"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
கறுவாப்பட்டை - இலவங்கப்பட்டை - Cinnamon - Cinnamomum verum.

கறுவாப்பட்டை - இலவங்கப்பட்டை - Cinnamon - Cinnamomum verum.

கறுவாப்பட்டை.

இலவங்கப்பட்டை - Cinnamon.

[Part - 1]

இலவங்கம், இலவங்கப்பத்திரி, இலவங்கப்பட்டை இவைகளெல்லாம் நீங்கள் அடிக்கடி கேள்விப்படுகிற வார்த்தைகள்தான்.

சுருக்கமாக சொல்லப்போனால் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பொருட்களை  மூலிகைகள் அல்லது மசாலா பொருட்கள் அல்லது வாசனை பொருட்கள் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் இந்த மூன்று தன்மைகளும் ஒருங்கே அமைந்துள்ள பொருட்கள்தான் இவை.

இந்த மூன்று பொருட்களின் பெயர்களிலும் ஒரு ஒற்றுமையை நீங்கள் காணலாம். அது மூன்றிலுமே "இலவங்க" என்கின்ற பெயர் வருவதைப் பார்க்கலாம் .

பெயர் ஒற்றுமை இருப்பதாலேயே இந்த மூன்றும் ஒரே மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்கள்தானா?... என உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்..

இதற்கான பதில்..

'இல்லை' என்பதே..

மூன்றுமே மூன்று வெவ்வேறு தாவரங்களிலிருந்து கிடைக்கப்பெறும் பொருள்களாகும். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாசனையையும், சுவையையும் கொண்டிருப்பதால் "இலவங்கம்" என்னும் பெயர் இவைகளுடன் ஒட்டிக்கொண்டது. அவ்வளவுதான்.

இதில் "இலவங்கம்" என்பது கிராம்பை குறிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இரண்டாவதாக குறிப்பிடப்படும் "இலவங்கப்பத்திரி" என்பது அஸாம், வங்காளம், சிக்கிம், பூடான் போன்ற குளிர்பிரதேசங்களில் வளரும் ஒருவகை மரங்களிலிருந்து கிடைக்கும் ஒருவகை வாசனை கலந்த இலையாகும். இதற்கும் கிராம்பு கிடைக்கும் இலவங்கமரத்திற்கும் சம்பந்தமில்லை.

அதேபோல "இலவங்கப்பட்டை" என்று சொல்லப்படும் கருவாப்பட்டை மரத்திற்கும் கிராம்பு உற்பத்தியாகும் இலவங்க மரத்திற்கும் சம்பந்தமில்லை. ஆனால் இதனுடைய பட்டையும் கருவாப்பட்டையைப்போல காரமானதாகவும், வாசனையாகவும் இருப்பதால் கருவாப்பட்டைக்குப்பதிலாக இதனையும் சிலர் பயன்படுத்துவதுண்டு.

இலவங்கம்இலவங்கப்பத்திரிஇலவங்கப்பட்டை இம்மூன்றுமே ஒன்றிற்கு ஒன்று சம்பந்தமில்லாத வெவ்வேறு வகையான தாவரங்களிலிருந்து கிடைக்கும் வாசனைப்பொருள்கள் என்பதனை பார்த்தோமல்லவா? இந்த பகுதியில் "இலவங்கம்" என்னும் கிராம்பை பற்றியோ அல்லது "இலவங்கப்பத்திரி" என்னும் வாசனை இலையைப்பற்றியோ பார்க்கப்போவதில்லை. மாறாக "கருவாப்பட்டை" என்று அழைக்கப்படும் இலவங்கப்பட்டையைப்பற்றி மட்டுமே விரிவாக பார்க்க இருக்கிறோம்... வாருங்கள் பார்க்கலாம்.

இப்போது இலவங்கப்பட்டையின் தன்மைகளை பற்றியும் அது எந்த மரத்திலிருந்து கிடைக்கப்பெறுகிறது என்பதை பற்றியும் விரிவாக அலசுவோம்.

