"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பண்டுஸ்தான் - Bantustan - Part 2.

பண்டுஸ்தான் - Bantustan - Part 2.

பண்டுஸ்தான்.

Bantustan.

Part 2.

பண்டுஸ்தானைப் பற்றிய பதிவில் இது இரண்டாவது பகுதி. முதல் பகுதியில் "பண்டுஸ்தான்" உருவான விதம் மற்றும் வெள்ளையர் அரசாங்கத்தால் தென் ஆப்பிரிக்க கறுப்பின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி முதலானவைகளைப் பார்த்தோம்.

இரண்டாவது பகுதியான இந்த பதிவில் பண்டுஸ்தான் தாயகம் என்று சொல்லப்படும் 10 பிரதேசங்களையும் பார்வையிட இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.

இப்பதிவின் முதல் பகுதியை (Part - 1) படிக்க அடுத்து கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக்குங்க...

>> பண்டுஸ்தான் - Bantustan - Part 1. <<

  BANTUSTAN.

  பதினெட்டாம் நூற்றாண்டில் வலுவான கடற்படைகளைக் கொண்டிருந்த நாடுகளுக்கு ஒரு வலுவான வெளியுறவு கொள்கையும் இருந்தது. செல்வமும், இயற்கை வளங்களும் நிறைந்த நாடுகளை தங்களின் படை பலத்தால் அடிமைப்படுத்தி அவர்களின் செல்வங்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பதே இவர்களின் பிரதான வெளியுறவு கொள்கை.

  இந்த வெளியுறவுக்கொள்கையில் முன்னோடியாகவும், அதிக நம்பிக்கையும் கொண்டிருந்தவர்கள் டச்சுக்காரர்கள், பிரிட்டீஷ் மற்றும் ஸ்பானியர்கள்.

  இவர்களின் வெளியுறவுக்கொள்கை பிடியிலிருந்து இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவும் தப்பவில்லை.


  ஹாலந்து நாட்டை சேர்ந்த டச்சுக்காரர்கள் 1602 ல் இந்தியாவில் தங்கள் வியாபார ஸ்தலத்தை விஸ்தரிக்கும் நோக்கில் "டச்சு கிழக்கிந்திய கம்பெனி" என்ற கப்பல் போக்குவரத்துக் கம்பெனியை தங்களின் வியாபார தேவைகளுக்காக இந்தியாவில் நடத்திவந்தனர்.

  இந்தியா வரும் கப்பல்கள் வழியில் தங்கி ஓய்வெடுத்து செல்ல அது வரும் வழியிலேயே ஒரு துறைமுகம் தேவைப்பட்டதால் டச்சு காலனித்துவ முற்றுகைப்படையுடன் வந்த "வன் ரிபீக்" (Jan Anthoniszoon Van Riebeeck) என்பவன் தென்னாப்பிரிக்காவிலுள்ள கடலோரப்பகுதியான "நன்னம்பிக்கை முனை" யை கைப்பற்றி கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.

  இவர்களைத் தொடர்ந்து அடுத்துவந்த பிரிட்டிஷ்காரர்கள் இந்த நன்னம்பிக்கை முனையுடன் "கேப்டவுன்" (Cape Town) பகுதியையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இதுவே பிரிட்டீஷ்காரர்கள் அதிக அளவில் தென்னாப்பிரிக்காவில் நுழையவும், அவர்களை அடிமைகொள்ளவும் வழியேற்படுத்திக் கொடுத்துவிட்டது.

  தென்னாப்பிரிக்க நிலப்பரப்பு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிரிட்டீஷ்காரர்கள் "தென்னாப்பிரிக்க தேசிய கட்சி" என்னும் அரசியல் அமைப்பினை ஏற்படுத்தி ஆட்சியையும் கைப்பற்றிக்கொண்டனர்.

  விளைவு தென்னாப்பிரிக்காவின் மண்ணின் மைந்தர்களாகிய கருப்பின மக்கள் அடிமையாக்கப்பட்டதோடு பலவிதங்களிலும் கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.

  இதன் உட்சபட்ச கொடுமை என்னவென்றால் கறுப்பின மக்களின் நிறத்தைக் காரணம்காட்டி கருப்பின மக்களை வெள்ளையர்கள் வாழும் பகுதிக்குள் செல்ல தடை விதித்தார்கள். இதனால் ஆப்பிரிக்கர்கள் தங்களது சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டார்கள்.

