"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
கொத்தமல்லி - Coriander - Cilantro - Coriandrum sativum.

கொத்தமல்லி - Coriander - Cilantro - Coriandrum sativum.

கொத்தமல்லி.

Coriander.

"தனியா" என்னும் தாவரத்தைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? ... தெரியாதென்றால் வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

கொத்தமல்லி பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதன் இன்னொரு பெயர்தான் "தனியா".


தமிழில் கொத்தமல்லி என அழைக்கப்படும் இது சமஸ்கிருதத்தில் "தனியா" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சித்தா, ஆயுர்வேத மருத்துவத்திலும்கூட இது "தனியா" என்றே அழைக்கப்பட்டுவருகிறது.


  Coriandrum sativum.

  மருத்துவத்துறையில் தனியா என்று அழைக்கப்படும் கொத்தமல்லியானது தனியாகவே நோய்களை எதிர்த்து போராடுவதில் தன்னிகரில்லாதது. எனவே பலநோய்களுக்கு தீர்வாக இதனை தனியாகவே பயன்படுத்திவரலாம். இது இன்று நேற்றல்ல 5000 ஆண்டுகளுக்கும்மேல் மருத்துவ பயன்பாட்டில் இருந்துவரும் பழமையான மூலிகையாக கருதப்படுகிறது.

  தசை, எலும்பு , நரம்பு என அனைத்திலுமுள்ள பாதிப்புகளை குணமாக்கும் திறன் இதற்கு உள்ளது. இத்துணை சிறப்புவாய்ந்த கொத்தமல்லியின் சில அடிப்படையான விஷயங்களைப்பற்றி அலசுவோம் வாருங்கள்.

  கொத்து மல்லி - கொத்தமல்லி.

  Coriander - Cilantro.

  திணை :- தாவரம்.

  தாவர பிரிவு :- பூக்கும் தாவரம் (Angiosperms).

  துணை பிரிவு :- இருவித்திலை தாவரம் (Eudicots).

  தாவரத்தின் பெயர் :- கொத்தமல்லி.

  வேறு பெயர்கள் :- தனியா, தனிகம், தானியாகம், உத்தம் பரி, உரி, உருளரிசி, தேனிகை.

  ஆங்கில பெயர் :- Cilantro மற்றும் Coriander.

  இதில் "Cilantro" என்பது ஸ்பானிஷ் பெயர். இது தாவரத்தின் இலைகளையும், தண்டுகளையும் குறிப்பது. அதாவது கொத்தமல்லிக்கீரையை குறிக்கும் சொல்.

  "Coriander" என்பது சர்வதேச அளவில் கொத்தமல்லி விதைகளை குறிக்க பயன்படுத்தப்படும் ஆங்கில சொல்.

  சமஸ்கிரு பெயர் :- தனியா.

  தாவரவியல் பெயர் :- கோரியண்டிரம் சாட்டிவும் - Coriandrum sativum.

  குடும்பம் :- அப்பியசியயி - Apiaceae.

  பேரினம் :- Coriandrum.

  இனம் :- C. Sativum.

  வரிசை :- Apiales.

  தாயகம் :- ஐரோப்பா.

  பரவியுள்ள நாடுகள் :- மேற்கு ஆசியா, தெற்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க காட்டுப்பகுதிகளில் இயற்கையாகவே காணப்படுகின்றன.

  தற்காலங்களில் சீனா, இந்தியா, ரஷ்யா, பங்காளதேஷ் உட்பட பெரும்பான்மையான நாடுகளில் பயிரிடப்படுகின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மட்டும்தான் வர்த்தகரீதியாக அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

  உயரம் :- சராசரியாக 2 அடி உயரம் வளர்கின்றன.

  சுவை :- மிதமான புளிப்பு.

  காலநிலை :- இது இயல்பாக வளர்வதற்கு 17 - 27⁰ C வெப்பநிலை தேவைப்படுகிறது.

  இனப்பெருக்கம் :- இனப்பெருக்கம் விதைகள்மூலம் நடைபெறுகின்றன.

  பயன்படும் பாகங்கள் :- இலை, தண்டு, பூ, விதை, வேர்.

  பயன்பாடு :- இதன் தழைகள் உணவுப்பொருளாகவும், உணவிற்கு வாசனை தரக்கூடிய பொருளாகவும் பயன்படுகின்றன. இதன் விதைகள் மசாலா மற்றும் நோய்தீர்க்கும் மூலிகை பொருளாக பயன்படுகின்றன.

  தமிழ் பெயர்  - விளக்கம்.

