"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
புதன் - பயோடேட்டா - Mercury bio data.

புதன் - பயோடேட்டா - Mercury bio data.

Mercury bio data.

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்பார்கள். அந்த அளவிற்கு பொன்னைவிட பொருண்மை நிறைந்தது இந்த புதன்.

இந்த பதிவில் புதனைப்பற்றி முழுமையாக நாம் அலசபோவதில்லை. மாறாக அதிலுள்ள சில முக்கிய கணக்கீடுகளை மட்டுமே பார்க்க இருக்கிறோம்... வாருங்கள் முதலில் இதனுடைய பெயருக்கான காரணத்தை அலசுவோம்.

பெயர் காரணம்.

முதலில் இதற்கு இந்திய மொழிகளில் ஏன் "புதன்" என்று பெயர் வைத்துள்ளார்கள் என்பதனைப் பார்ப்போம்.

சர்வ வல்லமை கொண்டவர் "சூரியன்". அனைத்தையும் இயக்குபவர் இவரே. இவரில்லாமல் உலகமே இயங்காது. பிரபஞ்சத்தைப்பற்றி முழுமையாக அறிந்திருப்பவரும்கூட. நிச்சயமாக பேரறிவாளனாகத்தான் இருக்க வேண்டும்.

அப்பனுக்கு அடுத்து வந்தவர் "சித்தப்பா" என்பதுபோல பேரறிவாளனாகிய சூரியனுக்கு அடுத்துள்ள புதனும் நிச்சயமாக அறிவாளியாகத்தானே இருக்கமுடியும்..

இந்திய இறைவழிபாட்டின்படி அறிவுக்கு காரணமாக இருப்பது ''புதன்'' என்னும் கடவுள். எனவேதான் பேரறிவாளனின் அருகில் சுற்றிவரும் இதற்கு "புதன்" என்று பெயர்சூட்டி மகிழ்கிறோம்.

சரி இனி மேலை நாட்டவர்கள் ஏன் இதற்கு "மெர்குரி" என பெயரிட்டுள்ளனர் என்பதனையும் சிறிது பார்ப்போம்.

அட... ஆச்சரியமாக இருக்கே!!! அவர்களும் நம்மைப் போலவேதான் சிந்தித்துள்ளனர்... மேலை நாடுகளின் இறைவழிபாட்டின்படி ரோமானிய கடவுளின் தூதுவராக வணங்கப்படுபவர் ''மெர்குரி'' (Mercury). சிறந்த அறிவாளியும்கூட. எனவே புதனுக்கு ''மெர்குரி'' என்று பெயரிட்டு பெருமை சேர்த்துவிட்டனர்.

புதன் - பயோடேட்டா.

சூரிய குடும்ப வரிசையில் சூரியனுக்கு மிக அருகில் உள்ள முதல் கோள்மட்டுமல்ல சூரிய குடும்பத்திலுள்ள சிறிய கோளும் இதுவே. புதனின் சராசரி ஆரம் வெறும் 2440 கி மீட்டர் மட்டுமே! விட்டம் 4849 கி .மீ (2980 மைல்).

எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நம் நிலவைவிட சிறிதளவே பெரியது. பூமியுடன் ஒப்பிடும்பொழுது பூமியின் அளவில் 3 ல் 1 பங்கிற்கு சற்று அதிகம்.

இவ்வளவும் பார்த்த நாம் இதனை எடைபோட்டு பார்க்காமல் இருக்கலாமா?

வாருங்கள்எடை மிஷினில் எடை போடுவோம்

Weight = 330,104,000,000,000,000,000,000 Kg.

என்னாது இதுமிஷினோட "டிஸ்ப்ளே"ல ஒரே ஜீரோவா தெரியுது???…

[ஹி.. ஹிஹிநானு கொஞ்சம் கணக்குல வீக்குங்கஅத்தனை ஜீரோவையும் கூட்டிப்பாத்து நீங்களாகவே ஒரு முடிவுக்கு வாங்க..]