  இன்னும் சொல்லப்போனால் ஆடு, மாடுகளைப்போல தென்னாப்பிரிக்க நிலப்பரப்பிலிருந்தே துரத்தியடிக்கும் கொடூர நிகழ்வு அரங்கேறிய காலம் அது.

  அவ்வாறு அகதிகளாக்கப்பட்ட கருப்பின மக்களை தங்களிடமிருந்து விலக்கி வைக்கும் பொருட்டு 1951 ல் வெள்ளையர் அரசால் "பண்டு அதிகாரச் சட்டம்" உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் உள்நாட்டிலேயே கருப்பின மக்களை தனியாக பிரித்துவைக்க வழிவகை செய்தது.

  இந்த சட்டத்தின் அடிப்படையில் தென்னாப்பிரிக்காவின் தேசிய கட்சி நிர்வாகம் கருப்பின மக்களுக்காக 10 ற்கும் மேற்பட்ட சிறிய நிலப்பரப்புகளை (பிரதேசம்) தென்னாப்பிரிக்காவிற்கு உள்ளாகவே ஒதுக்கியது. இப்பகுதிகள் தென்னாப்பிரிக்க அரசாங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு தன்னாட்சி பகுதிகளாக மாற்றப்பட்டன.

  அவ்வாறு தனியாக வரையறுக்கப்பட்ட பகுதியில் கறுப்பினத்தை சார்ந்த வெவ்வேறு இன தென்னாப்பிரிக்க மக்கள் வலுக்கட்டாயமாக குடியமர்த்தப்பட்டனர். இதனால் அரசுகளின் சலுகைகள் எதுவும் கருப்பினமக்களுக்கு கிடைக்காமல் போனது. தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டது. ஏனெனில் அந்த மக்கள் அந்த நாட்டின் குடிமக்கள் கிடையாது என அரசாங்கம் அறிவித்தது.

  அந்த நிலப்பரப்புகள் தனித்தனி பெயர்களில் அழைக்கப்பட்டதோடு பொதுவாக "பண்டுஸ்தான்" (Bantustan) என தனியாக அடையாளப்படுத்தப்பட்டன. பண்டுஸ்தான் என்றால் "கருப்பர்களின் தாயகம்" (black homeland) என்று பொருள்.

  கறுப்பின மக்களின் தாயகமான தென்னாப்பிரிக்காவை அவர்களிடமிருந்து ஆட்டையை போட்டதுவுமல்லாமல் அதில் சிறுபகுதிகளை மட்டுமே ஒதுக்கி அதற்குள் அதிகப்படியான மக்களை ஆடுமாடுகளைப்போல அடைத்து கொடுமைக்குள்ளாக்கியது வரலாற்றில் நிகழ்ந்த ஜீரணிக்கமுடியாத ஒரு அவமான நிகழ்வே ஆகும்.

  ஆனால் இந்த பண்டுஸ்தான் எதுவும் இன்று இல்லை. அத்தனையும் கலைக்கப்பட்டுவிட்டன. அதற்கு காரணம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களின் காரணமாக 1994 ல் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து பண்டுஸ்தான் பிராந்தியம் அனைத்தும் கலைக்கப்பட்டு பழையபடி தென்னாப்பிரிக்காவுடனேயே இணைக்கப்பட்டுவிட்டது.

  இன்று தென்னாப்பிரிக்கா முழுமையும் கறுப்பின மக்களின் தாயகமாக மாறியுள்ளது.

  இந்த பதிவில் கருப்பின மக்களை தனிமைப்படுத்துவதற்காக வெள்ளையர்களால் பிரித்தாளப்பட்ட "பண்டுஸ்தான்" பிராந்தியத்தைப் பற்றித்தான் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.

  பண்டுஸ்தான் பிரதேசங்கள் :-

   1. போபுதத்ஸ்வானா. (Bophuthatswana).
   2. சிஸ்கேய் (Republic of Ciskei).
   3. கசன்குலு (Gazankulu).
   4. காங்வானே (KaNgwane).
   5. குவாண்டெபெலே (KwaNdebele).
   6. குவாசுலு (KwaZulu).
   7. லெபோவா (Lebowa).
   8. குவாக்வா (Qwaqwa).
   9. டிரான்ஸ்கேய் (Transkei).
  10. வெண்டா (Venda).

