"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
அகத்திக்கீரை - Agathi Grandiflora Leaves.

அகத்திக்கீரை - Agathi Grandiflora Leaves.

அகத்திக்கீரை

Agathi Grandiflora Leaves.

கீரை வகை தாவரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது அகத்திக்கீரை எனலாம். ஏனெனில் இதை சமையலில் பயன்படுத்திவர உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அதுமட்டுமல்ல, இது மருத்துவத்துறையில் மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இது விலங்குகளுக்கு பசுந்தீவனமாகவும், பயிர்களுக்கு பசுந்தழை உரமாகவும் பயன்படுகிறது.

இவ்வளவு சிறப்புவாய்ந்த அகத்தி மரத்தைப்பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.

    அகத்திக்கீரை.

    தமிழ் பெயர் :- அகத்தி.

    ஆங்கிலப்பெயர் :- Agati Grandiflora Leaves.

    தாவரவியல் பெயர் :- Sesbania Grandiflora.[செஸ்பேனியா கிராண்டிவுபுளோரா].

    தாவரவியல் குடும்பம் :- பபேசியே.

    தாவரவியல் இனம் :- Sesbania. [செஸ்பேனியா].

    பேரினம் :- அவரையினம்.

    வகை :- இருவித்திலை தாவரம்.

    தாவர வரிசை :-  Fabales.

    தாயகம் :- இந்தியா - India.

    வளர் பருவநிலை :- வெப்ப மண்டலத்தில் வளரக் கூடியது.

    அகத்தி - பெயர்க்காரணம்.

    அகம் + சுத்தி = அகசுத்தி (அகத்தி). அகமாகிய உள் உறுப்புகளை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் ''அகத்தி'' என அழைக்கப்படுகிறது. 

    இதற்கு மருத்துவத்தில் "அகத்தியம்", "முனிவிருட்சம்" எனவும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. காரணம் ''கானோபஸ்'' என்ற நட்சத்திரம் வானத்தில் தோன்றுகிற காலக்கட்டத்தில் அகத்திப்பூ மலரத்தொடங்குவதால் அகத்திக்கு அகத்தியம், முனிவிருட்சம் என பெயர் வழங்கப்படுகிறது. ஏனெனில் இந்த கானோபஸ் நட்சத்திரத்திற்கு தமிழில் ''அகத்திய நட்சத்திரம்'' என பெயர்.

    இந்த நட்சத்திரம் வானத்தின் தென்பகுதியில் பிரகாசிப்பதை காணலாம். இது 700 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது).

    அகத்தியின் வேறு பெயர்கள்.

    • அகத்தி
    • அகத்தியம்
    • அகத்திக்கீரை
    • நுனி
    • காரம்
    • முனி விருட்சம்
    • வக்கிரபுஷ்பம்
    • கரீரம்
    • அச்சம்.

    பயன்தரும் பாகங்கள் :- இலைபூவேர்பட்டை மற்றும் மரம்.

    வேர் : - மருத்துவத்திற்கு பயன்படுகிறது.

    பட்டை : - மருத்துவத்திற்கும்தோல் தொழிலகத்திற்கும் பயன்படுகிறது.

    அகத்தியின் இன வகைகள்.

    1. சாழை அகத்தி [வெள்ளகத்தி, செவ்வகத்தி]
    2. சிற்றகத்தி [செம்பை]
    3. சீமை அகத்தி.

    பொதுவாக நாம் இங்கு அகத்தி, அகத்திக்கீரை என்று குறிப்பிடுவது சாழை அகத்தியைத்தான். சாழை அகத்தி என்று விரிவாக குறிப்பிடாமல் பொதுவாக "அகத்தி" என்று குறிப்பிடுகிறோம்.

    சாழை அகத்தியில் இரு பிரிவுகள் உள்ளன. வெள்ளை பூ பூப்பதை "வெள்ளகத்தி" என்றும், சிவப்பு பூ பூப்பதை "செவ்வகத்தி" என்றும் அழைக்கிறோம்.

    இதேபோல் அகத்தியின் இன்னொரு இனவகை "சிற்றகத்தி". இதை "செம்பை" என்ற பெயராலும் அழைக்கிறார்கள். இதிலும் இரு பிரிவுகள் உள்ளன. இவை கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் பூக்கின்றன. கருப்பு நிறத்தில் பூப்பதை "கருஞ்செம்பை" எனவும், மஞ்சள் நிறத்தில் பூப்பதை "மஞ்சள் செம்பை" எனவும் அழைக்கிறோம்.

    இதில் "சாழை அகத்தி" மற்றும் "சிற்றகத்தி" இரண்டும் நம் நாட்டிலேயே உற்பத்தியான நாட்டினங்கள் ஆகும்.

    ஆனால் மூன்றாவது வகையான "சீமை அகத்தி" என்பது வெளி நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தாவர இனம்.  

    20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கிந்திய தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டது இது. இதன் இலைகள் பார்ப்பதற்கு அகத்தி இலைபோல் இருப்பதால் "சீமை அகத்தி" என்று பெயரிட்டு அழைக்க ஆரம்பித்து விட்டோம்.