  தமிழில் இதனை "கொத்தமல்லி" என அழைக்கின்றோம். ஆனால் உண்மையில் இதன் பெயர் கொத்தமல்லி அல்ல "கொத்து மல்லி".

  கொத்து மல்லி என்பதே பேச்சுவழக்கில் கொத்தமல்லி ஆனது. இந்த செடியிலுள்ள பூவின் அமைப்பைக்கொண்டே இதற்கு கொத்து மல்லி என்னும் பெயர் ஏற்பட்டது.

  Coriandrum_sativum_flower

  பொதுவாக அதிகாலையில் விழும் பனித்துளிகளை உள்வாங்கி துயில் எழும் மலர்களை "மல்லி" என அழைப்பதுண்டு. 

  இந்த பூ தனிப்பூவாக இல்லாமல் மஞ்சரியுடன் கொத்தாக பூப்பதால் "கொத்து மல்லி" என்னும் சிறப்பு பெயரை பெற்றது.

  தாவர அமைப்பு.

  கொத்துமல்லியானது குறுஞ்செடி வகையை சேர்ந்தது. மிகமெல்லிய தண்டுகளை கொண்டுள்ள இது 25 செ.மீ  முதல் 50 செ.மீ உயரம்வரை பல கிளைகளுடன் வளரக்கூடியது. இது ஒரு கீரையாகவும், நோய்தீர்க்கும் மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகின்றன. முழு தாவரமும் நறுமணத்தை கொண்டுள்ளன.

  இலைகளின் அமைப்பு.

  இலைகளின் அடிப்பகுதி பிளவுபட்ட மடல்களுடனும், வெளிப்புற விளிம்புகள் இறகுபோன்ற அமைப்புடனும், பசுமையான தோற்றத்தில் காணப்படுகின்றன.

  coriander-leaves

  இந்த இலையின் வாசனைக்கு இதிலுள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூலக்கூறுகளே காரணம். 1 கிராம் இலையை எடுத்துக்கொண்டால் அதில் 4 மி.கி. அளவில் அத்தியாவசிய எண்ணெய் சத்துக்கள் உள்ளது.

  மலர்களின் அமைப்பு.

  விதைத்த 30 நாட்களிலிருந்து 45 நாட்களுக்குள்ளாக செடிகள் பூக்க ஆரம்பித்துவிடும்.

  பூக்கள் பூ மஞ்சரிகளில் மலர்கின்றன. பல பூக்கள் ஒன்றுசேர்ந்து குடைபோன்ற அமைப்பை ஏற்படுத்துவது அழகோ அழகு.

  Coriander flower

  பூக்கள் வெண்மை நிறத்தில் அல்லது வெளிர் இளஞ்சிவப்புடன் கூடிய வெண்மை நிறத்தில் உள்ளன. வெளிப்பக்கமாக நீண்ட இதழ்களையும் உள்பக்கமாக குறுகிய இதழ்களையும் கொண்டுள்ளன. இந்த அமைப்பு மலர்களுக்கு பிறை போன்ற வடிவத்தை தருகின்றன.

  வேர்களின் அமைப்பு.

  வேர்கள் மெல்லியவை. இலைகளைவிட அதிக அளவு சுவை கொண்டவை.

  Coriander_roots

  எனவே, பலநாடுகளில் சூப் முதலான உணவுகளுக்கு சுவை கொடுக்க இதன் வேர்களை பயன்படுத்துகிறார்கள்.

  காய்களின் தன்மை.

  3 முதல் 5 மி.மீ விட்டம்கொண்ட சிறிய உருண்டையான காய்கள்.

  காயாக இருக்கும்போது பச்சை நிறத்திலும், முதிர்ந்த தருணத்தில் வெளிறிய பச்சை நிறத்திலும், உலர்ந்தபின் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும் காணப்படுகின்றன.

  Coriander pods

  இது லேசான மணம் மற்றும் சுவை கொண்டவை.

  உலர்ந்த கனிகள் வெளிப்புறமாக நீளமான பல வரிவரியான முகடுகளை கொண்டுள்ளன. ஒரு கனியினுள் 2 விதைகள் உள்ளன.

  உலர்ந்த கொத்துமல்லி கனிகள் பெரும்பாலும் மசாலாவாகவே பயன்படுத்தப்படுகின்றன. "கரம்மசாலா"வில் இதுவும் ஒரு மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. ஊறுகாய், சூப் வகைகளிலும் இது சேர்க்கப்படுகிறது. கேக்குகள், ரொட்டிகள் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

  இவைகளை லேசாக வறுக்கும்போதோ அல்லது சூடாக்கும்போதோ அவைகளின் வாசனை அதிகரிக்கின்றன. வறுக்கப்பட்ட இது சூடான மற்றும் காரமான சுவையை பெறுகின்றன.

