அமினோ அமிலங்கள் - புரதம் - Amino Acids - Serine - Protein.

அமினோ அமிலங்கள்.

புரதங்கள்.

[Part - 4]

அமினோ அமிலங்கள் - Amino Acids என்னும் இத்தொடர் பதிவில் புரதத்தைப்பற்றியும் அதன் அடிப்படை உள்கட்டமைப்பான அமினோ அமிலங்களைப்பற்றியும் தொடர்ந்து பார்த்துவருகிறோம்.

இத்தொடரில் இது நான்காவது பகுதி. தொடரின் முதல் பகுதியை படிக்க கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

>> அமினோ அமிலங்கள் - புரதம் - Amino Acids - Valine - Protein. <<

  நம் உடலின் பெரும்பகுதி புரதங்களினால் ஆனது. பலவகையான அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து உருவாகும் தொகுதியையே நாம் "புரதம்" (protein) என்று குறிப்பிடுகிறோம்.

  Amino Acids - Protein.

  இந்த புரதமானது பலவகையான அமினோ அமிலங்களால் ஆனது. அமினோ அமிலத்துடன் கார்பன் அணுக்கள், ஹைட்ரஜன் அணுக்கள், கார்பாக்சைல் தொகுதிகள் மற்றும் மாறிலி வேதிவினைக்குழுக்கள் இத்தனையும் சேர்ந்து ஒரு சங்கிலிதொடராக பிணைக்கப்படும்போது அது புரோட்டீனாக உருவகம் பெறுகிறது. அமினோ அமிலம் என்பது அமைன் (-NH₂) மற்றும் கார்பாக்சைல் (-COOH ) வேதிவினை குழுக்களைக்கொண்ட ஒரு மூலக்கூறு.

  கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் முதலானவைகள் ஆக்சிஜனேற்றம் மூலம் உடலுக்கு தேவையான சக்தியை அவ்வப்போது கொடுப்பதைப்போல  இந்த புரதங்கள் கொடுப்பதில்லை.

  மாறாக, இக்கட்டான சூழ்நிலைகளில், நாம் உணவில்லாமல் பலநாட்கள் தொடர்ந்து பட்டினி இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் இந்த புரதமானது தன்னுடைய அமினோ அமிலங்களிலிருந்து குளுகோஸ்-ஐ தொகுத்து நம் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கவல்லது. இவ்வாறு ஆபத்து காலங்களில் கைகொடுத்து உதவும் கருணாமூர்த்தியாக புரதம் விளங்குகிறது என்றால் அது மிகையில்லை.

  அவ்வாறு குளுக்கோஸாக மாற்றமடையும் அமினோ அமிலங்களை குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமென்றால் Valine, Threonine, Methionine, Histidine, Aspartic acid, Glutamic acid, Serine, Arginine, Cysteine, Glycine, Proline ஆகியவைகளை குறிப்பிடலாம்.

  இதுவரையில் பலநூறு வகையான அமினோ அமிலங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்றாலும் மனித உடலுக்கு 21 வகை அமினோ அமிலங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.

  அவையாவன :-

  TAMIL ENGLISH
  வாலின் Valine
  லைசின் Lysine
  திரியோனின் Threonine
  லியூசின் Leucine
  ஐசோலியூசின் Isoleucine
  டிரிப்டோபான் Tryptophan
  பினைல்அலனின் Phenylalanine
  மெத்தியோனின் Methionine
  ஹிஸ்டிடின் Histidine
  அலனைன் Alanine
  அஸ்பார்டிக் அமிலம் Aspartic acid
  அஸ்பரஜின் Asparagine
  குளூட்டாமிக் அமிலம் Glutamic acid
  செரைன் Serine
  ஆர்ஜினின் Arginine
  சிஸ்டீன் Cysteine
  குளூட்டமின் Glutamine
  கிளைசின் Glycine
  புரோலின் Proline
  டைரோசின் Tyrosine
  செலீனோசிஸ்டீன் Selenocysteine

  இந்த 21 வகையான அமினோஅமிலங்களையும் அதன் தேவைகளை பொறுத்து இரு பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். அதில் 9 வகையான அமினோ அமிலங்களை "Essential Amino Acids" என்றும் மீதி 12 வகையான அமினோ அமிலங்களை "Nonessential Amino Acids" என்றும் வகைப்படுத்துகின்றனர்.

