ஆடாதோடை - adhatoda vasica - Justicia adhatoda.

ஆடாதோடை - adhatoda vasica.

"ஆடாதோடை இலைக்கு படாத நாவும் பாடும்" என்று ஒரு மருத்துவ பழமொழி உண்டு. அந்த அளவிற்கு உங்கள் குரல் வளத்திற்கு பங்கம் செய்யும் விக்கல், இருமல், தும்மல், இளைப்பு, ஜலதோஷம், சளி, மூக்கடைப்பு போன்ற நோய்களை ஓடஓட விரட்டியடிக்கும் திறன் இந்த ஆடாதோடைக்கு உண்டு.

நுரைஈரல் சார்ந்த பாதிப்புகளை நீக்குவதில் இது முதன்மையானது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவங்களில் இதன் பங்கு மிகமிக அதிகம். இத்துணை சிறப்புவாய்ந்த இந்த மூலிகையைபற்றி விரிவாக அறிந்துகொள்வோம் வாருங்கள்..

  ஆடாதோடை.

  Justicia adhatoda.

  திணை :- தாவரம்.

  தாவர பிரிவு :- பூக்கும் விதை தாவரங்கள் - Angiosperms.

  துணைப்பிரிவு :- Asteridae.

  தாயகம் :- ஆசிய கண்டம்.

  தமிழ் பெயர் :- ஆடாதோடா, ஆடாதோடை, கபக்கொல்லி மற்றும் சளிக்கொல்லி.

  வேறு பெயர்கள் :- ஆடாதொடை, வாதகி, நெடும்பர், அட்டகசம், வாசை.

  ஆங்கில பெயர்கள் :- வாசிகா (Vasica).

  மலையாளம் :- ஆதலோடகம் (Adalodakam).

  தெலுங்கில் :- அடிசாரம். (Addasaram).

  ஹிந்தியில் :- அருஷா.(Arusha) மற்றும் ஆடுசா (Adusa).

  பஞ்சாபி :- பேக்கர். (Bhekar).

  சமஸ்கிருதம் :- வாசா. (Vasa) மற்றும் வாசக (Vasaka).

  பொதுவான அறிவியல் பெயர் :- ஜஸ்டீசியா ஆடாதோடா - Justicia adhatoda.

  தாவர வகைப்பாடு :- Adhatoda zeylanica.

  வரிசை :- லாமியேல்ஸ் - Lamiales.

  குடும்பம் :- அகந்தேசே - Acanthaceae.

  பேரினம் :- ஜஸ்டீசியா - Justicia.

  இனம் :- ஜஸ்டீசியா ஆடாதோடா - J. adhatoda.

  வகுப்பு :- இருவித்திலை தாவரம்.

  சுவை - கசப்பு சுவை.

  தன்மை :- உஷ்ணம் பொருந்தியது.

  வகைகள் :- இதில் இருவகைகள் உள்ளன. அதில் ஒன்று "ஆடாதோடை" மற்றொன்று "சிற்றாடாதோடை".

  ஆடாதோடையின் தாவரவியல் பெயர் :- ஆடாதோடை வாசிகா - Adhatoda Vasica.

  சிற்றாடாதோடையின் தாவரவியல் பெயர் :- ஆடாதோடா பிடோமி - Adhatoda beddomei.

  இரண்டுவகை ஆடாதோடைகளுமே ஏறக்குறைய ஒரேவிதமான மருத்துவ குணங்களையே கொண்டுள்ளன என்றாலும் சிற்றாடாதோடையே அதிக அளவில் நோய்நீக்கும் பண்பினை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டிற்குமே சில வேறுபாடுகளும் உள்ளன.

  ஆடாதோடை பெரிய இலைகளையும், சிற்றாடாதோடை அதைவிட நீளம் குறைவான சிறிய இலைகளையும் கொண்டுள்ளன.

  Adhatoda beddomei

  ஆடாதோடை வேகமாக வளருகின்றன. ஆனால் சிற்றாடாதோடையானது வேகமாக வளர்வதில்லை.

  ஆடாதோடை 6 முதல் 7 மீட்டர் உயரமும், சிற்றாடாதோடை 2 முதல் 3 மீட்டர் உயரம் மட்டுமே வளருகின்றன.

  ஆடாதோடைக்கு அதிக அளவு நீர்வளம் தேவைப்படுவதில்லை. ஆனால் சிற்றாடாதோடையோ அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களில் மட்டுமே வளரும் தன்மையுடையது.

  ஆடாதோடை பரவலாக அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. ஆனால் சிற்றாடாதோடையை சிற்சில இடங்களில் மட்டுமே காணமுடிகிறது.