  Coriander_seeds

  இந்த கனியினுள் இன்னொரு அதிசயமும் ஒளிந்துள்ளது. ஒரு கனியுறைக்குள் 2 விதைகள் உள்ளன. இவைகள் ஏன் இரண்டிரண்டு விதைகளாக உள்ளன என்பதற்கும் ஒரு காரணம் இருக்கின்றன.

  ஒரேயொரு விதையிருந்தால் அதில் ஒரேயொரு செடிதான் முளைக்கும். ஒரே ஒரு செடி முளைப்பதால் என்ன பிரச்சனை என்கிறீர்களா?... அங்குதான் பிரச்சனையே உள்ளது!!!....

  இச்செடியின் தண்டுப்பகுதியோ மிக மிக மெலிதானவை. இரு வித்திலைகளை தவிர்த்து மூன்றாவதாக துளிர்க்கும் இலையோ விசிறிபோல பெரிதானவை. இதனால் கொஞ்சம் வேகமாக காற்றடித்தாலே செடிகள் எளிதாக உடைந்துவிடும். இதனால் இந்த இனமே அழிந்துபோகும் ஆபத்து உள்ளதல்லவா...

  Coriander Plant

  ஆனால், அதற்கு பக்கத்திலேயே இன்னொரு செடி முளைக்கும் பட்சத்தில் "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்பதுபோல ஒன்றிற்கு ஒன்று தாங்குதலாக இருந்து மழை, காற்று இவைகளினால் எளிதில் ஒடிந்து போகாமல் இரண்டுமே தப்பித்துக்கொள்ள முடியுமல்லவா?!!!.

  எனவேதான், இயற்கை அன்னை ஒரு கனிக்குள் இரண்டு விதைகளை வைத்ததோடு மட்டுமல்லாமல் கூடவே நம்பிக்கையையும் விதைத்து இன்றுவரை அழியாமல் இவைகளை பாதுகாத்துவருகின்றாள். என்னே இயற்கையின் மகிமை!!.

  விதைகளின் தன்மை.

  விதைகள் சிறியவை. ஆனால் வாசனைகளோ பெரியவை. அதற்கு காரணம் இவைகள் வாசனை மிகுந்த எண்ணெய் சத்துக்களை ஏராளமாக கொண்டிருப்பதே. எண்ணெய்யில் வாசனை மட்டுமல்ல மருத்துவ தன்மைகளும் அதிகம். ஆதலால் விதைகளிலிருந்து எண்ணெய்கள் பிரித்தெடுக்கப்பட்டு மருத்துவ தேவைகளுக்கும், வாசனை திரவியங்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.

  தீரும் நோய்கள்.

  பூ, இலை, தண்டு, வேர், விதை என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை.

  கண்நோய், பல்நோய், அஜீரணம், வயிறு பொருமல், மலச்சிக்கல், மயக்கம், பித்த வாந்தி, இரத்தசூடு, நாவறட்சி, சிறுநீர் கடுப்பு, வாய்வு, தூக்கமின்மை, மனநோய், மூச்சடைப்பு, சளி, குளிர் காய்ச்சல், வீக்கம், தலைசுற்று, வாய்கசப்பு, மூட்டுவலி, வலிப்பு,  இரத்த மூலம், மன சோர்வு, தேக பலவீனம், தாதுநஷ்டம் முதலிய நோய்களை நீக்குகின்றன.

  இலையின் மருத்துவ குணம்.

  இலைகள் கீரையாகவும், மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இது உணவுப்பொருட்களில் சுவையூட்டும் பொருளாக சேர்க்கப்படுகிறது.

  இதில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ், மெக்னீசியம் போன்ற தாதுப்பொருட்களும், உடலுக்கு அவசியமான வைட்டமின் A ,B ,C வைட்டமின்களும் மற்றும் பீட்டா கரோட்டினும் உள்ளது. நம் உடலுக்கு தேவைப்படுகின்ற அனைத்து அத்யாவசிய தாது உப்புக்களையும் நிறைவாக கொண்டுள்ள ஒரே கீரை இதுவே.

