ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீரிய சிந்தனைகள் - Sri Ramakrishna great thoughts.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

பெயர் :- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

இயற்பெயர் :- காதாதர் சாட்டர்ஜி.

பிறப்பு :- 1836 ம் ஆண்டு, பிப்ரவரி 18.

பெற்றோர்கள் :- குதிராம் - சந்திரமணி தேவி.

பிறந்த இடம் :- காமர் புகூர், ஹீக்லி மாவட்டம், மேற்கு வங்க மாநிலம். இந்தியா.

தாயகம் :- இந்தியா.

வாழ்க்கை :- ஆன்மீகவாதி.

மனைவி :- சாரதா தேவி.

இறப்பு :- 1886 ம் ஆண்டு ஆகஸ்ட் 16.


          ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சரை பற்றி அறியாதவர்கள் இருக்கமுடியாது. "நரேந்திரநாத் தத்தா" என்னும் ஒரு சாதாரண இளைஞனை தன்னுடைய ஆன்மீக பலத்தால் "சுவாமி விவேகானந்தன்" என்னும் ஆன்மீக ஞானியாக வார்த்தெடுத்துத்தந்த ஆன்மீக சிற்பி என்னும் பெருமை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரையே சாரும்.

          அந்த சீரிய சிற்பியின் ஆன்மீக தத்துவார்த்த சிந்தனைகளை இந்த பதிவில் மூலம் அறிந்து பயனடைவோம் வாருங்கள்.

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் தத்துவங்கள்.

 • இவ்வுலகம் ஒரு முட்செடி போன்றது. முட்செடியில் மாட்டிக்கொண்ட துணியின் ஒருபகுதியை விடுவிப்பதற்குள் துணியின் மறுபகுதி மாட்டிக்கொள்கிறது. உலகம் என்னும் முட்செடியில் அகப்பட்டுக் கொள்கிறவர்களின் கதியும் இதுவே.

 • கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் அனைத்தும் எளிதாக வெளிப்பட்டு தெரிவதுபோல் ஒருவனின் உள்ளத்தில் இருப்பது அனைத்தையும் அவனுடைய கண்கள் எளிதாக வெளிப்படுத்திவிடுகின்றன.

 • மலத்தில் உதித்து மலத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு புழுவை எடுத்து சந்தனத்தில் விட்டால் அது வேதனை தாளாமல் மடிந்துவிடும். அதுபோல உலக ஆசாபாசங்களில் பற்றுள்ள ஒருவனை நல்லோரிடத்தில் கொண்டுவந்து சேர்த்தால் அதை அவன் துன்பமாகவே உணர்கிறான்.

 • ஒரு சல்லடையானது நல்ல வஸ்துக்களை எல்லாம் நழுவ விட்டுவிட்டு பயன்படாத பொருள்களை எல்லாம் தன்னிடம் வைத்துக்கொள்ளும். சிலர் இப்படித்தான் இருக்கின்றனர். நல்ல எண்ணங்களை வெளியேற்றிவிட்டு தீய எண்ணங்களை சுமந்து திரிகின்றனர்.

 • தான் கட்டிய கூட்டிலேயே பட்டுப்புழு கட்டுண்டு கிடப்பதுபோல் மனிதர்களும் தாங்களே உருவாக்கிக்கொண்ட பந்த பாசங்களிலே கட்டுண்டு உழல்கின்றனர்.

 • முதலில் கைகளில் எண்ணெய்யை பூசிக்கொள். பிறகு பலாப்பழத்தை வெட்டு, இல்லையெனில் அதன் பசை கைகளில் ஒட்டிக்கொள்ளும். அதுபோல முதலில் ஈஸ்வர பக்தியை உள்ளத்தில் பூஜித்துக்கொள். பின் உலக வாழ்க்கையில் ஈடுபடு. இதனால் ஆசாபாசங்கள் உள்ளத்தில் ஒட்டிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளலாம்.

 • சுருட்டை முடியை நீங்கள் நிமிர்த்தி விட்டாலும் அது மீண்டும் சுருண்டுகொள்ளும், அகங்காரமும் அப்படித்தான் நீங்கள் அதனை நீக்க முயன்றாலும் திரும்பவும் வருகிறது.

Sri Ramakrishna great thoughts.
Sri-Ramakrishna-Paramahamsa.

 • மதவாதிகள் தங்கள் மதத்தில் கூறப்பட்டுள்ள தெய்வமே சிறந்ததென வாதிடுகின்றார்கள். இவர்கள் ஒரு பொருளே இத்தனை விதமாக காட்சி அளிக்கிறது என்பதனை அறியாத மூடர்கள்.

 • குடும்பஸ்தர்கள் தானம் செய்கின்றனர். அது மிக நல்ல விஷயம்தான். ஆனால் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும் தம்பட்டம் அடித்துக் கொள்வதற்குமே தானங்கள் நிகழ்த்தப்படுகிறது. இந்த செயலால் எந்த ஆத்ம சுத்தியும் ஏற்படுவதில்லை. சுயநல எண்ணத்தை விடுவதென்பது குடும்பஸ்தர்களுக்கு மிகவும் கடினமான விஷயமாகவே உள்ளது.