  இதில் Nonessential Amino Acids 12 வகையான அமினோ அமிலங்களை நம்முடைய உடலே தசை திசுக்கள் மற்றும் கல்லீரலில் நடக்கும் வேதிவினைகளின் மூலமாக சுயமாக தயாரித்துக்கொள்கின்றன. மீதி 9 வகையான அமினோ அமிலங்களான "Essential Amino Acids" களை சுயமாக உருவாக்கும் திறன் நம் உடலுக்கு இல்லை. இந்த வகை புரதங்களை உருவாக்கும் திறன் தாவரங்களுக்கு மட்டுமே உள்ளதால் தாவரவகை உணவுகளின் மூலமாகவோ அல்லது அந்த தாவரங்களை உண்பதால் உடலில் சேமித்து வைத்திருக்கும் உயிரினங்களின் உடலிலிருந்தோதான் இவைகளை பெறமுடியும்.

  Eassential வகையான புரதங்களை part 1 மற்றும் part 2 வில் விரிவாக பார்த்தோம். அதுபோல் Nonessential வகை அமினோஅமிலங்கள் சிலவற்றை பற்றி part 3 யில் விரிவாக கண்டோம். இப்பகுதியில் மேலும் சில Nonessential வகை அமினோ அமிலங்களைப்பற்றி விரிவாக காண்போம்.


  Nonessential Amino Acids.

  செரீன் - Serine.

  பெயர் :- செரீன் - Serine.

  வேறுபெயர்கள் :- 2-Amino -3-hydroxypropanoic acid.

  வேதியியல் வாய்ப்பாடு :- HO₂CCH(NH₂)CH₂OH.

  மூலக்கூறு வாய்ப்பாடு :- C₃H₇NO₃

  மோலார் நிறை :- 105.09 g /mol⁻¹

  அடர்த்தி :- 1.603 g /cm³ (22 ⁰C ).

  கரையும் திறன் :- நீரில் கரையும் திறன் கொண்டது.

  தன்மை.

  "கிளைசின்" என்னும் அமினோ அமிழ்த்திலிருந்து "செரீனை" எளிதாக உருவாக்கிவிட முடியும் அதுபோல செரீனிலிருந்தும் எளிதாக கிளைசினை உருவாக்கிவிட முடியும். இவையிரண்டுமே உடலில் சக்திகுறையும்போது கல்லீரலில் நடைபெறும் நீர் நீக்க வினையால் அமினோ தொகுதி நீக்கப்பட்டு பைருவீக் அமிலமாக மாறி பைருவீக் அமிலத்தொகுப்பிலிருந்து உடலுக்கு தேவையான குளுக்கோஸை கொடுக்கிறது.

  இக்கட்டான சூழ்நிலைகளில் இது குளுக்கோஸாக மாறி உடலுக்குத்  தேவைப்படும் சக்தியை கொடுப்பதால் இது குளுக்கோஸ் கொடுக்கும் அமினோ அமிலம் என அழைக்கப்படுகிறது.  

  பயன்கள்.

  புரத தொகுப்பிற்கு மிகவும் தேவையான அமினோ அமிலம் இது. உடலுக்கு சக்தியை கொடுப்பது. இதனால் தொடர்ந்து உடல் பட்டினி கிடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் செரீன் உடலுக்கு தேவையான சக்தியை கொடுத்து உதவுகிறது.

  ஆர்ஜினின் - Arginine.

