"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
உயிரோட்டமுள்ள பழமொழிகள் - Creatures in proverbs.

உயிரோட்டமுள்ள பழமொழிகள் - Creatures in proverbs.

Creatures in proverbs.

நம்மை பண்படுத்தி வாழ்வை செம்மைபடுத்தும் திறன் பெற்றவை முன்னோர்கள் நமக்களித்த "நீதியுரைகள்".

காலத்தால் பழமையானது என்பதால் இந்த நீதியுரைகளே "பழமொழிகள்" எனவும் அழைக்கப்படுகின்றன.

இப்பழமொழிகள் வெறும் நீதியுரைகளாக மட்டுமல்லாமல் நாம் அன்றாடம் பார்க்கும் உயிரினங்களான பறவைகள், விலங்குகள், பூச்சிகள் மற்றும் ஊர்வனவைகளின் செயல்களை அடிப்படையாகக்கொண்டு வேடிக்கையாக அமைவதுமுண்டு.

"உயிரோட்டமுள்ள பழமொழிகள்" என்னும் இப்பதிவின் மூலமாக உயிரினங்களை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பழமொழிகளில் சிலவற்றை பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பார்க்கலாம்.


உயிரோட்டமுள்ள பழமொழிகள்.


 • காட்டுக்காடையை பிடிக்க வீட்டுக் காடை வேண்டும்.
 • ஆட்டை காட்டி வேங்கையை பிடி.
 • ஆடு இருக்கப் புலி இடையனை எடாது.
 • ஆடு இருந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படா.
 • நைய புடைத்தாலும் நாய் நன்றி மறவா.
 • கலக்கம்பு போட்டு வளர்த்தாலும் காடை இருப்பதென்னவோ காட்டிலேதான்.
 • கழுத்து வெளுத்தாலும் காக்கை கருடன் ஆகுமா?
 • ஆனை ஏறி விழுந்தவனை கடா ஏறி மிதித்த கதை.
 • ஆனை ஏறினால் மாவுத்தன், குதிரை ஏறினால் ராவுத்தன்.
 • ஆனையின் கறுப்பைக் கண்ட அட்டையோ என் நிறத்துக்கு என்ன குறைச்சல் என்றதாம்.
 • கழுவி கழுவி குளித்தாலும் காக்கை நிறம் மாறாது. உருவி உருவி குளித்தாலும் ஊத்தை நாற்றம் போகாது.
 • காக்கனுக்கும் பூக்கனுக்கும் பூத்தாயோ புன்னை? கண்ணாளன் வரும்வரையில் வைக்கலியே உன்னை.
 • காக்கைக்கு புடுக்கு உண்டானால் பறக்கும் போது தெரியாதா?
 • கால் ஒடிந்த கோழிக்கு உரல்குழியே கைலாசம்.
 • குடியில்லா ஊரிலே குருவியும் பறக்காது.
 • கொல்லன் உலையில் கொசுவுக்கு என்ன வேலை?
 • குருட்டுக்கோழி தவிட்டுக்கு வீங்கினதுபோல.
 • ஆனைக்கு வயிறு நிறைந்தாலும் ஆட்டுக்குட்டிக்கு வயிறு நிறையாது.
 • குருவி சொல்லையும் மருவி கேள்.
 • கொக்கின் இளம் குஞ்சும் கண்டதில்லை, கோணாத உயர் தெங்கும் கண்டதில்லை.
 • கொல்லை காய்ந்தாலும் குருவிக்கு மேய்ச்சல் உண்டு.
 • கொழுத்த மீன் தின்கிறவன் குருவிக் கறிக்கு அசிங்கப்படுவானா?
 • கோழி அடிக்கிறதுக்கு குறுந்தடி வேண்டுமா?
 • கோழி காணவில்லையென்று கோழி திருடியும் கூடி அழுத கதை.
 • கோழி மேய்த்தாலும் கும்பினியான் (கவர்ன்மென்ட்) கோழி மேய்க்க வேண்டும்.
 • சும்மா இருக்கிற குருவிக்கு சோற்றை வைப்பானேன், அது கொண்டையை கொண்டையை ஆட்டிக்கிட்டு கொத்த வருவானேன்.
 • சூடியும் உணர்ச்சி வராது சுரணை கெட்ட மாட்டுக்கு.
 • ஆடு கறக்கவும், பூனை குடிக்கவும் சரியாக இருந்தது.
 • ஆடு கொண்டவன் ஆடி திரிய கோழி கொண்டவனோ கூவி திரிகிறான்.
 • சூடு கண்ட நாய் சாம்பல் குளிக்காது.
 • ஆனை மேல் ஏறி பாறை மேல் விழுந்தானாம்.
 • ஆனை மேல் போகிறவன் அந்து காலன், குதிரை மேல் போகிறவன் குந்து காலன்.
 • சம்பா விளைந்து கிடக்கிறது, உண்பார் இல்லாமல் ஊர்க்குருவி மேய்ந்து கிடக்கிறது.
 • சித்திரத்துக் கொக்கே கொஞ்சம் ரத்தினத்தை கக்கே!
 • சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் சட்டி பானை எல்லாம் "லொடலோட" வென கத்தும்.
 • பேச்சு பேச்சு என பேசும் பசுங்கிளி பெரும்பூனையைக் கண்டால் கீச்சு கீச்சுவெனவே கத்துமாம்.
 • ஆனைக்கு மதம் பிடிக்க, பாகனுக்கு கிலி பிடிக்க.
 • ஆனை கட்டி வாழ்ந்தவர் வீட்டில் பானை சட்டிக்கு வழி இல்லையாம்.
