"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பிட்யூட்டரி சுரப்பி - ஹைப்போபைஸிஸ். Pituitary Gland - Hypophysis - Master gland.

பிட்யூட்டரி சுரப்பி - ஹைப்போபைஸிஸ். Pituitary Gland - Hypophysis - Master gland.

Pituitary Gland - Hypophysis.

[Part - 2]

உடலிலுள்ள அனைத்து நாளமில்லா சுரப்பிகளையும் திறமையாக செயல்பட தூண்டுவது பிட்யூட்டரி சுரப்பி என்பதால் இது ''சுரப்பிகளின் தலைவன்'' (Master gland) என அழைக்கப்படுகிறது.

இக்கட்டுரையின் முதல் பகுதியை படிக்க அடுத்துள்ள சுட்டியை உங்கள் விரல்களால் மெல்ல தட்டுங்க.

>>பிட்யூட்டரி சுரப்பி - ஹைப்போபைஸிஸ். Pituitary Gland - Hypophysis. Part - 1.<<

பிட்யூட்டரி சுரப்பி.

இந்த பிட்யூட்டரி சுரப்பியானது அனைத்து நாளமில்லா சுரப்பிகளையும்  கட்டுப்படுத்தும் தலைமை சுரப்பி என்றாலும் இந்த சுரப்பியானது மூளையிலுள்ள ''ஹைபோதலாமஸ்'' என்னும் ஒரு உறுப்பின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது. அதாவது பிட்யூட்டரி பிரதம மந்திரி என்றால் ஹைபோதலாமஸ் அதிபராக செயல்படுகிறது. எனவே இங்கு அதிபரின் கட்டளைக்கு கட்டுப்பட்டே பிரதம சுரப்பியாகிய பிட்யூட்டரி செயல்படுகிறது.

இந்த பிட்யூட்டரி சுரப்பியின் அமைப்பு எல்லா உயிரினங்களுக்கும் ஒரே வடிவத்தில் இருப்பதில்லை. விலங்குகளின் தன்மைகளுக்கு ஏற்ப இதன் வடிவங்களிலும் மாற்றம் காணப்படுகின்றன.

பிட்யூட்டரி சுரப்பியானது மூளையின் அடிப்பகுதியிலுள்ள ''டயன்செபலானின்'' கீழ்ப்புறத்தில் ஒரு நீட்சி போன்ற அமைப்பு கொண்டு  ''ஹைபோதலாமஸ்'' உடன் மைய நரம்பு மண்டலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், பிட்யூட்டரியானது மூளையின் அடிப்புறத்தில் ''ஸ்பீனாய்டு'' (Sphenoid) என்னும் எலும்பில் உள்ள சிறு குழி போன்ற அமைப்பில் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு பட்டாணி அளவில் அமைந்துள்ள இந்த சுரப்பியின் எடை வெறும் 0.5 கிராம் (சுமார் அரை கிராம்) அளவு மட்டுமே.

இந்த சுரப்பியானது பொதுவாக உடலின் சமநிலையை ஒழுங்குபடுத்தும் ''ஹோமியோஸ்டாஸிஸ்'' ஹார்மோனை சுரக்கிறது. அதுமட்டுமல்லாமல் உடலிலுள்ள பிற அனைத்து நாளமில்லா சுரப்பிகளையும் தூண்டக்கூடிய ''டிரோபிக்'' வகை ஹார்மோன்களையும் இது உற்பத்தி செய்கிறது.

இது இரண்டு கதுப்புகளை அதாவது இரண்டு பிளவுபட்ட மடல்களை கொண்டுள்ளது. முன்புற மடலுக்கு ''அடினோஹைப்போபைஸிஸ்'' என்று பெயர். பின்புற மடலுக்கு ''நியூரோஹைப்போபைஸிஸ்'' என்று பெயர்.

