"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
புத்துணர்வூட்டும் தமிழ் பழமொழிகள் - Refreshing tamil proverbs.

புத்துணர்வூட்டும் தமிழ் பழமொழிகள் - Refreshing tamil proverbs.

புத்துணர்வூட்டும் பழமொழிகள்.

நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற பண்பாட்டு சிறப்புமிக்க விஷயங்கள் நிறையவே உள்ளன. என்றாலும், அவைகளில் எளிதாக நம் மனதில் ஊடுருவிச் சென்று வாழ்வை வழிநடத்தி செல்பவை அவர்கள் நமக்காக சொல்லிச்சென்ற நீதியுரைகள் எனலாம்.

மனதை பண்படுத்தி வாழ்வை வழிநடத்தும் இந்த நீதியுரைகளையே நாம் "பொன்மொழிகள்" என்றும் "பழமொழிகள்" என்றும் குறிப்பிட்டு மகிழ்கிறோம்.

நாம் நம் பதிவுகள் மூலமாக தொடர்ந்து புதுமையான பழமொழிகள் பலவற்றைப்பற்றி பார்த்துவருகின்றோம். அதன் தொடர்ச்சியாகிய இப்பதிவிலும் புதுமையான சில பழமொழிகளை பற்றி பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பார்க்கலாம்.

Refreshing Proverbs in Tamil.

  • கோடி ஒரு வெள்ளை, குமரி ஒரு பிள்ளை.
  • சிறுக கட்டிப் பெருக வாழ்.
  • கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
  • கொள்ளுக் கொடி பந்தல் ஏறாது.
  • கொள்ளு வெள்ளாமை கொள்ளை வெள்ளாமை.
  • கொள்ளு குத்தின உலக்கை போல.
  • கொள்வார்  அற்ற குயக்கலம் போல.
  • பெண் கொள்ளப்போய் குருடியை கொண்டானாம்.
  • கொள்ளிக்கட்டையால் சுட்டால் கொப்பளிக்குமென்று வாழைப்பழம் கொண்டு வடுவாய் சுடுகிறானாம்.
  • கொள்ளையிட போகிறவனுக்கு குருடன் துணை ஆகுமா?

  • கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சுவானா?
  • கொழுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.

  • கோட்டுச்சம்பா ஆக்கி வைத்தால் போட்டு தின்ன உறவு வரும்.
  • கோடி சீமான் துணிய வேண்டும், அல்லது கோவணாண்டி துணிய வேண்டும்.

  • கோடிகொடுத்தாலும் கோபுரம் தாழாது.
  • கொள்ளை பறிக்கிறது, கொடுக்கப் பறக்கிறது, கொண்டவனை கண்டாலோ குடலை புரட்டுகிறது.
  • கொளிஞ்சி மிதித்தால் களஞ்சியம் நிறையும்.
  • கோடி தனம் இருந்தாலும் குணங்கெட்ட மங்கையுடன் கூடாதே.

