"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பயன்தரும் பழமொழிகள் - Elutha Ilakkiyam of Useful Proverbs.

பயன்தரும் பழமொழிகள் - Elutha Ilakkiyam of Useful Proverbs.

எழுதா இலக்கியம் என்னும் பழமொழிகள்.

ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட முன்னோர்கள் கூறிய பழமொழிகளே அதிக அறிவை தரும் என்கிறார் மேனாட்டு அறிஞர் "லாவேட்டர்".

இருட்டில் வழிகாட்டும் மெழுகுவர்த்திகளே பழமொழிகள் என்பது "போஸ்னியா" தேசத்தில் உலவும் நீதியுரைகளில் ஒன்று.

இவ்வளவு சிறப்புப்பெற்ற இந்த பழமொழியை பழகுமொழி, தொன்னெறி மொழி, முதுமொழி, வாய்மொழி, சொலவடை, எழுதா இலக்கியம் என பலபெயர்களில் அடையாளப்படுத்துகின்றனர்.

ஆங்கிலத்தில் "Proverb" என அழைக்கப்படும் இது இந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் முறையே "பழஞ்சொல்", "நாதுடி", "நாண்ணுடி" என்று அழைக்கப்பட்டுவருகின்றன.

நாம் புதுமையான பழமொழிகள் பலவற்றை பற்றி தொடர்ந்து பார்த்துவருகின்றோம். அதன் தொடர்ச்சியாகிய இப்பதிவிலும் புதுமையான சில பழமொழிகளை பற்றி பார்க்க இருக்கிறோம். பார்க்கலாம் வாருங்கள்..

வாழ்வுக்கு பயன்தரும் பழமொழிகள்.

 • ஐயப்பட்டால் பைய நட.
 • ஒட்டுத்திண்ணை நித்திரைக்கு கேடு.
 • ருசிகண்ட பூனை உறிக்கு உறி தாவுமாம்.
 • உலக்கை தேய்ந்தது, உளிக்கு பிடி ஆனது.
 • உள்ளது சொல்ல இது ஊருமல்ல, நல்லது சொல்ல அது நாடுமல்ல.
 • உறவு உண்ணாமல் கெட்டது. உடம்பு உடுத்தாமல் கெட்டது.
 • உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
 • ஊண் ஒடுங்க வீண் ஒடுங்கும்.
 • ஊரார் பண்டம் உமிபோல, தன் பண்டம் தங்கம்போல.
 • ஊருக்கு ஆகாத பிள்ளை தாய்க்கும் ஆகான்.
 • ஊர் நஷ்டம் ஊரிலே, தேர் நஷ்டம் தெருவிலே.
 • எச்சில் இரக்க அடிக்கும், பற்று பறக்க அடிக்கும்.
 • எடுக்கிறது எருமைச்சாணி, படுக்கிறது பஞ்சு மெத்தை.
 • எடுக்கிறது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.
 • எடுப்பாரைக் கண்டால் குடம்கூட கூத்தாடும்.
 • எட்டாத பழத்துக்கு கொட்டாவி விட்டதுபோல.
 • எட்டு குஞ்சு அடித்தாலும் சட்டிக்கறிக்கு காணாது.
 • எண்ணப்பட்ட குதிரையெல்லாம் மண்ணைப் போட்டுக்கொள்ள, தட்டுவாணிக் குதிரைவந்து கொள்ளுக்கு அழுததாம்.
 • எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனை எழுப்ப முடியுமா?
 • எழுதாக்கடனுக்கு அழுதால் தீருமா?
 • ஏற்கனவே மாமியார் பேய்க்கோலம், அதிலும் கொஞ்சம் மாக்கோலம்.
 • ஒண்டிக்காரன் பிழைப்பும், வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்றுதான்.
 • ஒரு பணம்தான் கொடுப்பானாம், ஆனால் ஓயாமல்வந்து அழைப்பானாம்.
 • ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியில் சோறு, நாலுபிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவில்தான் சோறு.
 • ஓங்கி அறைந்தால் ஏங்கி அழ சீவனில்லை.
 • ஓணான் வேலிக்கு இழுக்க தவளை தண்ணீருக்குள் இழுத்துச்சாம்.
 • ஓதுவாரை விட உழுவார் என்றும் உயர்ந்தோரே!
 • புலி பதுங்குவதும், "கடா" பின்வாங்குவதும் பாய்ச்சலுக்கே அடையாளம்.
 • கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அது "காளு காளு" ன்னுதான் கத்தும்.