            மேற்குறிப்பிட்டுள்ள 10 பண்டுஸ்தான் பிரதேசங்களை பற்றியும் அங்கு கொடுமைக்குள்ளான மக்களின் நிலைமைகளைப் பற்றியும் தனித்தனியாக பார்க்கலாம்.


  போபுதத்ஸ்வானா (Bophuthatswana).

  பெயர் - போபுதத்ஸ்வானா. (Bophuthatswana).

  பரப்பளவு :- 44,109 km² (17,031 sq mi).

  தலைநகரம் :- Mmabatho.

  பண்டுஸ்தான் - Bantustan - Part 2.

  மேலே காணப்படும் தென் ஆப்பிரிக்க வரைபடத்தில் இரத்தத்தை அள்ளி தெளித்ததுபோல் சிவப்பு நிறத்தில் காட்சி தருகிறது பார்த்தீர்களா... அவை அனைத்துமே "போபுதத்ஸ்வானா" தான்...

  வெள்ளைக்காரர்களின் தொடர் கொடுமையால் கருகிப்போன தேகத்திலிருந்து உருகிப்போன இரத்தத்தால் தோய்க்கப்பட்டதாலோ என்னவோ அந்த நிலம் நமக்கு சிவப்பாகவே காட்சி தருகிறது.

  இந்த பகுதியில்தான் "ஸ்வானா" (Tswana) பேசும் மக்கள் வாழ்ந்துவந்தனர்.

  நிறவெறி பிடித்த வெள்ளையர்களால் கொடுந்துயருக்கு ஆளான இவர்களுக்கு 1977 ல் போபுதத்ஸ்வானாவிற்கு சுயாட்சி கொடுக்கப்படுவதாக வந்த அறிவிப்பு சிறிது ஆறுதலை அளித்தது.

  இங்கு வாழும் கருப்பின மக்களை தங்களிடமிருந்து தனிமைப்படுத்தி வைப்பதற்காக கொடுக்கப்பட்ட சுயாட்சி இது என்பதால் உலகநாடுகள் அதனை அங்கீகரிக்கவில்லை.

  1994 ம் ஆண்டு ஏப்ரல் 27 ம் தியதி அன்று வெள்ளையர்களின் அடிமைத்தனத்திலிருந்து  மீண்டு தனது தாயகமான தென் ஆப்பிரிக்காவுடன் இணைந்தது.

  சிஸ்கேய் (Ciskei).

  பெயர் - சிஸ்கேய் (Ciskei).

  பரப்பளவு :- 9,000 km² (3,500 sq mi).

  தலைநகரம் :- Bisho.

  பண்டுஸ்தான் - Bantustan - Part 2.

  தென்னாப்பிரிக்காவில் "கேய்" (Kei) என்ற பெயரில் ஒரு ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. அதன் தெற்கு பக்கமாக உள்ள நிலப்பரப்புதான் இந்த சிஸ்கேய். அதாவது "Ciskei" என்றால் "கேய் ஆற்றின் இந்தப்பக்கம்" என்று பொருள். ஏனென்றால் "Kei" ஆற்றின் அந்தப்பக்கம் அதாவது வடக்குபக்கம் "டிரான்ஸ்கேய்" (Transkei) என்னும் பிராந்தியம் ஏற்கனவே உள்ளது. எனவே அதிலிருந்து இதனை வேறுபடுத்திக்காட்ட இதற்கு சிஸ்கேய் (Ciskei) என்று பெயர்வைத்து விட்டார்கள். பலே வெள்ளையத்தேவா!!.

  ம்... ம்ம்.... அந்தப்பக்கம் <> இந்தப்பக்கம் (சென்னை பாஷையில் சொல்வதென்றால் "அங்கிட்டு" "இங்கிட்டு") என பெயர் வைக்க வெள்ளைக்கார துரைகளால் மட்டுமே முடியும் போல.

  இது தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறியின் தாக்கத்தால் "சோசா" (Xhosa) என்னும் மொழி பேசும் கறுப்பின மக்களுக்காக தென்னாப்பிரிக்க வெள்ளையர்களின் தேசிய அரசால் பிரித்துக் கொடுக்கப்பட்ட ஒரு சிறிய பிரதேசம். தென்னாப்பிரிக்கா முழுவதும் பரவலாக வாழ்ந்துவந்த "சோசா" இன மக்கள் இங்கு வலுக்கட்டாயமாக குடியமர்த்தப்பட்டனர்.

  1972 ம் ஆண்டு இது சுயாட்சி பெற்ற தேசமாக அறிவிக்கப்பட்டது.