  ஆடாதோடையானது தண்டுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் தொலைதூரங்களுக்கு தன் இனத்தை பரப்புகின்றன. ஆனால் சிற்றாடாதோடையோ இதற்கு நேர்மாறாக செயல்படுகின்றன. ஏனெனில் இதன் விதைகள் மிக குறைந்த அளவே முளைப்புத்திறன் உள்ளவையாக உள்ளன.

  வளரும் பருவநிலை.

  வெப்பமண்டல பிரதேச தாவரம். கோடை, குளிர் என அனைத்து பருவநிலைகளையும் சமாளித்து வளருகின்றன. குறைந்த ஈரப்பதம்கொண்ட வரண்ட பகுதிகளிலும் வளருகிறது.

  காணப்படும் இடங்கள்.

  இமயமலை அடிவாரங்களிலும், ஆசிய கண்டங்களின் சமவெளி பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மலேசியா, இந்தோனேசியா, பங்களாதேஷ், இலங்கை, லாவோஸ், மியான்மர், சீனா ஆகிய பிரதேசங்களில் ஏரளமாக காணப்படுகின்றன.

  தமிழ் பெயர்க்காரணம்.

  தமிழில் இதற்கு "ஆடாதோடை" என்று பெயர். இந்த பெயர் இதற்கு எவ்வாறு ஏற்பட்டது என்பதனை இங்கு பார்ப்போம்.

  பொதுவாக இதன் இலைகள் கசப்பு சுவையுடையது. எனவே பொதுவாக கால்நடைகள் இதனை விரும்புவதில்லை.

  மிச்சம் மீதி வைக்காமல் அனைத்து தாவரங்களையும் ருசிபார்க்கும் ஆடுகள்கூட இதன் இலைகளை சீண்டுவதில்லை என்பதால்தான் ஆடுகள் தொடாத தாவரம் என்ற அடிப்படையில் காரணப்பெயராக "ஆடு தொடா இலை" என்று அழைக்கப்பட்டுவந்ததாகவும். இதுவே காலப்போக்கில் "ஆடாதோடை" மற்றும் "ஆடாதொடை" என மருவியது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

  ஆனால், ஆடுகள் இந்த இலைகளை சாப்பிடுவதில்லை என்னும் இந்த கூற்று உண்மைதான் என்றாலும் சிலவேளைகளில் இது உண்மையாக இருப்பதில்லை!.

  ஏனென்றால், காடுகளில் வளரும் ஆடுகள் (வெள்ளாடு மற்றும் மலையாடுகள்) சும்மா ஒரு வீம்புக்காக "எங்ககிட்டயேவா!. நாங்களெல்லாம் "பின்லேடன்" பரம்பரைகளாக்கும்" என்று சொல்லிக்கொண்டே ஆடாதோடை இலைகளை தங்கள் வாயில்போட்டு "சௌபாக்கியா" வெட் கிரைண்டர் ரேஞ்சுக்கு அரையரைன்னு அரைத்து தள்ளுகின்றன.

  adhatoda_goat in Bin Laden's legacy

  சரி.. அது இருக்கட்டும்... நாம் இப்போது இந்த தாவரத்தின் உண்மையான பெயர் காரணத்தை பார்ப்போம்..

  இதனுடைய ஆரம்பகால பெயர் ஆடாதோடா என்பதல்ல.. மாறாக இதன் உண்மையான பெயர் "ஆடம் தோடம் மூலி" என்பதே!.

  ஆடம் - ஆரவாரமான அல்லது சத்தத்தை எழுப்புகின்ற.

  ஆடம்பரம் - ஆரவாரமான வாழ்க்கை அல்லது ஆர்ப்பரிக்கும் சத்தத்தை எழுப்புகின்ற வாழ்க்கை.

  தோடம் - தோஷம். [தோஷம் என்றால் நோய்].

  ஆடம் தோடம் - உடலில் ஆராவாரம் செய்கின்ற நோய். அதாவது "கர்புர்" என்று சத்தத்தை எழுப்புகின்ற நோய்.

  "ஆடம் தோடம்" என்றால் அமைதியான வாழ்க்கையில் ஆராவாரம் செய்கின்ற சத்தத்தை எழுப்புகின்ற நோய்களான கப நோய்கள் அனைத்தையும் இந்த மூலிகை அடக்கி வைப்பதால் இதற்கு "ஆடம் தோடம் மூலி" என்று காரணப்பெயர் வைக்கப்பட்டு அதுவே பின்னாளில் நிலைத்தும் போனது.