  பெயர் :- ஆர்ஜினின் - Arginine.

  வேறுபெயர்கள் :- (S)-2-அமினோ-5-குவானிடினோ பென்டநோயிக் அமிலம். 

  மூலக்கூறு வாய்ப்பாடு :- C₆H₁₄N₄O₂

  மோலார் நிறை :- 174.20 g / mol⁻¹

  உருகுநிலை :- 224 ⁰C.

  கரையும் திறன் :- 182 mg /mL. (25 ⁰C).


  Arginine

  தன்மை.

  இது காரத்தன்மையுள்ள அமினோ அமிலம் எனலாம். நம்முடைய உடலே இதனை உற்பத்திசெய்கிறது என்றாலும் அது சில நேரங்களில் போதுமானதாக இருப்பதில்லை. எனவே இதனை உணவின்மூலமாக எடுத்துக்கொள்வதும் மிக அவசியம்.

  பயன்கள்.

  நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. சோர்வு மற்றும் மன அழுத்தத்தை அகற்றுகிறது. இருதயத்தின் ஆரோக்கியத்தை கட்டிக்காப்பதுடன் நாளங்களில் நெகிழ்வு தன்மையையும் அதிகரிக்கிறது.

  நரம்பு மற்றும் திசுக்களின் மீளுருவாக்கத்திற்கு உதவுகிறது. கொழுப்பை கட்டுப்படுத்துகிறது, தசைவளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பெருங்குடல் அழற்சிகளை தடுத்து நிறுத்துகிறது.

  மேலும் இது விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு விறைப்பு தன்மையையும் பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆண்மைக்குறைவை நீக்குவதோடு விந்தணுக்களை சுறுசுறுப்பாக இயங்கச் செய்கிறது. இதனால்  கருவுறும் தன்மை அதிகரிக்கிறது.

  விறைப்புத்தன்மையை அதிகரிப்பதில் "வயாக்ராவே" தோற்றுப்போகும் அளவிற்கு இது இயற்கையானதொரு வயாக்ரா போலவே செயல்படுகிறது.

  உங்கள் மூளையிலுள்ள "பிட்யூட்டரி" சுரப்பி மற்றும் "தைமஸ்" சுரப்பிகள்  குறைபாடு இல்லாமல் இயங்கவேண்டுமா. அப்படியெனில் இந்த அமினோ அமிலம் உங்கள் உடலில் போதிய அளவில் இருக்கவேண்டியது மிக அவசியம்.

  அதிகமுள்ள உணவுப்பொருட்கள்.

  நம் உடலே இந்த அமினோஅமிலத்தை உற்பத்திசெய்கிறது என்றாலும் வயாக்ரா அனுபவங்களை பெறவேண்டுமெனில் உணவின்மூலமாகவும் இதனை எடுத்துக்கொள்வது அவசியம்.

  பன்றி இறைச்சி மற்றும் கோழி இறைச்சிகளில் இது அதிக அளவில் உள்ளது என்றாலும் இறைச்சிகளை சூடுபடுத்தும்போது வெப்பத்தினால் ஆர்ஜினின் பெருமளவில் அழிந்துபோகிறது. இறைச்சிகளை வேகவைக்காமல் சாப்பிடுவது மிகவும் ஆபத்து என்பதால் இறைச்சிகளிலுள்ள "ஆர்ஜினின்" நமக்கு அவ்வளவாகப் பயன்படுவதில்லை.

  இதற்கு மாறாக அக்ரூட், பைன் கொட்டைகள் (Pine nuts) மற்றும் முந்திரிப்பருப்புகளை அடிக்கடி சாப்பிடுவதின்மூலம் இதனை பெறலாம். அனைத்து வகையான கொட்டை சார்ந்த பருப்புகளிலும் ஆர்ஜினின் உள்ளது என்னும் தகவல் நமக்கு சிறிது ஆறுதலளிப்பதாக உள்ளது.