    தாவரத்தின் தன்மைகள்.

    அகத்தி வளமான ஈரமான களிமண் நிலத்தில் செழித்து வளரும். ஆண்டின் எல்லா பருவத்திலும் வளரக்கூடியது. இது கீரை வகைகளுள் ஒன்றாக கருத்தப்பட்டாலும் 20 முதல் 30 அடிவரை சிறுமரமாக வளரும் தன்மை கொண்டது.

    வெற்றிலை மற்றும் மிளகு கொடிகளுக்கு கொடிக்கால்களுக்காக சிறு மரமாக வளர்க்கப்படுகிறது. வெண்மை நிற அகத்தி மரபொம்மை செய்யவும்  வெடி மருந்து செய்யவும் பயன்படுகிறது.

    இலைகள் தன்மை.

    அகத்தி இலைகள் கூட்டிலைகள் ஆகும். ஒவ்வொரு கூட்டிலையிலும் 40 முதல் 60 இலைகள் வரை இருக்கும். 15 முதல் 30 செ.மீ வரை நீளமுடையது.

    agathi grandiflora leaves

    இவை சிறு கசப்புச் சுவை உடையது. குளிர்ச்சித் தன்மை கொண்டது. சமையல், மருத்துவம், மற்றும் கால்நடைகளுக்குப் பசும் தீவனமாகவும் பயன்படுகிறது.

    பூக்களின் தன்மை.

    தை, மாசியில் பூ பூக்கும். பூக்கள் செடிகளின் வகைதனைப் பொறுத்து வெண்மை அல்லது சிவப்பு நிறமாக இருக்கும்.

    Sesbania Grandiflora

    செவ்வகத்தி பூ சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதை பொரியல் செய்து சாப்பிட்டுவர கண் எரிச்சல், தலை சுற்று, சிறுநீர் மஞ்சள் நிறத்துடன் கழிதல் முதலியன குணமாகும்.

    காய்களின் தன்மை.

    காய்கள் நீளமாக பீன்ஸ் போன்று இருக்கும். காய்களில் உள்ள விதைகள் மூலம் இனவிருத்தி நடைபெறுகிறது.

    Agathi grandiflora leaves

    மகசூல்.

    இது நீர்வளம் மிகுந்த பகுதிகளில் மிகுதியாக பயிர் செய்யப்படுகிறது. அகத்தி மரக்கன்று நடப்பட்ட 8 மாதங்களிலிருந்து அறுவடை செய்யலாம்.

    அதன் பின்பு ஒவ்வொரு 60,70 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு ஹெக்டேருக்கு 90 முதல் 100 டன் மகசூல் தரும்.

    பயன்கள்.

    அகத்திக்கீரை கால்நடைகளுக்கும், கோழிகளுக்கும் மிக நல்ல தீவனமாக விளங்குகிறது.

    அகத்தியில் மூன்று வகையான இனங்கள் இருந்தாலும் அதில் சாழை அகத்தியின் இரு பிரிவுகளான வெள்ளை பூ பூக்கும் வெள்ளை அகத்தியும், செந்நிற பூ பூக்கும் செவ்வகத்தியும் மட்டுமே உணவாக, மருந்தாக பயன்படுத்த ஏற்றது. பிற இன அகத்திகள் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தப்படுகின்றன.

    இக்கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து (Protein) மிகச்சிறந்த புரதமாக கருதப்படுகிறது. தேவையான அளவு சுண்ணாம்பு (Calcium) சத்தும் உள்ளது. கண்களின் பார்வைத்திறனுக்கு தேவையான ''வைட்டமின் A'' (Vitamin Aசத்தும் இதில் மிகுதியாக உள்ளது.

    அகத்திக்கீரையில் சத்துக்களின் விபரம்.

    [100 கிராம் கீரையில்]

    Tamil English Amount of Nutrients
    புரதம் Protein 8.4g
    தாதுஉப்புக்கள் Mineral Salts 2.1 g
    மாவுச்சத்து Carbohydrate 11.8 g
    இரும்பு Iron 3.9 mg
    விட்டமின் A Vitamin A 5,400 μg
    விட்டமின் C Vitamin C 1.69 mg
    நீர் Water 7.2 g
    கொழுப்பு Fat 1.4 g
    நார்சத்து Fiber 2.2 g
    சர்க்கரைச்சத்து Sugar 11.8 g
    சுண்ணாம்பு Calcium 1.30 mg
    பாஸ்பரஸ் Phosphorus 80 mg
    தையமின் (விட்டமின் B1) Thiamine 0.21 mg
    ரிபோஃபிளேவின் (விட்டமின் B2) Riboflavin 0.09 mg
    நியாசின் (விட்டமின் B3) Niacin 1.2 mg

    இவைகளுடன் மக்னீசியம் (Magnesium), பொட்டாசியம் (Potassium), அயோடின் (Iodine) உட்பட ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன.

    💢💢💢💢

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    2 கருத்துகள்

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.