header ads

header ads

கறுவாப்பட்டை - இலவங்கப்பட்டை - Cinnamon - part 2.

 Cinnamon.

[Part 2]

   உடலுக்கு ஊட்டம் தரும் உணவே உடலை பேணிக்காக்கும் மருந்தாகவும் பயன்படவேண்டும் என்னும் உயரிய நோக்கில்  நம் முன்னோர்கள் மருத்துவ தன்மை வாய்ந்த பல இயற்கை பொருட்களை உணவோடு உணவாக பயன்படுத்திவந்தனர். அதிலொன்றுதான் கறுவாப்பட்டை.
          கறுவாப்பட்டையின் தன்மை மற்றும் உற்பத்தி போன்றவற்றை முதல் பகுதியில் பார்த்தோம். இரண்டாம் பகுதியாகிய இதில் கறுவா பட்டையால் உடலுக்கு விளையும் நன்மை தீமைகளை பார்ப்போம்.

   இலவங்கப்பட்டை என்று பரவலாக அழைக்கப்படும் கறுவாப்பட்டையில் பலவகைகள் இருந்தாலும் முக்கியமாக இருவகைகள் உள்ளன. அவை
 1. இலங்கை கறுவாப்பட்டையான "true Cinnamon" (Cinnamonum zeylanicum (CZ) என்னும் Ceylon cinnamon.
 2.  சீன கறுவாப்பட்டையான "regular Cinnamon" (ரெகுலர் பட்டை) என்னும் Cinnamon Cassia (CC ).
   இந்த இருவகை கறுவாப்பட்டைகளும் தரத்திலும், குணத்திலும் பல வகைகளில் வேறுபடுகின்றன. எனவே இந்த இருவகையான பட்டைகளின் மருத்துவக் குணங்களை பற்றி தனித்தனியாக பார்ப்போம்.

   முதலில் இலங்கையில் உற்பத்தியாகும் Ceylon cinnamon ஐ  பற்றி பார்ப்போம்.

Ceylon cinnamon - Cinnamonum zeylanicum (CZ).


       கறுவாப்பட்டையில் இதனை உண்மையான அதாவது "True Cinnamon" என அழைக்கின்றனர். காரணம் இதுவே பல அற்புதமான மருத்துவக்குணங்களை கொண்டுள்ளது மட்டுமல்லாது உடலுக்கு பலநன்மைகளையும் பெற்றுத்தருகிறது.

   பொதுவாக இதன் வாசனையை நுகர்வதால் மூளை சுறுசுறுப்படைந்து நினைவாற்றல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. மனஅழுத்தத்தையும், மன இறுக்கத்தையும் சீர் செய்யும் திறன் இருப்பதாக கூறப்படுகிறது.

   மேலும் வளர்ச்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்துகிறது. இரத்தத்திலுள்ள மாசுகளை நீக்கி நரம்புமண்டலங்களை சீர்படுத்துவதோடு இரத்த அழுத்தத்தையும் சீராக்கும். இரத்தத்தை நீர்க்கச்செய்யும் தன்மையுள்ளதாதலால் இரத்தம் உறைதலால் ஏற்படும் மாரடைப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

   இந்த சிலோன் கறுவாப்பட்டையை முறையாக பயன்படுத்திவர செரிமானத்தை மேம்படுத்துவதோடு வயிற்றுக்கடுப்பு, இரத்தக்கடுப்பு, வயிற்றுப்போக்கு, உள்மூலம், ஆசனப்புண், குடல் எரிச்சல் மற்றும் குடல் சம்பந்தமான நோய்களை நீங்குவதோடு வயிற்றிலுள்ள நச்சுப் பொருட்களையும் அழிக்கும். 

   இதனை சிறு துண்டுகளாக்கி வாயில் அடக்கிக் கொள்ள இருமல் தணியும். வாந்தி, பல்வலி முதலிய அனைத்தையும் போக்கும்.

   சிலந்தி மற்றும் பூச்சி கடிக்கு கறுவாப்பட்டையை அரைத்து பூச்சி கடித்த இடத்தில் பற்று போட விஷம் நீங்கும்.