  சிஸ்டீன் - Cysteine.

  பெயர் :- சிஸ்டீன் - Cysteine.

  வேறுபெயர்கள் :- 2-அமினோ-3-மெர்காப்டோ புரோபநோயிக் அமிலம்.

  மூலக்கூறு வாய்ப்பாடு :- C₃H₇NO₂S

  மோலார் நிறை :- 121.15 g /mol⁻¹

  கரையும் திறன் :- நீரில் கரையும் தன்மையுடையது.


  cysteine

  பயன்கள்.

  இது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் மிக முக்கியமானதொரு அமினோ அமிலம். விலங்குகளின் உரோமங்கள், தோல்கள், குளம்புகள் இவைகளிலுள்ள புரதங்களில் மிக முக்கிய இடத்தைப்பிடித்திருப்பது இந்த சிஸ்டீன்தான்.

  விலங்குகளுக்கு மட்டுமல்ல மனிதர்களின் உரோமங்கள், தோல்களிலும் இந்த அமினோ அமிலம் அதிகளவில் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தில் மிக முக்கிய பங்குவகிப்பது. 

  குறிப்பு.

  "அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" என்பார்கள். அதுபோல இந்த அமினோ அமிலம் உடலுக்கு அதிக அளவில் நன்மை செய்தாலும், இது உடலில் அதிகரித்தாலோ அல்லது இதனால் ஏற்படும் குளறுபடியான வளர்ச்சிதை மாற்றத்தாலோ மூன்று விதமான பிறவி நோய்கள் ஏற்படுகின்றன. அவை.

  1. சிஸ்டீன்-லைசின் யூரியா.
  2. சிஸ்டினோசிஸ்.
  3. ஹோமோசிஸ்டின் யூரியா.

  இதில் "சிஸ்டீன்-லைசின் யூரியா" என்னும் நோய் பாதிப்பால் சிஸ்டின், லைசின், ஆர்ஜினின், ஆர்னிதின், ஐசோலியூசின் ஆகிய அமினோ அமிலங்கள் சிறுநீர்வழியாக அதிக அளவில் வெளியேறுகின்றன. மேற்குறிப்பிட்ட பொருட்களில் நீரில் கரையும்திறன் சிஸ்டீனிற்கு குறைவு என்பதால் சிறுநீர் தாரைகளில் சிஸ்டீன் கற்களாக உருவாகும் வாய்ப்பு அதிகம். இதனால் சிறுநீர்கழிப்பதில் அதிக சிரமம் ஏற்படலாம்.

  இதனால் ஏற்படும் மற்றொரு நோயான "சிஸ்டினோசிஸ்" எதனால் ஏற்படுகிறதென்றால் உடலுறுப்புகளிலும், தசைகளிலும் தேவையே இல்லாமல் அதிக அளவில் சிஸ்டீன் சேமித்து வைக்கப்படுவதால் ஏற்படுகிறது. இதனால் சிறுநீர்வழியாக அதிக அளவில் சிஸ்டீன் மட்டுமல்லாது இன்னும் பலவித அமினோஅமிலங்கள் அதிக அளவில் வெளியேறும். சிஸ்டீன்-லைசின்  யூரியாவைவிட இந்த "சிஸ்டினோசிஸ்" என்னும் நோயே உடலுக்கு அதிக அளவில் தீங்குவிளைவிப்பது.

  சிஸ்டீன் வளர்ச்சிதை குளறுபடிகளால் ஏற்படும் மூன்றாவது நோய்  "ஹோமோசிஸ்டின் யூரியா". இந்த நோயானது முன்பே நாம் பார்த்த மெத்தியோனின் என்னும் அமினோ அமிலத்தோடு சம்பந்தப்பட்டது எனலாம். 