தமிழகத்தில் "இலவங்கப்பட்டை" என்றும் இலங்கையில் "கறுவாப்பட்டை" என்றும் அழைக்கப்படும் இது "கறுவா" என்னும் மரத்திலிருந்து கிடைக்கப்பெறும் பட்டையாகும். இது அந்த காலத்தில் இலங்கையில் மட்டுமே காணக்கிடைத்த மரம்.

கறுவாப்பட்டை என்று அனைவராலும் சரியாக அழைக்கப்படும் ஒரு பொருள், கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியான தமிழ்க்குடி மத்தியில் மட்டும் தவறான பெயரால் அழைக்கப்படுகிறதே என்று என்றாவது நீங்கள் யோசித்துப்பார்த்ததுண்டா..  

வரலாற்றை சிறிது பின்னோக்கி சென்று பார்த்தீர்கள் என்றால் அதற்கான விடை உங்களுக்கு புரியவரும். 1767ம் ஆண்டிற்கு முன்னால் இந்த கறுவா மரத்தைப்பற்றியோ அல்லது கறுவா பட்டையைப்பற்றியோ தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவுமே தெரியாது. அப்போதெல்லாம் நாம் உணவில் மணமூட்டுவதற்காக கிராம்பு உற்பத்தியாகும் "இலவங்க" மரத்தின் பட்டையான இலவங்கப்பட்டையைத்தான் பயன்படுத்தி வந்தோம்.

1767 ஆம் ஆண்டில் முதன்முறையாக இலங்கையிலும், இந்தியாவிலும் வணிகத்தில் ஈடுபட்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள் இலங்கையிலுள்ள கறுவாப்பட்டையை முதன்முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தினர். அதுவரையில் "இலவங்க" மரத்தின் பட்டையை பயன்படுத்திவந்த தமிழர்கள் இலவங்கப்பட்டையை போலவே கறுவாப்பட்டையிலும் மணமும் ருசியும் ஒத்துப்போவதால் அதுமுதல் கறுவாப்பட்டையை பயன்படுத்த தொடங்கினர். 

தமிழ் மக்களிடம் கொஞ்சம்கொஞ்சமாக இலவங்கப்பட்டையின் இடத்தை கறுவாப்பட்டை பிடிக்கத்தொடங்கியது.

கறுவாப்பட்டை தமிழர்களின் அடுக்களையை ஆக்கிரமித்துக் கொண்டாலும் அதன் பெயர்மட்டும் ஏனோ அவர்களின் மனதில் இடம்பிடிக்க மறுத்துவிட்டது. விளைவு, கறுவாப்பட்டையையும் மக்கள் "இலவங்கப்பட்டை" என்றே பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த கறுவா என்னும் லவங்கப்பட்டையைப்பற்றி சித்தர்கள் கீழ்வரும் பாடல்களில் தெளிவாக குறிப்பிடுகின்றனர்.

தாதுநட்டம் பேதி சருவவிட மாசியநோய்
பூதகிர கஞ்சிலந்திப் பூச்சிவிடஞ் - சாதிவிட
மாட்டுமிறைப் போடிரும வாதியநோய்க் கூட்டமற
வோட்டு மிலங்கத் தரி.

பாடல் விளக்கம்.

தாது நட்டம் - ஆண்மைக்குறைவு,

பேதி - அதிசாரம் என்னும் பேதிக்கழிச்சல்,

சருவ விடம் - சர்வ விஷம். (பலவகையான பூச்சிக்கடி விஷங்கள்),

மாசியநோய் - வாய் வாதம்,

சிலந்திப் பூச்சிவிடம் - சிலந்தி மற்றும் பூச்சி விஷங்கள்.

மிறைப் போடிரும - இரைப்பு என்று சொல்லப்படும் சுவாசகாசம் மற்றும் இருமல்.

வாதியநோய்க் கூட்டமற - முதலான நோய்கள் அனைத்தும்,

வோட்டு - துரத்த வேண்டுமெனில்,

மிலங்கத் தரி.- இலவங்கப்பட்டையை சாப்பிடு.

