஏனெனில் இது இங்கு காடுகளில் இயற்கையாகவே வளர்கிறது. ஆனால் கென்யா (Kenya) மற்றும் தான்சானியா (Tanzania) நாடுகளில் இவைகள் உணவுக்காக அதிக அளவில் விளைநிலங்களில் பயிர்செய்யப்படுகின்றன.

  ஆங்கில பெயர்கள் - ஹேரி நைட்ஷேட் (hairy nightshade).

  வேறு பெயர்கள் - கம்பளி நைட்ஷேட் (woolly nightshade), சிவப்பு பழ நைட்ஷேட் (Red fruited nightshade), மஞ்சள் நைட்ஷேட் (Yellow nightshade).

  தாவரவியல் பெயர் - Solanum villosum (சோலனம் வில்லோசம்).

  குடும்பம் - Solanaceae - சோலனேசியே (Nightshade - நைட்ஷேட்).

  பேரினம் - Solanum (சோலனம்).

  இனம் - Solanum villosum (சோலனம் வில்லோசம்).

  solanum-villosum-tree

  காணப்படும் நாடுகள்.

  ஆஸ்திரேலியா (Australia), ஐரோப்பா (Europe), வட ஆப்பிரிக்கா (North Africa), மேற்கு ஆசியா (Western Asia), வட அமெரிக்கா (North America) விலும் காணப்படுகின்றன. இங்கு இவைகள் பயிர்களுக்கு ஊடாக களைச்செடிகளாகவே வளர்கின்றன. ஆப்பிரிக்காவில் இவைகள் சில நேரங்களில் உணவாக பயன்படுத்த தனியாக பயிர்செய்யப்படுவதுமுண்டு.

  தாவரங்களின் தன்மை.

  இது ஒரு வருடாந்திர மூலிகை. 50 செ.மீ முதல் அதிகப்படியாக 70 செ.மீ உயரம்வரை வளருகிறது. இதன் தண்டுகள் மென்மையான முகடுகளை கொண்டு மென்மையாக காணப்படுகின்றன. பிற  இனங்களை போல் அல்லாமல் பெரும்பாலும் குறைவான கிளை அமைப்புகளையே கொண்டுள்ளன. இதுவே இதனுடைய சிறப்பு அல்ல.

  இதனுடைய சிறப்பு அதன் பழங்களில் காணப்படுகிறது. அப்படியென்ன இதில் சிறப்பு இருக்கிறது என்கிறீர்களா? "சோலனம் ஒபாகம்" இனத்தை தவிர்த்து பிற மணத்தக்காளி இனங்களெல்லாம் அடர் ஊதா அல்லது கருப்பு நிறமான பழங்களை உற்பத்தி செய்கிறது என்றால் இந்த "வில்லோசம்" ஆரஞ்சும் சிவப்பும் கலந்த பழங்களை உற்பத்தி செய்கின்றன.

  Berrys-Golden-Solanum villosum

  இலைகளின் தன்மை.

  இலைகள் வெளிறிய பச்சைநிறத்தை கொண்டுள்ளன. இலைக்காம்புகள் 4.5 செ.மீ நீளம் கொண்டவை. இலைகள் 8 செ.மீ நீளத்திலும், 3 லிருந்து 6 செ.மீ அகலத்திலும் இருக்கின்றன. இலைகளின் இரு ஓரங்களிலும் ஒழுங்கற்ற ஆப்புபோன்ற சில பற்கள் அமைப்பை கொண்டுள்ளன.

  solanum-villosum-leaf

  மலர்களின் தன்மை.

  ஒரு மஞ்சரியில் 3 லிருந்து 8 வரை பூக்கள் பூக்கின்றன. பூக்கள் வெண்மையானவை. ஒவ்வொரு பூக்களும் 5 வெண்மையான இதழ்களை கொண்டுள்ளன. இதழ்களின் நடுவில் குவிந்த நிலையில் மஞ்சள் பூசிக்கொண்டு நிற்கும் அந்த 5 மகரந்த தாள்களும் மலர்களுக்கு விசேஷ அழகை கொடுக்கின்றன.

  solanum-villosum-flower

  ஏப்ரல் முதல் நவம்பர் வரை பூத்து காய்கின்றன. மலர்கள் சுயமகரந்த சேர்க்கையில் ஈடுபடுகின்றன. சிலநேரங்களில் பூச்சிகள்மூலம் அயல்மகரந்த சேர்க்கை நடைபெறுவதும் உண்டு.

  பழங்களின் தன்மை.