வீட்டுக்கணக்கு போடுறதுக்கே இங்க விவரம் பத்தல.. இதுல இது வேறயான்னு சலிச்சுக்கிறீங்களா? சரி... விடுங்க. இப்போ நாம புதனைப்பற்றி தொடர்ந்து பார்ப்போம்...

இந்த புதன் கோள் முழுக்க முழுக்க பாறைகளால் ஆனது. அதனாலேயே இது மேற்புற நடுப்பகுதி அதிக வெப்பமாகவும், துருவப் பகுதி பனியாலும் சூழப்பட்டுள்ளது.

சூரியனிடமிருந்து குறைந்தது 47,000,000 கி.மீட்டரிலிருந்து அதிகபட்சமாக 70,000,000 கி. மீட்டர் தொலைவு வரையில் நீள் வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதை 0.39 வானவியல் அலகு என்று குறிக்கின்றனர்.

1 வானவியல் அலகு என்பது சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி தூரம்.

இது பூமியில் உள்ளதைவிட 11 மடங்கு அதிக ஒளியை சூரியனிலிருந்து பெறுகிறது. ஆனால் அதற்கு அடுத்துள்ள குறைவான அளவில் ஒளியைப்பெறும் வெள்ளியைவிட குறைவாகவே பிரகாசிக்கிறது. இதற்கு காரணம் புதனின் மேற்பரப்பில் கருமை நிறமான, கரடு முரடான பாறைகள் நிறைந்திருப்பதால் அதிக அளவில் ஒளியை பிரதிபலிப்பதில்லை.

சரி... இனி இதனுடைய சுற்றும் வேகத்தை பார்ப்போம்...

சூரியனை 1 செகண்டிற்கு 47. 362 கி. மீட்டர் (நாற்பத்தேழு கிலோமீட்டர்) வேகத்தில் சுற்றுகிறது. உங்களுக்கு எளிதாக புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் 1 மணி நேரத்தில் 170,503 கி. மீட்டர். (ஒரு லட்சத்து ஏழுபதாயிரத்து ஐநூற்று மூன்று - கிலோ மீட்டர்) வேகத்தில் சுற்றிவருகிறது.

ஒருவர் பைக்கில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலே தறுதலை தலைதெறிக்கும் வேகத்தில் போகிறது பார்என்று திட்டுகிறீர்கள். அப்படி என்றால் இந்த புதனின் வேகத்தை எந்த லிஸ்டில் சேர்ப்பீர்கள்?

நம்முடைய சூரிய குடும்பத்தில் ஏனைய கோள்களைவிட இதுவே மிக அதிக வேகத்தில் பயணிக்கிறது. இத்தனைக்கும் "ஹெல்மெட்"கூட போடாமல் 

இவ்வளவு வேகத்தில் பயணித்தாலும் கூட பயபுள்ள சூரியனை சுற்றிவருவதற்கு 88 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. (வெரி லாங் ரூட்டு போல]

இன்னும் இதில் பார்க்கவேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால் பிற கோள்களைபோலவே இதுவும் தன்னைத்தானே சுற்றி வருகிறது. வலமிருந்து இடமாக... அதாவது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி... அதுவும் மிகக் குறைந்த வேகத்தில்!!.

போறது தலைசுற்றும் வேகம் என்பதால் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 59 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 1 நாள்தான் எடுத்துகொள்கிறது. ஆனால் இதுவோ 59 நாட்கள்

[புதன் மைண்ட் வாய்ஸ் :- ஆமாஇங்க நானுதன்னைத்தானே சுற்றிகிட்டு கிடந்தா அப்புறமா நான் சேர வேண்டிய இடத்துக்கு சீக்கிரமா போய் சேர வேண்டமா?

நானே இங்க கண்ணுமண்ணு தெரியாத வேகத்துல போய்கிட்டு இருக்கேன்இந்த லட்சணத்துல "ஹாரன்" வேற அடிக்க மாட்டேங்குதுபிரேக்குல "பெடலு" வேற கழண்டு கிடக்குஇந்த சமயத்துல குல தெய்வத்த கும்புடுறத தவிர வேற வழி தெரியல...