  1994 ம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று வெள்ளையர்களின் நிறவெறி ஆட்சி வீழ்ந்ததால் மீண்டும் தாயகத்துடன் இணைந்தது சிஸ்கேய்.

  தற்போது இது "கிழக்கு கேப்" (Eastern Cape) மாகாணத்தின் ஒருபகுதியாக உள்ளது.


  கசன்குலு (Gazankulu).

  பெயர் :- கசன்குலு (Gazankulu).

  பரப்பளவு :- 7,730 km² (2,980 sq mi).

  தலைநகரம் :- கியானி (Giyani).

  பண்டுஸ்தான் - Bantustan - Part 2.

  1969 ல் இது தென்னாப்பிரிக்காவிலிருந்து வெள்ளையர் அரசால் தனி பிரதேசமாக பிரித்துவைக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் கறுப்பின மக்களின் ஒரு பிரிவான "ஷங்கான்" (Shangaan) மற்றும் "சோங்கா" (Tsonga) மக்கள் வாழ்ந்துவந்தனர். சுமார் 50,000 ற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு நெருக்கமான குடியிருப்புகளில் வாழ்ந்து வந்தனர். 1973 ல் சுயராஜ்யம் கொடுக்கப்பட்டாலும் சுயமாக செயல்படும் சுதந்திரம் வழங்கப்படவில்லை.

  இங்குள்ள மக்கள் சோங்கா (Tsonga) என்னும் மொழியையே பெருமளவில் பயன்படுத்தி வந்தனர். ஆங்கிலம் மற்றும் ஆப்பிரிக்கன் மொழியையும் பயன்படுத்திவந்தனர். அதுதவிர "இசிங்குனி" (isiNguni) என்னும் மொழியும் ஒரு தரப்பு மக்களால் பேசப்பட்டு வந்தது.

  1994 ம் ஆண்டு ஏப்ரல் 27 ம் தியதி நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததால் தற்போது இது தென்னாப்பிரிக்காவின் "லிம்போபோ" (Limpopo) மற்றும் "ம்புமலங்கா" (Mpumalanga) மாகாணங்களின் ஒரு பகுதிகளாக இணைக்கப்பட்டுள்ளது.

  காங்வானே (KaNgwane).

  பெயர் :- காங்வானே (KaNgwane).

  பரப்பளவு :- 3,000 km² (1,200 sq mi).

  தலைநகரம் :- கன்யாமசேன் (KaNyamazane).

  பண்டுஸ்தான் - Bantustan - Part 2.

  இதுவும் நிறவெறி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பண்டுஸ்தான்களில் ஒன்று. இது உருவாக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் "ஸ்வாசி பிராந்திய ஆணையம்" (Swazi Territorial Authority) என்று அழைக்கப்பட்டது. காரணம் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துவந்த கறுப்பினமக்களின் ஒருபிரிவான "ஸ்வாசி" (Swazi) இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தாயகமாகும்.

  "நுகுனி" (Nguni) கலாசாரத்தை பின்பற்றிவந்த இம்மக்களின் மொழி "ஸ்வாசி" மொழியாக இருந்துவந்தது. மேலும் இம்மக்களால் ஆங்கிலம் மற்றும் ஆப்பிரிக்கன் மொழியும் பேசப்பட்டு வந்தது.

  இது 1977 ல் காங்வானே என பெயர்மாற்றம் பெற்றது. 1984 ம் ஆண்டு ஆகஸ்ட் 31 ல் சுயாட்சி வழங்கப்பட்டாலும் சுதந்திரம் வழங்கப்படவில்லை.

  ஆப்பிரிக்கர்களுக்கான பண்டுஸ்தான் என அழைக்கப்பட்ட 10 தாயகங்களில் இதுதான் மிக குறைந்த அளவு மக்கள் தொகைகொண்ட தாயகமாக இருந்துவந்தது.

  தென்னாப்பிரிக்க நிறவெறி அரசாங்கத்திற்கு அதிக அளவில் எதிர்ப்பை பதிவு செய்தவர்கள் காங்வானே பிரதேசத்தில் வாழ்ந்துவந்த "ஸ்வாசி" இன மக்களே.