 • ஆனை குட்டிபோடும் என்று பார்த்திருக்க அது லத்தி போட்டதாம்.
 • விசுவாசக் கொக்கு நடனமாடி செத்ததாம்.
 • வாயாடியின் மாப்பிள்ளையாய் வாழ்வதைக் காட்டிலும் வரகூர் தெருவில் கூழைக் கடாவாக இருப்பதே மேல்.
 • வான் குருவி கூடும், வன்கரையான் புற்றும், தேன் சிலந்தி தாடும் செய்யத் தெரிவது அரிது.
 • வால் நீண்ட கருங்குருவி வலமிருந்து இடம் போனால் கால் நடையாய் நடந்தவரும் கனக தண்டி ஏறுவரே!
 • வெள்ளெருக்குக்கும் வெள்ளாட்டு பாலுக்கும் கள்ளக் கருமேகம் காணாமற் போகும்.
 • அலையும் நாய் பசியால் இறவா.
 • ஆட்டுக்கடா சண்டையிலே நரி அகப்பட்டுகொண்டது போல.
 • ஆட்டைத் தேடி அயலார் கையில் கொடுப்பதைவிட வீட்டைக் கட்டி நெருப்பு வைப்பது மேல்.
 • ஆடி கழிந்த எட்டாம் நாள் கோழி அடித்து கும்பிட்டானாம்.
 • ஆடு அடித்தால் அந்த பக்கம் அகப்பை தட்டினால் இந்த பக்கம்.
 • ஆடு  அடித்தாலும் அன்றைக்கே காணாது, மாடு அடித்தாலும் மறுநாள் காணாது.
 • ஆடு, மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராஜா.
 • ஆண்டி அன்னத்திற்கு அழ, அவன் நாய் அப்பத்திற்கு அழுததாம்.
 • ஆமை முட்டையிடும் காட்சியை கண்ணார கண்டு கண்பிதுங்கி செத்ததாம் கண் சிவந்த முயல்.
 • ஆயிரம் கொடுத்து ஆனை வாங்கி அங்குசம் வாங்க பேரம் பண்ணினானாம்.
 • தான் போனால் சண்டை வருமென்று நாயை விட்டு ஏவினானாம்.
 • ஆன மாட்டை விற்றவனும் கெட்டான், அறுகங்காட்டை தொட்டவனும் கெட்டான்.
 • ஆனை ஆசார வாசல் காக்கும், பூனை புழுத்த மீனை காக்கும்.
 • ஆனைக்கு அகங்காரம் அழகு, பெண்ணுக்கு அலங்காரம் அழகு.
 • ஆனைக்கு கண் அளந்தார், ஆட்டுக்கு வால் அளந்தார்.
 • ஆனைக்கும் அடி தவறும், பூனைக்கும் எலி தவறும், வேட்டுவனுக்கும் குறி தவறும்.
 • ஆனை தம்பட்டம் அடிக்க ஓநாய் ஒத்து ஊதிற்றாம்.
 • ஆனை மேய்கிற காட்டில் ஆட்டுக்குட்டிக்கு இரை கிடைக்காமல் போகுமா?
 • ஆனையை கட்டி ஆளலாம், ஆனால் அரைப்பயித்தியத்தைக் கட்டி ஆள்வது கடினம்.
 • ஆனையை பிடிப்பான் ஆண்பிள்ளை சிங்கம், பானையை பிடிப்பாள் பத்தினி தங்கம்.
 • அக்குத்தொக்கு இல்லாதவனின் ஆண்மை.. நாய் கக்கி நக்கி தின்பதையே ஒக்கும்.
 • அகப்பட்ட நாயை அடிக்கும்போது அதைக்கண்ட தெருநாயோ காதவழி ஓடுமாம்.
 • இடையன் பெருத்தாலும் இடையனின் கிடை நாய் பெருக்காது.
 • ஈயாத பத்தினியிடம் ஈ என்றாலும், ஈ இல்லை அது கொசு என்பாளாம்.
 • உடம்பெல்லாம் புழுத்தவன் புகழேந்தி கோவிலை கெடுத்தானாம்.
 • உழக்கு நெல்லுக்கு உழைக்கப் போக பதக்கு நெல்லை பன்றி தின்று போனதாம்.
 • உள்ளதை எல்லாம் விற்று "உள்ளான்" மீனை தின்றுதான் பார்.
 • உள்ளூரில் ஓணான் பிடிக்காதவனா உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பான்?
 • உளுவை குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டுமா?
 • உறங்கின நரிக்கு உணவு கிட்டாது.
 • உறியிலே தயிர் இருந்தால் பூனையும் சிவராத்திரி அனுஷ்டிக்குமாம்.
 • ஊமை ஊரை கெடுக்கும், ஆமை ஆற்றை கெடுக்கும். முதலை முழுவதையும் கெடுக்கும்.
 • ஊரார் நாய்க்கு சோறு போட்டாலும் அது உடையவன் வீட்டில் போய்தான் குரைக்கும்.
 • எசமான் கோபத்தை எருமைகடா மேல் காண்பிக்காதே.
 • எடுத்து எடுத்து உழுதாலும் எருமை கடா ஆகா இளைத்த கடா.
 • எண்ணப்பட்ட குதிரையெல்லாம் மண்ணைப் போட்டுக்கொள்ள, தட்டுவாணி குதிரைவந்து தட்டைப்பயறுக்கு அழுகிறதாம்.
 • எண்ணெய் குடித்த நாய் திண்ணையில் கிடக்க, எதிரே வந்த நாய் அடிபட்டு செத்ததாம்.
 • எத்துவாரை எத்தி எலி பிடித்து வந்திருக்கேன், கேட்பாரைக் கேட்டு கேப்பை வாங்கித் திரி.
 • எதிரி சுண்டெலி ஆனாலும் எச்சரிக்கையே ஏக பரபிரம்மம்.
 • எல்லாம் கிடக்க எருதுக்கு சீமந்தமாம்.
 • எருமை கன்றானாலும் அருமை கன்றே.

