"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
ஹெலிகோனியா கோலின்சியானா - Heliconia collinsiana.

ஹெலிகோனியா கோலின்சியானா - Heliconia collinsiana.

ஹெலிகோனியா கோலின்சியானா.

Collinsiana.

          அழகிய மலர்களை மலரச்செய்யும் "ஹெலிகோனிய" வகை தாவரங்களைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.

ஹெலிகோனியா இனங்களில் இதுவரை சுமார் 200 க்கும் மேற்பட்ட வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் விதவிதமான விதங்களில் மலர்களை மலரச்செய்பவை. அதில் பிரமிப்பான ஒரு மலரை தருவதுதான் நாம் இப்போது பார்க்கப்போகும் "கோலின்சியானா" என்னும் தாவரம்.

collinsiana.


  Heliconia collinsiana.

  இந்த இனம் அதன் கவர்ச்சியான மலர்களால் மிகப்பிரபலமான அலங்கார மலர்களை தரும் தாவர இனமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ள செய்துள்ளது.

  "கோலின்சியானா" (collinsiana) என்னும் இந்த ஹெலிகோனிய வகை தாவரம் கிட்டத்தட்ட நம்முடைய வாழைமரத்தைப் போன்றே தோற்றம் கொண்டவை. அதைப்போலவே உயரமாக வளரும் தன்மைகொண்டவை. அதிகப்படியாக 10 முதல் 15 அடி உயரம்வரை வளரும் இயல்புடையது. 

  என்னாது, .. 

  பதினைந்து அடி உயரம்வரை வளருமா?!

  அம்மாடியோவ் .. அப்படியென்றால்  இதனை வளர்ப்பதற்கு உங்களிடம் போதிய அளவு நிலப்பரப்பு இல்லையே என்று கவலைப்படுகிறீர்களா?..

  உங்கள் கவலையை அப்படியே மூட்டைகட்டி ஒரு ஓரமாக வையுங்கள். ஏனென்றால் இதனை நீங்கள் கொஞ்சம் பெரிய அளவில் உள்ள  பூந்தொட்டிகளில்கூட வளர்க்கலாம். உங்கள் வீட்டு மாடிகளில்கூட கோலின்சியானா வளரும் மலரும். விரலுக்கேற்ற வீக்கம் என்பதுபோல பூந்தொட்டிக்கேற்ப தன் உயரத்தை குறுக்கிக்கொள்வதோடு மிக அழகாக பூத்துகுலுங்கவும் தயக்கம் கொள்வதில்லை.

  இந்த "ஹெலிகோனியா கோலின்சியானா" - Heliconia collinsiana. போலவே "ஹெலிகோனியா கொல்காண்டியா" - Heliconia colgantea என்று மற்றொரு இனமும் உள்ளது. இரண்டும் பார்வைக்கு ஓரளவு ஒத்துப்போகின்றன என்றாலும் சிற்சில வேறுபாடுகளின் காரணமாக தனித்தனி இனங்களாக இனங்காணப்பட்டுள்ளன.

  சரி, இனி இதனைப்பற்றிய பிற விபரங்களைப்பற்றி கொஞ்சம் விரிவாக  பார்ப்போம்.

  Heliconia collinsiana Flower

  அடிப்படை விபரங்கள்.

  தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா கோலின்சியானா - Heliconia collinsiana ["கோலின்சியானா" என்பது லத்தீன் மொழியிலுள்ள ஒரு சொல்].

  பொதுவான பெயர் :- ஆங்கிலத்தில் "hanging heliconia" (தொங்கும் ஹெலிகோனியா) என்றும், ஸ்பானிஷ் மொழியில் "heliconia colgante" என்றும் அழைக்கப்படுகிறது.

  பிரிவு :- தாவரம் - Plant.

  துணைபிரிவு :- Tracheobionta.

  தாவர பிரிவு :- பூக்கும் விதை தாவரங்கள் - Angiosperms.

  தாயகம் :-  மத்திய மற்றும் தென் அமெரிக்க பகுதிகளை தாயகமாகக்  கொண்டது.

  குடும்பம் :- ஹெலிகோனியேசியே (Heliconiaceae).

  பேரினம் :- ஹெலிகோனியா - Heliconia.

  இனம் :- கோலின்சியானா - Collinsiana

  வரிசை :- Zingiberales.

  பருவநிலை :- வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல தாவரமாகும்.