Pituitary Gland part - 2

முன்புற கதுப்பு ''சுரப்பி திசு''க்களையும், பின்புற கதுப்பு ''நரம்பு திசு''க்களையும் கொண்டுள்ளது. எனவே இரண்டாவது மடல் நேரடியாக எந்தவித சுரப்புகளையும் சுரப்பதில்லை. அதற்குப்பதிலாக ஹைப்போதலாமஸ்சில் சுரக்கும் ''வாஸோபிரஸின்'' மற்றும் ''ஆக்ஸிடோசின்'' ஆகிய இரு ஹார்மோன்களும் இங்கு சேகரிக்கப்பட்டு இதன் வாயிலாக வெளியேற்றப்படுகின்றன.

முன்புற கதுப்பான அடினோஹைப்போபைஸிஸ் சுரக்கும் சுரப்பில் 5 விதமான ஹார்மோன்கள் அடங்கியுள்ளன. அவையாவன :-

  • GH என்று சொல்லப்படும் வளர்ச்சிக்கான குரோத் ஹார்மோன் (Growth hormone). அல்லது ஸொமேடோட்ரோடிபின் (Somatotrophin).
  • TSH என்று சொல்லப்படும் தைராய்டை தூண்டும் ப்ரோலாக்டின் ஹார்மோன் (Prolactin).
  • [ACTH] என்னும் அட்ரினோ கார்ட்டிகோட்ராபிக் ஹார்மோன். (Adrenocorticotropic).
  • PRL என்னும் ப்ரோலாக்டின் அல்லது லாக்டோஜனிக் ஹார்மோன்.
  • GTH என்னும் கொனாடோட்ராபிக் ஹார்மோன்.

இந்த 5 விதமான ஹார்மோன்களைப்பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.

GH என்று சொல்லப்படும் வளர்ச்சிக்கான ஹார்மோன் :- இந்த GH என்னும் ஹார்மோன் உடல் வளர்ச்சியை தூண்டுகிறது.  இந்த ஹார்மோன் தசைகள், எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இந்த ஹார்மோன் சுரப்பது குறைந்தால் உடல்வளர்ச்சி குன்றும், எலும்புகள் சரியாக வளர்ச்சியடையாமல் இருப்பது முதலிய பிரச்சனைகள் ஏற்படும். மேலும் குழந்தைகளுக்கு மனவளர்ச்சி குறைபாடும் ஏற்படும்.

அதே வேளையில் இந்த ஹார்மோன் அதிகமாக சுரந்தால் உடல் வளர்ச்சி அதிகரிக்கும். கை, கால்கள், மற்றும் தாடைகள் எல்லாம் திடீரென பெரிதாக வளர்ச்சியடைய ஆரம்பிக்கும். இந்த அதிக வளர்ச்சி பிரச்சனையை ''அக்ரோமெகலி'' என அழைக்கின்றனர்.

TSH என்று சொல்லப்படும் தைராய்டை தூண்டும் ஹார்மோன் :- இந்த TSH ஹார்மோன் தைராய்டு சுரப்பியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி அதன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது. இது தைராய்டு சுரப்பியை தூண்டி ''தைராக்ஸின்'' (Thyroxine) ''டிரைஅயோடோதைரோனின்'' (Triiodothyronine) ஆகிய இரு ஹார்மோன்களை சுரக்கச்செய்கிறது.

Thyroxine

இந்த TSH அதிகமாக சுரந்தால் தைராய்டு சுரப்பியும் ஹார்மோனை அதிகமாக சுரக்க ஆரம்பித்து விடும்.  இதனை ''ஹைப்பர் தைராய்டிசம்'' என அழைப்பர். தைராய்டு சுரப்பு அதிகமாக சுரக்கும் பட்சத்தில் அதிக தாகம், அதிக பசி, நடுக்கம், எரிச்சல், எடை குறைவு, கண்பார்வை குறைபாடு, மாதவிடாய் குறைபாடு, இருதய பாதிப்பு முதலியன ஏற்படலாம்.