  தென்னாப்பிரிக்கா முழுமையும் எங்களுடைய தாயகமாக இருக்கும் பட்சத்தில் அதில் ஒரு சிறு பகுதியை பிரித்து இதுதான் இனி உங்கள் தாயகம் என அறிவிப்பதை ஏற்க முடியது என தங்களுக்காக ஒதுக்கப்பட்ட தாயகத்தை முதன்முதலாக நிராகரித்தது இங்குள்ள மக்களே. இதனால் நிறவெறி அரசாங்கத்தால் மாபெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்ட மக்கள் மீளவே முடியாத வகையில் வறுமையின் பிடியில் சிக்குண்டு கொத்துகொத்தாக மடிந்தனர்.

  1994 ம் ஆண்டு ஏப்ரல் 27 ல் நிறவெறி ஆட்சி ஒழிக்கப்பட்டதால் "காங்வானே" தற்போது தென்னாப்பிரிக்காவின் ஒருங்கிணைந்த பகுதியாக "ம்புமலங்கா" (Mpumalanga) மாகாணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


  குவாண்டெபெலே (KwaNdebele).

  பெயர் :- குவாண்டெபெலே (KwaNdebele).

  பரப்பளவு :- 1970 km² (760 sq mi).

  தலைநகரம் :- குவாமலாங்கா (KwaMhlanga).

  பண்டுஸ்தான் - Bantustan - Part 2.


  தென்னாப்பிரிக்க மக்களின் ஒருபிரிவான "எண்டெபெலே" (Ndebele) மக்களுக்காக நிறவெறி அரசால் ஒதுக்கப்பட்ட தாயகம். இவர்கள் "South Ndebele" மற்றும் "North Soto" போன்ற மொழிகளை பயன்பாட்டில் வைத்திருந்தனர்.

  1981 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தியதி சுயாட்சி வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் "சியாபுஸ்வா" (Siyabuswa) என்னும் இடத்தில் தலைநகரம் அமைக்கப்பட்டது. ஆனால் 1986 ல் தலைநகரம் "குவாமலாங்கா" (KwaMhlanga) விற்கு மாற்றப்பட்டது.

  1994 ம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று வெள்ளையர்களின் இனவெறி ஆட்சியானது முற்றுப்பெற்றதால் மீண்டும் தனது தாயகமான தென் ஆப்பிரிக்காவுடன் இணைந்தது குவாண்டெபெலே.

  தற்போது இந்த குவாண்டெபெலே "ம்புமலங்கா" (Mpumalanga) என்ற புதிய மாகாணத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.

  குவாசுலு (KwaZulu).

  பெயர் :- குவாசுலு (KwaZulu).

  பரப்பளவு :- 32,130 km² (12,410 sq mi).

  தலைநகரம் :- உளுண்டி (Ulundi).

  பண்டுஸ்தான் - Bantustan - Part 2.

  "ஜீலு" (Zulu) மொழி பேசும் கருப்பினமக்களுக்காக ஒதுக்கப்பட்ட தாயகம். இது ஒரே பகுதியாக இல்லாமல் சிதறுண்ட நிலப்பரப்பாக காணப்படுகின்றன.

  ஆரம்பகாலத்தில் "நோங்கோமா" (Nongoma) வில் அமைந்த தலைநகரமானது 1980 ல் உளுண்டி (Ulundi) க்கு மாற்றப்பட்டது.

  இதற்கு தென்னாப்பிரிக்க அரசால் சுயாட்சி வழங்கப்பட்டது என்றாலும் சுதந்திரம் வழங்கப்படவில்லை ஆதலால் நிறவெறி பிடித்த வெள்ளையர்களின் அடக்குமுறைக்கு பணிந்தே காலம் தள்ள வேண்டிய நிலைமை இங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டது.

  பெரும் போராட்டத்திற்கு பின்னால் 1994 ல் நிறவெறி அரசு அகற்றப்பட்டதால் குவாசுலு கலைக்கப்பட்டு "நடால்" (Natal) மாகாணத்தின் ஒருபகுதியாக மீண்டும் இணைக்கப்பட்டது. இந்த நடால் மாகாணம் தற்போது "குவாசுலு நடால்" (KwaZulu-Natal) என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


  லெபோவா (Lebowa).

  பெயர் :- லெபோவா (Lebowa).

  பரப்பளவு :- 24,540 km². (9470 sq mi).

  தலைநகரம் :- லேபோவக்கோமோ (Lebowakgomo).

  பண்டுஸ்தான் - Bantustan - Part 2.