  வாழிடம் :- ஈரப்பதம் நிரம்பிய வெப்பமண்டல மழைக்காடுகள்.

  மெக்ஸிகோவின் சியாபாஸ் (Chiapas), ஓக்சாக்கா (Oaxaca), Guerrero (குரேரோ), Tabasco (தபாஸ்கோ), Nayarit (நாயரிட்), Jalisco (ஜாலிஸ்கோ), Veracruz (வேரெக்ரூஸ்), Michoacan (மைக்கோவாகன்) ஆகிய மாநிலங்களிலும், குவாத்தமாலா (Guatemala), ஹோண்டுராஸ் (Honduras), சால்வடோர் (El salvador), நிகரகுவா (Nicaragua) ஆகிய நாடுகளிலும் பரவலாக காணப்படுகிறது.

  அதுமட்டுமல்லாமல் இது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் தீவுகள் மற்றும் தென்பசிபிக் பகுதியிலுள்ள சில தீவுகளுக்கும் சொந்தமானதாகவே உள்ளது.

  Heliconia collinsiana rlower twin
  Heliconia collinsiana.


  வளரும் நிலப்பகுதிகள்
   :- தற்காலங்களில் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வீட்டுத் தோட்டங்களில் அழகுக்காகவும், விவசாய நிலங்களில் வியாபார நோக்கத்திற்காகவும் வளர்க்கப்பட்டு வருகிறது.

  தாவரத்தின் தன்மை.

  இது ஈரப்பதம் நிரம்பிய வெப்பமண்டலங்களில் வளர்கிறது. இது பொதுவாக வேகமாக வளரும் இயல்புடையது. 6 முதல் 15 அடி உயரம்வரை வளருகிறது. 

  மேலும் இது அச்சுஅசலாக வாழை இலைகளைப்போன்ற தோற்றத்துடன்  அகன்ற நீளமான இலைகளையும் கொண்டுள்ளது. இலைக்காம்புகளின் நீளம் அதிகப்படியாக 1 மீட்டர்வரை இருக்கும். இது ஜூலை முதல் ஜனவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் பூக்கிறது.

  சிவந்த மடல்களையும் அதனுள்ளே மஞ்சள் நிற பூக்கள் மற்றும் காய்களையும் இடையிடையே ஊதா - நீல நிறத்துடன் கூடிய பழங்களையும் காண்பவர்கள் ஒருகணம் அதன் அழகில் கிறங்கித்தான்போவர்.

  மேலும் இந்த தாவரத்தை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தண்டுகள், இலைகள் மற்றும் மலர்கள் மீது மெல்லியதாக வெண்மை நிற மெழுகு பூச்சு இருப்பதைக் காணலாம். இந்த மெழுகுப்பூச்சு தாவரங்களை தாக்கும் சிறியரக பூச்சிகளிடமிருந்து இதனை பாதுகாக்கிறது.

  மலர்களின் தன்மை.

  கவர்ச்சியான தோற்றத்தில் மேலிருந்து கீழாக தொங்கும் பூங்கொத்துக்களை கொண்டது.

  பூ மடல்களின் எண்ணிக்கை 6 முதல் 14 வரை இருக்கும்.  பூ மடல்கள் அடர் சிவப்பு அல்லது ஆரஞ்சு கலந்த சிவப்பு  நிறத்திலும், அதிகப்படியாக 1.4 அடி நீளம் வரையிலும் இருக்கும்.  அதனுள்ளே வெண்மை கலந்த மஞ்சள்நிற பூக்கள் உள்ளன.

  இந்த பூங்கொத்துக்களை தாங்கி நிற்கும் மஞ்சரியானது 10 முதல் 12 அடி நீளம்வரை இருக்கும். இது ஜூலை தொடங்கி ஜனவரி வரையில் பூக்கிறது.

  காய்களின் தன்மை.

  அடர்த்தியான மஞ்சள் நிறமான காய்களை கொண்டுள்ளது. இவைகள் கனியும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஊதா கலந்த நீலநிறத்திற்கு மாறுவது கண்கொள்ளாக் காட்சி. இது பூங்கொத்துகளுக்கு கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கிறது. பழத்தினுள் 1 முதல் 3 விதைகள் வரை இருக்கும்.

  இனப்பெருக்கம்.

  சிறிய ரக கிழங்குகள் போன்ற வேர் தண்டுகளில் கிளைக்கும் இளங்கன்றுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இருவழிகளில் தன் இனத்தை பெருக்குகிறது.