   மேலும், இந்த கறுவாப்பட்டையானது பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் முழுவதுமாக வெளிப்படாமல் தடைபட்டு நிற்கும் இரத்தத்தை விரைந்து வெளியேற்றும். குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கறுவாப்பட்டை கஷாயம் கொடுத்துவர கருப்பை சுருங்கி இயல்பான தன்மைக்கு வரும்.

   அண்மையில் ஆய்வாளர்கள் இலவங்கப்பட்டையிலிருந்து பெறப்பட்ட சாற்றை எலிகளுக்கு கொடுத்து பரிசோதித்தனர். அதில் மறதி நோயான "அல்சைமர்" (Alzheimer's) நோய்க்கு நல்ல பலன் கிடைப்பதைக் கண்கூடாக கண்டறிந்தனர். இது மூளை நரம்புகளில் ஏற்படும் அழற்சியையும், செயலிழப்பையும் தடுக்கின்றன என்பதனையும் கண்டறிந்துள்ளனர்.

   லவங்கப்பட்டை சூரணத்தை 750 மி .கி அளவு எடுத்து நெய்யுடன் குழைத்து சாப்பிட சீதபேதி குணமாகும்.

   நகமும் சதையும்போல, பூவும் மணமும்போல என வாழ்த்துவதைவிட இலவங்கப்பட்டையும் தேனும்போல என வாழ்த்துவதே சிறப்பு . ஏனெனில் இவைகள் இரண்டும் இணைவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

   ஒரு பாத்திரத்தில் தேன் விட்டு அதனை வெந்நீர் பாத்திரத்தில் வைத்து சூடாக்கி அந்த தேனுடன் லவங்கப்பொடி கலந்து குழப்பி 3 முதல் 4 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஜலதோஷம், இருமல், சைனஸ் தணியும்.

   வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேன்கலந்து குடித்து வர சிறுநீர் பாதைகளில் ஏற்படும் தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும்.

   1 ஸ்பூன் தேனுடன் கால் ஸ்பூன் அளவு இலவங்கப்பொடி கலந்து சாப்பிட்டுவர இருமல், கபம், சளி முதலியன நீங்கும்.

   இலவங்கப்பட்டையை சிறிது வறுத்து இடித்து வைத்துக்கொள்ளவும். இதனை காலையும் மாலையும் இருவேளை தேனில் கலந்து சாப்பிட்டுவர மூளை, இருதயம் முதலிய உறுப்புகள் வலிமை பெறுவதோடு வயிறிலுள்ள வாய்வையும் கண்டிக்கும். உடலில் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

   லவங்கப்பட்டையை பொடித்து நீரிலிட்டு காய்த்து வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளிக்க பல்வலி, வாய்நாற்றம் நீங்கும்.

   இதிலிருந்து வடித்தெடுக்கப்படும் எண்ணெய் உஷ்ண குணமுடையது என்பதால் குளிர்ச்சியால் ஏற்படும் சகல நோய்களுக்கும் பயன்தரும்.

   பல்வலி, மூட்டுவலி, தலைவலி இவைகளுக்கு மேற்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் காலில் ஏற்படும் புண்கள், விரல் இடுக்கு, நகம் இவைகளில் ஏற்படும் பூஞ்சை காளான்களை குணப்படுத்தவல்லது.  லவங்கப்பட்டை எண்ணெய் ஒரு சக்தி வாய்ந்த கிருமி நாசினி. அதற்கு காரணம் இதிலுள்ள "சின்னமால் டீ ஹைட்"  என்னும் வேதிப்பொருளே ஆகும்.

இலவங்கப்பட்டை Tea.


   கறுவாப்பட்டை (இலவங்கப்பட்டை) டீ குடித்து வர ஆரோக்கியம் மேம்படும் இந்த டீ தயாரிப்பதற்கு தேவைப்படும் கறுவாப்பட்டை என்று சொல்லப்படும் இலவங்கப்பட்டைப்பொடியை ரெடிமேடாக கடைகளில் வாங்குவதைவிட நீங்களே தயாரித்துக்கொள்வதே சிறப்பு ... ஏனெனில் கடையில் வாங்கும் இலவங்கப்பொடி தரம்குறைந்த சைனா பட்டையில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம். எனவே இதற்கு தேவைப்படும் பொடியை சிலோன் ஒரிஜினல் கருவாப்பட்டையை வாங்கி நீங்களே அரைத்து தயாரித்துக்கொள்ளுங்கள். 

