"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
அமினோ அமிலங்கள் - புரதம் - Amino Acids - Threonine - Protein.

அமினோ அமிலங்கள் - புரதம் - Amino Acids - Threonine - Protein.

அமினோ அமிலங்கள்.

புரதங்கள்.

[Part - 2]

          அமினோ அமிலம் (Amino Acids) என்பது "அமைன்" (-NH₂) மற்றும் "கார்பாக்சைல்" (-COOH) வேதிவினை குழுக்களைக்கொண்ட ஒரு மூலக்கூறு. இதுவரையில் ஐநூறுக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Threonine

இத்தொடரில் இது இரண்டாவது பகுதி. முதல் பகுதியை படிக்க கிளிக்குங்க >> "அமினோ அமிலங்கள் - புரதம் - Amino Acids - Valine - Protein." <<

  பலவகையான அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து உருவாகும் தொகுதியையே நாம் "புரதம்" (protein) என்று குறிப்பிடுகிறோம்.

  உணவுத்தேவைகளுக்காக மட்டுமல்லாது தொழில் ரீதியாகவும், வணிக நோக்கத்திற்காகவும்கூட அமினோ அமிலங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மக்காச்சோளம் (Maize) போன்ற தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அமினோ அமிலங்கள் கால்நடைகளுக்கான தீவன (Animal feed) தயாரிப்பில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

  விலங்குகளுக்கு மட்டுமல்லாது மனிதர்களுக்கான சத்து குறைபாடுகளை  போக்குவதற்காகவும் மருத்துவத்துறையில் இது உபயோகமாகிறது. தாவரங்களுக்கான உரங்கள் (Fertilizer for plants) தயாரிப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அழகுசாதன உற்பத்தியிலும் (Beauty product manufacturing) பயன்படுத்தப்படுகிறது.

  Amino Acids - Protein.

  அமினோ அமிலங்களில் 500 க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் இருந்தாலும் அவைகளில் மனித உடலுக்கு வெறும் 21 வகையான அமினோ அமிலங்களே தேவைப்படுகின்றன. அவையாவன..

  TAMIL ENGLISH
  வாலின் Valine
  லைசின் Lysine
  திரியோனின் Threonine
  லியூசின் Leucine
  ஐசோலியூசின் Isoleucine
  டிரிப்டோபான் Tryptophan
  பினைல்அலனின் Phenylalanine
  மெத்தியோனின் Methionine
  ஹிஸ்டிடின் Histidine
  அலனைன் Alanine
  அஸ்பார்டிக் அமிலம் Aspartic acid
  அஸ்பரஜின் Asparagine
  குளூட்டாமிக் அமிலம் Glutamic acid
  செரைன் Serine
  ஆர்ஜினின் Arginine
  சிஸ்டீன் Cysteine
  குளூட்டமின் Glutamine
  கிளைசின் Glycine
  புரோலின் Proline
  டைரோசின் Tyrosine
  செலீனோசிஸ்டீன் Selenocysteine

  மேற்குறிப்பிடுள்ள அமினோ அமிலங்களில் ஒரு கார்பன் அணு (ஆல்பா கார்பன்), ஒரு ஹைட்ரஜன் அணு (H), கார்பாக்சைல் குழு (-COOH ), அமினோ தொகுதிகள், மற்றும் மாறிலி வேதிவினை மூலக்கூறுகள் ஆகியன அடங்கியுள்ளன. இத்தொகுதிகளின் தன்மையை பொறுத்து அவைகள் பல அமினோ அமிலங்களாக தரம்பிரிக்கப்படுகின்றன. ஒன்றிற்கு மேற்பட்ட அமினோஅமிலங்கள் ஒரு சங்கிலித்தொடராக அமைக்கப்பட்டால் அந்த தொகுதியையே நாம் "புரதம்" என்றும் "புரோட்டீன்" என்றும் சொல்லிவருகிறோம்.

  அமினோ அமிலங்கள் என்னும் இத்தொடரின் முதல் பகுதியில் புரதங்களை பற்றியும், புரதங்களில் அடங்கியுள்ள அமினோ அமிலங்களான "வாலின்" [Valine] மற்றும் "லைசின்" [Lysine] ஆகியவைகளைப்பற்றியும் விரிவாக பார்த்தோம். இத்தொடரின் இரண்டாவது பகுதியாகிய இதில் மேலும் சில அமினோ அமிலங்களை பற்றி விரிவாக பார்க்கலாம். வாருங்கள்...