  சிஸ்டாதயோனின் தொகுப்பி (cystathionine synthetase) உயிர் வினையூக்கியின் குறைபாடே இந்நோய்க்கான அடிப்படை காரணம். இதனால் அதிக அளவு ஹோமோசிஸ்டினும், மெத்தியோனினும் இரத்தத்தில் தேங்கும். அதுமட்டுமல்ல சிறுநீர்வழியாகவும் அதிகஅளவில் ஹோமோசிஸ்டின் வெளியேறும்.

  இந்நோயால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் குழந்தைகளின் மனவளர்ச்சி குன்றிவிடும். கண்களிலுள்ள லென்ஸ் பகுதி வழக்கமான இடத்திலிருந்து சற்று விலகி பார்வைக் கோளாறுகளையும் ஏற்படுத்தி விடும்.

  குளூட்டமின் - Glutamine.

  பெயர் :- குளூட்டமின் - Glutamine.

  வேறுபெயர்கள் :- 2-அமினோ-4-கார்பமோயில் பியூட்டநோயிக் அமிலம்.

  மூலக்கூறு வாய்ப்பாடு :- C₅H₁₀N₂O₃

  மோலார் நிறை :- 146.15 g / mol⁻¹.

  அடர்த்தி :- 1.364 g /cu cm.

  உருகுநிலை :- 185 ⁰C.

  கரையும் திறன் :- நீரில் கரையும் தன்மையுடையது. 41.3 mg /mL. (25 ⁰C).


  Glutamine

  தன்மை.

  இது குளூட்டாமிக் அமிலத்தின் வேதிவினைக்குழுவை சேர்ந்த சேர்மமாகும். எனவே இது குளூட்டாமிக் அமிலத்தின் அமைடு என அழைக்கப்படுகிறது. இது வெப்பத்தினால் பாதிக்கப்படும் ஒரு அமினோ அமிலமாகும். குளூட்டாமின் உள்ள உணவுப்பொருள்களை அதிகநேரம் வெயிலில் வைத்திருந்தால் அதிலுள்ள குளூட்டாமின் அழிந்துபோகும் வாய்ப்பு அதிகம்.

  பயன்கள்.

  இரைப்பை மற்றும் குடலிலுள்ள கோளாறுகளை நீக்குகிறது. குடலின் உறிஞ்சும் திறமையை அதிகரிக்கிறது. மேலும் சிறுநீரக செயல்பாட்டிற்கும் மிக முக்கியமானது. சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் துணைசெய்கிறது.

  முக்கியமாக மனஅழுத்தத்தை நீக்குவதில் முனைப்புடன் செயல்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உடலிலுள்ள அமிலங்களின் நிலைத்தன்மையை நிலைநிறுத்துகிறது. கீல்வாத நோயையும் நீக்குகிறது.

  குறிப்பு.

  இந்த அமிலமானது உடலில் குறைந்தால் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமடைவதுடன் நரம்பு மண்டலங்களில் பிரச்னைகள் ஏற்படலாம். உடலும் சோர்வடையலாம்.

  ஆரோக்கியமான மனிதர் ஒருவருக்கு தினந்தோறும் 10 கிராம் அளவு குளூட்டமின் தேவைப்படுகிறது. இந்த அளவு  குறையும் பட்சத்தில் குடல்களில் சத்துக்களை உறிஞ்சும் தன்மை குறையும்.

  அதிகமுள்ள உணவுப்பொருட்கள்.

  பால், தயிர், பாலாடைக்கட்டி, சோயா, கோதுமை முதலியவைகளில் போதிய அளவு உள்ளது.


  கிளைசின் - Glycine.

  பெயர் :- கிளைசின் - Glycine.

  வேறுபெயர்கள் :- அமினோ எதநோயிக் அமிலம், அமினோ அசெடிக் அமிலம்.

  கண்டுபிடிப்பாளர் :- "ஹென்றி பிரகோன்னாட்' என்னும் பிரெஞ்சு வேதியலாளர் 1820 ல் இதனை கண்டறிந்தார்.