   அரை லிட்டர் டீ டிக்காஷனுடன் இரண்டு டீஸ்பூன் தேனும் 3 டீஸ்பூன் கறுவாப்பட்டை தூளும்  சேர்த்துக் காய்ச்சி இறக்க கமகமக்கும் இலவங்கப்பட்டை டீ ரெடி !.

இலவங்கப்பட்டை சூரணம்.


   உயர்தரமான சிலோன் ஒரிஜினல் இலவங்கப்பட்டை, றூமிமஸ்தகி, சோம்பு இவைகளின் சூரணம் சமனெடை எடுத்துக்கொள்ளவும். இவற்றின் மொத்த எடைக்கு சமமாக கற்கண்டு சூரணத்தையும் (சூரணமென்பது மிருதுவாக பொடிக்கப்பட்ட தூள் அல்லது பொடி) சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

   இதனை இருவேளை ஒரு தேக்கரண்டி அளவில் சாப்பிட்டுவர இரைப்பை பலம்பெறும். வயிற்றிலுள்ள அசுத்த மாசுக்களை நீக்கும். ஜீரணசக்தியை அதிகப்படுத்தும், சீத பேதியை தடுத்து நிறுத்தும். 

இலவங்கப்பட்டை எண்ணெய்.


   உயர்தரமான சிலோன் ஒரிஜினல் இலவங்கப்பட்டையை உரலிலிட்டு இடித்து தூளாக்கிக்கொள்ளவும். அவ்வாறு இடித்தெடுத்த தூள் - 1 கிலோ.

   சுத்தமாக செக்கிலிட்டு ஆட்டியெடுக்கப்பட்ட நல்லெண்ணெய் - 600 மி .லி.

   ஒரு பீங்கான் பாத்திரத்தில் இலவங்கப்பட்டை தூளுடன் நல்லெண்ணெய் கலந்து 20 நாள் கடும் வெயிலில் வைக்கவும். தினந்தோறும் நன்றாக கிளறிவிடவும்.

   20 நாட்கள் கழித்து எண்ணைய்யை வடித்தெடுத்துக்கொள்ளவும். இதுவே அனைவராலும் எளிமையாக தயாரிக்கக் கூடிய இலவங்கப்பட்டை எண்ணெய். இந்த எண்ணையை உடலில் பூசுவதால் கைகால் நடுக்கம், வாய் கோணல், முகம் கோணல், மயிர்கூச்சம் முதலியன நீங்கும்.

இந்தியாவில் விளையும் கறுவாப்பட்டை இனமான dalchini (தால்சீனி). 


Dalchini Cinnamon.

   இலங்கை கறுவாப்பட்டையான Ceylon cinnamon ல் இத்துணை நன்மை என்றால் சீனா கறுவாப்பட்டையான Cinnamon Cassia இதற்கு நேரெதிராக வேலைசெய்யக்கூடியதாகும். அதிர்ச்சியாக உள்ளதல்லவா எனவே அதைப்பற்றியும் சிறிது பார்ப்போம்.

Cinnamon Cassia - சின்னமன் காசியா.


   உண்மையாக சொல்லப்போனால் "சீனாவின் கறுவாப்பட்டை" என்ற பெயரில் விற்பனைக்குவரும் பட்டை உண்மையில் கறுவாப்பட்டையே அல்ல. இரண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாவரமாகையால் இரண்டிற்கும் ஏறத்தாழ ஒரே மணம் ஒரே சுவை இருக்கிறது அவ்வளவே. ஆனால் இது தரத்தில் குறைந்தது மட்டுமல்லாது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பது. இந்த காசியா கறுவாப்பட்டையில்  பலவகைகள் உள்ளன.