  கொத்தமல்லி இலையில் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்தசோகை (Anemia) பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்கிறது. வைட்டமின் சத்துக்களுக்கும் குறைவில்லை. எனவே ஒவ்வாருவரும் தங்கள் வீட்டு தோட்டங்களில் இதற்கென்று ஒரு உள் ஒதுக்கீடு அளிக்கலாம்.

  coriander spinach

  இந்த கீரையானது மூளை நரம்புகளுக்கு வலுவூட்டி நினைவுத்திறனை அதிகரிக்கிறது. "அல்சைமர்" எனப்படும் நரம்பு சிதைவு பிரச்சனையை தடுத்து நிறுத்துகிறது.

  இது வாய் துர்நாற்றத்தை குறைப்பதுடன் வாய்ப்புண்களையும் ஆற்றுகிறது. தொற்று நோய்களையும் எதிர்த்து போராட உதவுகிறது.

  இது இரத்தத்தத்தில் உள்ள  டிரைகிளிஸெரைட்களை மட்டுப்படுத்துவதின்மூலம் தீங்குதரும் கொழுப்புகளை குறைக்கும் அதேவேளையில் நன்மைதரும் கொழுப்பான உயர் அடர்த்தி கொழுப்பினை அதிகரிக்கிறது. இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுப்பதுடன் இரத்த உறைதலை குறைப்பதால் மாரடைப்பு மற்றும் இதயநோய் அபாயத்தை குறைக்கிறது.

  கொத்துமல்லி தழையில் கால்சியம் சத்து அதிகமிருப்பதால் இதனை உணவில் தவறாது சேர்த்துக்கொள்ள உங்கள் எலும்புகளையும் வலிமையுடையதாக மாற்றிக்கொள்ள முடியும்.

  உடல்சூட்டை தணிக்க கொத்தமல்லி இலையை ஒரு கைப்பிடி அளவு வாயில்போட்டு மென்று தின்றுவர உடல்சூடு தணிந்து நல்ல தூக்கத்தை உண்டுபண்ணும்.

  செரிமானத்திற்கு உதவும் என்சைம்களின் (Enzymes) இயக்கத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் இன்சுலின் சுரப்பை  தூண்டும் ஆற்றலும் இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல் ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் செய்கிறது. இது உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரின் அளவை அதிகப்படுத்தி அதன்மூலம் உடலின் நச்சுக்கள் அதிக அளவில் வெளியேற உதவி செய்கிறது.

  கொத்தமல்லி இலையை அரைத்து முகத்தில் உண்டான முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு பேஸ்ட்டாக தடவிவருவதுடன் இலைசாறுகளையும் அருந்திவர முகப்பரு, கரும்புள்ளிகள் நீங்கும்.

  குறிப்பு :- உணவில் வாசனைக்காக கொத்தமல்லி தழைகள் சேர்க்கப்படும் பட்சத்தில் முதலிலேயே சேர்க்கப்படுவதில்லை. கடைசியாகவே சேர்க்கப்படுகின்றன. இதற்கு காரணம் வெப்பத்தினால் அவைகளின் சுவையும் வாசனையும் பெருமளவில் இழந்துபோவதே காரணம்.

  தோல் தடிப்பு நீங்க.

  உங்கள் உடலிலுள்ள தோல்கள் தடித்து சொரசொரப்பாக காணப்படுகிறதா? கவலை வேண்டாம்.. பசுமையான கொத்தமல்லி இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். தடித்த சொரசொரப்பான இடங்களில் இலையை கசக்கி இலையின்சாறு நன்கு படும்படி அரக்கப்பரக்க தேயுங்கள். சிலமணிநேரம் அப்படியே விட்டு அதன்பின் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள். இப்படி தொடர்ந்து செய்துவர தோலின் தடிப்பும் சொரசொரப்பும் நீங்கும்.

  கண்பார்வை தெளிவு பெற.

  கொத்தமல்லி கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட கண்பார்வை தெளிவு பெறுவதோடு உடலில் புதிய இரத்தமும் ஊறும். தொடர்ந்து 3 மாத காலம் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

  கட்டி, வீக்கம் கரைய.

  கொத்தமல்லி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தொடர்ந்து சிலநாட்கள் கட்டி உள்ள இடத்தில் வைத்து கட்டிவர கட்டி பழுத்து உடைந்து ஆறும். வீக்கமும் படிப்படியாக வற்றும்.

  கொத்தமல்லி ஜூஸ்.

  கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி.

  எலுமிச்சம்பழம் - பாதி.

  உப்பு - தேவையான அளவு.

  தண்ணீர் - தேவைப்படும் அளவில்.

  கொத்தமல்லி தழையை மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு, நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்து அதனுடன் எலுமிச்சம்பழ சாறு கலந்து கொள்ள ஜூஸ் ரெடி.