  "கர்புர்" என்று சத்தத்தை எழுப்பும் நோய்களான கபநோய்கள் அனைத்தையும் குறிப்பாக இருமல், தும்மல், இழுப்பு, சளி, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், ஜலதோஷம், ஆஸ்துமா, இரைப்பு, கக்குவான் இருமல், காசநோய், கபசுரம் போன்ற மூச்சு மற்றும் நுரைஈரல் சம்பந்தமான அனைத்து நோய்களையும் பேச்சு மூச்சு இல்லாமல் அடக்கி வைப்பதால் இதற்கு "ஆடம் தோடம் மூலி" என்று பெயர் வைக்கப்பட்டு காலப்போக்கில் அதுவே "ஆடாதோடா" என்று திரிந்துபோனது.

  இந்த மூலிகைக்கு தமிழில் "கபக்கொல்லி" மற்றும் "சளிக்கொல்லி" என்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.

  குறிப்பு :- "ஆடாதோடா" என்கின்ற இந்த மூலிகையும், "ஆடுதின்னாப்பாளை" [ஆடுதீண்டாபாளை] என்கின்ற மூலிகையும் ஒன்றல்ல. இரண்டும் முற்றிலும் வெவ்வேறானவை].

  தாவரத்தின் தன்மை.

  ஆடாதோடா என்பது "அகந்தேசே" - Acanthaceae குடும்பத்தை சேர்ந்த ஒரு பசுமையான தாவரம். இது குறுஞ்செடி போன்று காணப்படுகிறது என்றாலும் இலைகள் மிக நெருக்கமாக அமைந்து புதர்போல் காணப்படுவதால் புதர்தாவர பிரிவில் சேர்த்துள்ளார்.

  இது கனகாம்பரம் இனத்தை சேர்ந்த தாவரம்  எனலாம். ஏனெனில் கனகாம்பரம் செடிகளுக்கு இருப்பதுபோன்ற பூ மஞ்சரிகளையும், அச்சு அசலாக அதேபோன்ற தட்டையான காய்களையும் மற்றும் விதைகளையும் கொண்டுள்ளன.

  இதன் தண்டுகள் மஞ்சள் நிற பட்டைகளுடன் கடினமாக காணப்படுகின்றன.

  இது 5 அடி முதல் 10 அடி உயரம்வரை அதிக பக்க கிளைகளுடன் வளரும் தன்மையுடையது. சில இடங்களில் அதிகப்படியாக 6 மீட்டர் உயரம்வரை வளர்வதை காணமுடிகிறது.

  இலைகளின் தன்மை.

  இலைகள் மென்மையானவை. கரும்பச்சை நிறமானவை. கசப்புச்சுவை கொண்டவை.

  இலைக்காம்புகள் குறுகியவை. இலைக்காம்புகள் 2 செ.மீ வரைதான் நீளம் இருக்கின்றன. ஆனால் இலைகளோ அடர் பச்சை நிறத்தில் நீளமாக காணப்படுகின்றன. இந்த இலைகள் தண்டுகளில் எதிரெதிர் திசைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

  adhatoda leaf


  மாவிலை போன்ற வடிவில் இருக்கும் இலைகள் 10 முதல் 16 செ.மீ நீளமும், 5 முதல் 10 செ.மீ அகலமும் கொண்டது.

  பூக்களின் தன்மை.

  நீள் அமைப்பில் கதிர்போன்ற அமைப்புடன் கூடிய மஞ்சரிகளைக்கொண்ட இது மேல்நோக்கி வரிசையாக பூக்கும் தன்மையுடையது.

  adhatoda flower

  பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பூக்கும் இவைகள் வெண்மை நிறத்தில் வாசனையுடன் காணப்படுகின்றன. கீழ் மற்றும் மேல் என இரண்டு உதடுகளை கொண்டுள்ள இது கீழ் உதட்டில் 3 இதழ்கள், மேல் உதட்டில் இரண்டு இதழ்கள் என மொத்தம் 5 இதழ்களை கொண்டுள்ளன. மேலேயுள்ள இரண்டு இதழ்களுடன் ஒட்டியபடி இரண்டு மகரந்த தண்டுகழும், கூடவே அதன் கீழ்ப்பகுதியில் வளைந்த நிலையில் ஒரு சூல் முடியையும் கொண்டுள்ளது.

  adhatoda vasica flower

  மலரின் உள்ளே ஊதா நிறத்தில் கோடுகள் வரையப்பட்டுள்ளது மலருக்கு விசேஷ அழகை தருகின்றன.

  காய்களின் தன்மை.

  நான்கு விதைகளை உள்ளடக்கிய சிறிய தட்டையான பச்சை நிற காய்களை கொண்டுள்ளது. இது காய்ந்தவுடன் வெடித்து விதைகளை வெளியேற்றுகின்றன.