   பொதுவாக எந்த வகை கறுவாப்பட்டையாக இருந்தாலும் அதில் உடலுக்கு நன்மை செய்யும் சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன என்பது உண்மையே. அத்தனை சத்துக்களுமே உடலுக்கு நன்மை விளைவிப்பதுதான் ... ஒரே ஒரு சத்தைத்தவிர அதுதான் "கூமரின்" (coumarin). 

   "கூமரின்" என்பது என்ன ... அது ஒரு வகை விஷம். நம்முடைய கல்லீரலை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கும் திறன் கொண்ட விஷம். அனைத்துவகை இலவங்கப்பட்டையிலுமே இந்த விஷப்பொருள் உள்ளது என்றாலும் ஒவ்வொன்றிலும் அதன் விகிதாசாரம் மாறுபடுகிறது.

   இலங்கையில் உற்பத்தியாகும் இலவங்கப்பட்டையை விட சீனாவில் உற்பத்தியாகும் காசியா இலவங்கப்பட்டையில் அதிக அளவில் கூமரின் (Coumarin)  உள்ளதால் சீன இலவங்கப்பட்டை தரங்குறைந்தது மட்டுமல்லாது உடலுக்கு மிகவும் தீங்கிழைப்பதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த கூமரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையுடையது.

   இலங்கையிலிருந்து வரும் சுருள் இலவங்கப்பட்டையில் இந்த விஷப்பொருள் 0.0004% மட்டுமே உள்ளது. இதனால் உடலுக்கு பெரிய அளவில் தீங்கு இல்லை. ஆனால் சீனாவின் இலவங்கப்பட்டையான Cassia (காசியா) என்னும் தடித்த வடிவமுடைய இலவங்கப்பட்டையில் இதன் அளவு பன்மடங்கு அதிகம். ஏறத்தாழ 5% உள்ளது. அதாவது 5 கிராம் இலவங்கப்பட்டையில் 10 முதல் 30 மில்லி கிராம் வரை உள்ளது. எனவேதான் சீனாவின் "காசியா" ஆபத்தானது என்கிறோம்.

   அனைத்துவகையான இலவங்கப்பட்டைகளையும்விட சிலோன் பட்டையே பாதுகாப்பானது. உடலுக்கு அதிக அளவில் நன்மை பயப்பது. ஆனால் இதன் விலை சைனா இலவங்கப்பட்டையைவிட  5 மடங்குவரை அதிகம் என்பதால் இதை தவிர்த்து விலைமலிவான உடலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கும் சைனா பட்டையையே அதன் ஆபத்தை உணராமல் மக்கள் வாங்கிச் செல்கின்றனர் என்பது வேதனை.

   கூமரின் என்னும் விஷப்பொருள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிப்பதோடு புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து வரும் காசியா இலவங்கப்பட்டையை உட்கொள்வதால் 6 வகையான பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இது நுரைஈரல், கல்லீரலில் புற்றுநோயை ஏற்படுத்தலாம். இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படலாம். ஆஸ்துமா நோயுள்ளவர்கள் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படலாம். எனவே சைனா கறுவாப்பட்டையை தவிர்ப்பது நலம். ஆனால் மார்க்கெட்டில் இதுதான் அதிக அளவில் விற்பனையாகிறது. இந்த சைனா பட்டை நம் நாட்டில் ஒரு வருடத்திற்கு பல்லாயிரம் டன்களுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

   சரி Ceylon மற்றும் Cassia வை எவ்வாறு இனம் கண்டறிவது.

   Ceylon Cinnamon இலவங்கப்பட்டை மிக மெல்லியதாக எளிதில் உடையும் வண்ணம் இருப்பதால் ஒன்றிற்குள் ஒன்றாக அடுக்கடுக்காக பல பட்டைகளை வைத்து சுருட்டியிருப்பார்கள். இதனாலேயே இதனை 'சுருள்பட்டை' என்றும் அழைக்கின்றனர். பல சுருள்களுடன் கனமே இல்லாமல் எளிதில் உடையும் தன்மையில் இது இருக்கும்.

Ceylon cinnamon

   ஆனால் சீனா இலவங்கப்படடையோ தனித்த பட்டைகளாக இருக்கும். மேலும் இது கடினமானது. இதனை தூளாக்குவதும் மிக கடினம். எனவே இதன் வித்தியாசங்களை அறிந்து தரமானதாக வாங்குவது முக்கியம்.

