"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
ஹெலிகோனியா சிட்டகோரம் - Heliconia psittacorum.

ஹெலிகோனியா சிட்டகோரம் - Heliconia psittacorum.

ஹெலிகோனியா சிட்டகோரம்.

Heliconia psittacorum.

         இயற்கை வரைந்த அழகோவியமான ஹெலிகோனியா (Heliconia) என்னும் எழில் நிறைந்த மலரைப்பற்றியும் அதன் பல்வேறு வகைகள் மற்றும் சிறப்புகளைப் பற்றியும் தொடர்ந்து பார்த்து வருகின்றோம்.

ஹெலிகோனிய மலர்கள் அதன் வகைதனைப் பொறுத்து சிவப்பு, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில்கூட பூத்துக் குலுங்கி  நம் மனதை கொள்ளை கொள்கின்றன.

Heliconia psittacorum.

இந்த பதிவில் அனைவரும் விரும்பும் கெலிகோனிய வகைகளுள் ஒன்றான "கெலிகோனியா சிட்டகோரம்" (Heliconia psittacorum) என்னும் தாவரத்தைப்பற்றி சற்று விரிவாக பார்ப்போம் வாருங்கள்.


    Heliconia psittacorum.

    தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா சிட்டகோரம் - Heliconia psittacorum.

    வேறு பெயர் :- ஹெலிகோனியா லேடி டயானா - Heliconia Lady Diana.

    பொதுவான பெயர்கள் :- Parakeet flower, Parrot flower.

    தாவர பிரிவு :- பூக்கும் விதை தாவரங்கள் - Angiosperms.

    குடும்பம் :- ஹெலிகோனியேசியே (Heliconiaceae).

    இனம் :- சிட்டகோரம் - Psittacorum.

    பேரினம் :- ஹெலிகோனியா - Heliconia.

    வரிசை :- Zingiberales.

    பருவநிலை :- வெப்பமண்டல தாவரம்.

    வாழிடம் :- ஈரப்பதம் நிரம்பிய வெப்பமண்டல மழைக்காடுகள்.

    மலர்களின் நிறம் :- சிவப்பு (Red), இளஞ்சிவப்பு (Pink), ஆரஞ்சு (Orange), மஞ்சள் (Yellow), பச்சை (Green), கிரீம் (Cream).

    பூக்கும் பருவம் :- ஆண்டு முழுவதும் பூக்கின்றன.

    தாயகம்.

    இது கரீபியன் (Caribbean) மற்றும் தென் அமெரிக்காவை (South America) பூர்வீகமாக கொண்டது. மேலும் பிரேசில் (Brazil), பிரெஞ்சு கயானா (French Guiana), கயானா (Gayana), சுரினாம் (Suriname), வெனிசுலா (Venezuela), கொலம்பியா (Colombia), பொலிவியா (Bolivia), பராகுவே (Paraguay), பனாமா (Panama), டிரினிடாட் (Trinidad) மற்றும் டொபாகோ (Tobago) நாடுகளையும் பூர்வீகமாக கொண்டு வளர்கின்றன.

    மேலும் இது காம்பியா (Gambia), தாய்லாந்து (Thailand), புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico), ஹிஸ்பானியோலா (Hispaniola), ஜமைக்கா (Jamaica) மற்றும் லெஸ்ஸர் அண்டில்லஸ் (Lesser Antilles) ஆகிய நாடுகளில் இயற்கையாக வளருகிறது.

    இனங்கள்.

    இந்த ஹெலிகோனியா சிட்டகோரம் தாவரத்தில் சிற்சில மாற்றங்களுடன் சில உட்பிரிவுகள் அதாவது கலப்பினங்கள் உள்ளன. அவையாவன

    TAMIL ENGLISH
    லேடி டி Lady Di
    ஆண்ட்ரோமெடா Andromeda
    சோகோனியானா Choconiana
    பராக்கீட் Parakeet
    ஃபுச்ச்சியா Fuchsia
    பெரு ஒயிட் நியூ Peru White New
    பிங்கி Pinky
    கோல்டன் டார்ச் Golden torch

    Heliconia psittacorum

    தாவரத்தின் தன்மை.