  இந்த வகை காய்களினுள் பிற பழங்களில் இருப்பதுபோன்று சதைகள் எதுவும் இருப்பதில்லை. இவைகள் சதைகளற்று நெற்று போன்ற மேல் தோடுகளை மட்டுமே கொண்டுள்ளன. அதனுள் இருப்பது ஒன்லி விதைகள் மட்டும்தான்.

  adhatoda fruit

  ஏனெனில், இதன் விதைகள் பறவைகள் மூலமாக பரவுவதில்லை என்பதால் இதனுள் பறவைகளை கவர்ந்திழுக்க தேவையான பழ கூழ்கள் எதுவும் இருப்பதில்லை. அப்படியென்றால் பறவைகளின் துணையில்லாமல் இவைகள் எப்படி தங்களின் விதைகளை பல மீட்டர் தூரங்களுக்கு பரவசெய்து தங்களின் இனத்தை விருத்தி செய்கின்றன என கேட்கிறீர்களா?..

  வேறு எப்படி.. காற்றுகள் மூலமாகத்தான்!.

  மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னால் நன்கு காய்ந்த காய்களின் மேல்தோடுகள் வெடித்து இரண்டாக பிளக்கின்றன. அப்போது இதனுள் இருக்கும் நான்கு விதைகளும் வெளியில் தலைகாட்டியபடி காணப்படுகின்றன.

  adhatoda fruit seeds

  மழை தொடங்குவதற்கு முன்னால் உருவாகும் பலத்த மழைக்காற்று மற்றும் மிதமான சூறாவளி காற்றுகளால் இதன்விதைகள் செடியிலிருந்து துண்டிக்கப்பட்டு காற்றின் உதவியால் வெகுதூரங்களுக்கு அடித்துச்செல்லப்படுகின்றன.

  பல மீட்டருக்கு அப்பால் நிலத்தில் விழும் விதைகள் தொடர்ந்து பெய்யும் மழையால் புத்துயிர்பெற்று புது செடிகளாக அவதாரம் எடுக்கின்றன.

  வேர்களின் தன்மை.

  திடமான வேர்களை கொண்டுள்ளன. இதன் தண்டுகளில் எதாவது ஒன்று கிடைமட்டமாக வளரும் பட்சத்தில் தண்டுகளின் கரணைகளிலிருந்து வேர்கள் உருவாகி நிலத்தினுள் இறங்குகின்றன.

  இனப்பெருக்கம்.

  விதைகள் மூலமாகவும், தண்டுகள் மூலமாகவும் இனப்பெருக்கம் நடைபெறுகின்றன.

  தாவரத்தில் அடங்கியுள்ள
  வேதியியல் பொருட்கள்.

  ஆடாதோடை தாவரமானது இலைகள் மற்றும் வேர்களில் அதிகப்படியான நோய்தீர்க்கும் வேதிப்பொருளைகளை கொண்டுள்ளன. அவை..

  இலைகளிலுள்ள வேதிப்பொருட்கள் :- 

  • அனிசோடின் [Anisotine].
  • பைரோலோ-1b [pyrrolo-1b].
  • பைரோலோ-2 [pyrrolo-2].
  • வாஸிசின் [Vasicine].
  • ஹைட்ராக்ஸி-அனிசோடின் [hydroxy-anisotine].
  • வாஸ்நெடின் கரோட்டின் [Vasnetine Carotene].
  • வைட்டமின் C [Vitamin C].
  • பொட்டாசியம் நைட்ரேட் [Potassium nitrate].
  • அசிடைல் பென்சைல் [acetyle benzyle].
  • பி.சிட்டோஸ்டெரால் [B. Sitosterol].
  • கேம்ப்ஃபெரோல் [Kaempferol].
  • சோஃபோரோசைடு [sophoroside].
  • ட்ரிட்ரியாக்கோன்டேன் [Tritriacontane].
  • வைசினோலோன் [Vaicinolone].
  • இன்டோல் டீ ஆக்ஸி.

  விதைகளிலுள்ள வேதிப்பொருட்கள் :-

  • லுடோலின் [Luteolin].
  • கரோட்டின் [Carotene].
  • வாசாகின் [Vasakin].
  • டானின் [tannin].
  • பினோலிக்ஸ் [phenolics].
  • ஃபிளாவனாய்டு [flavonoid].
  • சபோனின் [saponin].
  • மெயின்டோன்.
  • அராக்கிடிக்கிக்.
  • பெஹினிக்.
  • லிக்னோசெரிக்.
  • லினோலிக்.
  • ஒலியிக் அமிலம்.
  • செரோடிக்.
  • கேலக்டோஸ்.

  வேரிலுள்ள வேதிப்பொருட்கள் :-

  • வாஸிகோலின். [Vasicoline].
  • அனிசோடின். [Anisotine].
  • வாஸிசின். [Vasicine].
  • அதவசினோன். [Adhavasinone].
  • வாஸிகோலன். [Vasicolone].

