header ads

header ads

கருப்பு மாம்பா - Black mamba Snake.


          ஆப்பிரிக்காவில் காணப்படும் பலவகையான பாம்புகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பவை "மாம்பா" என்று அழைக்கப்படும்  பாம்புகள்தான். காரணம் மிக கொடிய விஷத்தை தன்னிடம் கொண்டுள்ளதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. இதில் இருவகைகள் உள்ளன.           அதில் ஒன்று "கருப்பு மாம்பா" மற்றொன்று "பச்சை மாம்பா". ஆபத்து என்று பார்த்தால் இரண்டுமே ஒன்றிற்கொன்று சளைத்தவையில்லை என்றாலும், பச்சை மாம்பாவை விட கருப்பு மாம்பாதான் கொஞ்சம் கெத்து .... எனவே இங்கு நாம் கருப்பு மாம்பாவை பற்றி கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம் வாருங்கள் ...

கருப்பு மாம்பா - Black Mamba.

அறிவியல் பெயர் :- டென்ட்ரோஸ்பிஸ் பாலிலெபிஸ் - Dendroaspis polylepis.

பேரினம் :- 
டென்ட்ரோஸ்பிஸ் - Dendroaspis.

குடும்பம் :- எலாப்பிடே - elapidae.

தாயகம் :- ஆப்பிரிக்கா - Africa.

இயல்பு :- கொத்துவது அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே ....

வசிக்கும் இடங்கள் :- ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலும், தெற்குப் பகுதியிலும் அதிகமாக காணப்படுகிறது.......

          அப்பாடா ...நாம தப்பிச்சோம்டா .. சாமி ....

Black mamba

 உடலமைப்பு :- சாம்பல் நிற உடலமைப்பை கொண்டது. 3 முதல் 4 மீட்டர் நீளம் வளரக்கூடியது. இதன் வாயின் உட்பகுதி கருமையான நிறத்தில் காணப்படும்.

பெயர்க்காரணம் :- இதற்கு ''கருப்பு மாம்பா'' என்று பெயர் ஏற்பட காரணம் இதன் உடல் நிறத்தை வைத்து அல்ல... உண்மையில் இதன் உடல் கருமையான நிறத்தை உடையது அல்ல. மாறாக சாம்பல் நிறத்தை கொண்டது. அப்படியிருக்க  இதனை கருப்பு மாம்பா என ஏன் அழைக்கிறோம்? .... ஏன் என்றால் இதன் வாயின் உள்பகுதி முழுக்க கருப்பாக இருக்கும் எனவேதான் இதற்கு ''கருப்பு மாம்பா'' என்று பெயர்.

mamba Black


வாழ்க்கை முறை :- பாம்பினங்களிலேயே மிக விரைவாக செல்வது இது ஒன்றுதான். வேகம் மணிக்கு 20 k.M .....இது சுமார் 11 ஆண்டுகள் வரை உயிர் வாழும். மற்ற பாம்புகளைப்போல் இல்லாமல் துரத்தி துரத்தி கொத்துவது இதன் தனிச்சிறப்பு.

          "விடாது கருப்பு" என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா. அது இதற்கே கனகச்சிதமாக பொருந்தும். பெரும்பாலும் இது மனிதர்களிடம் இருந்து எப்படியாவது தப்பித்துச்செல்ல வேண்டும் என்றே விரும்பும். ஆனால் மனிதர்களால் தன் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்தால் எதிர்த்து தாக்க ஆரம்பித்துவிடும். 

          வகையாக இதனிடம் மாட்டிக்கொண்டால் "செத்தாண்டா சேகரு" என்று சொல்லிக்கொண்டே உங்களை துரத்தி துரத்தி கொத்த ஆரம்பித்துவிடும். 

          "சிறுத்தை சிக்கும் ஆனா சில்வண்டு சிக்காதுலே"  என்று பஞ்ச் டயலாக் பேசி ஓடி தப்பித்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தால் அடுத்த கொத்து சரியாக உங்கள் வாயிலேயே விழும். அப்புறம் சான்ஸே இல்லை அதற்கு அடுத்துபடியாக உங்கள் வாயில் விழுவது கண்டிப்பாக "வாய்க்கரிசி" யாகத்தான் இருக்கும். அப்போதுதான் விடாது கருப்பு என்பதின் உண்மையான அர்த்தமே உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும்.

இனப்பெருக்கம் :- இவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. அதிகப்படியாக 25 முட்டைகள்வரை இடுகின்றன. பெண் மாம்பாக்களால் அடைகாக்கப்படாமலேயே 3 மாதங்களில் முட்டைகள் பொரிக்கின்றன.