உசுர கையில புடிச்சுகிட்டு ஓடிண்டு இருக்கேன்... இந்த சமயம்பாத்து வழியில குறுக்கு மறுக்கா காது கேக்காத கபோதி பயலுக யாரும் வராம யண்ட்ற உசுர காப்பாத்துப்பா பேச்சிமுத்து நாச்சியாரே….]

நல்ல வேளை... பயபுள்ளைக்கு "துணைக்கோள்" என்று சொல்லிக்க எதுவும் இல்லை. இருந்திருந்தால் அதையும் இதே வேகத்துல இழுத்துகிட்டு போய் கடக்காலுக்குள்ள தள்ளி சாகடிச்சிருக்கும்.

துணைக்கோள் என்கிற பெயருல தொங்கிண்டு போன ஒரே குத்தத்துக்காக அந்த துணைக்கோளுக்கு எப்பவோ எள்ளும் எண்ணெய்யும் இறைச்சு "திவசமும்" நடந்திருக்கும்.

அதெல்லாம் இருக்கட்டும்... இவ்வளவு வேகமா பயணிக்கிற புதனில் என்னவெல்லாம் உள்ளது என கேட்கிறீர்களா?..

பெருமளவில் இரும்பு உள்ளது, மேலும் சோடியம், பொட்டாசியம், கந்தகம் உள்ளன.

இக்கோளிற்கு பூமியை போன்ற பரந்த வளிமண்டலம் இல்லையென்றாலும் மெல்லிய வலிமை குறைந்த வளிமண்டலம் உள்ளது.

இந்த வளிமண்டலங்களில் சோடியம், நீர்ம வாயு, ஹீலியம், பொட்டாசியம், ஆர்கான், செனான், கிரிப்டான் மற்றும் நியான் முதலியன கலந்துள்ளன.


Mercury_bio data

Biodata.

தன்மை - திட நிலை.

சூரியனுக்கும் புதனுக்கும் உள்ள தூரம் - 57. 91 மில்லியன் கி.மீ.

சூரிய ஒளி புதனை வந்தடையும் கால அளவு - 3. 2 நிமிடங்கள்.

நடுக்கோட்டில் பகல் நேர வெப்பநிலை - 427C [800F].

நடுக்கோட்டில் இரவு நேர வெப்பநிலை -  -173C [-280F].

துருவங்களில் வெப்பநிலை -  -93C [-136F].

விடுபடு திசைவேகம் - 15,300 Km /h.

சூரியனிடமிருந்து புதனின் கோண பிரிகை - 28.3

சுழல் அச்சு சாய்வு கோணம் - 2 டிகிரி.

காந்த மண்டலம் - பூமியின் காந்தமண்டலத்துடன் ஒப்பிடும் போது 3 ல் 1 பங்கு.

காந்தப்புல வலிமை - 300 நானோ டெஸ்லா.

கன அளவு - 60,827,208,742 Km³

புதனின் சராசரி அடர்த்தி - 5.427g /cm³.

மேற்பரப்பு - 74,797,000 Km².

மேற்பரப்பு ஈர்ப்பு விசை - 3.7 m/s ²


Mercury_bio_data

புதனின்  புரியாத புதிர்.

வெப்பம் மிகுந்த சூரியனின் அருகில் இருந்தும் இதில் உள்ள ஆழமான பள்ளங்கள் மற்றும் துருவப் பகுதிகளில் பனிக்கட்டி உறைந்து இருப்பதும், எளிதில் ஆவியாகக் கூடிய கந்தகம் மற்றும் பொட்டாசியம் மிக அதிக அளவில் காணப்படுவதும் புரியாத புதிர்.

பனிக்கட்டிகளின் மேல் ஒருவிதமான ஆர்கானியப் பொருள் கவசம்போல் படர்ந்து பனிக்கட்டி உருகாமல் பாதுகாப்பதை தற்போது கண்டறிந்துள்ளார்கள்.

உயிரின  வாழ்க்கை.

புதனில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றே கூறவேண்டும். காரணம் இங்கு நிலவும் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர்.

💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.