  இத்தாவரத்தில் "வாஸிசின்" என்னும் சிறப்புவாய்ந்த அல்கலாய்டு உள்ளது. மூச்சுக் குழாய்களில் பலமாக செயல்பட்டு மூச்சு சம்பந்தமான அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவைப்பது இதுவே.

  இந்த அல்கலாய்டு நுரைஈரலுக்கு ஊக்கம் கொடுத்து அதனை முறையாக செயல்படவைத்து நுரைஈரலை அதிகஅளவில் விரிவடைய செய்கின்றன. இதனால் ஆஸ்துமா, நாட்பட்ட இருமல், இரைப்பு, சளி  முதலிய நுரைஈரல் சம்பந்தமான நோய்களிலிருந்து விரைவாக நிவாரணம் கிடைக்கின்றன.

  இலைசாறுகளில் இந்த வாசிசின் 0.0541 முதல் 1.105% வரை காணப்படுகிறது. இதனுடைய மூலக்கூறு சூத்திரம் C11H12N20.

  சாகுபடி.

  அனைத்துவிதமான மண்களிலும் வளரும் தன்மையுடையது. உடலுக்கு நன்மை செய்யும் இதனை அனைவருமே வீட்டு தோட்டங்களில் வளர்த்துவரலாம். மாடித்தோட்டம் உள்ளவர்களும் பூந்தொட்டிகளில் இதனை வளர்க்கலாம்.

  Cultivation of Adhatoda

  ஆடாதோடையில் கரணை உள்ள தண்டுகளை 1 அடி நீளத்தில் கொண்டுவந்து நடவேண்டிய பாத்திகளில் செம்மண் அல்லது களிமண் பரப்பி கரணை பகுதி மண்ணில் அழுந்தும்படி செய்து நீர் தெளித்துவர 20 நாட்களில் துளிர்விடும். இதனை விதைகள் மூலமாகவும் சாகுபடி செய்யலாம்.

  உரமிடல்.

  அனைத்துவிதமான மண்களிலும் வளரும் என்றாலும் அதிக கரிமச்சத்துக்களை உள்ளடக்கிய களிமண்நிலம் மிகவும் சிறப்பானது. வளர்ந்தபின் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கரிமசத்துக்கள் நிறைந்த  உரங்களை கொடுத்தால் போதுமானது.

  நீர்ப்பாசனம்.

  இத்தாவரத்திற்கு நீர் அதிகம் தேவைப்படுவதில்லை. நடவு செயய்யப்படும் நிலம் நன்கு வடிகால் வசதியுள்ளதாக இருக்கவேண்டியது அவசியம்.

  பயிரை தாக்கம் நோய்கள்.

  பெரும்பாலும் பூச்சிகளோ, நோய்களோ இதனை பாதிப்பதில்லை. வழக்கம்போல் களைகள் இதன்வளர்ச்சியை பாதிக்கலாம். அவ்வப்போது களையெடுத்தல் அவசியம்.

  அறுவடை.

  செடி நட்ட 2வது ஆண்டின் இறுதியில் அறுவடையை தொடங்கலாம். விதைகள்மூலம் நடவு செய்யப்பட்டிருந்தால் இன்னும் ஓரிருவருடங்கள் கூடுதலாக ஆகலாம்.

  பயன்பாடு.

  நோய் தீர்க்கும் மூலிகையாக மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகிறது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவமுறைகளில் இம்மூலிகை பயன்படுத்தப்பட்டுவருகிறது.

  பயன்படும் பாகங்கள்.

  வேர், பட்டை, இலை, பூ முதலிய அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

  செடிகளின் பிற பயன்கள்.

  இந்த ஆடாதோடையானது நோய்தீர்க்கும் மூலிகையாக மட்டுமல்ல தொழில்வளர்ச்சிக்கான மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

  இலைகளை வேகவைக்கும்போது மஞ்சள்நிறமான திரவம் கிடைக்கின்றன. இந்த திரவம் துணி மற்றும் தோல்பொருள்களுக்கு வண்ணமேற்ற பயன்படுத்தப்படுகின்றன.

  இலைகளில் அதிக அளவு "பொட்டாசியம் நைட்ரேட்" உள்ளதால் பிறவகை தாவரங்களுக்கு ஒரு சிறந்த நைட்ரேட் தரும் உரமாக பயன்படுத்தப்படுகிறது.

  முதிர்ந்த காய்களை விரைவாக பழுக்கவைக்கும் திறன் மற்றும் பூச்சிகளை விரட்டும் திறன் மட்டுமல்லாது பூஞ்சைகளை கட்டுப்படுத்தும் திறனும் இருப்பதால் பெரிய பழ ஆலைகளில் இதன் இலைகளை பழங்களை பொதிய பயன்படுத்துகிறார்கள்.

