"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
கட்டு விரியன் பாம்பு - Common Krait snake.

கட்டு விரியன் பாம்பு - Common Krait snake.

Common Krait snake.

விரியன் பாம்புகளில் கட்டு விரியன் - Common Krait snake, கண்ணாடி விரியன் - Russel's viper, பச்சை விரியன், சுருட்டை விரியன் - Saw-scaled viper,  என பலவகைகள் உள்ளன.

இவைகள் அனைத்துமே கொடிய விஷத்தை மூலதனமாக கொண்ட பாம்புகள்தான். இந்த பதிவில் நாம் "கட்டுவிரியன்" பாம்பைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.

கொடிய விஷம் உள்ள பாம்புகளின் வரிசையில் விரியன் பாம்புகளுக்கும் முக்கியமான இடம் உண்டு.பொதுவாக கட்டுவிரியன் பாம்பில் இரு வகைகள் உள்ளன. இரு வகைகளையும் பற்றி தனித்தனியாக பார்ப்பதற்கு முன்னால்  முதலில் காட்டுவிரியனைப் பற்றிய பொதுவான சில விஷயங்களை பார்ப்போம்.

  கட்டு விரியன்.

  பெயர் :- கட்டுவிரியன் - Common Krait snake.

  விலங்கியல் பெயர் :- "Bungarus Caeruleus" மற்றும் "Bungarus fasciatus"

  தாயகம் :-   இந்திய துணை கண்டங்கள்.[பாகிஸ்தான், இந்தியா, இலங்கை.] மற்றும் தென் கிழக்கு ஆசியா.

  வரிசை :-Squamata

  குடும்பம் :- Elapidae. [எலாப்பிடே] 

  இனம் :- Bungarus caeruleus

  பேரினம் :- Bungarus.

  பெயர்க்காரணம்.

  "கட்டு வரையன்" என்பதே காலப்போக்கில் கட்டு விரியன் என்று மருவிவிட்டது எனலாம். (கட்டு - கட்டு போட்டது போன்ற. வரை - கோடு) இதன் உடலில் கட்டு போட்டது போன்று கோடு உள்ளதால்  "கட்டு வரையன்" என பெயர் வந்தது.

  விஷத்தின் தன்மை.

  கட்டுவிரியன் பாம்பின் விஷம் நல்ல பாம்பின் விஷத்தைவிட பலமடங்கு அதிக வீரியம் உள்ளது. இதன் விஷம் இரத்த வாந்தியை உண்டாக்குவதோடு சிறுநீர் வழியாகவும் இரத்தத்தை வெளியேற்றுகிறது.

  இதன் விஷத்தினால் தற்காலிகமாக கண்கள் செயலிழப்பதோடு இமைகளும் மூடிக்கொள்ளும். கண்களை திறந்து பார்க்கமுடியாத ஒரு நிலை ஏற்படும். நரம்புமண்டலம் பாதிப்பதோடு மூச்சுத்திணறலும் ஏற்படும்.

  பொதுவாக இப்பாம்பு இரவில்தான் கடிக்கும் தன்மையுடையது. இந்த பாம்பு கடித்தால் பெரிய அளவில் வலியோ, வீக்கமோ எதுவும் இருக்காது என்கிறார்கள். சாதாரண எறும்புக்கடிபோலதான் இருக்குமாம். இதனால் இப்பாம்பிடம் கடிபட்டவர்கள் இதனையொரு  பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் எதுவாக இருந்தாலும் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று நிம்மதியாக படுத்து தூங்கிவிடுகின்றனர். இதனால் தூக்கத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்துபோய் விடுகின்றனர். 

  தமிழில் இதை பொதுவாக கட்டுவிரியன் என்று அழைத்தாலும் வளையங்களின் நிறத்தைப் பொறுத்து இதை இரு பிரிவுகளாக பிரிக்கின்றனர்.

  வெள்ளை - கருப்பு நிற வளையங்களை கொண்ட விரியன் பாம்பை Common Indian Krait. என்றும், மஞ்சள் - கருப்பு நிற வளையங்களை கொண்ட விரியன் பாம்பை Banded Krait என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர்.

  Common Indian Krait

  இனி Common Indian Krait மற்றும் Banded Krait பற்றி தனித்தனியாக பார்ப்போம்.

  Common Indian Krait.

  விலங்கியல் பெயர் :-Bungarus Caeruleus.

  தாயகம் :-   இந்திய துணை கண்டங்கள்.[பாகிஸ்தான், இந்தியா, இலங்கை.] 

  வரிசை :-Squamata

  குடும்பம் :- Elapidae. [எலாப்பிடே]

  இனம் :- Bungarus caeruleus

  பேரினம் :- Bungarus. [பங்காரசு]

  வேறு பெயர்கள் :- இதற்கு கட்டு விரியன், எண்ணெய் விரியன், எட்டடி விரியன், பனை விரியன், சங்கு வரையன் என பல பெயர்கள் உண்டு.

  வாழிடம் :-  வயல்வெளிகள், நீர்நிலைகள், கரையான் புற்று, எலிவளை, பாழடைந்த பகுதிகளில் வசிக்கின்றன.

  உடலமைப்பு.