  • எருமை போய் ஏரியிலே விழுந்தால் தவளை எல்லாம் தானே குதித்தோடும்.
  • எல்லோரும் நெல்-ஐ உலர்த்துகிறார்கள் என்று எலி அதன் வாலை உலர்த்தியதாம்.
  • எல்லோரும் ஏறி இளைத்த குதிரைதானே என்று சாஸ்திரியாரும் ஏறி சரிந்து விழுந்தாராம்.
  • எலி புழுக்கை கரப்பில் இருந்தாலென்ன? வரப்பில் இருந்தாலென்ன?
  • எலியாரை பூனையார் வாட்டினால் பூனையாரை நாயார் வாட்டுவார்.
  • எரிப்புக்கு ஆற்றாமல் ஏர் உழ போகின்றேன், கஞ்சியுடன் கருவாடும் கச்சிதமாய் கொண்டு வா.
  • எறும்பு ஊர இடம் கொடுத்தால் கரும்புகூட காணாமல் போகும்.
  • என்னடா என்றாராம் அப்பா, எலி அம்மணமாக ஓடுகிறது என்றானாம் பிள்ளை.
  • என்னமாய் சொல்லி இதமாய் உரைத்தாலும் கழுதைக்கு உபதேசம் காதில் ஏறாது.
  • ஆ வேறு நிறம் ஆனாலும் பால் வேறு நிறம் ஆகுமா?
  • காக்கையும் கத்திப்போக, கருவாடும் விற்றுப்போக.
  • காக்கையை கண்டு அஞ்சுவான், காவேரி ஆற்றில் நீந்துவான்.
  • காட்டானை ராஜாவுக்கு எலிக்குஞ்சு மந்திரியாம்.
  • காத்திருந்த நாய்க்கு கல்லெறிதான் மிச்சம்.
  • கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
  • காலாட்டி வீட்டில் வாலாட்டி நாய் தங்காது.
  • காலம் கனிந்தால் பெருச்சாளியும் காவடி தூக்கி ஆடும்.
  • கெட்ட இடையனுக்கு எட்டு ஆடு போதும்.
  • செட்டி படை வெட்டாது, செத்த பாம்பு கொத்தாது.
  • எலிக்கு பயந்து எமனிடம் மாட்டுன கதை.
  • செட்டியார் வீட்டு நாயும் கணக்கு பார்த்தே கடிக்குமாம்.
  • செட்டி வீட்டு வெள்ளரிக்காய் என்றால் நரியும் நொட்டை விட்டு தின்னுமாம்.
  • செத்த மாட்டை அறுக்காத கத்தி சொத்தை கத்தரிக்காய் என்றால் சுகமாக  அறுக்குமாம்.
  • செந்நாய் கூட்டத்துக்கு சிறுத்தையும் அஞ்சும்.
  • சேற்றிலே புதையுண்ட யானையை காக்கையும் கொத்தும்.
  • சொறி சொறிகிற சுவாரஸ்யத்தில் ஆனை விலை கேட்டானாம்.
  • சொறி நாய்க்கு கரிக்குட்டையே சொர்க்கமாம்.
  • சொறி நாய் சோர்ந்து விழ, வெறி நாய் விழுந்து கடிக்க.
  • சொன்னதை சொல்லுமாம் கிளி, செய்வதை செய்யுமாம் குரங்கு.


  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  2 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.