  இதன் பூக்கள் அபரிமிதமான தேன்களை உற்பத்தி செய்வதால் "ஹம்மிங்" (Humming birds) போன்ற சிறிய ரக பறவைகளாலும், வௌவால்களாலும் (Bats) மற்றும் சில தேனுண்ணும் பூச்சிகளாலும் அயல் மகரந்த சேர்க்கை நடைபெறுகின்றன.

  சாகுபடி.

  வேர் அடித்தண்டுகளில் கிளைக்கும் சிறு சேய் செடிகளை தனியாகப் பிரித்தெடுத்து நடுவதின் மூலம் இதனை எளிதாக பயிர்செய்யலாம். வீடுகளில் அழகுதரும் செடிகளாக வீட்டு தோட்டங்களிலும், பூந்தொட்டிகளிலும்கூட வளர்க்கலாம்.

  Heliconia froots

  இதனை விதைகள் மூலமாகவும் சாகுபடி செய்கிறார்கள். ஆனால் விதைகள் திடமான ஓடுகளைக் கொண்டுள்ளதால் முளைக்க அதிகப்படியாக 6 முதல் 12 மாதங்கள்வரை ஆகலாம். எனவே விதைகள் மூலமாக சாகுபடி செய்வதைக் காட்டிலும் வேர்த்தண்டுகளில் உற்பத்தியாகும்  கிளைச்செடிகளின் மூலமாக பயிர் செய்வதே சிறப்பானதாக கருதப்படுகிறது.

  இது பயிர் செய்யப்படும் நிலம் வடிகால்வசதி உள்ளதாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். வேர்ப்பகுதியில் நீர் தேங்கி நிற்கும் பட்சத்தில் "வேரழுகல்" (Root rot disease) நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். நல்ல தரமான பூக்கள்  வேண்டுமெனில் மக்கிய தொழுஉரங்களும், வேறுபல கரிம உரங்களும் சரியான இடைவெளியில் இடவேண்டியது அவசியம்.

  நல்ல சூரிய வெளிச்சமும், நல்ல காற்றோட்டவசதியும் இந்த வகை தாவரங்களுக்கு அவசியம் தேவைப்படுவதால் அவ்வப்போது காய்ந்துபோன பழையஇலைகளை மரத்திலிருந்து அகற்றி பராமரிக்கவேண்டியது மிகமிக அவசியம்.

  அதிக அளவு குளிர்ச்சியான காலநிலைகள் நிலவும் பனிப்பிரதேசங்களில் இவைகள் முறையாக பூப்பதில்லை. இவைகள் நன்கு மகசூல் தரவேண்டுமெனில் இதன் சுற்றுப்புற வெப்பநிலை 26 ⁰ C ற்கும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

  இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் இது மிகமுக்கியமான தோட்டப்பயிராக பயிரிடப்படுகிறது. விவசாயிகளுக்கு மிக அதிக அளவில் வருமானம் ஈட்டித்தரும் பணப்பயிராக இது விளங்குகிறது.

  பயன்கள்.

  இது மேடை அலங்காரங்களில் முக்கியமான அலங்கார மலராக பயன்படுத்தப்படுகிறது. வழக்கமான மலர் அலங்காரங்களில் இதன் கவர்ச்சியான தோற்றம் மற்றும் வடிவமைப்பால் முக்கியமான இடத்தைப்  பிடிக்கிறது. மலர் அலங்காரத்திற்காக மரத்திலிருந்து வெட்டப்பட்டபின் குளிர்ச்சியான சூழ்நிலைகளில் வைத்து பராமரித்தால் சுமார் 2 வாரம் வரை இதனை வாடாமல் பாதுகாக்க முடியும். நன்றி!!!

  ஹெலிகோனியா வகை தாவரங்களை வியாபார நோக்கத்திற்காக எப்படி சாகுபடி செய்வது அல்லது வீட்டுதோட்டங்களில் வைத்து இவைகளை எவ்வாறு பராமரிப்பது என்பதுபற்றிய அடிப்படை விஷயங்களை விரிவாக அறிய அடுத்துள்ள தொடுக்கை உங்கள் அழகான விரல்களால் கொஞ்சமாய் சொடுக்குங்க.

  >>"ஹெலிகோனியா சாகுபடி - Heliconia - Cultivation and Crop protection."<<

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  0 கருத்துகள்