இவ்வளவு சிறப்பு பொருந்திய கறுவா மரத்தை பற்றி சில அடிப்படை விஷயங்களை முதலில் பார்ப்போம்.

கறுவா மரம்.

பெயர் :- கருவா (அ) கறுவா மரம்.

ஆங்கிலப்பெயர் :- Cinnamomum verum.

தாவரவியல் பெயர் :- சின்னமோமம் சேலானிக்கம் - Chinnamonum Zeylanicum. 

தாயகம் :- இலங்கை. தற்போது இந்தியா, மலேசியா, தாய்லாந்து முதலிய நாடுகளிலும் உற்பத்தியாகிறது.

திணை :- தாவரம்.

பிரிவு :- மாக்னோலியோஃபிட்டா.

வகுப்பு :- மாக்னோலியாப்சிடா.

வரிசை :- லாரல்ஸ்.

குடும்பம் :- லாரசீ.

பேரினம் :- சின்னமோமம் - Cinnamomum.

இனம் :- சி. வேரம் - C . verum.

பயன்பாடு.

உணவுப்பொருள்களில் சுவை மற்றும் வாசனையூட்டும் மசாலா பொருளாகவும், மருத்துவத்தில் நோய் தீர்க்கும் மூலிகை பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கறுவா மரமானது தற்போது இலங்கை மற்றும் இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது என்றாலும், இலங்கையில்தான் மிக அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்ல இலங்கையில் உற்பத்தியாகும் கறுவாபட்டையே உயர்தரமானதாகும்.

கறுவா மரத்திலிருந்து தரமான விதைகளை சேகரித்து விதைப்பதின்மூலம் புதிய கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கிளைகளை ஒடித்து பதியமிடுவதின் மூலமும் புதிய மரங்களை உருவாக்கலாம்.

இம்மரம் சிறிய மஞ்சள் நிற பூக்களை கொண்டது. இதன் பழம் ஊதா ( violet ) நிறத்துடன் சிறியதாக இருக்கும். இதில் ஒரேயொரு விதை மட்டுமே இருக்கும். கறுவா மரம் 10 முதல் 15 மீட்டர் வரை வளரும் இயல்புடையது. இதன் இலைமுதல் வேர்வரை அனைத்துமே வாசனையில் கமகமக்கும்.

Cinnamomum verum

மரம்முழுக்க வாசனையால் கமகமத்தாலும் இதன் பட்டையே முக்கிய வாசனை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் வெளிப்புற பட்டை அவ்வளவு வாசனையை தருவதில்லை. மெல்லிய மேல்பட்டையை நீக்கினால் அதனுள்ளே இன்னொரு பட்டை இருக்கும். இதுவே பிரிந்தெடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு "கறுவாப்பட்டை"  என்ற பெயரில் (தமிழில் இலவங்கப்பட்டை) விற்பனைக்கு வருகிறது. இதற்கு சுகந்த மணமும் இலேசான இனிப்பு சுவையும் உண்டு.

கறுவா பட்டை.

பெயர் :- கறுவா பட்டை.

ஆங்கில பெயர் :- Cinnamon - சின்னமன். 

வேறு பெயர்கள் :- பட்டை, கருவாப்பட்டை.( தமிழில் - லவங்கப்பட்டை, இலவங்கப்பட்டை).

நிறம் :- மிருதுவான சிவப்பு கலந்த பழுப்பு நிறம்.

சுவை :- காரமான சிறு தித்திப்பு.

மணம் :- காரத்தன்மை பொருந்திய வாசனை.

தன்மை :- இலேசான சூடு மற்றும் வறட்சி.

வகைகள்.

இதில் பலவகைகள் உள்ளன. தமிழில் பெரிய இலவங்கப்பட்டை, சன்ன இலவங்கப்பட்டை, காட்டு கருவாப்பட்டை என்று பல வகைகளாக பிரிக்கின்றனர்.

