Wednesday, December 11, 2019

சுகத்தை தரும் அகத்தி.

          அகத்திக் கீரையைப்பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம். இதை அறியாதவர்கள் இருக்க முடியாது. பொதுவாக இதை கீரையாக உணவில் பயன்படுத்தி வருகிறோம். இது கீரையாக மட்டுமல்ல நோய்தீர்க்கும் மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்துணை மகத்தான மருத்துவத்தன்மையைக் கொண்டது அகத்திக்கீரை. இது பெரும்பாலும் மூலிகை மருத்துவத்தில் குடிநீராகவும், தைல வகை மருந்துகளில் மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சித்தர்கள் வாக்கு.

          அகத்திக்கீரையின் குணத்தை பற்றி சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப்  பார்ப்போம் .....

அகத்தியர் வாக்கு.

''மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும் - வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு''.

விளக்கம் :- அகத்தியிலையை உண்டுவந்தால் உணவில் கலந்து கொடுக்கப்படும் ''இடுமருந்து''களை [இடுமருந்து - ஆண், பெண்களை வசியம் செய்ய கொடுக்கப்படும் பாஷாணம் கலந்த மருந்து] நீக்கும். நிறைய உண்டால் கிரந்தி, வாய்வு உண்டாகும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடலின் அதிகப்படியான பித்தத்தை குறைக்கும்.

மருத்துவ பொன்மொழிகள்.

''முருங்கைக்கீரை வெந்து கெட்டது, அகத்திக்கீரை வேகாமல் கெட்டது.''

பொருள் :- முருங்கைக்கீரை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துக்கள் இழந்து கெட்டுப் போகும். அகத்திக்கீரையை அதிகம் வேகவைக்காமல் இருந்தால் அதன் கசப்பு சுவை மாறாமல் உண்பதற்கு பக்குவநிலை அடையாமல் கெட்டுப்போகும்.

''அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்தியே''

பொருள் :- அகத்தியில் வேர், பட்டை, இலை, பூ முதலியன மருத்துவத்திற்கும், உணவிற்கும் பயன்படுகிறது. ஆனால் காய் மட்டும் எதற்கும் பயன்படுவதில்லை. எனவே அது ஆயிரக்கணக்காக காய்த்தாலும் புறம் தள்ளுவதற்கு மட்டுமே (புறத்தி = புறம் தள்ளுதல், விலக்குதல்) பயன்படுகிறது என்பதாம்.

 

மருத்துவத்திற்கு பயன்படுத்தும் முறைகள்.

          சங்க இலக்கியங்களில் ''புகழாவாகை'' என அழைக்கப்படும் அகத்தி பல மருத்துவப் பண்புகளை தன்னகக்தே கொண்டுள்ளது.

          அகத்தியில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது.

          அகத்திக்கீரை உடலில் இரத்தஓட்டத்தை சமப்படுத்தி உடலின் உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்தும் பணியினை செய்கிறது.  குடலில் உண்டாகும் நச்சுநீர்களை முறித்து வெளியேற்றும் திறன் படைத்தது. இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும்.

          அகத்தியிலையை சுத்தம் செய்து அரைத்து அடிபட்டு இரத்தம் வெளிப்படும் காயங்களுக்கு வைத்துக் கட்ட சீழ் பிடிக்காமல் விரைவில் ஆறும். இலை சாற்றை சேற்றுப்புண்களில் தடவிவர புண்கள் விரைவில் ஆறிவிடும்.

          அகத்திக்கீரையை தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்து தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து குளித்தால் கண்களுக்கு கிழே காணப்படும் கருவளையம் மறையும்.

          அகத்தியிலை சாறு அல்லது அகத்திப்பூ சாற்றில் தேன் கலந்து குடித்துவர தொடர் தும்மல் நிற்கும்.


          அகத்திக்கீரை சாற்றில் உப்பு சேர்த்து குடித்துவர பித்தம் நீங்கும். காலையில் வெறும் வயிற்றில் 15 மில்லி முதல் 30 மில்லிவரை அகத்திக்கீரைச்சாறு அருந்திவர வயிற்றில் உள்ள நுண்கிருமிகள் வெளியேறும்.