  Threonine - திரியோனின்.

  பெயர் :- திரியோனின் [Threonine].

  வேறுபெயர்கள் :- 2-அமினோ-3-ஹைட்ராக்ஸி பியூட்டநோயிக் அமிலம்.

  மூலக்கூறு வாய்ப்பாடு :- C₄H₉NO₃ 

  மோலார் நிறை :- 119.12 g / mol⁻¹

  உருகுநிலை :- 256⁰C.

  கரையும் திறன் - நீரில் கரையக்கூடியது.

  பயன்கள்.

  இந்த அமினோ அமிலமானது நமது உடலிலுள்ள அனைத்துவகை புரதங்களின் சமநிலையை பேணிக்காக்கிறது. தோல் (Skin) மற்றும் அதிலுள்ள "கொலாஜன்" (Collagen) உருவாக்கத்திற்கும் இது அவசியமாகிறது.

  இதயம் (Heart), எலும்பு (Bone) மற்றும் தசைகளில் (Muscle) அதிக அளவில் செறிவுடன் இருப்பது இந்த அமிலமே. தாய்ப்பாலிலும் இது காணப்படுகிறது. அனைத்து உயிரினங்களிலும் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துவது இதுவே. இது ஒரு நுண்ணூட்டச்சத்தாக செயல்பட்டு வளர்ச்சிதைமாற்றத்தை ஊக்குவிக்கிறது.

  மேலும் நரம்புகளுக்கு (Nerve) சக்தி கொடுக்கிறது. கொழுப்புத்திசு (Adipose tissue) வளர்ச்சிதை மாற்றத்திற்கும் இது மிக தீவிரமாக செயல்படுகிறது. அதேவேளையில் கல்லீரலில் (Liver) கொழுப்பு அதிகரிப்பதை தடுத்து நிறுத்துகிறது. குடலை (intestine) பலப்படுத்துவதுடன் அஜீரணக்கோளாறுகளை (indigestion (or) dyspepsia) சரிசெய்கிறது. பதட்டம் (Anxiety), மனசோர்வை (Depression) நீக்குகிறது.

  முழுமையாக வளர்ச்சியடைந்த ஒருவர் ஒருநாளைக்கு சுமார் 1050 மில்லி கிராம் "திரியோனனை - Threonine" உட்கொள்ளவேண்டும்.

  அதிகமுள்ள உணவுப்பொருள்கள்.

  பால் (Millk), இறைச்சி (Meat), கல்லீரல் (Liver), முட்டைகளில் (Egg) அதிக அளவிலும், கோதுமை (Wheat) முதலான தானியங்களில் குறைந்த அளவிலும் காணப்படுகிறது. மேலும் சோயா (Soybean), பாலாடைக்கட்டி (Cheese), கொட்டைவகை தானியங்கள் (Nuts), பயறு வகைகள் இவைகளிலும் போதிய அளவில் உள்ளது.

  Leucine - லியூசின்.

  பெயர் :- லியூசின் [Leucine].

  வேறுபெயர்கள் :- 2-அமினோ-4-மீதைல் பென்ட நோயிக் அமிலம்.

  Leucine


  மூலக்கூறு வாய்ப்பாடு :- C₆H₁₃NO₂

  மோலார் நிறை :- 131.18 g / mol⁻¹

  அடர்த்தி :- 1.293 g/cu cm at 18⁰C.

  உருகுநிலை :- 293⁰C.

  கரையும் திறன் - நீரில் கரைகிறது.

  பயன்கள்.

  இது உடல்வளர்ச்சியை தூண்டக்கூடியது. கீடோனை கொடுக்கக்கூடியது. அதேவேளையில் பழுதடைந்த உள்ளுறுப்புகளை செப்பனிடும் வேலையையும் செய்கிறது.

  ஹார்மோன்களை (Hormone) உற்பத்திசெய்வதோடு இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள இது உதவி செய்கிறது. கொழுப்பு திசு (Adipose tissue) மற்றும் தசைநார் திசுக்களில் இது மிக அதிக அளவில் உள்ளது. குறிப்பாக தசைநார் திசுக்களில் புரத உற்பத்தியை தூண்டும் பொருளாக பயன்படுகிறது.