 • எக்காரணம் முன்னிட்டும் மனிதன் பொய் பேசலாகாது, பொய் பேசி பழகுகிறவன் படிப்படியாக பாவம் செய்வதற்கு அஞ்சாத கீழான மனப்பான்மையை பெறுகிறான்.

 • பிறருடைய குற்றங்களை காண்பதில் நேரத்தை செலவிடுபவன் தன் குற்றங்களை களைய முற்படுவதில்லை. அவனுடைய வாழ்நாள் வீணாளாகவே கழிகிறது.

 • கடவுளிடம் "தான் பாவி", "தான் தாழ்ந்தவன்" எனவே தன்னை காத்து ரட்சியும் என்று சதாசர்வ காலமும் நினைப்பவன் காலப்போக்கில் அவ்வாறே மாறிவிடுகிறான்.

 • பெண் இன்பத்திலிருந்து ஒருவனால் முற்றிலுமாக விலகியிருக்க முடிந்தால் அவனால் எல்லா உலக இன்பங்களிலிருந்தும் விலகி இருப்பது சாத்தியமாகிவிடும்.

 • தாமிரப் பாத்திரத்தை தினந்தோறும் துலக்கவேண்டும். இல்லையேல் அதில் களிம்பு என்னும் மாசு ஏறும். மனம் தாமிர பாத்திரம் போன்றது. தினந்தோறும் தியானத்தால் அதை துலக்கி வைக்க வேண்டும்.

 • உலக வாழ்வு மிக கடினமானது, இப்புறம் திரும்பினால் ஒருவனுக்கு தடியடி விழுகிறது. அப்புறம் திரும்பினால் துடைப்பக்கட்டை அடி விழுகிறது. வேறொரு பக்கம் திரும்பினால் அங்கு ஒருவனுக்கு செருப்படி விழுந்து கொண்டிருக்கிறது. எங்கு திரும்பினாலும் ஏதோ ஒரு உபத்திரவம் வந்த வண்ணமே உள்ளது. இத்தனையும் தாண்டி பக்தன் ஒருவன் நல்வாழ்வு வாழ கடவுள்தான் துணை செய்ய வேண்டும்.

 • பக்தி பெருகுங்கால் ஒருவன் எங்கு திரும்பிப் பார்த்தாலும் கடவுளையே காண்கிறான். மஞ்சள் காமாலை பிடித்தவன் அனைத்தையும் மஞ்சள் நிறமாக காண்பது போன்றது இது.

 • வீட்டில் தலைவனாக இருக்கும் ஒருவர்.. ஒருத்திக்கு கணவனாகவும், மற்றொருவருக்கு மகனாகவும், குழந்தைகளுக்கு தந்தையாகவும், பிறிதொருவருக்கு சகோதரனாகவும், இன்னொரு சிறுவனுக்கு  தாத்தாவாகவும் காட்சி தருகிறார். அவரவர் உறவு முறை மற்றும்  மன நிலைக்கு தகுந்தபடி காட்சியளிக்கும் அந்த மனிதர் ஒருவரே. அதுபோலத்தான் கடவுளும் ஒருவரே. ஒவ்வொருவருடைய மனநிலைக்கு தக்கபடி, ஒருவருக்கு சிவனாகவும், மற்றொருவருக்கு கிருஷ்ணராகவும், பிறிதொருவருக்கு முருகனாகவும் காட்சி தருகிறார். அவ்வளவே!.

 • ஒவ்வொருவனும் தன்னுடைய கடிகாரமே நேரத்தை சரியாக காட்டுகிறது என்று எண்ணிக்கொண்டு இருக்கிறான். இதைப்போலத்தான் ஒவ்வொரு சமயத்தை சேர்ந்தவர்களும் தான் வணங்கும் கடவுளே சரியானவர் என்று எண்ணிக்கொண்டு திரிகின்றனர்.

 • வெந்து அவிந்த நெல் மறுபடியும் முளைப்பதில்லை. ஈஸ்வர பக்தியால் அவிந்த நெல் போன்றவன் ஞானி. அவனுக்கு மறுபிறப்பில்லை. 

 • காலி குடம் ஒன்றை நீரினுள் முக்கும் போது "பக் பக்" என்று சப்தமிடும். குடம் நிரம்பிவிட்டால் சப்தம் நின்றுவிடும். அதுபோல உனக்குள் அறிவு நிரம்பிவிட்டால் வீண் தம்பட்டம் அடிப்பது நின்று மனம் அமைதிபெறும்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

 1. ஒவ்வொன்றாக வாசிக்கும் போது அதற்கேற்ப குறளும் ஞாபகம் வந்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே !!! குறளானது அனைத்து அறம்களையும் திறம்பட எடுத்துரைப்பதால் தங்களைப்போன்ற சீரிய சிந்தனையாளர்களின் சிந்தையில் அவ்வப்போது வெளிப்படுவது ஆச்சரியமில்லைதானே !!!

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.