இதன் பட்டை அரக்கு நிறத்தில் காணப்படும். காரமும் இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். இதில் அறியப்படும் ரம்மியமான சுவை மற்றும் வாசனை இதிலுள்ள "சின்னாமால்டிஹைட்' (Cinnamaldehyde) என்னும் பொருளிலிருந்து கிடைக்கிறது.

Cinnamon

கறுவாப்பட்டை அதிகமாக மசாலா பொருளாகவும் உணவிற்கு மணமூட்டும் பொருளாகவும், மூலிகை மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இது கேக்குகள், ரொட்டிகள், சாக்லேட்டுகள், இனிப்பு உறைப்பு பதார்த்தங்கள், தேனீர், சூப், கோக்கோ, ஆப்பிள் சாஸ் மட்டுமல்லாது மதுபானங்களிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் மதுபானங்களில் குறிப்பாக விஸ்கி மற்றும் பிராந்திகளில் சுவையூட்ட  பயன்படுத்தப்படுகிறது.

இதன் பட்டையிலிருந்து வாசனை மிகுந்த எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் இலை, வேர் மற்றும் விதைகளில் இருந்தும்கூட  எண்ணை பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் உணவுப்பொருள், மருந்து, சோப்பு, பற்பசை முதலியவைகளில் சேர்க்கப்படுகிறது. இதற்கு நுண்ணுயிர்களை கொல்லும் திறன் உண்டு என்பதால் சிலவகையான உணவுகளை பதப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

100 கிராம் கறுவா பட்டையில்
அடங்கியுள்ள சத்துக்களின் விபரம்.

Product ID English Name Tamil Name Nutrient value
1 Calorie கலோரி 1,035KJ (247kcal)
2 Carbohydrates மாவுச்சத்து 80 g
3 Fiber நார்சத்து 80 g
4 Water நீர் 10. 6 g
5 Protein புரதம் 4 g
6 Sugar சர்க்கரை 2. 2 g
7 Fats கொழுப்பு 1. 2 g
8 Calcium கால்சியம் 1. 2 mg
9 Magnesium மெக்னீசியம் 60 mg
10 Manganese மாங்கனீஸ் 17. 46 mg
11 Selenium செலினியம் 3. 6 µg
12 Phosphorus பாஸ்பரஸ் 64 mg
13 Potassium பொட்டாசியம் 431 mg
14 Sodium சோடியம் 10 mg
15 Iron இரும்பு 8. 3 mg
16 Zinc துத்தநாகம் 1. 8 µg
17 Copper தாமிரம் 0. 330 µg
18 Vitamin A [beta-carotene] வைட்டமின் A [பீட்டா கரோட்டின்] 15 µg
19 Vitamin B1 [thiamine] வைட்டமின் B1 [தயாமின்] 0. 02 mg
20 Vitamin B2 [riboflavin] வைட்டமின் B2 [ரிபோ ஃப்ளவின்] 0. 04 mg
21 Vitamin B3 [niacin] நவைட்டமின் B3 [நியாசின்] 1. 33 mg
22 Vitamin B6 [Pyridoxine] வைட்டமின் B6 [பைரிடாக்சின்] 0. 16 mg
23 Vitamin B9 [folic acid] வைட்டமின் B9 [ஃபோலிக் அமிலம்] 6 µg
24 Vitamin C [ascorbic acid] வைட்டமின் C. [அஸ்கார்பிக் அமிலம்] 3. 8 mg
25 Vitamin E வைட்டமின் E 2. 3 mg
26 Vitamin K வைட்டமின் K 31. 2µg

மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் கோலின், பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லைகோபீன், லுடீன், சின்னா மால்டிஹைட் முதலியனவும் உள்ளன.

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கறுவா மரத்தில் பலவகைகள் இருந்தாலும் பயன்பாட்டில் பிரபலமாக இரண்டு வகைகளே உள்ளன.. ஒன்று "சிலோன் சின்னமன்" (Ceylon cinnamon). மற்றொன்று "காசியா சின்னமன்" (Cassia cinnamon). இந்த இரண்டு இனங்களையும் பற்றி சிறிது பார்ப்போம்.