  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்கவும் இந்த ஜூஸ் உங்களுக்கு உதவும்.

  மேலும் பூஞ்சைகளால் ஏற்படும் சரும பிரச்சனைகளையும் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளன.

  இதை குடிப்பதால் இரத்தம் சுத்தமடைவதோடு புதிய இரத்தத்தையும் உற்பத்தி செய்யும். இரத்தத்தின் சர்க்கரை அளவையும் குறைக்கும். உடலுக்கு தீங்கு செய்யும் கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது. இதனால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

  பூவின் மருத்துவ குணம்.

  கொத்தமல்லிப்பூவை கஷாயம் செய்து குடித்துவர பித்தம் தொடர்பான கோளாறுகள் நீங்குவதுடன் வயிற்றுப்புண்களும் குணமாகும்.

  கொத்தமல்லி பூவுடன் பருப்பு சேர்த்து மசியல் செய்து சாப்பிட்டுவர உடல் வலிமை பெறும்.

  கொத்தமல்லி பூவை சட்டியிலிட்டு லேசாக வதக்கி அதில் 400 மி.லி நீர்விட்டு 200 மில்லி லிட்டராக வற்றக்காய்ச்சி வடிகட்டி காலை,மாலை 3 அவுன்ஸ் அளவில் அருந்திவர பித்தம் நீங்குவதுடன் அஜீரணம் தொடர்பான கோளாறுகளும் நீங்கும்.

  விதைகளின் மருத்துவ குணம்.

  கொத்தமல்லி விதைகள் சிறுநீர்ப்பாதை தொற்றுநோய்களை ஏற்படுத்தும் பாஃடீரியாக்களை எதிர்த்து போராடுகிறது.

  இரத்த கொழுப்பு அமிலங்களை குறைக்கிறது. இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரை பெருக்குகிறது.

  பசியை அதிகரித்து செரிமானத்திற்கு உதவுகிறது. நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் வலிமையையும் உடலுக்கு கொடுக்கிறது. கல்லீரல் மற்றும் சீறுநீரகங்களின் செயல்பாட்டை சிறப்பானதாக மாற்றுகிறது.

  கொத்தமல்லி விதையானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது என பல்வேறு ஆராய்ச்சிகள்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதால் 10 கிராம் அளவு தனியாவை தண்ணீரில் ஒன்றிரண்டாக சிதைத்துப்போட்டு இரவுமுழுவதும் ஊறவிட்டு பகலில் அந்த தண்ணீரை வடிகட்டி சாப்பிட நீரழிவுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்.

  கொத்துமல்லி கஷாயத்தை கொண்டு தொடர்ந்து வாய் கொப்பளித்துவர பற்கள் சம்பந்தமான நோய்கள் நீங்கி பற்கள் வலிமை பெறும்.

  கொத்தமல்லி விதைகளை வாயில்போட்டு  மெல்வதால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

  அளவுக்கு மீறி மது அருந்திவிட்டு தன்னிலை மறந்து மயங்கி கிடப்பவர்களின் போதையை தெளியவைப்பதற்கு கொத்தமல்லிவிதை கைகொடுக்கிறது. கொத்தமல்லிவிதையை லேசாகவறுத்து பொடிசெய்து தண்ணீரிலே கலந்து உள்ளுக்கு கொடுக்க போதை தெளியும்.

  அரை லிட்டர் நீரில் 5 கிராம் மல்லித்தூள் போட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து தினம் இருவேளை குடிக்க உடல்சூடு, களைப்பு, தாகம், நாக்குவறட்சி, வயிற்றுபோக்கு, இரத்தமூலம் நீங்குவதுடன் இதயமும் பலமாகும்.

  கொத்தமல்லி எண்ணெய் - பயன்கள்.

  கொத்தமல்லி விதைகளில் மொத்த எடையில் 1 % எண்ணெய் சத்து உள்ளது. இது வாசனையும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளதால் மருத்துவ துறையில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

  coriander-oil

  இதில் எண்ணெய்களுக்கான 11 மூலக்கூறுகள் அடங்கியுள்ளன. அவைகளுள் "லினினூல்" என்னும் கொழுப்பு அமில மூலக்கூறுதான் அதிக அளவில் உள்ளன. 60 % இதுவே நிரம்பியுள்ளது. பிற  வாசனை மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் 10 % ற்கும் குறைவாகவே உள்ளன. இந்த எண்ணெயில் அடங்கியுள்ள முக்கியமான கொழுப்பு அமில மூலக்கூறுகளாவன :- 

  • லினினூல் (60%)
  • ஆல்பா பினீன்
  • காமா டெர்பினீன்
  • ஜெரனைல் அசிடேட்
  • ஜெரானியோல்
  • கற்பூரம்
  • மைர்சீன்
  • லிமோனீன்

  இந்த எண்ணெய்யை நீருடன் கலந்து மவுத்வாஷாக பயன்படுத்திவர வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடலாம். தண்ணீரில் கலந்து தேகத்தை அலம்பிவர வியர்வை நாற்றம் நீங்கும்.