  இங்கு வாழ்ந்துவந்த மக்களில் பகுதிக்கும் அதிகமான மக்கள் "சோதோ" (Northern Sotho) என்னும் மொழியைப் பேசும் "சோதோ" (Sotho) பிரிவை சேர்ந்த பழங்குடி மக்களாவார்கள். சோதோ மக்கள் மட்டுமல்லாது பாபேடி (Bapedi), பட்லோக்வா (Batlokwa), பபிர்வா (Babirwa), பனாரெங் (Banareng), பஹானன்வா (Bahananwa), பலோபேடு (Balobedu), பகோனே (Bakone), பரோக்கா (Boroka), பக்காக்கா (Bakgakga), பஹ்லாலோகா (Bahlaloga), படாவ் (Batau), பக்வெனா (Bakwena), பபூதி (Baphuthi), பட்லூ (batlou) போன்ற இன்னும்பல பழங்குடி இன மக்கள் இங்கு வாழ்ந்துவந்தனர்.

  இத்தனை பழங்குடி இன மக்களும் இந்த லேபோவா வில் காணப்படுவதற்கு காரணம் இவர்கள் அனைவருமே தென்னாப்பிரிக்காவின் பல்வேறு இடங்களில் தனிதனி குழுக்களாக அவர்களுடைய கலாச்சாரத்திற்கு உட்பட்டு வாழ்ந்துவந்தவர்கள். அவர்களின் குடும்பங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான குடும்ப உறுப்பினர்களை தனிமைப்படுத்தும் விதமாக அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக அவர்களைப் பிரித்துக்கொண்டுவந்து "லோபோவா" பிராந்தியத்தில் குடியேற்றின நிறவெறி அரசாங்கம். இதனால் தென்னாப்பிரிக்கா முழுவதுமே பலகுடும்பங்கள் தங்கள் உறுபினர்களை இழந்து கதறியது இன்றளவும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பே...

  இந்த "லெபோவோ" பிராந்தியத்திற்கு தென்னாப்பிரிக்க அரசால் 1972 ம் ஆண்டு அக்டோபர் 2 ல் சுயாட்சி வழங்கப்பட்டது என்றாலும் முழுமையான சுதந்திரம் வழங்கப்படவில்லை. சுயாட்சி பெற்றபின்பும் இவர்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. வெள்ளையர்களின் அடக்குமுறை இவர்களை நடக்கமுடியாமல் முடக்கிப்போட்டது என்பது வேதனைதரும் உண்மையே...

  1994 ம் ஆண்டு ஏப்ரல் 27 ல் நிறவெறி ஆட்சி சட்டப்படி முழுமையாக அகற்றப்பட்டபின்பு இந்த லேபோவோ பிராந்தியத்தின் பெரும்பகுதியானது லிம்போபோ (Limpopo) மாகாணத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் ஒரு சிறிய பகுதி "ம்புமலங்கா" (Mpumalanga) வுடன் இணைந்துள்ளது.

  குவா-குவா (Qwa-Qwa).

  பெயர் - குவா-குவா. (Qwa-Qwa).

  பரப்பளவு :- 620 km² (240 sq mi).

  தலைநகரம் :- Phuthaditjhaba.

  பண்டுஸ்தான் - Bantustan - Part 2.

  "குவா-குவா"... என்னடா குழந்தை அழும் சத்தம் கேட்கிறதே என்று பார்க்கிறீர்களா?

  சாரி பார் தி டிஸ்டபன்ஸ்...

  குவா-குவா என்பது குழந்தைகள் அழும் சத்தமல்ல. இது கொடுமையான வெள்ளையர் அரசாங்கத்தால் தென்னாப்பிரிக்காவின் மத்திய கிழக்கு பகுதியில் கறுப்பர்களுக்காக தனியாக ஒதுக்கப்பட்ட மற்றுமொரு சின்னஞ்சிறிய பிரதேசம். பரப்பளவு சுமார் 620 சதுர கிலோமீட்டர்.

  இந்த சின்னஞ்சிறிய நிலப்பரப்பில்தான் 1,80,000 க்கும் மேற்பட்ட "செசேதோ" (Sesotho) மொழி பேசும் பாசோதோ (Basotho) இன மக்கள் அடைபட்டு கிடந்தனர்.

  அதுசரி, அது என்ன குவா-குவா (Qwa-Qwa)...??!!

  "Qwa" என்றால் அவர்கள் பாஷையில் "வெண்மை" என்று அர்த்தமாம். "Qwa-Qwa" என்றால் வெண்மையை விட அதிக அளவு வெண்மை... அதாவது "வெண்மையோ வெண்மை".