 • கனத்தை கரம் காக்கும், கருவாட்டுப்பானையை பூனை காக்கும்.
 • காக்கையும் கத்திப்போகுது, கருவாடும் காஞ்சுபோகுது.
 • காசில்லாதவனை விலைமகளும் நம்ப மாட்டாள்.
 • காணிகாணியாய் சம்பாதித்து கோணி கோணியாய் செலவழித்தானாம்.
 • காண்பாரைக் கண்டு கழுதையும் தூரதேசம் போச்சாம்.
 • காப் பொன்னிலும் மாப்பொன் திருடுவான் தட்டான்.
 • காயாகக் காய்த்து பூவாகப் பூத்ததாம்.
 • காரியக்காரன் கொல்லையிலே கழுதைவந்து மேயுதாம்.
 • காலம் கனிந்துவந்தால் பெருச்சாளியும் காவடி எடுத்து ஆடுமாம்.
 • குண்டு பட்டும் சாகாதவன் வண்டு கடித்து செத்தானாம்.
 • குதித்து குதித்து மாவிடித்தாலும் குந்தானிக்கு ஒரு கொழுக்கட்டைகூட கிடைக்காது.
 • குதிரை இல்லாத ஊரில் கழுதைதான் தம்பிரான்.
 • குருவுக்கு நாமம் குழைத்து போடு.
 • குத்தரிசி குத்துகிற வீட்டில் வாய்க்கரிசிக்கு வழி இல்லையாம்.
 • கூப்பாடு போட்டால் சாப்பாடு வருமா?
 • கெடுகின்ற குடி நற்சொல் கேளாது.
 • கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை.
 • ஊரார் வீட்டு கல்யாணமே, ஏன் அவிழ்ந்தாய் என் கோவணமே.
 • கேடுகெட்ட நாயே வீட்டைவிட்டு போயேன்...
 • கொக்கரிக்கும் ஜம்பமெல்லாம் கூடைக்குள் அடங்கிப்போகும்.
 • கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சுவானா?
 • கொழுக்கட்டைக்கு தலையும் இல்லை, கூத்தாடிக்கு முறையும் இல்லை.
 • கோடிபேர் கூடி மிதித்தாலும் கூழாங்கல் சாந்துக்கு ஆகுமா?
 • கோல் ஆட குரங்காடும்.
 • சட்டியில் வார்த்தால் தண்ணீர், அதையே சங்கிலே வார்த்தால் தீர்த்தம்.
 • சமைத்து படைக்க தெரியாது, ஆனால் துடைத்து கவிழ்க்கமட்டும் தெரியும்.
 • சாக்கடை புழுவிற்கு போக்கிடம் ஏது?
 • சித்தன் போக்கு சிவன்போக்கு, ஆண்டி போக்கு அதே போக்கு.
 • சித்திரகுப்தனுக்கு தெரியாமல் சீட்டு கிழியுமா?
 • சில்லரைக்கடன் வாழ்வை சீரழிக்கும்.