ACTH என்னும் அட்ரினோ கார்ட்டிக்கோட்ராபிக் ஹார்மோன் :- ACTH என்னும் இந்த ஹார்மோனானது ''அட்ரீனல்'' சுரப்பியை தூண்டும் செயலை செய்கிறது. இந்த ஹார்மோன் அதிகமாக சுரந்தால் ''குஷிங்'' (Cushing disease) என்னும் நோய் பாதிப்பு ஏற்படும். இதனால் தீடீரென உடல் எடை அதிகரிக்கும். இரத்த அழுத்தம் ஏற்படுவதுடன் இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும். எலும்புகளும் தன் உறுதித்தன்மையை இழந்து பலவீனமடையும்.

PRL என்னும் ப்ரோலாக்டின் அல்லது லாக்டோஜெனிக் ஹார்மோன் :- இந்த ஹார்மோன் ''ப்ரோலாக்டின்'', ''லாக்டோஜெனிக்'', ''லூட்டியோடிரோபின்'', ''லூட்டியோடிரோபிக்'' மற்றும் ''மாம்மோடிரோபின்'' என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

பெண்களின் மார்பக வளர்ச்சியை ஊக்குவிப்பது இதுவே. பெண்கள் தாய்மை பேறு அடையும் தருவாயில் பால் சுரப்பிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு குழந்தை பேற்றிற்குப்பின் பால் உற்பத்தியை தூண்டும் செயலையும் செய்கிறது.

GTH என்னும் கொனாடோட்ராபிக் ஹார்மோன். :- இந்த GTH என்னும் ''கொனாடோட்ராபிக்'' ஹார்மோன்களில் இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. அவையாவன -

  • FSH என்னும் ஃபாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன்.
  • LH என்னும் லூட்டினைசிங் ஹார்மோன்.

FSH என்னும் ஃபாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன் :- ஆண்களின் விந்தகங்களின் எபிதீலியத்தை தூண்டுவதன் மூலம் விந்தணுக்கள் உருவாவதை ஊக்குவிக்கிறது. அதேபோல் பெண்களின் அண்ட சுரப்பியினுள் அண்ட செல்கள் நன்கு வளர்ச்சி அடைவதற்கு துணைபுரிகிறது.

LH என்னும் லூட்டினைசிங் ஹார்மோன் :-  இது ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

Endocrine gland

ஆண்களின் உடலில் ''லீடிக்'' செல்களை தூண்டுவதன் மூலம் ஆண் இனப்பெருக்க ஹார்மோனான ''டெஸ்டொஸ்டிரோன்'' ஐ சுரக்க செய்கிறது.

பெண்களின் அண்டசுரப்பியினுள் உள்ள அண்ட செல்களின் வளர்ச்சியை தூண்டுவதுடன் பெண் இனப்பெருக்க ஹார்மோனான ''ஈஸ்ட்ரோஜன்'' மற்றும் ''புரோஜெஸ்ட்ரான்'' உற்பத்திக்கும் காரணமாக அமைகிறது.

இது அதிகமாக சுரந்தால் ஆண்களுக்கு ''டெஸ்டொஸ்டிரோன்'' அளவும் பெண்களுக்கு ''ஈஸ்ட்ரோஜன்'' அளவும் குறையும். இதனால் இருபாலருக்கும் தலைவலி, பார்வைக்குறைபாடு ஏற்படுவதோடு குழந்தையின்மை குறைபாடும் ஏற்படும்.

இதுவரை முன்புற கதுப்பில் உற்பத்தியாகும் ஹார்மோன்களை பற்றி பார்த்தோம். இனி பிட்யூட்டரி சுரப்பியின் பின்புற கதுப்பான (மடல்) ''நியூரோஹைப்போபைஸிஸ்'' பற்றி அடுத்து பார்ப்போம்.

இக்கட்டுரையின் தொடர்ச்சியும் இறுதிப் பகுதியுமாகிய மூன்றாம் பகுதியை படிக்க கீழேயுள்ள தொடுக்கை சொடுக்குங்க.

>>பிட்யூட்டரி சுரப்பி - ஹைப்போபைஸிஸ். Pituitary Gland - Hypophysis. Part - 3<<

😇 😇 😇 😇 😇 😇 😇

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்