  காய்கள் பச்சையானவை. ஆனால் பழங்களோ ஆரஞ்சு கலந்த மந்தமான சிவப்பை கொண்டுள்ளன.

  solanum-villosum-fruits

  பழங்கள் கோளவடிவமானவை. பழங்கள் 5 லிருந்து 9 மி. மீ விட்டத்தை கொண்டுள்ளன. ஒவ்வொரு பழங்களுக்குள்ளும் 50 லிருந்து 80 விதைகள் வரை உள்ளன. ஒவ்வொரு விதைகளும் 1.7 மி.மீ லிருந்து 2.3 மி.மீ நீளத்தை கொண்டுள்ளன. விதைகள் வெளிர் மஞ்சள் நிறத்தை கொண்டுள்ளன.

  பயன்பாடு.

  ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இது முக்கிய உணவுப் பொருளாகவும் மருந்துப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

  கென்யா (Kenya) மற்றும் தான்சானியா (Tanzania) வில் இவைகள் உணவுப்பொருளாக பயிர்செய்யப்படுகின்றன. இங்கு ஒரு ஹெக்டேருக்கு ஆண்டுக்கு 25 டன் இளந்தளிர்களை விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர்.

  இதன் இலைகள் கசப்பு சுவையுடையவை என்றாலும், அதிகப்படியான நீரில் இதனை வேகவைத்து இதன் கசப்பான நீரை நீக்குவதின் மூலமாகவும், வெங்காயம், தக்காளி, மீன், இறைச்சி, நிலக்கடலை மற்றும் எள் முதலியன சேர்க்கப்படுவதின் மூலமாகவும் இதனை சுவையான உணவாக மாற்றுகின்றனர்.

  காயங்களை ஆற்றுவதற்கும், வலிநிவாரணியாகவும், கிருமி நாசினியாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும் இதன் இலைகள் பயன்படுத்தப்படுகிறது.

  இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் ஆப்பிரிக்காவில் சில  இடங்களில் இதன் இலைகள் உள்ளூர்வாசிகளால் கஞ்சாவைப்போல போதைதரும் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

  💢💢💢💢

  இதுவரையில் Solanaceae. (சொலனாசியே) என்னும் தாவர குடும்பத்திலுள்ள "Solanum" என்னும் பேரினத்தை சார்ந்த மணத்தக்காளியை ஒத்த சில சிற்றினங்களை... அதேவேளையில் மனிதர்களால் உணவாகவும், மூலிகையாகவும் பயன்படுத்தப்படும் தாவரங்களை பார்த்தோம்.

  இதன் தொடர்ச்சியாக அடுத்துவரும் பதிவில் மணத்தக்காளியைப்பற்றிய அடிப்படையான கூடுதல் விபரங்களை பார்க்க இருக்கின்றோம்... தொடருங்கள்...

  இதன் தொடர்ச்சியாகிய நான்காவது பகுதியை [PART 4] படிக்க கீழேயுள்ள "லிங்க்" ஐ உங்கள் விரல்களால் மெல்ல தட்டுங்க...

  >>மணத்தக்காளி - Manathakkali - Characteristics and Crop Cultivation.<<

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  6 கருத்துகள்

  1. சிறு வயது நினைவுகள் அருமை... உங்களின் குறும்பும்...!

   பதிலளிநீக்கு
  2. மிக மிக அருமையாக உள்ளது, வாழ்த்துக்கள்.

   பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு சகோ. ப்ளஸ் 2 பாட்டனி படிச்சப்ப ஹெர்பேரியம் கலெக்ட் செய்தப்ப பல செடிகள் குறித்தும் படித்து நினைவில் வைத்த அளவு இப்போது இத்தனை வெரைட்டியும் வாசித்து (முந்தைய பதிவு வாசித்தோம்) நினைவில் வைப்பது ஹிஹிஹிஹி இருந்தாலும் முயற்சி

   பிடிச்சாந்தும் போல இங்கு இலைகள் கொண்ட செடிகள் பார்க்கிறேன் ஆனால் அது நீங்கள் சொல்லியிருக்கும் மணத்தக்காளி வெரைட்டி தானா என்று தெரியவில்லை. பாட்டனி பிரிவு எடுத்துப் படிப்பவர்கள், சித்த வைத்தியம் படிப்பவர்கள் இயற்கை மூலிகை மருத்துவம் படிப்பவர்கள் எல்லாருக்கும் மிக மிகப் பயனுள்ள பதிவுகளாகவே இருக்கின்றன என்பது உறுதி. அவர்கள் இதைப் படித்துப் பயனடையலாம். அத்தனை விளக்கமாக இருக்கின்றது.

   அருமை சகோ

   கீதா

   பதிலளிநீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.