  பயிர்களின் மகசூலை பாதிக்கும் சிலந்திப்பூச்சிகளையும், அதன் முட்டைகளையும் ஒழித்துக்கட்டுவதற்கு ஏற்ற இயற்கை பூச்சிவிரட்டியாக இதன் இலைகளை காய்ச்சி வடித்த நீரை பயன்படுத்துகிறார்கள்.

  ஆயுர்வேதம் மற்றும் சித்தா மருந்து உற்பத்தி நிறுவனங்களில் இரும்பு உலோகங்களை செந்தூரமாக மாற்றுவதற்குமுன் இரும்பின் எதிர்ப்பண்புகளை சுத்தீகரிப்பதற்கு ஆடாதோடை இலைச்சாற்றைப் பயன்படுத்துகின்றனர்.

  மருத்துவத்தன்மை.

  கிருமிநாசினி பண்பு, மூச்சுக்குழாய் அழற்சிநீக்கி , உணவுக்குழாய் அழற்சிநீக்கி, ஆண்டிபயாடிக் முதலிய மருத்துவ பண்புகளை கொண்டுள்ள இது சுவாசதொற்றுநோய், மூக்கில் இரத்தம் வடிதல், ஈறுகளில் இரத்தம்வடித்தல், மூக்கில் நீரொழுகுதல், சைனஸ், ஈஸ்னோபீலியா, காசநோய், இதயசம்பந்தமான பிரச்சனைகள், நெஞ்செரிச்சல், மயக்கம் மற்றும் சுவாச சம்பந்தமான பிற பிரச்சனைகளையும் தீர்த்துவைக்கிறது. இரத்த அழுத்தத்தை சீராக நிர்வகிப்பதிலும் திறமையானது.

  ஜலதோஷம், சளி, இருமல், தும்மல், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், இரைப்பு, கபம், மூக்கடைப்பு, ஆஸ்துமா மட்டுமல்லாது வாய்வு, மூலநோய் மூலம் ஏற்படும் குருதி, மாதவிலக்கு கோளாறுகள் முதலியவைகளையும் குணமாக்க இது உதவுகிறது.

  இரத்தக்கொதிப்பு, காமாலை, கக்குவான் இருமல், கபசுரம், விஷ சுரம், பித்த சுரம், டெங்கு, வாத பித்த கோளாறுகள், வாந்தி, விக்கல், சூலை, உப்பிசம், வயிற்றுக்கோளாறு, அண்டவாயு, கோழைக்கட்டு, கண்சிவப்பு, ஜன்னி இவைகளை நீக்குகின்றன.

  இதன் வேர்களால் கழுத்துவலி, இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், அஜீரணக்கோளாறு முதலியன நீங்கும்.

  செரிமானத்தை தூண்டும் ஒரு சக்திவாய்ந்த சாதனமாக திகழ்வதில் ஆடாதோடா முன்னோடியாக திகழ்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில் இம்மூலிகையில் நிறைந்துள்ள "கார்மினேடிவ்" என்னும் வலியினை நீக்கி வலிவுதரும் பண்புகளும், கூடவே பசிதூண்டும் பண்புகளும் ஒன்று சேர்ந்து உணவுத்துகள்களை தாறுமாறாக உடைக்க தூண்டுகின்றன. இதன்மூலம் குடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும்தன்மை அதிகரிக்கிறது.

  இதன் வேர் மற்றும் பட்டைகளை பொடித்து நீருடன் 30 கிராம் அளவு நாளொன்றுக்கு இரு வேளைகள் வீதம் 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட குடல்புழுக்கள் நீங்கும்.

  தற்போது வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள "கபசுர குடிநீர்" அருந்துகிறோம் அல்லவா... அதில் இடம்பெற்றுள்ள 15 வகையான மூலிகைகளில் இதுவும் ஒன்று.

  சுவாச காசம் [ஆஸ்துமா] நீங்க.

  புதியதான ஆடாதோடை இலைச்சாறு - 5 மில்லி.

  புதியதான இஞ்சிச்சாறு - 2.5 மில்லி.

  சுத்தமான அசல் தேன் - 1 டீஸ்பூன்.

  இம்மூன்றையும் நன்கு கலந்து இருவேளை தொடர்ந்து அருந்திவர ஆஸ்துமா விரைவில் கட்டுப்படும்.

  இதன் பூக்களை பக்குவப்படுத்துவதால் கிடைக்கும் குல்கந்த் (gulkand) காசநோயை குணப்படுத்தும் திறன்வாய்ந்தது.

  கண்சிவப்பு.

  சிலருக்கு கண்கள் எப்போதும் சிவந்த நிறத்திலேயே காணப்படும். அதிக அளவு வலி உணர்வும் இருக்கும். இதற்கு அற்புத பயனளிப்பது ஆடாதொடையின் பூக்கள்.