          ஏன் இவைகள் முட்டைகளை அடைகாப்பதில்லை தெரியுமா? ..... வேறொன்றும் இல்லை ....''என் முட்டைன்னு தெரிஞ்சப்புறமும் அதுல ஒருத்தன் தைரியமா வந்து கைவச்சிருவானா'' என்கிற தைரியம்தான்  ....

mamba Snake

உணவு முறை :- இவை பகலில் உணவு தேடுகின்றன. இவைகள் பிற பாம்புகளையும், சிறிய விலங்குகளையும், பறவைகளையும், பறவைகளின் முட்டைகளையும் உணவாக உட்கொள்கின்றன.

விஷத்தன்மை :- இது தீண்டும் போது நச்சுப்பையிலிருந்து 50 மி.கிராமிலிருந்து 100 மி.கிராம் வரை விஷத்தை பீச்சியடிக்கும் வல்லமையுடையது. இது ஒரு தடவை வெளிவிடும் விஷமானது பத்திற்கும் மேற்பட்ட மனிதர்களை கொல்லும் திறன்வாய்ந்தது என்று அறிய முடிகிறது.

          இதன் நஞ்சானது உடலிலுள்ள தசைகள் மற்றும் உடல் உறுப்புகளை செயல் இழக்கச்செய்து மரணத்தை விளைவிக்கும். பிற பாம்புகளின் நஞ்சை விட இதன் நஞ்சு விரைந்து செயல்படக்கூடியது.

          இதன் விஷம் உடலில் செலுத்தப்பட்ட 15 அல்லது 20 நிமிட நேரத்திற்குள் மரணத்தை விளைவிக்கும் என்று அறியமுடிகிறது. இவ்வளவு குறுகிய நேரத்திற்குள் சிகிச்சை எடுத்துக்கொள்வது சாத்தியமில்லை என்பதால் மரணத்தை ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியொன்றும் இல்லையென்றே தோன்றுகிறது.

வல்லவனுக்கு வல்லவன் :- "வல்லவனுக்கும் வல்லவன் வையகத்தில் உண்டு" எனறு நீங்கள் கேள்விப்பட்டதுண்டு அல்லவா? அது உண்மைதான் ... இந்த வல்லவனுக்கும் ஒரு வல்லவன் இவ்வுலகில் இருக்கிறான் ... !!! அட .. அது யாரென்று கேட்கிறீர்களா?  வேறு யாரு சாட்ஷாத் நம்ம "கீரி ராஜா" தான்.

          மாம்பாவின் பாச்சா எதுவும் கீரியிடம் பலிப்பதில்லை. மாம்பாவிற்கும் கீரிக்கும் இடையே நடக்கும் சண்டையில் முடிவில் கீரியே ஜெயிக்கிறது.

          கீரியால் துவசம் செய்யப்பட்ட மாம்பாவிற்கு அன்றைய தினமே திவசம் நடந்தேறுகிறது. ஆனால் கீரிக்கோ அன்றைய தினம் மாம்பாதான் "தலப்பாகட்டு பிரியாணி".

Black mamba with mongoose fight

குறிப்பு :- இந்த பாம்பின் விஷம் மிக குறைந்த அளவில் போதை பொருள்களுடன் சேர்க்கப்படும்போது அதிக போதையை கொடுக்கிறதாம். எனவே இதன் விஷத்தை பயன்படுத்தி போதைப்பொருள் தயாரிக்கப்படுகிறது. இது ஹெராயின் என்னும் போதை பொருளை விட அதிக அளவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்று சொல்லப்படுகிறது. 

Black mamba max

          இதைப்பயன்படுத்துகின்றவர்கள் விரைவிலேயே மரணத்தை தழுவுகின்றனர் என்பது வேதனையான விஷயம்.

தற்போதைய நிலை :-  இப்பாம்பு தற்போது அழிந்து வரும் நிலையில் இருக்கும் பாம்பினமாகும்.

          இதுவரை கருப்பு மாம்பா பற்றி பார்த்தோம். பிறிதொரு பதிவில் இதன் மற்றோரு வகையான "பச்சை மாம்பா" - green mamba பற்றி விரிவாக பார்ப்போம்.

          பச்சை மாம்பா பற்றி அறிந்து கொள்ள கிளிக்குங்க 👉 "பச்சை மாம்பா"

கருத்துரையிடுக

0 கருத்துகள்