  மூலக்கூறு வாய்ப்பாடு :- C₂H₅NO₂

  மோலார் நிறை :- 75.07

  அடர்த்தி :- 1.1607 g /cm³


  Glycine

  கரையும் திறன் :- 24.99 கி /100 மிலி. (25 ⁰C ) நீரில் கரையும். ஆனால் எத்தனால் மற்றும் ஈதரில் கரைவதில்லை.

  தன்மை.

  இது ஒரு கரிமசேர்மம் ஆகும். செரின் அமினோ அமிலத்திலிருந்து நம்முடைய உடலே உயிர்வேதியியல் முறையில் கிளைசினை உருவாக்கிக்கொள்கிறது. எனவே உணவின் மூலமாகவே இதனை பெறவேண்டும் என்கின்ற அவசியமில்லை.

  பயன்கள்.

  இது உடலுக்கு மிக மிக அவசியமானதொரு அமினோஅமிலம். குறிப்பாக இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இது மிகவும் துணை நிற்கிறது. மேலும் பியூரின், நியூக்கிளியோடைடுகள், குளூடாதயோன், கிரியாடின் ஆகியவை உருவாகுவதற்கும் இதன் பங்களிப்பு மிக அவசியம்.

  இதனை எளிதாக செரீனாக மாற்ற முடியும் என்பதால் இக்கட்டான சூழ்நிலைகளில் அதாவது உணவில்லாமல் பட்டினி இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் தருவாயில் இது செரீனாக மாறி பைரூவிக் அமிலத்தை தருகிறது. இந்த பைரூவீக் அமிலம் குளுக்கோஸ் தொகுப்பின்மூலம் உடலுக்கு குளுக்கோஸை அளித்து சக்தியை கொடுக்கிறது.

  குறிப்பு.

  சிலருக்கு அரிதாக கிளைசின் சிறுநீர் வழியாக வெளியேறலாம். இதனை "கிளைசின் யூரியா" என அழைக்கின்றனர். இதனால் சிறுநீர் குழாய்களில் ஆக்சலேட் கற்கள் உருவாகி சிறுநீர் கழிக்கும்போது அதிக அளவு வலியை ஏற்படுத்தும். மேலும் சிறுநீர்ப்பதையில் நுண்ணுயிர் தொற்றும்  (infection) ஏற்படலாம். இது மிகவும் அரிதான நோய். சிலருக்கு பிறவியிலேயே இந்த நோய் ஏற்படலாம். மேலும் வைட்டமின் B₆ உடலில் போதிய அளவு இல்லையென்றாலும் ஆக்சலேட் உருவாகலாம்.

  புரோலின் - Proline.

  பெயர் :- புரோலின் - Proline.

  வேறுபெயர்கள் :- பிரோலிடின்-2-கார்பாக்சிலிக் அமிலம்.

  மூலக்கூறு வாய்ப்பாடு :- C₅H₉NO₂

  மோலார் நிறை :- 115.13 g /mol⁻¹

  அடர்த்தி :- 1.064. (24 ⁰C).

  உருகுநிலை :- 221 ⁰C.

  கரையும் திறன் :- 162 g (25 ⁰C).


  Proline

  தன்மை.

  இதனை நம் உடலே கல்லீரலிலுள்ள ஆர்னிதின் (ornithine), குளூட்டமைன் (glutamine) மற்றும் குளுட்டமேட் (glutamate) ஆகியவைகளிலிருந்து தயாரித்துக்கொள்கிறது. 

  பயன்கள்.

  இரத்த அழுத்தத்தை சமன்படுத்துதல், கொலாஜன் உருவாக்கம் மற்றும் உடல் திசுக்களை உற்பத்தி செய்வதுடன் அதனை பழுது நீக்கும் வேலைகளையும் செய்கிறது. மேலும் மூட்டுகள் மற்றும் முதுகெலும்புகளை பராமரிக்கும் பணியையும் செய்கின்றன.