  • கோடி துக்கம் என்றாலும் குழந்தை முகம் கண்டால் மறையும்.
  • கோடி போனாலும் கூப்பாடு, கோவணம் போனாலும் கூப்பாடு.
  • கோடி குண்டர்கள் ஏறி மிதித்தாலும் கூழாங்கல் சாந்துக்கு உதவுமா?
  • கோடு (கோர்ட்) கண்டாயோ? ஓடு (பிச்சை பாத்திரம்) கண்டாயோ?
  • கோடு அடுத்தவன் (கோர்ட் போகிறவன்) ஓடு (பிச்சை) எடுப்பான்.
  • வீணருக்கும் கீர்த்திக்கும் வெகுதூரம்.
  • கோத்திர ஈனன் சாத்திரம் பார்ப்பான்.
  • கோபம் இல்லாத துரைக்குச் சம்பளம் இல்லாத சேவகன்.
  • கோபம் இல்லாத புருஷனும் புருஷன் அல்ல. கொதித்து வராத சோறும் சோறு அல்ல.
  • கோபம் இல்லாதவனை குரு காப்பார்.
  • தீராத கோபம் தாளாத பாவம். ஓயாத நித்திரை ஆயாத சத்துரு.
  • கோபம் குடிகெடுக்கும்.
  • கோபம் உள்ள இடத்தில் குணமும் உண்டு.
  • கோபம் வந்து கிணற்றில் விழுந்தால் கோபம் தணிந்தவுடன் எழுந்திருக்கத்தான் முடியுமா?
  • கோல் பிடித்தவன் கோமான், தண்டம் பிடித்தவன் தண்டம்.
  • ஆவணத்துக்கு மிஞ்சிய ஆதாரமும் இல்லை. கோவணத்துக்கு மிஞ்சிய சேதாரமும் இல்லை.
  • கோவில் சோறு குமட்டியதாக கூறியவள்தான் குத்து உமித்தவிட்டுக்கு இங்கு கூத்தாடி நிற்கிறாள்.
  • கோவிலை கொள்ளையடிப்பவன் குருக்களுக்கு தட்சிணை கொடுப்பானா?
  • கோளாறு இல்லாத செட்டி கோவணத்தை அவிழ்ப்பானா?
  • கௌபீனத்துக்கு ஆசைப்பட்ட சாமியார் கல்யாணத்துக்கு பெண் தேடி போனாராம்.
  • சங்கட சனியனே சடுதியல் விட்டுத் தொலையேன்.
  • சங்கடமாக பிள்ளையைப் பெற்றானாம், அதற்கு வெங்கடராமன் என்று பெயரும் வைத்தானாம்.
  • சட்டி பாலுக்கு ஒரு சொட்டு மோர் பிரை.
  • சடை தம்பிரானுக்கு சாதம் இல்லாதபோது அவன் தம்பி மொட்டை ராமனுக்கு மட்டும் மோர் எங்கே இருந்து கிடைக்கும்?
  • சத்தாவரணம் சேவித்தால் செத்தவுடனே வைகுண்டம்.
  • சதை உள்ள இடத்தையே கத்தி நாடும்.
  • சந்தியில் அடித்தால் சாட்சிக்கு யார் வருவார்?
  • சந்திரன் இல்லா வானமும் பாழ். மந்திரி இல்லா அரசும் பாழ்.
  • சமர்த்தன் சந்தைக்கு போனால் கொள்ளவும் மாட்டான் கொடுக்கவும் மாட்டான்.
  • சர்க்கரையும் நெய்யும் சேர்ந்தால் கம்பளத்தையும் தின்னலாம்.
  • சரக்கு மலிந்தால் கடைக்கு வரும்.
  • சனிப்பயிர் சாத்திரத்துக்கு உதவும்.

  • கோடி நேசம் கேடுபடுத்தும்.
  • கோடி வித்தையும் கூழுக்குதான்.
  • கோடீஸ்வரனை கெடுக்க ஒரு கோவணாண்டி போதும்.
  • கோடையால் காய்கிற பயிர் வாடையால் தளிர்க்கும்.
  • கோணக் கோணக் கோவிந்தா.
  • கோப்பு தப்பினால் குப்பையும் பயிராகாது.
  • கோபம் ஆறினால் குரோதமும் ஆறும்.