          அகத்திக்கீரையை சமையலில் சேர்த்துவர ஜீரணசக்தியை அதிகரிக்கும். கண்நோய்கள் வராமல் பாதுகாக்கும். சிறுநீர், மலம் சிக்கலின்றி வெளியேறும். இதை தினமும் சிறிதளவு சாப்பிட்டுவர வயிற்றுப்புண் என்னும் அல்சர் நோயைக் குணப்படுத்தும். குடற்புழுக்களை நீக்கும். மனக்கோளாறுகள் சரியாகும்.

          உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தியிலையை  தேங்காய் எண்ணெய்யுடன் வதக்கி அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும். அகத்தியிலையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்து சாறு எடுத்து அதில் கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்து தேமல், சொறி, சிரங்கு, கரும்படை உள்ள இடத்தில் பற்றுப் போட்டால் முழுமையாகக் குணமடையும். அகத்திப்பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேர் மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது.

          அகத்தியிலை, மருதாணியிலை, மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தடவினால் கால்களில் ஏற்படும் பித்தவெடிப்புகள் குணமாகும்.

          அகத்திக்கீரை சாப்பிட்டுவந்தால் காபி, டீ குடிப்பதால் ஏற்படும் பித்தம் தீரும். இரத்தபித்தம், இரத்தக்கொதிப்பு ஆகியவை நீங்கும்.


          அகத்தி மரப்பட்டை, அகத்தி வேர்ப்பட்டை இரண்டையும் சம அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக்காய்ச்சி அதனை வடிகட்டி 100 மி.லி அளவு 2 வேளை குடித்துவர காய்ச்சல், கை, கால், மார்பு எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக்காய்ச்சல் குணமாகும்.

          செவ்வகத்தி பூ சாற்றை மூக்கில் பிழிந்து வர மூக்கிலிருந்து திடீர் திடீரென வடியும் இரத்தம் நிற்கும்.

அகத்திக்கீரை தைலம்.

தேவையானபொருட்கள் :-
அகத்தியிலைச்சாறு    - 1லிட்டர்.
நல்லெண்ணை        - 1 லிட்டர்.
கஸ்தூரிமஞ்சள்       - 20 கிராம்.
சாம்பிராணி           - 20 கிராம்.
கிச்சிலிக்கிழங்கு       - 20 கிராம்.
விளாமிச்சம்வேர்      - 20 கிராம்.

மருந்துகளை பொடிசெய்யும் முறை :- கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக்கிழங்கு, விளாமிச்சம்வேர் இவைகளை ஒன்றாக இடிக்காமல் ஒவ்வொன்றாக தனித்தனியாக இடித்து சலித்து 20 கிராம் அளந்து எடுத்துக்கொள்ளவும். பின் நான்கு பொடிகளையும் ஒன்றாக நன்கு சேரும்படி கலந்துகொள்ளவும்.

 

[குறிப்பு:- மூலிகை பொருட்களை மருத்துவ முறைப்படி ''சுத்தி'' செய்துகொள்ளவது மிக முக்கியம். அதன்படி செய்தால்தான் மூலிகையின் துர்குணங்கள் நீங்கி மருந்தின் வீரியம் அதிகரிக்கும். 

          அதேபோல் மருந்துப் பொருட்களை தனித்தனியாக இடிக்காமல் அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரே நேரத்தில் இடிப்பதால் மருந்தின் குணம் கெடும். எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. 

          தற்போதைய காலக்கட்டத்தில் மூலிகை மருந்துகள் போதிய பலனளிக்காததற்கு இதுவே மிக முக்கிய காரணம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.]

செய்முறை :- அகத்தி இலை சாற்றையும், நல்லெண்ணெயும் கலந்து பதமுறக்காய்ச்சி முன் சொல்லப்பட்டுள்ள நான்கு சூரணங்களையும் போட்டுக் கலக்கி சூரணங்கள் கருகாமல் தைல பக்குவத்தில் இறக்கிவிடவும்.

தீரும் நோய்கள் :-  வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெரும்.

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳


No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.

Next previous home