  ஆடாதொடையின் பூக்களை பறித்துவந்து சட்டியில் போட்டு சிறிது நெய்விட்டு வதக்கி எடுத்து ஆறியபின் கண்களுக்குள் சென்றுவிடாமல் கவனமாக கண்களை மூடிக்கொண்டு இமைகளின்மீது வைத்து கட்டி 20 நிமிடம் கழித்து அகற்றிவிடவும்.

  இதுபோல் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் செய்துவாருங்கள் கண்களின் நிறம் மாறுவதை கண்கூடாகவே காண்பீர்கள். தொடர்ந்து மேலும் ஒரு நான்கு நாட்கள் இதுபோல செய்துபாருங்கள் சிவப்போடு சேர்ந்து வலியும் மறைந்துபோவதை உணர்வீர்கள்.

  ஆடாதொடை குடிநீர்.

  ஆடாதொடை இலை - 100 கிராம்.

  விதை திராட்சைபழம் - 75 கிராம்.

  கடுக்காய்த்தோல் - 75 கிராம்.

  இம்மூன்றையும் சுத்தம் செய்து ஒரு மண்பாண்டத்தில் போட்டு 2 லிட்டர் நீர்விட்டு 1 லிட்டராக வற்றக்காய்ச்சி இறக்கி ஆறவைக்கவும்.

  adhatoda syrup

  நன்றாக ஆறியபின் அதனை பிசைந்து வடிகட்டி பத்திரப்படுத்தி காலை, மாலை இருவேளையும் வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தேனும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிட்டுவர இரைப்பு, இருமல், ஆஸ்துமா குணமாகும்.

  கீல்வாயு பிடிப்பு அகல.

  ஆடாதோடை இலை - 50 கிராம்.

  ஆடாதோடை பட்டை - 50 கிராம்.

  இவ்விரண்டையும் ஒன்றிரண்டாகப் பொடித்துப்போட்டு நீர்விட்டு கஷாயமாக காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.

  இந்த கஷாயத்தை மிதமான சூட்டில் கீல்வாயு பிடிப்பு மற்றும் வலி உள்ள இடங்களில் கழுவ நிவாரணம் கிடைக்கும்.

  மூக்கில் இரத்தம் வடிதலுக்கு.

  ஆடாதோடை இலையின் சாறு 20 கிராம்.

  தேன் - 20 கிராம்.

  இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து ஓரிரு மாதங்கள் தொடர்ந்து அருந்திவர மூக்கு, வாய் இவைகளிலிருந்து வரும் இரத்தம் நிற்கும். மேலும் இருமல், இளைப்பு, சுரம், இரத்தக்கொதிப்பு, காமாலை ஆகியன குணமாகும்.

  தீராத இருமலுக்கு.

  ஆடாதோடை இலை - தேவையான அளவு.

  இலைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மண்சட்டியில் போதிய அளவு நீர்விட்டு இலைகளைப்போட்டு கஷாயமாக காய்ச்சி வடிகட்டி எடுத்து இதனுடன் சிறிது தேன்கலந்து சில வாரங்கள் தொடர்ந்து அருந்திவர தீராத காய்ச்சல், இருமல் தீரும். சளித்தொல்லையும் நீங்கும். காசநோய், எலும்புருக்கி, சளிசுரம், ரத்தகாசம், ஆஸ்துமா முதலியன குணமாகும்.

  ஆடாதோடை இலைச்சாற்றுடன் சமன் அளவு தேன்கலந்து சிறிதளவு சர்க்கரையும் சேர்த்து தினம் 2 முதல் 4 வேளைகள் கொடுத்துவர இரத்த வாந்தி, மூச்சு திணறல், இருமல் முதலானவைகள் குணமாகும்.

  இதன் இலைசாற்றை இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து எருமைப்பாலில் கலந்து காலை, மாலை கொடுத்துவர சீதபேதியுடன் இரத்தபேதியும் குணமாகும்.

  மாதவிடாய் பிரச்சனைகளுக்கு.

  10 மில்லி இலைச்சாற்றுடன் பசுவின் நெய் அல்லது தேன்கலந்து ஒரு நாளைக்கு 2 தடவை எடுத்துக்கொள்ள மாதவிடாய் பிரச்னை நிவர்த்தியாகும்.

  கல்லீரல் நலம்பெற.

  10 மில்லி இலைச்சாற்றுடன் தேன்கலந்து ஒரு நாளைக்கு 3 தடவை வீதம் 4 வாரங்கள் எடுத்துக்கொள்ள கல்லீரல் நோய்களிலிருந்து விடுபடலாம்.