  இந்த பிரதேசத்தில் "டிராகன்ஸ்பெர்க்" (Drakensberg) என்ற புகழ்பெற்ற மலைச்சிகரம் ஒன்று உள்ளது. அங்கு அடிக்கடி பனிபொழிவு ஏற்படுவதால் எப்போதும் இந்த மலைச்சிகரம் வெண்மை நிறத்தில் பளீர் என்று இருக்குமாம். அதாவது வெண்மையோ வெண்மை நிறத்தில்... அதாவாது "Qwa-Qwa" நிறத்தில்... அதனாலதான் இந்த பிரதேசத்திற்கு வெள்ளைக்கார துரைமார்கள் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து வைத்தபெயர் "குவா-குவா".

  ஹா...ஹஹா.. சும்மா சொல்லக்கூடாது இந்த வெள்ளைக்கார பயலுக நெசமாகவே நியூமராலஜில சும்மா பிச்சு ஒதறுரானுக...😖 😂 😆.

  குவா... குவா...

  குவா... குவா...

  அட இப்பொழுது உண்மையாகவே குழந்தை அழும் சத்தம் கேட்கிறதே என்கிறீர்களா? கொஞ்சம் காதுகளை கூர்மையாக்கிக் கேளுங்கள் கூடவே பெரியவர்கள் விசும்பும் சத்தமும் கேட்கும். ஏனெனில் இந்த பிரதேசத்திற்கு வெள்ளையர்களின் அரசாங்கமான தென்னாப்பிரிக்க அரசாங்கத்தால் 1974 ம் ஆண்டு நவம்பர் 1 ல் சுயாட்சி வழங்கப்பட்டது என்னவோ உண்மைதான் என்றாலும்கூட கடைசிவரையில் சுதந்திரம் மட்டும் வழங்கப்படவே இல்லை. வெள்ளையர் கூட்டம் கடைசிவரையில் இவர்களை அடிமையாகவே வைத்து இருந்தனர்.

  ஆம்... வெள்ளையர்கள் இழைத்த கொடுமையின் அவலத்தால் வெளிப்படும் இந்த அழுகையின் சத்தம் உண்மையில் அவலத்தின் உச்சம்.

  1994 ஏப்ரல் 27 ல் தான் இவர்களின் வாழ்வில் விடிவெள்ளி பூத்தது. ஆம், அன்றுதான் தென்னாப்பிரிக்காவில் சட்டப்பூர்வமாக இனவெறி ஒழிக்கப்பட்ட நாள்.

  தற்போது, தனித்துவிடப்பட்ட இந்த "குவா குவா" மீண்டும் தென்னாப்பிரிக்க தாயுடன் சேர்த்து வைக்கப்பட்டுவிட்டது. "ஆரஞ்சு ஃப்ரீ" மாநிலத்துடன் (Orange Free State) இணைக்கப்பட்டு காட்சி தருவது நமக்கு உண்மையாகவே பூரிப்பை ஏற்படுத்துகிறது!!.


  டிரான்ஸ்கேய் (Transkei).

  பெயர் - கஃப்ராரியா (Kaffraria), மற்றும் டிரான்ஸ்கேய் (Transkei).

  பரப்பளவு :- 43,798 km² (16,911 sq mi).

  தலைநகரம் :- Mthatha.

  பண்டுஸ்தான் - Bantustan - Part 2.

  இந்த பிரதேசத்திற்கு வெள்ளைக்கார துரைமார்களால் முதலில் வைக்கப்பட்ட பெயர் "கஃப்ராரியா" (Kaffraria).

  கஃப்ராரியா என்றால் "காஃபிர்களின் நிலம்" என்று பொருள்.

  "காபிர்கள்" என்றால் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள், விலக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில் பொருள் கொள்ளப்பட்டதால் உள் நாட்டில் மட்டுமல்லாது பல உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் சந்திக்கவேண்டி வந்ததால் காஃப்ராரியா பின்னாளில் "டிரான்ஸ்கேய்" (Transkei) என பெயர்மாற்றப்பட்டது.

  கேய் "Kei" என்னும் ஆற்றின் வடக்குப் பக்கமாக இந்த நிலப்பரப்பு அமைந்துள்ளதால் இந்த பிரதேசத்திற்கு "டிரான்ஸ்கேய்" (Transkei) என்று பெயர் சூட்டப்பட்டது. ஆற்றின் தெற்கு பக்கத்தில் இருப்பது "சிஸ்கேய்" (Ciskei).

  இந்த "டிரான்ஸ்கேய்" பிரதேசத்திற்கு தென்னாப்பிரிக்க அரசால் சுயாட்சி வழங்கப்பட்டது என்றாலும் கறுப்பின மக்களை தனிமைப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட சுயாட்சி என்பதால் உலகநாடுகள் அதனை அங்கீகரிக்கவில்லை.

  தென்னாப்பிரிக்கா முழுவதும் பரவலாக வாழ்ந்துவந்த "சோசா" (Xhosa) இன மக்கள் இங்கு மட்டுமல்லாது சிஸ்கேய் (Ciskei) பிராந்தியத்திலும் வலுக்கட்டாயமாக குடியமர்த்தப்பட்டனர்.

   1994 ம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று நிறவெறி ஒழிக்கப்பட்டதின் விளைவாக இந்த பிரதேசம் தற்போது தென்னாப்பிரிக்காவுடன் இணைக்கப்பட்டு ஒரே தேசமாக்கப்பட்டுள்ளது.

  தற்போது இது "கிழக்கு கேப்" (Eastern Cape) மாகாணத்தின் ஒருபகுதியாக உள்ளது.

  வெண்டா (Venda).

  பெயர் :- வெண்டா (Venda).

  பரப்பளவு :- 7,410 km² (2,860 sq mi).

  தலைநகரம் :- Thohoyandou.

  "வெண்டா" என்னும் மொழி பேசுவதால் வெண்டா (Venda) இன மக்கள் என அழைக்கப்படுகின்றனர்.

  வெண்டா இன மக்கள் மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து தென்னாப்பிரிக்க பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தவர்கள் என கருதப்படுகிறது. இவர்கள் கிழக்கு ஆப்பிரிக்க "நுகுனி" (Nguni) கலாசாரத்தையும், மத்திய ஆப்பிரிக்க "சோதோ" (Sotho) கலாசாரத்தையும் ஒருங்கே கொண்டுள்ளனர்.

  பண்டுஸ்தான் - Bantustan - Part 2.

  பல காலங்களாக வெள்ளையர்களின் கொடுமைகளுக்கு ஆளான இவர்களுக்கு 1973 ல் சுயாட்சி வழங்கப்பட்டது.

  1979 செப்டம்பர் 13 அன்று தென்னாப்பிரிக்காவின் வெள்ளையர் அரசு வெண்டாவை தன்னுடைய அடக்குமுறைகளிலிருந்து விடுவித்து சுதந்திர குடியரசாக அறிவித்தது. இது இப்பகுதியில் வாழ்ந்துவந்த கறுப்பின மக்களை தங்களிடமிருந்து விலக்கி வைப்பதற்கான தந்திரம்... சாரி... சுதந்திரம் என்பதால் இது மக்களை பெரிய அளவில் மகிழ்விக்கவில்லை.

  1994 ம் ஆண்டு ஏப்ரல் 27 ல் நிறவெறி முடிவுக்கு வந்ததை அடுத்து வெண்டா பிராந்தியம் தன்னுடைய தாயகமான தென்னாப்பிரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

  பண்டுஸ்தான் - Bantustan - Part 2.

  இது தற்போது தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ (Limpopo) மாகாணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

  💢💢💢💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  4 கருத்துகள்

  1. வரலாற்றுப் பாடத்திலும் அதன் பின் கொஞ்சம் தனியாகவும் அறிந்தது போக இங்க இன்னும் விரிவாக அறிந்துகொன்டேன். பேருதான் தலைக்குள்ள ஏற மாட்டேங்குது!!! ஹாஹா அப்ப தேர்வின் அடிப்படையில படிச்சது எழுதி எழுதி வைச்சு மண்டைக்குள்ள புகுத்தி...நல்லகாலம் அப்ப கொஞ்சம் தான்!!

   நல்ல விரிவான விளக்கம், நாஞ்சில் சிவா...வரலாற்றை முதல் பாடமாக எடுத்துப் படிப்பவர்களுக்கு ரொம்பவே பயன்படும்,

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. //பேருதான் தலைக்குள்ள ஏற மாட்டேங்குது!!!//..
    இங்கும் அதே நிலைமைதான்....
    தங்களின் உயர்வான கருத்து பகிர்வுக்கு நன்றி சகோதரி!!..

    நீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.