  கல்லீரலின் (Liver) பயன்பாட்டிற்கும் லியூசின் (Leucine) பயன்படுகிறது. எலும்பு (Bone), தோல் (Skin) மற்றும் தசைத்திசு வளர்ச்சிக்கும் அவைகளிலுள்ள குறைபாடுகளை களைவதற்கும் உதவி செய்கிறது.

  உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்துவதும் இதனுடைய பணிகளில் ஒன்று. இது உடல் திசுக்களில் மட்டுமல்லாமல் இரத்தம் (Blood), உமிழ்நீர் (Saliva) மற்றும் தாய்ப்பால்களிலும் காணப்படுகிறது.

  அதிகமுள்ள உணவுப்பொருட்கள்.

  கோழி (Chicken), மாடு (Beef), பன்றி (Pork), மீன் (Fish) போன்ற  மாமிச உணவுகளிலும், பால் (Milk), முட்டை (Egg), பாலாடைக்கட்டி (Cheese), தவிடு நீக்காத அரிசி, முளைக்கோதுமை, வேர்க்கடலை (Peanuts), பாதாம்பருப்பு (Almond), அவரை (Hyacinth bean), பருப்பு வகைகள் (Pulses), மக்காச்சோளம் (Maize) மற்றும் சோயா பீன்ஸ் (Soybean) ஆகியவைகளில் நிறையவே உள்ளன.

  முழு வளர்ச்சி பெற்ற ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்கு சுமார் 2730 மில்லி கிராம் அளவு "லியூசின் - Leucine" தேவைப்படும்.


  Isoleucine - ஐசோலியூசின்.

  பெயர் :- ஐசோலியூசின் [Isoleucine].

  வேறுபெயர்கள் :- 2-அமினோ-3-மீதைல் பென்ட நோயிக் அமிலம்.

  மூலக்கூறு வாய்ப்பாடு :- C₆H₁₃NO₂ 

  மோலார் நிறை :- 131.17 g / mol⁻¹

  உருகுநிலை :- 285.5⁰C.

  கரையும் திறன் - நீரில் கரையக்கூடியது.

  Isoleucine


  பயன்கள்.

  இது மனிதர்களில் தசைத்திசுக்களில் வலுவாக செயல்படுகிறது.

  மேலும் இது குருதியில் "ஹீமோகுளோபினை" உற்பத்திசெய்தல், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துதல், உடலில் காயம் ஏற்படும் பட்சத்தில் இரத்தம் உறையும் செயலை துரிதப்படுத்துதல், காயங்களை குணப்படுத்துதல், நோயெதிர்ப்பு சக்தியை தூண்டுதல், ஹார்மோன்களின் சுரப்பை தூண்டுதல் முதலிய பணிகளை செய்கிறது.

  மேலும் இது குளூக்கோஸையும், கீடோனையும் கொடுக்கக்கூடியது.

  அதிகமுள்ள உணவுப்பொருட்கள்.

  இறைச்சி, மீன், முட்டை, ஈரல் இவைகளில் உள்ளது. மேலும் பால்,  பாலாடைக்கட்டி, பாதாம், பயறு, பட்டாணி, பீன்ஸ்,  பருப்புவகை, முழுதானியங்கள் மற்றும் காய்கறிகளிலும் இவைகள் உள்ளன.

  முழுவளர்ச்சி அடைந்த மனிதர்களுக்கு தினந்தோறும் 1400 மில்லி கிராம் அளவு "ஐசோலியூசின்" தேவைப்படுகிறது.


  Tryptophan - டிரிப்டோபான்.

  பெயர் :- டிரிப்டோபான் [Tryptophan].

  வேறுபெயர்கள் :- 2-அமினோ-3-புரோபநோயிக் அமிலம்.

  மூலக்கூறு வாய்ப்பாடு :- C₁₁H₁₂N₂O₂

  மோலார் நிறை :- 204.22g / mol⁻¹

  உருகுநிலை :- 280⁰C.

  நீரில் கரையும் திறன் :- 0. 23 கி/லி - 0 ⁰C < > 27.95 கி/லி - 75 ⁰C.