Cassia Cinnamon

   Ceylon என்னும் இலங்கையின் ஒரிஜினல் பட்டையை வாங்குவதற்கு நீங்கள் அதிகம் கஷ்டப்பட வேண்டியதில்லை. online ல் ஆர்டர் பண்ணினால் வீடுதேடி வருகிறது. அமேசான் தளத்திலும் கிடைக்கிறது.

எச்சரிக்கை குறிப்புகள் :- 

   இது கொழுப்பை குறைக்கும் அல்லது நீரழிவை கட்டுப்படுத்தும் என்று பொதுவாக பலரால் சொல்லப்பட்டு வந்தாலும் இது இன்னமும் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்படவில்லை.

   மேலும் இலவங்கப்பட்டையை முகப்பரு முதலியவைகளுக்கு முகத்தில் தடவுவதால் குணமாகும் என்று இதுவரை எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை.

   இதன் தூளாக்கப்பட்ட பொடியை சாப்பிடுவதில் கவனம் தேவை. ஏனெனில், இலவங்கப்பட்டை தூளை சுவாசித்தால் நுரைஈரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

   இலவங்கப்பட்டையில் நார்த்தன்மை அதிகமென்பதால் இதன் தூளாக்கப்பட்ட  பொடி சாதாரண கண்கள் மூலம் பார்ப்பதற்கு பொடிபோல் தெரிந்தாலும் நுண்ணோக்கிமூலம் பார்த்தீர்கள் என்றால் இதன் ஒவ்வொரு துகளும் சிறு சிறு குச்சி போன்ற வடிவத்தில்தான் இருக்கும்.

   எனவே, இதனை ஏதாவது ஒரு திரவம் அல்லது தேன், நெய் இவைகளில் நன்கு குழப்பி அதன் பின்பே சாப்பிடவேண்டும். அதை விடுத்து "நான் அப்படியே சாப்பிடுவேனாக்கும்" என்று டயலாக் விட்டுக்கொண்டு பொடியை அள்ளி வாயில் போட்டீர்கள் என்றால் உங்களின் மூச்சுக்காற்றோடு கலந்து நுரைஈரலுக்குள் செல்லும் வாய்ப்பு அதிகம். அவ்வாறு செல்லும் துகள்களை வெளியேற்றுவது என்பது நுரைஈரலுக்கு அவ்வளவு எளிதான வேலையன்று. அது மிகவும் கடினமான வேலையென்பதால் அது வேறுவிதமான நுரைஈரல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம் .

Cinnamon powder

   எனவே கறுவாப்பட்டை என்னும் இலவங்கப்பட்டைப்பொடியை எக்காரணம் கொண்டும் இரண்டாவதாக தண்ணீர் குடித்துக்கொள்ளலாம் என்று அப்படியே அள்ளி வாயில் போட்டு விடாதீர்கள். மாறாக ஏதாவது ஒரு நீர்ம பொருளுடன் நன்கு கலக்கியே அருந்துதல் வேண்டுமென உடல்நல வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனை பொதுவாக தேனுடன் கலந்து சாப்பிடுதல் சிறப்பு.

   இதை மருந்துகளுக்காகட்டும் அல்லது சமையலுக்காகட்டும் அளவறிந்து பயன்படுத்தவேண்டும். ஏனெனில் இதை அதிக அளவில் உட்கொண்டால்  இரத்தத்தை நீர்த்துப்போக செய்யும் தன்மையுள்ளது.

   மேலும் சூடான உடலை கொண்டவர்கள் இதனை அதிக அளவில் உட்கொண்டால் தலைவலி ஏற்படும். நீர்பைக்கும் கெடுதல் விளைவிக்கும் என கூறப்படுகிறது.

   எனவே இலவங்கப்பட்டை ஒரு நாளைக்கு அதிகப்படியாக 5 கிராம் அளவே எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சைனாவின் காசியா இலவங்கப்பட்டை மிக குறைந்த அளவில் எடுத்துக்கொண்டாலும் ஆபத்தைத்தரும் எனவே அதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

   அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பது இதற்கும் பொருந்தும். எனவே இதனை மருந்தாக பயன்படுத்த வேண்டுமேயொழிய விருந்தாக பயன்படுத்துதல் கூடாது.