  கொத்தமல்லி எண்ணையில் காணப்படும் "சிட்ரோநெல்லால்" வாய்ப்புண்களை குணமாக்கும் தன்மை கொண்டது.

  இதனை வயதுக்கேற்ப 1 முதல் 5 துளிவரை சாப்பிட்டுவர உணவு செரியாமை, அக்கினி மந்தம், வயிற்று பொருமல், கழிச்சல், வாய்வு முதலியன நீங்கும். கீல்வாதத்தால் ஏற்படும் வலி, வீக்கங்களுக்கு மேற்பூச்சாக பயன்படுத்திவரலாம்.

  ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணையுடன் கலந்து உச்சந்தலையில் தடவிவர தலைநோய்கள் நீங்கும்.

  சாகுபடி.

  இனி இதனை தோட்டங்களில் சாகுபடி செய்து பலனடைவது எப்படி என்பதனை பார்ப்போம்...

  ஜீலை மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை விதைப்பதற்கு ஏற்ற காலம்.

  கீரைகளுக்காக பயிர்செய்யப்படும் மல்லிக்கு அதிக வெயில் ஆகாது. ஏனெனில் வெயிலில் அதிக அளவு செடி தழைக்காது. எனவே கோடைகாலத்தை தவிர்த்து குளிர்காலங்களில் பயிர்செய்யலாம். கோடைகாலங்களில் பயிர்செய்ய முற்பட்டால் அதிக நிழலான இடம்பார்த்தே நடவு செய்யவேண்டும். இதன்மூலமாகவே அதிக அளவு கீரைகளைப் பெற முடியும்.

  ஒரு ஏக்கர் பயிர்செய்ய 15 கிலோ விதைகள் தேவைப்படுகின்றன.

  இதனை விதைப்பதற்கு முன்னால் நிலத்தினை இரண்டு மூன்று தடவை நன்கு உழுது போதிய அளவு தொழுஉரம் இட்டு 3 அடி அகலம் கொண்ட மேட்டுப்பாத்தி அமைத்து நீர் பாய்ச்சி அதன் பின் விதைக்கலாம். அல்லது மானாவாரியாககூட விதைக்கலாம்.

  விதைப்பதற்குமுன் 15 கிலோ தழைச்சத்து, 30 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல்சத்து அடியுரமாக இட வேண்டும்.

  விதைப்பதற்குமுன் கொத்துமல்லி விதைகளை உள்ளேயுள்ள விதைகளுக்கு சேதாரமில்லாமல் கைகளால் தேய்த்து இரண்டாக உடைத்து நீரில் 1 நாள் அல்லது 12 மணிநேரம் ஊறவைத்து எடுத்து 1 சதவிகித "பொட்டாசியம் டை ஹைட்ரஜன்" பாஸ்பேட் கரைசலில் 1 மணிநேரம் ஊறவைத்து எடுத்து நிழலில் காயவைத்து விதைநேர்த்தி செய்து அதன்பின்பே விதைக்க வேண்டும்.

  இரண்டாக உடைக்கப்படாத விதைகள் முளைக்காதா? என்றால்.. முளைக்கலாம்.. அல்லது முளைக்காமலும் போகலாம்... அல்லது முளைக்க இன்னும் அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். எனவே உடைத்து விதைத்தால் விதைகளின் முளைப்புத்திறன் பன்மடங்கு அதிகரிக்கும்.

  விதைக்கும்போது அதிக ஆழத்தில் விதைத்தால் முளைப்பதில்லை. எனவே 0.6 முதல் 1.2 செ.மீ ஆழத்தில் இருக்கும்படி நேர்கோட்டில் விதைக்க வேண்டும்.

  ஒரு விதைக்கும் இன்னொரு விதைக்குமான இடைவெளி 5 முதல் 10 செ.மீ அளவிலும் இரு வரிசைகளுக்கிடையில் உள்ள இடைவெளி 30 செ.மீ அளவில் இருக்கும்படி பார்த்துகொள்ளவேண்டும்.