  இது கருநீலம் கலந்த சாம்பல் அல்லது நீலம் கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். 3 அடி முதல் 4 அடி நீளம் வரை வளரும் இயல்புடையது. இதன் உடலில் கருப்பு மற்றும் வெண்மை நிறங்களில் வரிசையாக நிறைய வளையங்கள் காணப்படுகின்றன.

  கழுத்தைவிட கொஞ்சம் பெரியதான முக்கோணவடிவ தலையினை கொண்டுள்ளது. இதன் முதுகுப்பகுதி நெடுகிலும் அறுகோண வடிவிலான செதில்களை கொண்டிருக்கும். ஆண் பாம்பு பெண் பாம்பைவிட பெரியதாகவும். நீளமான வாலினை கொண்டதாகவும் இருக்கும்.

  Common Indian Krait

  உணவு முறை.

  இவைகள் பெரும்பாலும் இரவில்தான் உணவை வேட்டையாடுகின்றன. சிறிய வகை பாம்புகள், பல்லி, எலி, அரணை, தவளை மற்றும் சிறு வகை பாலூட்டிகள் இவைகள்தான் இவைகளின் முக்கிய உணவுகள். சில நேரங்களில் இவைகள் தங்களின் குட்டிகளையே பிடித்து உண்ணும்.

  இயல்பு.

  இது மிகவும் ஆபத்தான குணநலன்களை கொண்டது. பகல் நேரங்களில் ஓய்வு எடுக்கும், இரவு நேரங்களில் உணவு தேடும் தன்மை கொண்டது.

  விஷத்தின் தன்மை.

  ''விதி முடிந்தவனைத்தான் விரியன் கடிக்கும்'' என்று  ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு இப்பாம்பு கொடிய நஞ்சினைக் கொண்டது. இப்பாம்பின் விஷம் நேரடியாக நரம்புமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நுரையீரலையும், இருதயத்தையும் பாதித்து மூச்சு மண்டலத்தை செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டது. இதன் விஷம் தொண்டையில் வலியை ஏற்படுத்துவதோடு உமிழ்நீரை விழுங்கமுடியாத ஒரு நிலையையும் ஏற்படுத்துகிறது.

  இதன் விஷத்தால் தசைகள் செயலிழந்து போகும். பாம்பு கடித்த இரண்டு மணி நேரத்திற்குள் சிகிச்சை எடுக்க வேண்டும். சிகிச்சை எடுக்க தாமதித்தால் மரணம் தாமதிக்காது என்பது உறுதி.

  இனி விரியன் பாம்பின் மற்றொரு வகையான "Banded Krait" பற்றி பார்ப்போம்.

  Banded Krait.

  விலங்கியல் பெயர் :-Bungarus fasciatus. [பங்காரசு வாசியேட்டசு]

  தாயகம் :-  தென்கிழக்கு ஆசியா. [இந்திய - சீன பகுதிகள், வடகிழக்கு இந்தியா, தாய்லாந்து, மியான்மர், கம்போடியா, வியட்நாம், சிங்கப்பூர், சுமத்திரா].

  வரிசை :-Squamata.

  துணை வரிசை :- Serpentes.

  குடும்பம் :- Elapidae. [எலாப்பிடே]

  இனம் :- Bungarus fasciatus.

  பேரினம் :- Bungarus. [பங்காரசு]

  உடலமைப்பு.

  இதன் உடல் மென்மையானது. பளபளப்பானது. மேலும் குறுகிய வாலை உடையது. இதன் தலை அகலமானதாக இருக்கும். இதன் உடலில் கருப்பு மற்றும் மஞ்சள் நிற பட்டைவடிவ வளையங்கள் வரிசையாக காணப்படுகின்றன.

  இவை ஆபத்து நேரங்களில் உடலை பந்துபோல் சுருட்டிக்கொள்ளும். ஆனால் பலநேரங்களில் எதிர்தாக்குதலும் நடத்தும்.

  Banded Krait

  வாழிடம்.

  பொதுவாக காடுகளில் வாழ்கின்றன. விளைநிலங்களிலும் தென்படுகின்றன. எலி வளை, கரையான் புற்று இவைகளிலும் மறைந்து வாழ்கின்றன. இவை பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகிலேயே காணப்படுகின்றன.

  உணவுமுறை.

  இது பெரும்பாலும் பிற பாம்புகளையும், பாம்பு முட்டைகளையுமே உணவாக உட்கொள்கின்றன. சிலநேரங்களில் மீன்கள், தவளைகள் மற்றும் சிறியவகை உயிரினங்களையும் உட்கொள்கின்றன.

  விஷத்தின் தன்மை.

  இதன் விஷம் நரம்புமண்டலத்தை தாக்கி அழிக்கக்கூடியது. இது தீண்டியவுடன் சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். தவறினால் 6 முதல் 8 மணி நேரத்திற்குள் மரணம் நிச்சயம்.

  முதலுதவி.

  கட்டுவிரியன் பாம்பு கடித்தால் கடிவாய்க்கும் மேல் இறுக்கமாக கட்டு போடுவதை தவிர்க்க வேண்டும். அதுபோல கடிவாயில் கத்தியால் கீறுவதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் கடிவாயில் கீறினால் அந்த புண் ஆறாத புண்ணாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. நன்றி!

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  2 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.