  சரும ஆரோக்கியத்தையும், சரும அழகையும் மேம்படுத்துகிறது. தோல்கள் மென்மையாகின்றன. உங்களின் வயதான தோற்றம் தள்ளிப்போடப்படுகிறது.

  உடல்காயங்களை விரைவாக ஆற்றுகிறது. தீக்காயங்களை சரி செய்வதிலும் இதனுடைய பங்கு மிக அதிகம்.

  குறிப்பு.

  இந்த அமினோ அமிலம் உடலில் குறைந்தால் உடலில் ஏற்படும் காயங்கள் குணப்படுவதற்கு அதிககாலம் எடுத்துக்கொள்ளும். அதுமட்டுமல்லாது உடலிலுள்ள மென்மையான திசுக்கள் காரணமேயில்லாமல் பாதிப்புக்குள்ளாகும் நிகழ்வும் ஏற்படும். ஆனால் இந்த அமினோ அமிலம் உடலில் குறைவதற்கான வாய்ப்பு குறைவு. ஏனெனில் அனைத்து உணவு பொருள்களிலும் இது தேவையான அளவில் உள்ளது.

  அதிகமுள்ள உணவுப்பொருட்கள்.

  பால், இறைச்சி, சோயாபீன்ஸ் முதலியவைகளில் நிறையவே உள்ளது.


  டைரோசின் - Tyrosine.

  பெயர் :- டைரோசின் - Tyrosine.

  வேறுபெயர்கள் :- 2-அமினோ-3-(-4-ஹைடிராக்சி பினைல்) புரோபநோயிக் அமிலம்.

  மூலக்கூறு வாய்ப்பாடு :- C₉H₁₁NO₃

  மோலார் நிறை :- 181.19 g/ mol⁻¹

  உருகுநிலை :- 344 ⁰C.

  கரையும் திறன் :- 479 mg /L (25⁰C).

  பயன்கள்.

  இது உடலுக்கு மிகவும் அவசியமானதொரு அமினோஅமிலம் என்றே கூறவேண்டும். காரணம் இந்த அமினோ அமிலத்திலிருந்துதான் நம் உடலிலுள்ள நாளமில்லா சுரப்பிகளுக்கு தேவையான தைராக்சின் (thyroxine) எபிநெஃப்ரின் (epinephrine) முதலான ஹார்மோன்கள் கிடைக்கப்பெறுகின்றன. பிட்யூட்டரி, தைராய்டு மற்றும் அட்ரீனல் முதலான சுரப்பிகள் வேலை செய்ய டைரோசின் மிக அவசியம்.

  மேலும் நரம்பு மண்டலம், வளர்ச்சிதை மாற்றம் முதலியவைகளை ஒழுங்குபடுத்துகிறது. மனசோர்வு, மன அழுத்த பிரச்சனைகளை சீராக்குகிறது. மூளையிலுள்ள செரோடோனின் அளவை உயர்ந்த இது உதவுகிறது.

  வலி உணர்திறன் மற்றும் பசியை கட்டுக்குள் வைத்துக்கொள்ள மூளைக்கு பயன்படும் வேதிப்பொருட்களை தயாரித்துக்கொள்ள உடலுக்கு டைரோசின் அவசியம் தேவை.

  குறிப்பு.

  டைரோசின் உடலில் குறைந்தால் அது சிலவித பாதிப்புகளை உடலில் ஏற்படுத்தலாம். குறிப்பாக வளர்ச்சிதைமாற்ற குறைபாடு, சோர்வு, குறைந்த இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல், வறண்ட தோல்கள், மலச்சிக்கல் முதலியன ஏற்படும். மேலும் நகங்கள், உரோமங்கள் முதலியன வலுவிழந்து உடையும் தன்மையையும் பெறும்.

  அதிகமுள்ள உணவுப்பொருட்கள்.