  Tryptophan

  கரைதிறன்.

  இதற்கு சூடான ஆல்கஹாலில் கரையும் திறன் உண்டு. அதேபோல் கார ஹைட்ராக்சைடுகளிலும் கரையும். ஆனால் குளோரோபார்மில் கரைவதில்லை. மிதமான அளவில் நீரில் கரையும்.

  பயன்கள்.

  இது கரிம சேர்மங்கள் வகையை சேர்ந்தது. மிதமான அமில கலவை கொண்டது. இது உடல்வளர்ச்சிக்கு தேவையானதொரு அமினோ அமிலம். மூளையோடு சம்பந்தப்பட்ட அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தின் அனைத்து செயல்பாடுகளையும் துரிதப்படுத்துகிறது.

  பிறழ்வுபட்ட மனநிலையை சீராக்கும் திறன் இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. புரோஸ்டேட் திசுக்களில் இந்த அமினோஅமிலம்  காணப்படுவது இதன் சிறப்பம்சம். இரத்தம், உமிழ்நீர், சிறுநீர் இவைகளிலும் இது காணப்படுகிறது.

  உங்களுக்கு அமைதியான தூக்கம் வரவேண்டுமா?.. அதற்கு இதன் உதவி அவசியம். உங்கள் உடலில் ஏற்படும் அதிகப்படியான வலி உணர்ச்சிகளை  கட்டுப்படுத்துவதும் இதுவே. அதிகப்படியான வலி உணர்வு ஏற்படும்போது உங்களை மயக்கநிலைக்கு கொண்டுசெல்வதும் இதுவே. எனவே இது உங்கள் உடலில் இயற்கை மயக்க மருந்தாக செயல்படுகிறது.

  அதிகமுள்ள உணவுப்பொருட்கள்.

  கோழி, குறிப்பாக வான்கோழி, பன்றி இறைச்சி, மீன், முட்டை, சோயாபீன்ஸ், தீட்டப்படாத அரிசி, பால், பாலாடைக்கட்டி, டோஃபூ (டோஃபூ என்பது சோயா விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவித தயிர்), விதைகள் முதலியவைகளில் உள்ளது.

  முழுவளர்ச்சி அடைந்த ஒருவருக்கு தினந்தோறும் 280 மில்லி கிராம் அளவிற்கு "டிரிப்டோபான்" தேவைப்படுகிறது.

  Phenylalanine - பினைல்அலனின்.

  பெயர் :- பினைல் அலனின் [Phenylalanine].

  வேறுபெயர்கள் :- 2-அமினோ-3-பினைல் புரோபநோயிக் அமிலம்.

  மூலக்கூறு வாய்ப்பாடு :- C₉H₁₁NO₂

  மோலார் நிறை :- 165.19 g / mol⁻¹

  உருகுநிலை :- 283⁰C.

  கரையும் திறன் - மிதமான அளவில் நீரில் கரைகிறது.

  Phenylalanine


  பயன்கள்.

  இது கரிமசேர்ம வகையை சேர்ந்தது. மிதமான அமிலக்கலவையை கொண்டுள்ளது. பலவிதமான புரதங்கள் மற்றும் நொதிகளின் கட்டமைப்பிற்கு முக்கியமானது.

  உங்கள் உடலில் நரம்புமண்டலம் பிரமாதமாக வேலைசெய்ய வேண்டுமா? அப்படியென்றால் இந்த அமினோ அமிலம் அவசியம் தேவை. கற்கும் திறனை வளர்ப்பதற்கும், ஞாபக சக்தியை மேம்படுத்துவதற்கும் இது அவசியமாகிறது. 

  அட்ரீனல் சிறப்பாக வேலை செய்ய உதவுகிறது. மேலும் Parkinson's என்று சொல்லப்படும் நடுக்குவாதம் என்னும் நோய்க்கும் இதற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

  அதிகமுள்ள உணவுப்பொருட்கள்.

  மாடு, கோழி, பன்றி இறைச்சிகள், மீன், பால், வெண்ணெய், "டோஃபூ" என்று சொல்லப்படும் சோயாவிதை தயிர், சோயாபீன்ஸ், அவரை, வேர்க்கடலை, பாதாம், விதைகள், முழுதானியன்கள், காய்கறிகள் முதலிய உணவுகளிலும் அனைத்து வகையான பருப்பு வகைகளிலும் இது உள்ளது.