Ceylon cinnamon.

இதன் தாயகம் இலங்கை. இது ஆரம்பத்தில் இலங்கையில் மட்டுமே உற்பத்தியான இனம். அதன்பின் அங்கிருந்து இந்தியா, மலேசியா, தாய்லாந்து, மடகாஸ்கர், பிரேசில், கரீபியா, பங்களாதேஷ், மியான்மர் முதலிய நாடுகளுக்கும் கொண்டுசெல்லப்பட்டு அங்கும் பயிர்செய்யப்படுகிறது.

தென்னிந்தியாவில் கேரளாவில் அதிகம் பயிராகின்றன. 

இது 15 மீட்டர் உயரம் வளரும் இயல்புடையது. இலைகள் 7 லிருந்து 18 செ.மீ வரை சிறிய வெற்றிலை வடிவத்தில் உள்ளன. பூக்கள் மிக சிறியது. இது பச்சை நிறத்தில் ஒரு வித வாசனையை கொண்டுள்ளன.

Cinnamomum

இரண்டு வருடங்கள் வளர்ந்த மரத்தின் அடிப்பகுதியில் கிளைக்கும் கிளைகளின் மெல்லிய மேற்பட்டை நீக்கப்பட்டு வாசனைபொருந்திய உள்பட்டை உலர்த்தப்பட்டு 10 செ .மீ நீளத்திற்கு துண்டு துண்டாக வெட்டப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

பிற நாடுகளில் உற்பத்தியாகும் கறுவா பட்டையைவிட இலங்கையில் உற்பத்தியாகும் கறுவாப்பட்டையே தரம் உயர்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இது மென்மையாகவும் கசப்பு சுவை குறைவாகவும் மருதமான சுவை கொண்டதாகவும் நல்ல வாசனையாகவும் எளிதில் நொறுங்கும் தன்மையுடனும் உள்ளது.

இதுவே "உண்மையான" (true ) இலவங்கப்பட்டை என்று அழைக்கப்படுகிறது. இதுவே அதிக விலையுள்ளது. இலங்கையை தவிர பிற இடங்களில் உற்பத்தியாகும் பட்டைகள் தரத்தில் சிறிது குறைந்தவையே.

அடுத்து இதன் மற்றொரு இனமான "காசியா" பற்றி பார்ப்போம்.

cinnamon Cassia.

பெயர் :- சின்னமன் காசியா   - Cinnamon Cassia .

அறிவியல் பெயர் :- Cinnamomum Cassia.

தாயகம் :- சைனா.

குடும்பம் :- Lauraceae - லாரசீ.

பேரினம் :- Cinnamomum.

இனம் :- C . Cassia.

cinnamon cassia

இது சைனாவில் பயிராகும் ஒருவகையான கறுவா மரம் எனலாம். வெள்ளை நிற பட்டைகளுடன் பலதரப்பட்ட கிளைகளுடன் 7 மீட்டர் உயரம் வரை வளரும் பசுமையான மரம்.

இலைகள் 18 செ.மீ வரை நீளமுள்ளதாக இருக்கும். சிறிய மஞ்சள் நிற பூக்களை கொண்டது. கோடைகாலம் ஆரம்பமாகும் காலகட்டத்தில் பூக்கும் தன்மையுடையது.

சீனாவின் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தில் அடிப்படை மூலிகைகளுள் ஒன்றாக இது உள்ளது.

இந்த காசியாவை சீனா பலநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. 

சினமன் காசியா (cinnamon cassia) என்னும் இந்த இனம் சீனாவில் மட்டுமல்லாது மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியாவிலும் பயிராகிறது.

இதிலிருந்து பெறப்படும் பட்டையே உலக அளவில் அதிகமாக  இறக்குமதி செய்யப்பட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையில் உற்பத்தியாகும் சின்னமோமம் பட்டையைவிட இதுவே அதிக அளவில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. அதற்கான காரணம் இலங்கை பட்டையைவிட இது விலைமலிவு என்பதுதான்.