  • சாக்கடைக்கு போக்கிடம் எங்கே?
  • சாகாமல் கற்பதே கல்வி, பிறரிடம் ஏற்காமல் உண்பதே ஊண்.
  • சாகத் துணிந்தவன் சனிக்கு பயப்படுவானா?
  • சாடை தெரியாதவன் சண்டாளன்.
  • சாத்திரம் படித்தாலும் ஆத்திரம் போகாது.
  • சாத்திரம் பார்த்தால் மூத்திரம் பெய்ய இடமில்லை.
  • சாராயத்தை வார்த்து பூராயத்தை கேள்.
  • சாலை வழியே போகிற சனியனை சாயங்காலம் வீட்டுக்கு வா என்றாளாம்.
  • சிடுக்குத் தலையும் சொடுக்கு பேனும்.
  • சித்தன் போக்கு சிவன் போக்கு, பித்தன் போக்கு பெரும் போக்கு.
  • சித்திரத்தில் வைத்து எழுதாத சோழியனைத் தோப்பூர் சத்திரத்தில் ஏன் வைத்தாய் சண்டாளனே?
  • சித்திர வேலைக்காரனுக்கு கை உயர்த்தி, தெய்வப் புலவனுக்கோ நா உயர்த்தி.
  • சித்திராங்கி பொம்மா, சின்ன வேங்கடத்து அம்மா.
  • சித்திரை என்று சிறுக்கிறதும் இல்லை. பங்குனி என்று பருக்கிறதும் இல்லை.
  • சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்கு திருவெம்பாவை கற்றுக்கொடுக்க வேண்டுமா?
  • சிரங்கு முற்றி பவித்திரம் ஆனது போல.
  • சிரித்தாயோ? சீரைக் குலைத்தாயோ?
  • சிரித்தாளாம் சிரித்தாளாம் சீழ் வடிந்த கண்ணி, கொண்டானாம் கொண்டானாம் ஜொள் வடிந்த வாயன்.
  • சில்லறைக் கடன் சீரழிக்கும்.
  • சினந்திருந்தார் வாசல் வழி சேரவேண்டாம்.
  • சினம் மீறினால் இனம் தெரியாது.
  • சிற்றின்பம் எண்ணார் மற்றின்பம் காண்பர்.
  • சிறுமைக்கு இடம் கொடேன், சேம்புக்குப் புளி இடேன்.
  • சிறுக்கி சின்னப் பணம், சிறுக்கி கொண்டை மூன்று பணம்.
  • சிறுமைப் படுகிறதை விட செத்துவிடுவது உத்தமம்.
  • சிறுமையும், பெருமையும் தான் தர திருப்பி வரும்.
  • சின்ன வீட்டில் நடந்த சமாசாரம் சீமந்தத்தில் தெரியும்.
  • சினந்தவரை இனம் தழுவாது.
  • அவசர புத்தி பலவீனம்.
  • சீக்கிரம் பழுப்பது சீக்கிரமே உளுக்கும்.
  • சீர் உண்டானால் சிறப்பு உண்டு.
  • சீர்மை உண்டானால் நேர்மையும் உண்டு.
  • சீராளனைப் பெற்ற பிறகு திரைச்சீலை துணிக்கும் வந்தது வருத்தம்.
  • சீலை இல்லையென்று சிற்றாத்தாள் வீட்டுக்கு போக அவளோ ஓலைப்பாயை கட்டிக்கொண்டு ஓரமாக நின்றாளாம்.
  • சீவரத்து கிராமணி இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான்.
  • சீவனம் செய்ய நாவினை விற்காதே.
  • சுக்கான் செட்டி சோறு போடுவானா?
  • சுக்கிரனைப்போல கொடுக்கிறவனும் இல்லை, கேதுவைப்போல கெடுக்கிறவனும் இல்லை.
  • சுக்கு அறியா கஷாயமும் உண்டோ?
  • சுக்கு செத்தாலும் சுரணை போகாது.
  • சுக்கு தின்று முக்கிப் பெற்றால் தெரியும் பிள்ளையின் அருமை.
  • சுகதுக்கம் சுழல் சக்கரம்.
  • சுகமும் கூழும் இறுகத் தடிக்கும்.
  • குணமில்லா மூஞ்சியை காட்டாதே, வந்த விருந்தாளியை ஓரமாக ஓட்டாதே.
  • சுட்ட சட்டி அறியுமா அப்பத்தின் சுவையை?
  • சுட்டால் தெரியும் குயவனுக்கு, சுட்டாலும் தெரியாது கயவனுக்கு.
  • சுட்டிக் காட்டாத வித்தை சுட்டு போட்டாலும் வாராது.
  • சுடுகாட்டுக்குப் போன பிணம் திரும்பி வருமா?
  • சுடுகாட்டு தத்துவம் சுடுகாட்டுடன் நிற்கும்.
  • சும்மாவே ஆடுகிற சாமிக்கு சாம்பிராணி புகை போட்டால் சொல்லவா வேண்டும்?
  • பெண்சாதி இல்லாதவன் பேயை கட்டி தழுவினானாம்.
  • பெண்டாட்டி ஆசை திண்டாட்டத்தில் விட்டது.
  • பெண்டாட்டி ஆத்தா பெரியாத்தா, பிழைக்கும் வழியைச் கொஞ்சம் சொல்லாத்தா.
  • பெண்டாட்டி கொண்டதும் போதும், திண்டாட்டம் பட்டதும் போதும்.
  • பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல்.
  • பெண்ணிடம் அகப்பட்ட பணமும் ஆணிடம் அகப்பட்ட குழந்தையும் உருப்படாது.
  • பெண்ணுக்கு குணமே சீதனம்.
  • பெண்ணுக்கு கேடு பிறந்தகத்தார்.
  • பெண் தந்த மாமியாரை கண் தந்த தெய்வமாக மதி.
  • பெண் அதிகாரம் படைத்த வீடு பேர் அழிந்து போகும்.
  • பெரிய இடமென்று பிச்சை கேட்க போனாளாம். அங்கு பெரியம்மை மாமியோ கச்சைகட்டி ஆடினாளாம்.
  • பெரிய மரத்தை சுற்றிய மல்லியும் சாகா.
  • பெரியோர் தின்றால் பலகாரம்.. அதுவே சிறியோர் தின்றால் நொறுக்கு தீனி.
  • பெருங்காயம் இல்லாத சமையலும் பெரியவர் இல்லாத இல்லமும் வாசனையறுந்து போகும்.