  முழுமையாக வளர்ச்சிப்பெற்ற நபர் ஒரு நாளைக்கு சராசரியாக 875 மில்லி கிராம் "பினைல்அலனின்" உட்கொள்ள வேண்டும்.


  Methionine - மெத்தியோனின்.

  பெயர் :- மெத்தியோனின் [Methionine].

  வேறுபெயர்கள் :- 2-அமினோ-4- (மெத்தில்தையோ) பியூட்டநோயிக் அமிலம். 

  மூலக்கூறு வாய்ப்பாடு :- C₅H₁₁NO₂S

  மோலார் நிறை :- 149.21 g / mol⁻¹

  அடர்த்தி :- 1.340 k/cm³. (1.178 at 68⁰ F).

  உருகுநிலை :- 280⁰C.

  கரையும் திறன் :- நீரில் கரையும் தன்மையுடையது.

  Methionine


  பயன்கள்.

  இது கந்தகத்தை (Sulphur) சேர்மமாக கொண்டுள்ள அமினோ அமிலம். வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. தோல், நகம் மற்றும் முடிகளின் வளர்ச்சிக்கும், அவைகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவி செய்கிறது. முடி உதிர்வதை தடுத்து நிறுத்துகிறது.

  உடல் வளர்ச்சி மற்றும் திசுக்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கு இது பயன்படுகிறது. செல்களை மேம்படுத்துவதுடன் உயிரணுக்களின் சோர்வு, வயோதிகத்தை நீக்கி சுறுசுறுப்பாக்குகிறது.

  உணவிலிருந்து "செலினியம்" மற்றும் "துத்தநாக" சத்துக்களை குடல்கள் உறிந்துகொள்ள உதவி செய்கிறது. உடலுக்கு தேவையில்லாத அதே வேளையில் உடலுக்கு மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் உலோக சத்துக்களான ஈயம், பாதரசம் முதலியவைகளை உடலிலிருந்து வெளியேற்றுகிறது.

  வளர்சிதை மாற்றத்தின்போது உடலில் அதிகப்படியான கொழுப்பு உருவாவதை தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதையும் தடுத்து நிறுத்துகிறது. சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதையும் தடுக்கிறது.

  மனசோர்வு, கீல்வாதம், நாள்பட்ட கல்லீரல் நோய், தலைமுடி நரைத்தல்  முதலியவைகளுக்கு இந்த அமினோ அமில குறைபாடு ஒரு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

  அதிகமுள்ள உணவுப்பொருட்கள்.

  வான்கோழி, மாடு, பன்றி இறைச்சிகள், மீன், முட்டை, உள்ளி, வெங்காயம், பீன்ஸ், பால், பாலாடைக்கட்டி, பருப்புவகைகள், "டோஃபூ" என்று சொல்லப்படும் சோயாவிதை தயிர் முதலியவற்றில் உள்ளன.

  ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு நபருக்கு 728 மில்லி கிராம் அளவு "மெத்தியோனின்" தேவைப்படுகிறது.

  Histidine - ஹிஸ்டிடின்.

  பெயர் :- ஹிஸ்டிடின் [Histidine].

  வேறுபெயர்கள் :- 2-அமினோ-3-(1Hஇமிடசோ-4-யில்) புரோபநோயிக் அமிலம்.

  மூலக்கூறு வாய்ப்பாடு :- C₆H₉N₃O₂ 

  மோலார் நிறை :- 155.15 g /mol.

  உருகுநிலை :- 287⁰ C.

  கரையும் திறன் - நீரில் 4.19 கி/ 100 கி > 25⁰C.

  Histidine


  பயன்கள்.

  உடல் வளர்ச்சி மற்றும் திசுக்களை பாதுகாக்க மனிதர்களுக்கு அவசியமான அமினோ அமிலம் இது எனலாம். நம் உடலில் நரம்பு செல்களை பாதுகாக்கும் "மெய்லின்" (myelin) உறைகளை பராமரிப்பது இதன் பொறுப்பு.

  இரைப்பை ஜீரண சுரப்பிகளை பராமரிப்பதோடு உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் தூண்டுகிறது. உடலில் இரத்த அணுக்களை உருவாக்குவதற்கும், பாலியல் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கும் இது தேவைப்படுகிறது.