இலங்கை கறுவாப்பட்டையை "true Cinnamon" (Cinnamonum zeylanicum (CZ)) அல்லது Ceylon cinnamon.என்ற பெயரிலும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பட்டையை "regular Cinnamon" (ரெகுலர் பட்டை) அல்லது Cinnamon Cassia (CC ) என்ற பெயரிலும் விற்பனை செய்கின்றனர். 

உண்மையாக சொல்லப்போனால் "சீனாவின் கறுவாப்பட்டை" என்ற பெயரில் விற்பனைக்குவரும் பட்டை உண்மையில் கறுவாப்பட்டையே அல்ல. இலங்கையில் உள்ள கறுவா மரத்திற்கும் இந்த சைனா கறுவா மரத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. இரண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாவரமாகையால் இரண்டிற்கும் ஏறத்தாழ ஒரே மணம் ஒரே சுவை இருக்கிறது அவ்வளவே.

Real_Fake cinnamon

ஆனால் இரண்டிற்குமே வடிவத்திலும், குணங்களிலும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன.

அது எப்படி ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பொருள்கள் வெவ்வேறு குணங்களை பெற்றிருக்க முடியும் என்கிறீர்களா?

அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் வீட்டில் வளரும் பூனையும், காட்டில் வளரும் புலியும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவேறு விலங்குகள்தான் என்கிறார்கள்.

உண்மைதான்.

அதற்காக. இரண்டின் குணங்களும் ஒன்றாகிவிடுமா?

இரண்டும் ஒரே குடும்பத்தை சார்ந்த விலங்குகள் என்பதற்காக பூனையைப்போல புலியையும் மடியில்போட்டு கொஞ்சத்தான் முடியுமா? 

அப்படி கொஞ்சினால் என்னவாகும்?

கொத்தோடு வாழ்க்கை கோவிந்தாவாகிவிடும் அல்லவா.  அதுபோலத்தான் இதுவும்.

வெறும் சுவை, மணம் மட்டுமல்ல இலங்கை கறுவாப்பட்டையில் இல்லாத ஒரு சிறப்பான ஸ்பெஷல் குணம்  "சீன கறுவாப்பட்டை" என்ற பெயரில் மலிவாக விற்பனை செய்யப்படும் Cinnamon Cassia (CC ) பட்டையில் உள்ளது.

அது என்ன என்று கேட்கிறீர்களா.. "விஷம்".

ஆம்.. விஷமேதான்!.

விஷம் என்றால் சாதாரண விஷமல்ல. உங்கள் கல்லீரலையே கலங்கடிக்கும் "விஷம்". 

அதிர்ச்சியாக இருக்கிறதா. தொடர்ந்து வரும் அடுத்த பதிவில் சைனாவின் விஷத்தையும், விஷமத்தையும் கொஞ்சம் விரிவாகவே  பார்ப்போம்.

இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியை படிக்க கிளிக்குங்க.

👉கறுவாப்பட்டை - இலவங்கப்பட்டை - Medicinal properties of Cinnamon.👈

💓💓💓💓💓💓

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

18 கருத்துகள்

 1. பிரமிப்பான தகவல்கள் நண்பரே நன்றி.

  பதிலளிநீக்கு
 2. விளக்கமான தகவல்கள் நன்றி...

  முடிவில் 'கெதக் ' !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ! தங்கள் கருத்துகளுக்கு நன்றி !!

   நீக்கு
 3. விரிவான தகவல்கள்...

  சீனா விஷ(ம)ம் ! தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. இலவங்க மரம் எங்கள் வீட்டில் உள்ளது. எனவே கிராம்பும் பே லீஃப் எனப்படும் இந்த லவங்க இலையும் வீட்டிலேயே உண்டு. தகவல்கள் மிகவும் பயனுள்ளவை.