  நம் உடலே வேதிவினைகளின் மூலமாக இந்த அமினோ அமிலத்தை உற்பத்திசெய்து கொள்கிறது என்றாலும் உணவின் மூலமாகவும் இதனை பெற முடியும். பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய், தயிர், சோயா, பாதாம், கோழி இறைச்சி, மீன் மற்றும் வாழை பழங்களிலும் உள்ளன.


  Tyrosine - Selenocysteine.

  செலீனோசிஸ்டீன் - Selenocysteine.

  பெயர் :- செலீனோசிஸ்டீன் - Selenocysteine.

  பெயர்க்காரணம் :- சிஸ்டீன் என்னும் அமினோ அமிலத்தின் கட்டமைப்பினை கொண்டுள்ளது. ஆனால் கந்தகத்திற்கு பதிலாக இது "செலீனியம்" அணுவை கொண்டுள்ளதால், இதற்கு "செலீனோசிஸ்டீன்" என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

  வேறுபெயர்கள் :-  3-செலனைல்-2-அமினோ புரோபநோயிக் அமிலம்.

  மூலக்கூறு வாய்ப்பாடு :- C₃H₇NO₂Se

  மோலார் நிறை :- 168.07 g/mol⁻¹

  உருகுநிலை :- 146 ⁰C.

  கரையும் திறன் :- 392 gm/L (0 ⁰C).

  தன்மை.

  மனிதர்களுக்கு தேவைப்படும் அமினோ அமிலங்களில் இது 21 வது அமினோ அமிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. செலினியம் மனித உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான பொருள். இது பல்வேறு வினையூக்கிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இது பரவலாக அனைத்து விலங்குகளிலும் காணப்படுகின்றன.

  ஆனால், பூஞ்சைகளில் மட்டும் இது காணப்படாதது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை அளித்தது. இதுபற்றி தொடர்ந்து ஆராய்ச்சியை விரிவுபடுத்திய விஞ்ஞானிகளுக்கு சமீபத்திய சில ஆய்வுகள் ஆச்சரியக்குறிக்கு அடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஒருசிலவகை புஞ்சைகளிலும் இந்த அமினோ அமிலம் இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளனர்.

  பயன்கள்.

  செல்களின் வளர்சிதை மாற்றத்தில் இது முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளன. மூளை வளர்ச்சியிலும் அதன் செயல்பாட்டிலும் முக்கிய இடத்தை வகிக்கிறது. மேலும் இதைப்பற்றிய விரிவான தகவல்களை  அறியும்பொருட்டு பல்வேறுபட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

  💢💢💢💢

  இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


  கருத்துரையிடுக

  4 கருத்துகள்

  1. பள்ளிப்பாடம் நினைவு வந்தது சகோ. இப்படி விரிவாகப் படிக்கவில்லை என்றாலும்.
   கண்டிப்பாக இது பல மாணவர்களுக்குப் பயனுடையதாக இருக்கும். என்னைப் போல 10 ஆம் வகுப்பு வரை தமிழ்ல் பயின்றுவிட்டு 11ல் ஆங்கிலக் கல்விக்கு மாறும் மாணவர்களுக்குத் தமிழில் படித்துப் புரிந்து ஆங்கிலத்தில் புரிந்து கொண்டு எழுத வசதியாக இருந்திருக்கும். எனக்கு அப்போது இப்படிக் கிடைக்கவில்லையே என்றும் தோன்றுகிறது.

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நன்றி சகோதரி ! இப்பதிவு தற்போது தங்களுக்கு பயனுடையதாக அமைந்ததில் மகிழ்ச்சி !! தங்களின் ஆழமான கருத்துகளுக்கு நன்றி !!!

    நீக்கு
  2. ஒவ்வொன்றின் பயன்களும் விளக்கங்களும் மிகவும் அருமை...

   பதிலளிநீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.