  விதைத்த அன்றே முதல் நீர்ப்பாசனம் அளிக்கவேண்டும். மூன்றாம்நாளில் இரண்டாவது நீர்பாசனமும், அதன்பின் தொடர்ச்சியாக 4 அல்லது 6 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாசனம் கொடுத்துவரவேண்டும்.

  இதற்கு வடிகால் வசதி மிகமிக அவசியம். ஏனெனில் அதிகப்படியான நீர் வேர் பகுதிகளில் தங்கினால் வேர்கள் அழுகி செடிகள் முழுவதுமாக சாய்ந்துவிடும்.

  தற்காலங்களில் சொட்டுநீர்ப்பாசனம் மூலமாகவே நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது.

  விதைத்த 10 முதல் 15 நாட்களில் விதைகள் முளைவிட ஆரம்பிக்கும்.

  அவ்வப்போது களையெடுத்து பராமரிக்கவேண்டியது அவசியம். விதைத்த 30 நாட்களிலிருந்து 40 நாட்களில் கீரைகளை அறுவடை செய்யலாம். விதைத்த 40 நாட்களிலிருந்து 45 நாட்களுக்குள்ளாக பூக்க ஆரம்பித்துவிடும். ரகத்தினை பொறுத்து 90 அல்லது 140 நாட்களுக்குள் விதைகளை அறுவடை செய்யலாம்.

  தற்போது இது வாழையில் இது ஊடுபயிராகவும் பயிரிடப்பட்டுவருகிறது.

  Cultivation of coriander

  வீடுகளில்கூட இதனை வளர்த்துவரலாம். மணல் கலந்த செம்மண் இதற்கு தேவை. மணலுடன் தொழுஉரம், மண்புழு உரம் மற்றும் ஒருகைப்பிடியளவு வேப்பம்பிண்ணாக்கு சேர்த்து நன்கு கலந்து கொத்தி சமப்படுத்தி கொத்தமல்லி விதைகளை தூவி நீர்தெளித்துவர முளைவிட்டு துளிர்க்கும். இதன்மூலம் உங்களுக்கு தேவையான பூச்சிமருத்துகள் தெளிக்காத பிரஷ் ஆன கீரைகளை உங்கள் தோட்டங்களிலேயே பெற முடியும்.

  கீரைகளை அறுவடை செய்ய முழுமையாக வேருடன் அறுவடை செய்வதே சிறப்பு. அரைக்கீரை யை அறுவடை செய்வதுபோல தண்டுகளை மட்டும் அறுவடை செய்வதால் மீண்டும் அவைகள் முன்போல் வேகமாக துளிர்ப்பதில்லை. மீண்டும் தேவையெனில் புதிதாக விதை விதைத்து மீண்டும் பயிர்செய்துகொள்ளலாம்.

  கொத்தமல்லி ரகங்கள்.

  இதில் பலவகையான ரகங்கள் உள்ளன. அவைகளை கீழே காணலாம்.

  • CO 1
  • CO 2
  • CO 3
  • CO (CR) 4
  • சாதனா (CS-4)
  • சிந்து (CS-2)
  • சுஸ்திரா (LCC-219)
  • சுதா (LCC-128)
  • சுவாதி (CS-6)
  • சுகுணா (LCC-236)
  • APHU தனியா -1 (LCC-170)
  • சுருச்சி (LCC-234)

  இவைகளுடன் CS 287, கரண், CIMPOS-33, GAU 1, UD 1, UD 2, UD 20, UD 21 என பல ரகங்களும் உள்ளன.

  CO 1

  இது அதிக மகசூல்தரும் மிக உயர்ந்த ரகம் என்ற பெருமையை பெறுவதோடு 110 நாட்களில் மகசூல்தரும் நடுத்தரகால ரகமும்கூட. ஹெக்டேருக்கு 700 முதல் அதிகப்படியாக 800 கிலோவரை விளைச்சலை அள்ளித்தருகிறது.

  CO 2

  இது நூற்புழுக்களிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும் திறனுள்ளது. 90-100 நாட்களில் மகசூல்தரும் நடுத்தரகால ரகம். மகசூல் ஹெக்டேருக்கு 600 முதல் 700 கிலோவரை தருகிறது.

  CO 3

  இது வாடல் நோய்களை எதிர்த்து வளரும் தன்மையுடையது. இதுவும் நடுத்தரகால ரகம்தான். 85-90 நாட்களில் மகசூலை தருகின்றன. ஹெக்டேருக்கு 600 முதல் 700 கிலோவரை மகசூல் கிடைக்கிறது.