 • சிறுக்கி கால்பணம்.. ஆனால் சிறுக்கி கொண்டை மூன்று பணம்.
 • சிறைபட்டாயோ குறைபட்டாயோ.
 • பெண்ணின்பம் எண்ணாதார் பேரின்பம் காண்பர்.
 • சினந்தாலும் சீர் அழியப் பேசாதே.
 • சுட்டிக்காட்டாத வித்தை சூடுபோட்டாலும் வாராது.
 • சும்மா இருந்த உடம்பிலே சுண்ணாம்பு தடவி புண்ணாக்குவானேன்?
 • சூட்சுமத்தில் இருக்கிறது மோட்சம்.
 • சோற்றுப்பானை உடைந்தால் மாற்றுப்பானை இல்லை.
 • தங்கமும் பொன்னும் தரையிலே கிடக்கு, ஒருகாசு ஊறுகாய் உறியிலே இருக்கு.
 • தன்பலம் கொண்டுதான் அம்பலமும் ஏறவேண்டும்.
 • திடுக்கென்று வாழ்க்கைப்பட்டு வெடுக்கென்று அறுத்தாளாம்.
 • தின்ன தின்ன கேட்குமாம் பிள்ளைபெத்த வயிறு.
 • நகைத்து இகழ்வோனை நாயென நினை.
 • நில்லாத காலடி நெடுந்தூரம் போகும்.
 • நேற்று வந்தாளாம் குடி, அவள் தலையில் விழுந்ததாம் இடி.
 • பங்காளியையும், பனங்காயையும் பதம் பார்த்து வெட்ட வேண்டும்.
 • பசித்த செட்டி பாக்கை தின்றானாம்.
 • பட்டு அறி, கெட்டு அறி, பத்தும் இட்டு அறி.
 • பணமிருந்தால் பாதுஷா, பணமில்லாவிட்டால் பக்கிரி.
 • பத்தினி படபடக்க, பானை சட்டி லொடலொடத்ததாம்.
 • பத்திலே பசளை, இருபதிலே இரும்பு.
 • பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று.
 • பந்தமும் கூத்தும் விடிந்தால் தெரியும்.
 • அரணை கடித்தால் மரணம்.
 • பெண்டாட்டி ஆசை திண்டாட்டத்தில் போய் விட்டது.
 • அகழியில் முதலை விழுந்தால் அதுவே அதற்கு வைகுண்டமாம்.
 • பொன்னாங்கண்ணிக்கு புளியிட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் உழக்கு உண்பாள்.
 • பாராத காரியம் பாழாய்போகும்.

 • பாம்பு தன் பசியை நினைக்க, தேரையோ தன் விதியை நினைத்து அழுததாம்.
 • புகை புகாத இடத்திலும் புகுமாம் தரித்திரம்.
 • புலி அடிக்கும்முன் கிலி அடிக்கும்.
 • புலியூருக்கு பயந்தல்லோ நரியூருக்கு வந்தேன்... நரியூருக்கு வந்தால் நரியூரும் புலியூராய் பொங்கி கிடக்குதே சிவனே அய்யா.
 • புழுத்த சாணி கொழுத்த பணம்.
 • பூசாரி பூ முடிக்கப் போனானாம். பூவாலங்காடு பூவாக்கடாய் ஆச்சுதாம்.
 • நண்டை நாளி கொண்டு அளக்கலாமோ?
 • பூனைக்கு கும்மாளம் வந்தால் பீத்தல் பாயை சுரண்டுமாம்.
 • பெண்சாதி இறந்தால் புது மாப்பிள்ளை.
 • பெண்ணுக்கு பொன்னிட்டு பார், சுவருக்கு மண்ணிட்டு பார்.
 • பெண்ணுக்கு மாமியாரு.. பிள்ளைக்கோ வாத்தியாரு...
 • பெண்ணைக்கட்டி பையன் பேயானான், பிள்ளை பெற்று சிறுக்கி நாயானாள்.
 • பெற்றால் பிள்ளைநாயகம். நட்டால் தில்லைநாயகம்.
 • பெண்டாட்டி கொண்டதும் போதும், அவளால் திண்டாட்டம் பட்டதும் போதும்.
 • பெரியார் உண்மை பேதலிக்காது. சிறியார் உண்மை பூதலிக்காது.
 • பேச கற்ற நாய் வேட்டைக்கு உதவாது.
 • பேச்சைக்கொடுத்து ஏச்சை வாங்காதே.
 • பைய பைய மென்றால் பனையைக்கூட மெல்லலாம்.
 • பொக்கை வாய்க்கல்லோ பொரியுருண்டை கேக்குதாம்.
 • பொல்லாத காலம் சொல்லாமலேயே வரும்.
 • பொல்லாத மனம் புத்தி கேளாது.
 • பொன்னை கழித்தாலும் பொடிக்கீரையை கழிக்கலாமா?
 • போகபோகத்தான் தெரியும் பொய்யும், மெய்யும்.
 • போய்வந்தது பொன்னம்பலம், திரும்பி வந்தது திருவம்பலம்.
 • போனதை நினைத்தழுபவன் புத்தி கெட்டவன்.

