Monday, April 01, 2019

கண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.


அறிவியல் பெயர் :- டபோயா ரசெல்லி.[Daboia russelii]

தாயகம் :- இந்திய துணைக்கண்டம், தென்கிழக்காசியா, சீனா, தைவான்.

வரிசை :- Squamata.

குடும்பம் :- Viperidae.

துணைக்குடும்பம் :- Viperinae.

இனம் :- Daboia russelii.

பேரினம்:- Daboia.

வேறுபெயர்கள் :- கழுதை விரியன்.



பெயர்க்காரணம் :- இதன் உடல் முழுவதும் மூக்குக்கண்ணாடி போட்டது போன்று வட்ட வடிவ அடையாளம் தொடர்ச்சியாக இருப்பதால் இதற்கு இப்பெயர் வழங்கப்படுகிறது.

இனப்பெருக்கம் :-  இவைகள் குட்டிகள் போட்டு தன் இனத்தை பெருக்குகின்றன.

வகைகள் :- கண்ணாடி விரியன் பாம்புகளில் பல வகைகள் உள்ளன என்றாலும் மிக முக்கியமான வகைகளாக இருவகைகளைக் குறிப்பிடலாம். அவையாவன ....
  • Russell's viper. [கண்ணாடி விரியன் (அ ) கழுதை விரியன்
  • Saw-scaled viper. [சுருட்டை விரியன்].

Russells Viper. [கண்ணாடி விரியன் ].

உடலமைப்பு :-
                                முக்கோணவடிவ தலை அமைப்பைக் கொண்டது. தலையின் மேற்பகுதியில் செதில்கள் போன்ற அமைப்பு சிறியதாகவும், அதிக எண்ணிக்கையிலும் உள்ளன.

 

               உடல் பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் உள்ளன. உடலில் நீளவாக்கில் மூன்று வரிசைகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் நீள்வட்ட வடிவில் சங்கிலிபோல குறிகள் பெரிய அளவில் காணப்படுகின்றன.







உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாகவும் பிறைவடிவ குறியுடனும் காணப்படுகின்றன.

 உணவு :- எலிகள், தவளைகள் முதலிய சிறு உயிரினங்கள்.

விஷத்தின் தன்மை :-
                                             இது நச்சுத்தன்மை அதிகமுள்ள பாம்பு. இதன் விஷம் இரத்த சிவப்பணுக்களை கடுமையாக பாதிக்கும். இரத்த குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி குருதி உறைதலை தடுத்து மரணத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இப்பாம்பின் விஷத்தால் வயிறு மற்றும் உடலும் வீங்கும். இரத்த வாந்தியை உண்டுபண்ணுவதோடு சிறுநீரிலும் இரத்தம் கலந்து வெளியேறும். கொடிய விஷம் கொண்ட இப்பாம்பு தீண்டினால் 3 மணி நேரத்திற்குள்ளாக சிகிச்சையை தொடங்க வேண்டும். இல்லையேல் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

                இனி விரியன் பாம்பின் இன்னொருவகையான சுருட்டை விரியனை பற்றி பார்ப்போம்.

 Saw-scaled viper. [சுருட்டை விரியன்]


வேறு பெயர்கள் :- புல் விரியன், சிறு விரியன், ரம்பச்செதில் விரியன், வாள்செதில் விரியன்,ஊது சுருட்டை, குறட்டை விரியன், கம்பள விரியன்.



உடலமைப்பு :-  இது அடர் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்துடன் காணப்படும். உடலின் மேல் புறத்தில் வளைவு வடிவங்கள் காணப்படும். இதன்தலையின் மேல்புறம் அம்பு போன்ற வடிவம் காணப்படும். இது 80 செ.மி நீளம் வரை வளரக்கூடியது. பக்கவாட்டில் வளைந்து செல்லும் இயல்புடையது. தலை கழுத்தைவிட பெரியது, தலை முக்கோண வடிவம் கொண்டதாக இருக்கும். தலையின் மேற்பகுதியில் செதில்கள் சிறியதாகவும், நெருக்கமானதாகவும் அமைந்துள்ளன, வால் மெல்லியதாகவும் சிறியதாகவும் இருக்கும். மரங்களிலும் நன்றாக ஏறும்.



வாழிடம் :- சம வெளிகளிலும், மலைப்பகுதிகளிலும், புதர் செடிகளிலும் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவைகள் இரவில்தான் வெளியில் வருகின்றன.



 உணவு :- எலிகள், தவளைகள் முதலிய சிறு உயிரினங்கள்.

விஷத்தன்மை :- இதன் விஷம் இரத்த சிவப்பணுக்களை அழிக்கும் திறன் படைத்தது. கொடிய விஷம் கொண்ட இப்பாம்பு தீண்டினால் இரத்தம் நீர்த்துப்போகும். இது கடித்தால் கடித்த இடம் யானைக்கால் வீங்குவது போல வீங்கிவிடும். விரைவாக சிகிச்சையை தொடங்காவிடில் மரணம் நெருங்கும். இதன் தாக்குதலில் பல மனித உயிர்கள் பலியாகின்றன என்பது வேதனையளிக்கும் தகவல்.

குறிப்பு :- சிலர் முதலுதவி என்கிற பெயரில் பாம்பு கடித்த இடத்தில் கத்தியால் கீறி விஷத்தை  வெளியேற்றுகிறேன் என்றும், மேலும் பாம்பு கடித்த இடத்தின் மேல்பகுதியில் கட்டு போட்டு விஷத்தை உடல் முழுவதும் பரவாமல் தடுக்கிறேன் என்றும் சில வேலைகளை செய்கின்றனர். இந்த செய்கைகள் மிகவும் தவறானவை ஆகும். ஏனெனில் கண்ணாடி விரியன் பாம்பின் விஷம் இரத்தத்தை நீர்த்துப் போக செய்யும் குணமுடையதாதலால் பாம்பு கடித்த இடத்தை கத்தியால் கீறுவதை தவிர்க்க வேண்டும். கத்தியால் கீறுவதால் இரத்தம் உறையாமல் உடலிலுள்ள இரத்தம் முழுவதும் வெளியேறி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதுபோல கட்டு போடுவதையும் தவிர்க்க வேண்டும். கட்டு போடுவதால் விஷம் வேறு எங்கும் செல்ல முடியாமல் ஒரே இடத்தில் தங்கி சம்பத்தப்பட்ட உறுப்பை முற்றிலுமாக சிதைத்து உடலிலிருந்தே அவ்வுறுப்பை அகற்ற வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடும். எனவே பாம்பு கடிபட்டவரை பதற்றமடையாமல் தைரியமாக இருக்க செய்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதே சிறப்பு.

4 comments:

  1. வழக்கம் போல சுவாரஸ்யமான தகவல்கள். கடைசிக்குறிப்பு உபயோகமான குறிப்பு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துகளுக்கு நன்றி ....

      Delete
  2. சிறப்பான தகவல்கள்

    ReplyDelete

நல்ல வார்த்தையா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்களேன் ...