  CO (CR) 4

  இது ஒரு குறுகியகால பயிர். அதிக அளவில் மகசூல் தரக்கூடியது. 65 முதல் 70 நாட்களில் மகசூல் தருகிறது. விரைவாக வளர்ந்து வெளிறிய மஞ்சள்நிற உலர்கனிகளை கொடுக்கிறது.

  சாதனா (CS-4)

  இந்த ரகமானது அசுவினி, செடிப்பேன் முதலிய பூச்சிகளை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளதால் பூச்சிகளால் இந்த ரகம் அதிகம் பாதிப்படைவதில்லை. சிறந்த இலைகளுக்காகவும், விதைகளுக்காகவும் வளர்க்கப்படும் இவைகள் 27 அங்குல உயரம்வரை வளரும் இயல்புடையது. ஒரு ஹெக்டேருக்கு 1000 முதல் 1100 கிலோவரை விதைகளை மகசூலாக பெறலாம்.

  சுவாதி (CS-6)

  இதனை பூஞ்சை நோய்கள் எளிதில் பாதிப்பதில்லை. அதுமட்டுமல்ல 80-85 நாட்களில் மகசூல்தரும் குறுகியகால ரகம். ஹெக்டேருக்கு 900 கிலோ விதைகளை மகசூலாக பெறமுடியும்.

  சிந்து (CS-2)

  இதுவும் ஒரு நடுத்தரவகை ரகம்தான். 95-100 நாட்களில் மகசூல்தரும் நடுத்தரகால ரகம். ஆனால் உயரமாக அதிக கிளைகளை கொண்டு வளரும் ரகம். 80 முதல் 85 செ. மீ உயரத்துடன் புதர்போல் வளரும் இதனை பயிரிடும் பட்சத்தில் ஹெக்டேருக்கு 1000 முதல் 1100 கிலோ விதைகளை மகசூலாக பெறமுடியும்.

  சுதா (LCC-128)

  இதுவும் நடுத்தரவகை ரகம்தான். இதில் கிடைக்கும் விதையானது சிறிதாகவும் இல்லாமல் பெரிதாகவும் இல்லாமல் நடுத்தர அளவில் இருக்கின்றன.

  இன்னும் இதிலொரு சிறப்பு என்னவென்றால் இதில் கிடைக்கும் கொத்தமல்லிவிதையானது பிற கொத்தமல்லி விதைகளைப்போல் உருண்டையாக இல்லாமல் கொஞ்சூண்டு நீளமாக இருக்கின்றன.

  இது 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். ஹெக்டேருக்கு 800 முதல் 1000 கிலோவாரை மகசூல் கொடுக்கும். இந்த விதையில் 0.40% வரை எண்ணெய் சத்துக்கள் உள்ளன.

  APHU தனியா -1 (LCC-170)

  இதுவும் நடுத்தரவகை ரகம்தான். 85 முதல் 90 நாட்களில் மகசூலை பெறமுடியும். இதிலுள்ள தனித்துவம் என்னவெனில் கொஞ்சம் நீளமாக இருக்கும் இதன் விதையானது பிற ரக விதைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் உறுதியானது. 850 முதல் 1000 கிலோவரை மகசூல் கொடுக்கும் இதன் விதையில் 0.40% வரை எண்ணெய் சத்துக்கள் உள்ளன.

  சுகுணா (LCC-236)

  இதுவும் நடுத்தரகால ரகம்தான். 90-95 நாட்களில் மகசூலை தருகின்றன. இதன் முன் ரகமான "APHU தனியா -1 (LCC-170)" போல இது உறுதியானது அல்ல. மாறாக மெல்லிய விதை ஓடுகளையே கொண்டுள்ளன. விதைகள் முட்டை வடிவம் கொண்டது. இந்த ரகத்தில் மகசூலும் அதிகம். விதைகளில் எண்ணெய் சத்துக்களும் அதிகம். மகசூலானது ஹெக்டேருக்கு 800 முதல் 1000 கிலோவரை கிடைக்கின்றன. எண்ணெய் சத்துக்கள் 0.52% வரை உள்ளன.

  சுருச்சி (LCC-234)

  இது பிற அனைத்து வகைகளையும் விட அதிக மகசூல்தரும் ரகமாகும். குறிப்பாக சொல்லப்போனால் செழிப்பான கீரைகளுக்காக வளர்க்கப்படவேண்டிய ரகம். விதைத்த 35 முதல் 55 நாட்களில் கீரைகள் அறுவடைக்கு வந்துவிடும். ஹெக்டேருக்கு 4 முதல் 6 டன் கீரைகளையும் அறுவடை செய்யமுடியும். இதில் ