"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பாரத ரத்னா - Bharat Ratna Award Winners - Part 3.

பாரத ரத்னா - Bharat Ratna Award Winners - Part 3.

Bharat Ratna Awardees.

பாரத ரத்னா வெற்றியாளர்கள்.

1957 - 1962

(PART - 3).

இந்தியாவின் மிக உயரிய விருதான "பாரதரத்னா" விருதானது இந்திய குடிமக்களுக்கான மிக சிறந்த சிவிலியன் விருதாக கருதப்படுகிறது.

"சிவிலியன் விருது" என்பது மிகச்சிறந்த சாதனைபுரியும் அல்லது சேவையாற்றும் குடிமக்களுக்கான விருது என்பதனைக் குறிக்கிறது.

இந்தியாவைப் பொறுத்த அளவில் தன்னலம் கருதாது சேவையாற்றும் குடிமக்களுக்கான சிவிலியன் விருதுகள் பல இருந்தாலும் அதில் முதன்மையானதாக இருப்பது இந்த "பாரத ரத்னா" எனலாம்.


இந்த பாரதரத்னாவானது 1954 ம் ஆண்டு ஜனவரி 2 ல் தோற்றுவிக்கப்பட்டது. தோற்றுவிக்கப்பட்ட காலம் தொடங்கி 2019 வரை மொத்தம் 48 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

பாரத ரத்னா பற்றிய தொடர் பதிவில் இது மூன்றாவது பகுதி. முதல் இரு பகுதிகளில் பாரதரத்னா பற்றியும், 1954 மற்றும் 1955 ம் ஆண்டுகளில் பாரதரத்னா பெற்ற வெற்றியாளர்களை பற்றியும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகிய மூன்றாவது பகுதியான (Part 3) இப்பதிவில் 1957 தொடங்கி 1962 வரையில் பாரதரத்னா விருது பெற்ற வெற்றியாளர்களைப்பற்றி இரத்தின சுருக்கமாக பார்க்கலாம் வாருங்கள்.

இப்பதிவின் முதல் பகுதியை படிக்க [Part - 1] அடுத்து கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்குங்க...

👉👉பாரத ரத்னா - Bharat Ratna Award [Part - 1]👈👈

1955 க்கு பின் 1956 ம் ஆண்டுக்கான பாரதரத்னா வழங்கும் நிகழ்வு நடைபெறாததால் 1957 ற்கான வெற்றியாளர்களைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்?...

  கோவிந்த் வல்லப பந்த்.

  Govind Ballabh Pant.

  பெயர் :- கோவிந்த் வல்லப பந்த் (Govind Ballabh Pant).

  நாடு :- இந்தியா.

  மாநிலம் :- உத்தராகண்ட். Uttarakhand.

  Govind Ballabh Pant.

  பிறப்பு :- 1887 செப்டம்பர் 10. உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள அல்மோராவில் "கூண்ட்" என்ற கிராமத்தில் பிறந்தார்.

  இறப்பு :- 1961 மார்ச் 7. தன்னுடைய 74 ம் வயதில் இயற்கை எய்தினார்.

  குழந்தைகள் :- 3.

  பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1957.

  வாழ்க்கை முறை :- மிகச்சிறந்த சுதந்திர போராட்ட தலைவர். இந்திய விடுதலைக்காக போராடிய இவரை வெள்ளையர் அரசு பலதடவைகள் கைது செய்து சிறையில் தள்ளிய நிகழ்வும் நடந்தேறியது.

  1909 ல் சட்டப்படிப்பை முடித்த இவர் வக்கீலாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். இவர் இயல்பாகவே சமூக சீர்திருத்தவாதியாகவும், சிறந்த மேடைப் பேச்சாளராகவும் விளங்கினார். அதுமட்டுமல்லாது இலக்கியவாதியும்கூட. தன் எழுத்தின்மூலம் தேசிய எழுச்சியையும், ஒருமைப்பாட்டையும் மக்கள் மனதில் விதைத்தார்.

  1921 ம் ஆண்டு காந்தியின் அகிம்சை கொள்கையால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்குள் நுழைந்தார். ஐக்கிய மாகாணத்தில் நடந்த பொதுத்தேர்தலில் உத்திரகாண்டில் உள்ள "நைனிதால்" தொகுதியில் போட்டிட்டு வெற்றியும் பெற்றார்.

  இந்தியா சுதந்திரம் அடைந்தபின் 1955 ம் ஆண்டுமுதல் 1961 வரை மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில்தான் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அவ்வாறு உருவாக்கப்பட்ட உத்திரபிரதேச மாநிலத்தின் முதலாவது முதல்வராக இவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

  அந்த காலகட்டத்தில் இந்தி மொழியை ஆட்சிமொழியாக்கியதின் பெரும் பங்கு இவருக்கு உண்டு.

  அரசியலில் இவர் ஆற்றிய பங்களிப்பை கருத்தில்கொண்டும், இவர் ஆற்றிய பல சமூக சேவைகளை கருத்தில் கொண்டும் இவருக்கு 1957 ல் பாரதரத்னா விருது அளித்து இந்திய அரசு இவரை கவுரவித்தது.

  தோண்டோ கேசவ் கார்வே.

  Dhondo Keshav Karve.

  பெயர் :- தோண்டோ கேசவ் கார்வே (Dhondo Keshav Karve).

  நாடு :- இந்தியா.

  மாநிலம் :- மகாராஷ்டிரா (Maharashtra).

  Dhondo Keshav Karve.

  பிறப்பு :- 1858. மகாராஷ்டிராவின் "ரத்னகிரி" மாவட்டத்திலுள்ள "முருத்" என்ற சிற்றூரில் 1858 ம் ஆண்டு ஏப்ரல் 18 ல் பிறந்தார்.

  இறப்பு :- 1962 நவம்பர் 9.

  குழந்தைகள் :- 4.

  பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1958.

  வாழ்க்கை முறை :- கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்று கணித விரிவுரையாளராக பணியாற்றிய தோண்டோ கேசவ் கார்வே ஒரு சமூக போராளி மட்டுமல்ல ஒரு மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியும் கூட.

  மகளிர் நலனுக்காக மிக தீவிரமாக போராடியவர். பெண்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும், விதவைகள் மறுமணம் புரியும் உரிமைக்கான போராட்டத்திலும் மிக தீவிரமாக ஈடுபட்டவர். முதல் மனைவி இரண்டாவது பிரசவத்தின்போது இறந்துபோக இரண்டாவதாக விதவையை மணமுடித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.

  இவருடைய புரட்சிகரமான வாழ்வியலை பாராட்டி 1958 ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 100. தன்னிகரில்லா ஒரு தலைவனின் கைகளில் தவழ்ந்து தனக்கான பெருமையை தேடிக்கொண்டது பாரதரத்னா.

  பிதான் சந்திர ராய்.

  Bidhan Chandra Roy.

  பெயர் :- பிதான் சந்திர ராய் (Bidhan Chandra Roy).

  நாடு :- இந்தியா.

  மாநிலம் :- மேற்கு வங்காளம் (West Bengal).

  Bidhan Chandra Roy.

  பிறப்பு :- 1882 ஜூலை 1 அன்று பீஹார் மாநிலம் பான்கிபூரில் பிறந்தார்.

  இறப்பு :- 1962 ம் ஆண்டு ஜூலை 1 ல் தன்னுடைய 80 வது வயதில் இயற்கை எய்தினார்.

  வாழ்க்கை துணை :- வாழ்க்கைத்துணை என்று யாருமில்லை. கடைசிவரையில் மக்களுக்கு சேவையாற்றும் மாண்பு ஒன்றை மட்டுமே வாழ்க்கை துணையாகக்கொண்டு வாழ்ந்துவந்தவர்.

  பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1961.

  வாழ்க்கை முறை :- மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல மருத்துவரான இவர் மிகச்சிறந்த சுதந்திரபோராட்ட வீரராகவும் விளங்கினார். காந்தியுடன் இணைந்து சுதந்திர போராட்டங்களில் பங்கேற்றார்.

  அனைவராலும் நன்கு அறியப்பட்ட இவர் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மேற்கு வங்கத்தின் 2-வது முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். 1948 ம் ஆண்டு முதல் 1962 ம் ஆண்டுவரை அதாவது தன்னுடைய இறுதிகாலம் வரையில் முதல்வராக பணியாற்றினார்.

  மேற்கு வங்க வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றியவர். இவரது அயராத உழைப்பினால் சாதாரண குறு நகரமாக இருந்த துர்க்காபூர், கல்யாணி நகர், பிதான் நகர் முதலியன பெருநகரங்களாக விஸ்வரூபம் எடுத்தன. இதனால் இவர் "மேற்குவங்காளத்தின் சிற்பி" என போற்றப்பட்டார்.

  இவர் ஆரம்பகாலங்களில் மிகசிறந்த மருத்துவராக பணியாற்றி வந்தார். அடிப்படை மருத்துவ உதவிகூட கிடைக்காமல் வறுமையின் பிடியில் சிக்கி தத்தளித்த ஏழை மக்களின் துயர்துடைக்க "ஜாதவபூர் காசநோய் மருத்துவமனை", "கமலா நேரு மருத்துவமனை", "சித்தரஞ்சன் சேவா சதன்", "விக்டோரியா இன்ஸ்டிடியூஷன்", "சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை", "இந்திய மனநல சுகாதார மையம்" ஆகியவற்றை தொடங்கினார்.

  ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தது மட்டுமல்லாமல் தன்னுடைய வீட்டையே மருத்துவமனைக்கு நன்கொடையாக கொடுத்தார். இவருடைய மருத்துவ சேவையை பாராட்டி இவருடைய பிறந்த நாள் மட்டுமல்லாது இறந்த நாளும் அதே ஜூலை 1 என்பதல் இந்தியாவில் "ஜூலை 1" தேசிய மருத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  இவருடைய மருத்துவ பங்களிப்பை கருத்தில்கொண்டும், சுதந்திரபோரட்டம் மற்றும் அரசியலில் இவர் ஆற்றிய மிகச்சிறப்பாக பணியை கருத்தில்கொண்டும் 1961 ல் பாரத ரத்னா கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

  1961 ல் இவருக்கு விருது கொடுத்த நிகழ்வு "திருநெல்வேலிக்கே அல்வா" கொடுத்த கதைபோலவே அமைந்தது. ஏனெனில், பாரதரத்னா விருதுக்கு பாத்திரமான இவருடைய பெயரிலும்கூட விருது வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல், கலை, இலக்கியத்தில் சாதனை படைப்போருக்கு இவரது நினைவாக "பி.சி.ராய்" (B.C.Roy Award) என்னும் விருது வழங்கப்பட்டு வருகிறது.

  புருஷோத்தம் தாஸ் தாண்டன்.

  Purushottam Das Tandon.

  பெயர் :- புருஷோத்தம் தாஸ் தாண்டன் (Purushottam Das Tandon).

  நாடு :- இந்தியா.

  மாநிலம் :- உத்திரப்பிரதேசம் (Uttar Pradesh).

  Purushottam Das Tandon.

  பிறப்பு :- 1882 ம் ஆண்டு ஆகஸ்ட் 1 ல் உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள  அலகாபாத்தில் பிறந்தார்.

  இறப்பு :- 1962 ஜூலை 1 ல் தன்னுடைய 80 வது வயதில் தன்னுடைய பூத உடலைவிட்டுப் பிரிந்து புகழுடம்பில் ஐக்கியமானார்.

  பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1961.

  வாழ்க்கை முறை :- "ராஜரிஷி" என்று உள்ளூர் மக்களால் போற்றப்பட்ட இவர் உத்திரபிரதேசத்தை இருப்பிடமாகக்கொண்டு இந்திய தேசத்தின் விடுதலைக்காக அயராது உழைத்தவர்.

  மாணவப்பருவத்திலேயே காங்கிரஸின் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்ட இவர் பின்னாளில் தீவிர அரசியல்வாதியாக களம் இறங்கினார்.

  மாணவப்பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்டுவந்தாலும் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு சட்டம் பயின்று முதுகலை பட்டம் பெற்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிநியமனமும் பெற்றார்.

  வழக்கறிஞராக பணியாற்றிவந்தாலும் அவருடைய மனம் வழக்கறிஞர் தொழிலில் ஆர்வம் கொள்ளவில்லை. ஆம்,.. இரவுபகல் பாராது இந்தியாவின் சுதந்திரத்திற்காக அயராது உழைக்கவே விரும்பியதால் அதற்கு தடையாக இருந்த வழக்கறிஞர் தொழிலை உதறி தள்ளினார்.

  ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைசென்றார்.

  சுதந்திர போராட்டத்தில் முழுமூச்சாக இயங்கிக்கொண்டிருந்தபோதே எழுதுவதிலும் அதிக அளவு ஆர்வம் காட்டினார். ஆம், இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும்கூட.

  மொழி, கலை, கலாச்சாரம், இலக்கியம், அரசியல், சமூகம் குறித்த இவரது ஆழமான பார்வை பல கட்டுரைகளை பல்வேறு பத்திரிகைகளில் எழுத வழி ஏற்படுத்திக் கொடுத்தன. கட்டுரைகள் மட்டுமல்ல ஏரளமான கவிதைகளையும் கிறுக்கித்தள்ளிய அனுபவம் இவருக்கு உண்டு.

  இந்தியா சுதந்திரம் பெற்றபின்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இந்திமொழி ஆட்சி மொழி அந்தஸ்து பெறுவதற்கு பின்புலமாக நின்று அயராது போராடியவர்.

  இவருடைய போராட்டகுணம், அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, சமூக சேவை, எழுத்து, பேச்சு போன்ற குணங்கள் இவருக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பை ஏற்படுத்திக்கொடுத்தன.

  இவருடைய மக்கள் சேவையை பாராட்டி 1961 ல் இவருக்கு பாரதரத்னா விருது அளித்து கௌரவிக்கப்பட்டார்.

  ராஜேந்திர பிரசாத்.

  Dr. Rajendra Prasad.

  பெயர் :- ராஜேந்திர பிரசாத் (Rajendra Prasad).

  நாடு :- இந்தியா.

  மாநிலம் :- பீகார் (Bihar).

  Rajendra Prasad.

  பிறப்பு :- 1884 டிசம்பர் 3 ம் தியதி பீகாரிலுள்ள சிவான் மாவட்டத்திலுள்ள "செராடெ" என்னுமிடத்தில் பிறந்தார்.

  இறப்பு :- 1963 பிப்ரவரி 28.

  பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1962.

  வாழ்க்கை முறை :- இந்திய விடுதலை போராட்ட வீரர், வழக்கறிஞர், பத்திரிகையாளர், அரசியல் தலைவர் என பன்முகத்தன்மை கொண்ட இவர் இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக பொறுப்பு வகித்தவர்.

  தொடர்ந்து இருமுறை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதாவது 1950 முதல் 1962 வரை 12 ஆண்டுகள் குடியரசுத்தலைவராக பொறுப்புவகித்தார்.

  கல்கத்தா பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம்பெற்ற இவர் கல்லூரி பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

  பேராசிரியராக பணியாற்றும் காலகட்டத்தில் சட்ட மேற்படிப்பு படித்து அதில் வெற்றியும் பெற்றதால் அதன்பின் வழக்கஞராக பணியாற்றலானார். அவ்வேளையில்தான் மகாத்மாகாந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் மிகவும் கவரப்பட்டார். உடனே தடாலடியாக தன்னுடைய வழக்கறிஞர் வேலையை தூக்கி எறிந்தவர் முழுநேர சுதந்திரபோராட்ட வீரரானார்.

  வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டதால் ஆங்கிலேய அரசால் 3 வருட சிறைதண்டனயையும் பெற்றார்.

  இவருடைய சுதந்திர போராட்டம் மற்றும் இந்தியா சுதந்திரம் பெற்றபின் இவர் தொடர்ந்து ஆற்றிய மக்கள் சேவைகளை கருத்தில் கொண்டு இந்திய அரசு இவருக்கு 1962 மே 13 ல் பாரதரத்னா கொடுத்து கவுரவித்தது.

  💢💢💢💢

  இப்பதிவின் தொடர்ச்சியாகிய நான்காவது பகுதியை படிக்க [Part - 4] கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக்குங்க...

  👉👉 பாரத ரத்னா - Bharat Ratna Awardees - Part 4. 👈👈

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  13 கருத்துகள்

  1. பாரத ரத்னா விருது பெற்றவர்களைப் பற்றிய விரிவான விளக்கங்கள் அருமை. மாணாக்கர்களுக்கு பயனுள்ள தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி கில்லர்ஜி சார்!!...

    நீக்கு
  2. சூப்பர் பதிவு, நாஞ்சில் சிவா. இதில் பி சி ராய் விருது பற்றி அறிந்ததுண்டு. மற்றவை எல்லாம் தகவல்கள் தான். பாடுபட்டுத் தொகுத்திருக்கீங்க.

   அது சரி தமிழ்நாட்டிலிருந்து யாரும் இல்லையா? இனிதான் வருமோ?

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பாராட்டுதல்களுக்கு நன்றி சகோதரி!!!...

    //அது சரி தமிழ்நாட்டிலிருந்து யாரும் இல்லையா? இனிதான் வருமோ?//

    அது எப்படி தமிழ்நாட்டிலிருந்து இல்லாமல் போகும்... இரண்டாவது பதிவில் (Part 2) முதல் லிஸ்ட்டில் இருக்கும் "C. ராஜ கோபாலச்சாரி" தமிழ்நாட்டை சேர்ந்தவராச்சே!!! அதே பதிவில் 3 வதாக இருக்கும் "C.V ராமன்" கூட தமிழ் நாட்டுக்காரர்தானே?...

    அடுத்து வரும் பதிவில் (Part 4) கர்மவீரர் "காமராஜர்" பராக்... பராக்... பராக்...

    நீக்கு
   2. ஆமாம் ல. அப்ப நான் இரண்டாவது வாசிக்காமல் விட்டுவிட்டேனோ...விருது பற்றிய என் கருத்தை ஒரு பதிவில் தெரிவித்திருந்த நினைவு...நீங்கள் கூட அந்த விஷயத்தை...சரி விடுங்க....போய்ப்பார்க்கிறேன்.

    கீதா

    நீக்கு
  3. சிறப்பன தகவல்கள். அறிந்திராத பல தகவல்களைத் தருவதற்கு மிக்க நன்றி

   துளசிதரன்

   பதிலளிநீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.