 • மங்கை தீட்டானால் கங்கையில் மூழ்குவாள், கங்கையே தீட்டானால் எங்கே மூழ்குவாள்.
 • மண்டையில் எழுதி மயிரால் மறைத்தானாம்.
 • மடத்தை கட்டி அதற்கு மரநாயை காவல் வைத்தானாம்.
 • மலைவிழுங்கி மகாதேவனுக்கு பாறாங்கல்லே அப்பளம்.
 • முறத்தடி பட்டாலும் முகத்தடி படக்கூடாது.
 • மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னும் போகவிடான், பின்னும் போகவிடான்.
 • மூத்தோர் சொல்லும், முதிர் நெல்லிக்காயும் முன்னே புளிக்கும் பின்னே இனிக்கும்.
 • மேட்டில் ஏறினால் முத்தாச்சி, பள்ளத்தில் இறங்கினால் அத்தாச்சி.
 • வங்காளத்து நாய் சிம்மாசனம் ஏறிச்சுன்னு சொல்லி வண்ணான் வீட்டு நாய் வெள்ளாவிமேல் ஏறிச்சாம்.
 • வலிய உறவாடி வாசலிலே வந்தாலும் பொய்யாக உறவாடி போய்வா என்கின்றான்.
 • வாழ்ந்துகெட்ட வீட்டில் வறுவோட்டுக்கும் பஞ்சம்.
 • விட்டதடா ஆசை விளாம்பழத்து ஓட்டோடே..
 • விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது.
 • வீண் இழவாம் வெங்காயத்தாளாம். பிடுங்க பிடுங்க பேரிழவாச்சாம்.
 • வெட்டியானும் பிணமும் கட்டிக்கொண்டு அழட்டும். நமக்கென்ன வந்துச்சு தம்பிரானே.
 • வெல்லம் சாப்பிடுகிறவன் ஒருவன், விரலை சூப்புகிறவன் மற்றொருவன்.
 • வேலிக்கு ஓணான் சாட்சி, வெந்ததுக்கு சொக்கன் சாட்சி.
 • வேக நேரம் இருந்தாலும் சாக நேரம் இல்லையப்பா.
 • பகைவனின் புன்னகையைவிட நண்பனின் சினம் மேலானது.

👼👼👼👼👼👼

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

 1. எத்தனை எத்தனை சிறப்பான பழமொழிகள். பக்கத்தை சேமித்துக் கொண்டேன். உங்கள் தொகுப்பு முயற்சி மிகச் சிறப்பு. பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 2. ஆகா...! அனைத்தும் அருமை... சிலவற்றை வாசிக்கும் போது, பொதுவான உரையாடலில் வருவதுண்டு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன்... நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்..

   நீக்கு
 3. புதிய பழமொழிகள் அறிந்தேன். முதலாவது வருவது நம்ம ஊர் வழக்குச் சொல்!! சில நம்மூர் மற்றும் கேரளத்துச் சொற்களும் விரவி வருகிறதே..

  அருமையா இருக்கு சகோ

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்களுக்கு நன்றி... கூடவே கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன்!!!

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.