    ஹெலிகோனியாக்களில் சில மிக உயரமாக குறிப்பாக 15 அடிக்கும் மேலாக வளரும் தன்மையுடையது. ஆனால் இந்த "ஹெலிகோனியா சிட்டகோரம்" (Heliconia psittacorum) ஆனது மிக குறைந்த அளவு உயரமே வளரும் தாவர இனமாகும். 2 அடி முதல் 6 அடி உயரத்திற்கும் குறைவாகவே வளரும் இயல்பு கொண்டது.

    இதில் இரண்டு ரகமான வகைகள் உள்ளன. ஒன்று "நெட்டை" ரகம் மற்றொன்று "குட்டை" ரகம்.

    நெட்டை ரகமானது 4 முதல் 6 அடி உயரம்வரை வளர்கின்றன. குட்டை ரகமானது 2 முதல் 3 அடிவரை மட்டுமே வளருகிறது. ஆதலால் இதனை வீட்டுத்தோட்டங்களில் பூந்தொட்டிகளிலோ அல்லது வீடுகளின் உள் பகுதிகளில் கூட வளர்க்க முடியும்.

    வீட்டிற்கு உட்பக்கம் வளர்ப்பதற்கு நீங்கள் முயற்சியெடுத்தால் சூரிய வெளிச்சம் அதிகம் கிடைக்கும் ஜன்னலோர பகுதிகளை தேர்ந்தெடுக்க வேண்டியது மிகமிக அவசியம்.

    இது சூரிய ஒளியை விரும்பும் தாவரம். தரமான பூக்கள் மற்றும் அதிகமான பூக்களை நீங்கள் இதிலிருந்து எதிர்பார்த்தால் இதற்கு போதிய அளவு சூரிய வெளிச்சம் கிடைக்கும்படி செய்வது உங்கள் கடமை.

    இதன் தண்டுகள் நாணல் தண்டுகளை ஒத்துள்ளன. இலைகள் சிறிய வாழை இலைபோன்ற தோற்றத்தில் இருப்பதுடன்  கவர்ச்சிகரமான அமைப்பையும் கொண்டுள்ளன.

    மலர்களின் தன்மை.

    இது நடவு செய்த 1 வருடத்தில் பூக்க ஆரம்பிக்கின்றன. வருடம் முழுவதுமே பூத்து தன் கவர்ச்சியான மலர்களால் உங்களை திக்குமுக்காட வைப்பதில் தன்னிகரில்லாதது. இம் மலர்கள் அதிகநாட்கள் வாடாமல் இருந்து உங்களை மகிழ்விக்கும்.

    பூக்களை பாதுகாக்கும் பூமடல்கள் 3 முதல் 15 செ. மீ நீளம் கொண்டவையாக இருக்கின்றன. இம்மடல்கள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கின்றன.

    Andromeda

    இம்மடல்களின் உட்பக்கத்தில் மலர்கள் காணப்படுகின்றன. இம்மலர்கள் 2 முதல் 5 செ. மீ நீளம் கொண்டவை. இனத்தைப் பொறுத்து மஞ்சள், ஆரஞ்சு மற்றும் பச்சை கலந்த கலவையாக காட்சி அளிக்கின்றன. மலர்கள் நுனிகளில் கருப்பு நிற புள்ளிகளை கொண்டுள்ளது. இது பூக்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தை கொடுக்கிறது. இது சுமார் 1 அடி நீளமுள்ள பூக்காம்புகளை கொண்டுள்ளன.

    காய்களின் தன்மை.

    காய்கள் சிறிய அளவில் 0.8 செ. மீ விட்டத்துடன் ஓரளவு உருண்டை வடிவில் உள்ளன. மஞ்சள் நிறத்தில் இருக்கும் காய்கள் படிப்படியாக ஆரஞ்சு நிறத்திற்கு மாறி கனியாக மாறும் தருவாயில் பளபளப்பான அடர் நீல நிறத்திற்கு மாறுகின்றன. இதனுள் அதிகப்படியாக 3 விதைகள் உள்ளன.

    பயன்கள்.

    இந்த தாவரத்தை பழங்குடியினர் நோய்தீர்க்கும் மூலிகையாகவும் (Herb) பயன்படுத்தி வருகின்றனர்.