  துளசிதரன்

  சிவா சகோ நான் பயன்படுத்துவது இலங்கைப்பட்டை/கறுவாபட்டை/சுருள் பட்டை தான். அது நல்ல மணம் கொடுக்கும். மலிவு விலைப் பட்டை கிடைக்கிறதுதான் அதான் அந்த சைனா விஷம் சினமன் கேசியா...வாங்குவதில்லை.. ஆனால் மற்ற லவங்கப்பட்டை முதல் படத்தில் உள்ளது போல அது எப்போதேனும் வாங்குவதுண்டு. இலங்கை கறுவாப்பட்டை கிடைக்காத சமயத்தில்.

  சைனாவின் விஷ(ம)ம் பற்றி அறிய ஆவல். அவங்க இதுலயும் விளையாடுறாங்களா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக !!! தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! ... சகோதரர் துளசிதரன் அவர்களுக்கும் சகோதரி கீதா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் !!! ...

   நீக்கு
  2. கறுவாப்பட்டை (Cinnamon) பற்றிய விரிவான தகவலுக்கு நன்றி! கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சரக்கண்டி Cinnamon Estate தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய எஸ்டேட் ஆகும். இது 1767 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பனியாரால் நிறுவப்பட்டது. இங்கு இதிலிருந்து எண்ணைய் எடுக்கிறார்கள்.

   நீக்கு
  3. வருக நண்பரே ! கேரள cinnamon Estate ஆசியாவிலேயே மிகப்பெரிய எஸ்டேட் என்னும் தங்களின் தகவல் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. நன்றி!!! .

   நீக்கு
 5. கறுவாப் பட்டை நல்மருந்தென
  சித்தர் பாடலுடன் விளக்கியமை நன்று.
  அருமையான தகவல்

  பதிலளிநீக்கு
 6. அரிய தகவல் கள். தற்போதைக்கு தேவையானதும் கூட. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி நண்பரே !!!

   நீக்கு
 7. romba vey nalla iruku information unga katturaiya video ku payanpaduthikalama anna

  பதிலளிநீக்கு
 8. இலவங்கநெய் என்றால் என்ன ஐயா? கூறுங்கள் நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலவங்க நெய்யில் பலவகைகள் உள்ளன. "இலவங்கபட்டை" மற்றும் இலவங்கம் என்று சொல்லப்படும் "கிராம்பு" ஆகியன மிகுந்த மருத்துவப்பயனை கொண்டுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.

   ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால் இவைகள் அதிக உஷ்ண தன்மை பொருந்தியவை... உஷ்ணமான உடல்நிலை கொண்ட மனிதர்களுக்கு நீடித்து சாப்பிடுவதற்கு ஏற்றவை அல்ல.

   இந்த குறைபாட்டை சரிசெய்யும் பொருட்டு மேற்குறிப்பிட்ட பொருட்களை குளிர்ச்சி பொருந்திய சுத்தமான பசு நெய்யில் சிறிய அளவில் பொடித்துப்போட்டு மருந்துசரக்கு கருகாத படியும் அதனுடைய சத்துக்கள் நெய்யில் இறங்கும்படியும் சிறு தீயில் பக்குவமாக எரித்து வடித்தெடுத்து பயன்படுத்தப்படுகிறது.

   இது உஷ்ண தேகிகளுக்கு அதிக அளவில் நன்மை பயக்கின்றன. இதுவே அனைவராலும் எளிமையாக தயாரிக்கக்கூடிய இலவங்க நெய். மற்றபடி இலவங்கப்பட்டையை தவிர்த்து கிராம்புடன் மேலும் பல மருந்து சரக்குகள் சேர்த்து தயாரிக்கப்படும் மேலும் பல இலவங்க நெய் முறைகளும் உள்ளன. அவைகள் பல்வேறு மேற்பூச்சுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. தயாரிக்கும் வழிவகைகளும் கடினமானவை... எனவே, அதுபற்றி இங்கு விவரிக்கவில்லை...நன்றி!

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.