  சமீபகாலங்களில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க குழந்தைகளுக்கு "ஆடாதோடை மணப்பாகு" என்னும் மருந்து டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆடாதோடை மணப்பாகு தயாரிப்பது எப்படி என்பதனை பார்ப்போம்.

  ஆடாதோடை மணப்பாகு.

  தேவையான பொருட்கள் :-

  ஆடாதோடா இலை - 1 கிலோ. [இலைகளின் நடுவிலுள்ள நரம்புகளை நீக்கிவிடவும்].

  பனை வெல்லம் (அ) பனங்கற்கண்டு - 1 கிலோ.

  நீர் - 6 லிட்டர்.

  காம்பு மற்றும் நடுநரம்புகள் நீக்கப்பட்ட இலைகளை நீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.

  சுத்தம் செய்த இலைகளை மிக குறுகலாக அரிந்து மண்சட்டியில் போட்டு ஆறு லிட்டர் நீர் விட்டு சிறு தீயில் எரிக்கவும்.

  ஆறு லிட்டர் நீர் ஒன்றரை லிட்டராக வற்றியவுடன் இறக்கி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். கஷாயம் தயார்.

  ஆனால் இது மிகவும் கசப்புசுவையுடன் இருக்குமென்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடும்படி இதனை இனிப்பாக செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

  எவ்வாறெனில், 1.5 லிட்டர் கஷாயத்துடன் 1 கிலோ பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து மீண்டும் அடுப்பிலேற்றி சிறுதீயாக எரிக்கவும். பாகுபதம் வந்தவுடன் இறக்கி வடிகட்டி எடுக்க ஆடாதோடை மணப்பாகு ரெடி! இதனை நன்கு ஆறியபின் காற்றுப்புகாத பாட்டிலில் பத்திரப்படுத்த 1 வருடம்வரை கெடாமல் இருக்கும்.

  adhatoda manappagu

  அளவு :- குழந்தைகள் 5 மில்லி அளவு இரு வேளையும், பெரியவர்கள் 15 மில்லி அளவு மூன்று வேளையும் உணவு உண்ட பின்போ அல்லது உணவு உண்பதற்கு முன்போ வெந்நீருடன் அருந்திவர இருமல், மூக்கடைப்பு, அடுக்குத்தும்மல், இளைப்பு, காசநோய், குரல்கம்மல், சளிக்கட்டு, தொண்டைவலி நீங்கும். நுரைஈரல் சார்ந்த நோய்களும் விலகும்.

  ஆடாதோடை சூரணம்.

  ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காற்றுப்புகாத பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும். இதில் ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து தேன்கலந்து அருந்திவர மார்புச்சளி குணமாகும். வெந்நீர் அருந்திவர இரத்த அழுத்தம் குணமாகும்.

  பல் வியாதிகளிலிருந்து விடுபட.

  ஆடாதோடை இலையை மென்று துப்ப பல்சொத்தை, பல்லீறுகளில் இரத்தம் வடிதல் முதலியன நீங்கும்.

  ஆடாதோடையின் தீங்குகள்.

  ஆடாதோடையில் நன்மைகள் பல இருந்தாலும் அதில் சில தீங்குகளும் உள்ளன. அவைகளை தெரிந்துகொண்டு முறையாக இதனை பயன்படுத்திவர வேண்டியது அவசியம். அப்படி முறையறிந்து பயன்படுத்தினால்தான் தேவையில்லாத பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். எனவே இதிலுள்ள சில தீமைகளையும் பார்ப்போம்.

  இது இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைப்பதால் இதை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் "ஹைப்போக்ளைசீமியா" (Hypoglycaemia) என்னும் இரத்த சர்க்கரைநோய் குறைபாடுள்ளவர்களுக்கு இன்னும் அதிக அளவில் சர்க்கரை குறைபாட்டை ஏற்படுத்தலாம். எனவே சர்க்கரை நோயாளிகள் இதனை கவனமுடன் பாவிக்கவேண்டியது அவசியம்.

  இது கருப்பையில் சுருக்கங்களை தூண்டி பிரசவத்தை விரைவுபடுத்துவதின்மூலம் கருக்கலைப்பை தூண்டுவதால் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் தருணங்களில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் குழந்தைகளுக்கு பாலூட்டும் காலங்களிலும் தாய்மார்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல.

  pregnant lady avoid adhatoda juice

  இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இது ஏற்றதல்ல.

  நீங்கள் தீராத நாட்பட்ட நோய்களால் அவதிப்படுகிறீர்களா.. அப்படியென்றால் உங்கள் மருத்துவரிடம் நன்கு ஆலோசித்தபின்பே அவர்களின் பரித்துரையின்பேரில் மட்டுமே இதனை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதனை மறவாதீர்கள்.

  💢💢💢💢

  இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...  கருத்துரையிடுக

  2 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.