    கீல்வாதம் (Gout), வாதநோய்கள் மற்றும் தசைமுடக்கத்திற்கு பயனாகிறது. உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் புண்கள், உச்சந்தலையில் ஏற்படும் புண்கள், உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் தீக்காயங்களுக்கு மேற்பூச்சு மருந்தாக இதன் இலைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    அதுமட்டுமல்லாமல் இது வழக்கமான மலர் அலங்காரத்தில் இதன் கவர்ச்சியான தோற்றம் மற்றும் வடிவமைப்பால் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது.

    வீடுகளில் அழகுக்காக தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன. வீடுகளின் உட்புறங்களிலும் பூந்தொட்டிகளை பயன்படுத்தி அலங்கார செடிகளாக வளர்க்கலாம். ஆனால் இது சூரிய வெளிச்சத்தை விரும்பும் தாவரமாகையால் சூரிய வெளிச்சம் தாராளமாக வரும் ஜன்னல் ஓரங்களில் இதனை வைத்து பராமரிக்கவேண்டியது மிக முக்கியம். சிட்டகோரத்தின் கலப்பின இனமான "கோல்டன் டார்ச்" என்னும் இனமானது அனைவரையும் கவர்ந்திழுக்கும் திறனுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. 

    Golden torch

    இனப்பெருக்கம்.

    சிறிய ரக வேர் கிழங்குகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இரு வழிகளில் தன் இனத்தை பெருக்குகிறது.

    "ஹம்மிங்" (Humming Bird) போன்ற சிறிய ரக பறவைகளாலும், வௌவால்களாலும் (Bats) மற்றும் சில தேனுண்ணும் பூச்சிகளாலும் அயல்மகரந்த சேர்க்கை நடைபெறுகின்றன. பறவைகளை கவரும்பொருட்டு அதிகமான அளவில் மதுவை உற்பத்தி செய்கின்றன.

    இரவில் இரைதேடும் வௌவால்களை ஈர்க்கும் பொருட்டு இரவிலும் இவைகள் தேன்களை உற்பத்தி செய்வதில் மும்முரம் காட்டுகின்றன.

    தென் அமெரிக்காவிலுள்ள ஒருவகையான சிறியரக வெள்ளை நிற வௌவால்கள் இவைகளின் இலைகளை தங்களின் இருப்பிடமாக மாற்றிக்கொள்கின்றன.

    வளரும் நிலப்பகுதிகள்.

    தற்காலங்களில் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வீட்டு தோட்டங்களில் அழகுக்காகவும், விவசாய நிலங்களில் வியாபார நோக்கத்திற்காகவும் வளர்க்கப்பட்டுவருகிறது.

    types of heliconia psittacorum

    சாகுபடி.

    பொதுவாகவே கெலிகோனியாவானது சூரிய வெளிச்சத்தை விரும்பும் தாவர இனம். ஏனெனில் சூரிய வெளிச்சம் கிடைக்காத பட்சத்தில் இதன் இலைகள் நிறம் மங்கி உதிர ஆரம்பித்துவிடுகின்றன. குறிப்பாக மலர்களின் உற்பத்தி குறைவதுடன் மலர்களும் தன்னுடைய நிறம் மங்கி பொலிவை இழக்கின்றன. இதிலிருந்தே கெலிகோனிய வகை தாவரங்களுக்கு எந்த அளவிற்கு சூரிய ஒளி அத்தியாவசிய தேவையாக இருக்கிறது என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

    சிலவகை கெலிகோனிய வகை தாவரங்களுக்கு முழுமையான அளவு அதாவது நேரிடியான சூரிய ஒளி தேவைப்படலாம். இன்னும் சில வகையான ஹெலிகோனியாக்களுக்கு மறைமுக அதாவது மிக குறைந்த அளவு வெளிச்சம் மட்டுமே போதுமானதாக இருக்கலாம் . எனவே எந்தெந்த தாவரங்களுக்கு எவ்வளவு சூரியஒளி தேவை என்பதனை கவனத்தில் கொண்டு இதனை சாகுபடி செய்தால் மட்டுமே முழுமையான பலனை பெற முடியும்.

    இதனை பயிரிடும்போது இன்னும் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்வது அவசியம். இந்த தாவரத்திற்கு சூரிய வெளிச்சம் எவ்வளவு அவசியமோ அதே அளவு காற்றோட்டமும் மிக மிக அவசியம். எனவே இரு தாவரங்களுக்கு இடையில் நன்கு காற்றோட்டம் இருக்கும்படி இடைவெளிவிட்டு நடுவதுடன் தாவரங்களிருந்து காய்ந்து தொங்கும் இலை தழைகளையும் அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம்.