  • கோபமும் தாபமும் கூடிக் கெடுக்கும். குடியையும் கெடுக்கும்.

  • பெரு நெருப்பில் புழு மேவுமா?
  • பெருமாள் புளித்தண்ணீருக்கு அழுகிறார். அனுமான் புத்தரிசி சோறு கேட்கிறார்.
  • பெருமைப் பேச்சு அருமையைக் குலைக்கும்.
  • பெருமை பீதக்கலம், இருக்கிறதோ ஓட்டை கலம்.

  • கொள்ளியும் தீயும் உனக்கு, பிள்ளையும் தள்ளையும் எனக்கு.
  • கொள்ளும் வரையில் கொண்டாட்டம், கொண்ட பிறகு திண்டாட்டம்.
  • கோடி கப்பல் நஷ்டம் கொட்டை நூற்றா தீரும்?

  • பெற்ற தாய் இறந்தால் பெற்ற அப்பன் சிற்றப்பன்.
  • பெற்றது வயிற்றுப் பிள்ளை. கொண்டது கயிற்றுப் பிள்ளை.
  • பெற்ற பிள்ளை உதவுவதற்கு முன் வைத்த பிள்ளை (தென்னம் பிள்ளை) உதவும்.
  • பெற்றாலும் பிள்ளை நாயகம், நட்டாலும் தில்லை நாயகம்.

💢💢💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

  1. கோபம் குடியைக் கெடுக்கும், சினந்திருந்தார் வாசல் சேர வேண்டாம், என்றெல்லாம் சொல்லி கூடவே கோபம் இருக்கும் இடத்தில் குணமிருக்கும்னு சொன்னது முரணாக இல்லை?

    ஏனோ என்னால் கோபம் இருக்குமிடத்தில் குணமிருக்கும்னு சொல்வதை ஏற்க முடிவதில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துகளுக்கு நன்றி சகோதரி.
      கோபத்தில் பலவகை உள்ளது. அதில் ஒன்று முரட்டுத்தனமானது மற்றொன்று கண்டிப்பானது.
      முரட்டுத்தனமான கோபம் ஆபத்தானது. வன்மம் நிறைந்தது. புத்தியை பேதலிக்க செய்வது. ஆனால் கண்டிப்புடன் கூடிய கோபம் பாசத்தை உள்ளடக்கியது. குழந்தையிடம் பெற்றோர்கள் காட்டும் கோபம் கண்டிப்புடன் கூடிய கோபம். குழந்தை உருப்படவேண்டுமே என்னும் ஆதங்கத்தில் வெளிப்படுவது. பாசத்தையும் குணத்தையும் உள்ளடக்கியது. எனவே இரண்டுவித கோபத்தையும் ஒன்றாக போட்டு குழப்பிகொள்ள வேண்டாம். நன்றி!!

      நீக்கு
  2. பெண்ணுக்குக் குணமே ஸ்ரீதனம்....

    ஆணுக்கும் குணமே ஸ்ரீதனம் - இதையும் சேத்துக்கோங்க !!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி... நீங்கள் என்ன அர்த்தத்தில் இதனை புரிந்துகொண்டீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் இப்பழமொழியின் அர்த்தமானது நல்ல குணமுள்ள பெண்ணுக்கு குணமே பிகப்பெரிய சீதனம்.. எனவே பொருளாக வேறு சீதனம் எதுவும் தேவையில்லை குணம் மட்டுமே போதுமானது என்னும் பொருள்படும்படி அமைந்துள்ளது. பெண்களை பெருமைபடுத்தும் பழமொழி இது... நன்றி!

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.