  கதிர்வீச்சுகளால் திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உலோக சத்துக்களான ஈயம், பாதரசம் முதலியவைகளால் திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் நீக்குகிறது.

  உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருள்கள் ஏதாவது தவறுதலாக உடலுக்குள் நுழையும் பட்சத்தில் உடனடியாக உடலில் ஹிஸ்டிடின் அதிக அளவில் உருவாகி உடல் தன் எதிர்பை தெரிவிக்க செய்யும். இதனையே நாம் "அலர்ஜி வினை" (allergic reactions) என்கிறோம்.

  அதிகமுள்ள உணவுப்பொருட்கள்.

  ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் முதலிய இறைச்சி வகைகளிலும், முட்டை, பால், பாலாடைக்கட்டி, சோயாபீன்ஸ், விதைகள், முழுதானியங்கள் முதலியவைகளில் ஹிஸ்டிடின் அதிக அளவு உள்ளது.

  ஒரு சராசரி மனிதருக்கு ஒருநாளைக்கு 500 முதல் 700 மில்லி கிராம் "ஹிஸ்டிடின்' தேவைப்படுகிறது.

  குறிப்பு.

  இந்த அமினோ அமிலத்தால் உடலுக்கு பல நன்மைகள் இருந்தாலும் இது உடலில் தேவைக்கு அதிகமாக அதிகரிப்பதால் உடலுக்கு சில தீமைகளும் ஏற்படுகின்றன. ஹிஸ்டிடின் அதிகரிப்பால் இரு விதமான பிறவி நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றில் ஒன்று "இமிடசோல் அமினோ அமில யூரியா" (imidazole amino aciduria), மற்றொன்று "ஹிஸ்டிடினீமியா".

  "இமிடசோல் அமினோ அமில யூரியா" என்னும் நோயினால் பாதிக்கப்படுபவர்களின் பெருமூளையின் இரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்படும். அதுமட்டுமல்ல சிறுநீரில் அதிக அளவு ஹிஸ்டிடின், கார்னோசின் மற்றும் ஆன்செரின் மீதைல் ஹிஸ்டிடினும் வெளிப்படும்.

  அதேபோல் "ஹிஸ்டிடினீமியா" என்பது இரத்தத்தில் "ஹிஸ்டிடின்" அளவு அதிகரிப்பதை குறிக்கிறது. இதனால் சிறுநீரில் அதிக அளவு "இமிடசோல் பைரூவிக் அமிலம்" வெளிப்படும். இது நாம் சரளமாக பேசும் தன்மையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

  இதுவரை ஒன்பது வகையான அமினோ அமிலங்களைபற்றி விரிவாக பார்த்துள்ளோம்.

  மேலும், மனித உடலுக்கு தேவைப்படுகின்ற அதேவேளையில் மேற்குறிப்பிட்ட ஒன்பதுவகையான அமினோ அமிலங்களின் துணையுடன் நம் உடலே சுயமாக உற்பத்தி செய்துகொள்ளும் தன்மை வாய்ந்த "Nonessential Amino Acidsவகை அமினோ அமிலங்களான :-

  • Alanine
  • Aspartic acid
  • Asparagine
  • Glutamic acid
  • Serine
  • selenocysteine
  • Arginine
  • Cysteine
  • Glutamine
  • Glycine
  • Proline
  • Tyrosine

  முதலிய 12 வகை அமினோ அமிலங்களைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்ள... இக்கட்டுரையின் அடுத்தப்பகுதியான Part 3 க்கு செல்ல கீழே உள்ள லிங்க் - ஐ கிளிக் செய்யுங்கள்.


  💝 💝 💝 💝 💝 💝 💝

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  4 கருத்துகள்

  1. அனைத்தும் உட்கொள்கின்றோமா தெரியவில்லை... தகவல்கள் பயனுள்ளவை....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தகவல்கள் பயனுள்ளதாக அமைந்ததில் மகிழ்ச்சி நண்பரே !!!

    நீக்கு
  2. தெளிவான விளக்கம்..நன்றி

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருக... வருக!! தங்களின் வருகைக்கும், தங்களின் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி நண்பரே...

    நீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.