   ரெடிமேடாக கடைகளில் விற்கப்படும் லவங்கப்பட்டை தூளை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் அது பெரும்பாலும் உடல்நலத்தைக் கெடுக்கும் சீன காசியா பட்டையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவையாகவே இருக்கும். எனவே உண்மையான Ceylon cinnamonபட்டையை வாங்கி நாமே உரலிலிட்டு பொடித்து எடுத்துக்கொள்வதே சிறப்பு . நன்றி ! .


கருத்துரையிடுக

6 கருத்துகள்

 1. விரிவான தகவல்கள். இங்கே தால்சீனி கிடைக்கிறது.

  தேநீர் அருந்தலாம் எனத் தோன்றுகிறது. முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ... தால்சீனி கிடைக்கிறதா... முயற்சி செய்யுங்கள் ....

   நீக்கு
 2. பயனுள்ள தகவல்கள் சகோ. இரண்டிற்கும் வித்தியாசம் தெரிந்தது. கறுவாப்பட்டையின் மற்றொரு வகை நு தால்சினி போட்டிருக்கீங்கல்லியா அதுதானே நமக்கு இங்கு பெரும்பாலும் கிடைக்கிறது. பட்டைன்னு அது சைனா கேசியா இல்லையதானே... அந்தப் பட்டை வாங்கலாம் தானே?

  நான் கருவாப்பாட்டை பொடித்து வைத்து டீ அருந்துவதுண்டு. இலங்கைப்பட்டை டக்கென்று பொடிந்துவிடும். இதுவரை சைனா கேசியா தடிமனா இருக்குல்லியா அது வாங்கியதில்லை. ஆனால் தால்சினி னு அது வாங்கலாம் தானே?

  நிறைய செய்முறைக் குறிப்புகளும் பயனுள்ளவை மிக்க நன்றி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரி கீதாவுக்கு வாழ்த்துக்கள் !! ... பொதுவாக இந்தியாவில் dalchini (தால்சினி) பரவலாக கிடைப்பதற்கு காரணம் அது இந்திய இனம். இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் அதிகம் பயிர்செய்யப்படும் இனம். எனவேதான் நம்நாட்டில் தாராளமாக கிடைக்கிறது. நம் பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகளில் dalchini தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சீனாவின் காசியாவை விட இது பெஸ்ட்தான். என்றாலும், இதைவிட இலங்கையின் "ceylon cinnamon" தான் நம்பர் ஓன்ஸ் பெஸ்ட்.

   கறுவாப்பட்டை டீ குடிப்பது நன்மைதான். ஆனால் ஒருநாளைக்கு மொத்தமாக 5 கிராம் பொடிக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். ஏனெனில் இரத்தத்தை நீர்த்துபோக செய்யும் தன்மை இதற்கு உண்டு. ஆதலால் மூக்கிலிருந்து தானாக இரத்தம்வடியும் நோயுள்ளவர்கள் கண்டிப்பாக இதை சாப்பிடுதல் கூடாது. இது உஷ்ணத்தை உண்டுபண்ணும் தன்மை உடையதாதலால் அதிகமாக சாப்பிட்டால் இரைப்பை அழற்சி மற்றும் குடலில் எரிச்சல் ஏற்படலாம். எனவே ஒருநாளைக்கு 5 கிராமுக்கு மிகாமல் அளவோடு சாப்பிடுவதே ஆரோக்கியம்.. மேலும் இக்கட்டுரையில் dalchini (தால்சினி) பற்றி விரிவாக எதுவும் சொல்லாததற்கு வருந்துகிறேன் ... விரைவில் அப்டேட் செய்யப்படும் .... நன்றி !!!

   நீக்கு
 3. கறுவாப் பட்டையின் சிறப்புகளை
  நன்றாக ஆய்வு செய்துள்ளீர்கள்.
  பயன்மிக்க பதிவு

  பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.