    இலைதழைகளை அகற்றாமல் இருக்கும் பட்சத்தில் தண்டு மற்றும் வேர் பகுதிகளில் பூஞ்சாண நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதே போல் இதை பயிரிடும் விவசாய நிலங்களில் தேவையில்லாத களைச்செடிகள் முளைப்பதையும் தவிர்க்கவேண்டும்.

    இந்த "ஹெலிகோனியா சிட்டகோரமானது" (Heliconia psittacorum) புதர்போல் பரந்து வளரும் தாவரம்தான் என்றாலும்கூட முறையான இடைவெளியும் பராமரிப்பும் மிக அவசியம்.

    அதுபோல் இது பயிர் செய்யப்படும் நிலம் நல்ல வடிகால் வசதி உள்ளதாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம்.

    இத்தாவரத்திற்கு வாரத்திற்கு 1 அல்லது 2 தடவை நீர்பாய்ச்சினால் போதுமானது. மேற்பகுதி மணல் 1 அல்லது 2 அங்குல அளவில் உலர்ந்த பின்பு  மீண்டும் நீர் பாய்ச்சினால் போதுமானது.

    heliconia psittacorum peru white new.

    பொதுவாக வேர் அடித்தண்டுகளில் கிளைக்கும் சிறு சேய் செடிகளை தனியாக பிரித்தெடுத்து நடுவதின் மூலம் இதனை எளிதாக பயிர்செய்யலாம். 

    இதனை விதைகள் மூலமாகவும் சாகுபடி செய்கிறார்கள். ஆனால் விதைகள் திடமான ஓடுகளைக் கொண்டுள்ளதால் முளைக்க அதிகப்படியாக 6 முதல் 12 மாதங்கள்வரை ஆகலாம்.

    உர மேலாண்மை.

    நல்ல தரமான பூக்கள்  வேண்டுமெனில் மக்கிய தொழுஉரம் இடவேண்டியதும் அவசியம். வருடத்திற்கு 3 முறை உரமிடுவது சிறப்பு. பொட்டாஷ் (Potash) மற்றும் பாஸ்பரஸ் (Phosphorus) உரங்களை சிறிதளவு எடுத்து நீருடன் கலந்து மாதம் ஒருமுறை கொடுத்துவரலாம்.

    வண்டல்மண், தொழுஉரம், கோழி எரு மற்றும் தென்னைநார் கலந்த கலவைகளை பாத்திகளில் அல்லது பூந்தொட்டிகளில் நிரப்பி அதில் இதனை வளர்க்கலாம். இதற்கு கோழி எரு மற்றும் பறவைகளின் எச்சம் மிகச்சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உரமாக இனம் காணப்பட்டுள்ளது.

    எனவே முறையான உரம் மற்றும் பாசானவசதியுடன் கூடிய பராமரிப்புடன் அழகும் வனப்பும் பொருந்திய "Heliconia psittacorum" என்னும் இந்த அழகிய தாவரத்தை வீடுகளில் வளர்த்து இல்லங்களை அழகுற செய்குவோம். நன்றி!!..

    அழகு மட்டுமல்லாது சிறியவகை உயிரினங்களுக்கு சிறந்த வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய கெலிகோனியா வகை தாவரங்கள் நிறையவே உள்ளன. அவைகளில் அக்யூரெட்டா சொல்லணுமின்னா அக்யூமினாட்டாவை சொல்லலாம். அக்யூமினாட்டா பற்றி தெரிந்துகொள்ள அருகிலுள்ள சுட்டி பட்டனை பட்டுன்னு தட்டுங்க.

    >>"ஹெலிகோனியா அக்யூமினாட்டா - Heliconia acuminata."<<

    💢💢💢💢

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    2 கருத்துகள்

    1. பதில்கள்
      1. வருக நண்பரே ! தங்களின் எண்ண ஓட்டங்களை முத்திரையாக இங்கு பதித்ததோடு நில்லாமல் சித்திரையாக இங்கு விதைத்து சென்றதற்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!

        நீக்கு

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.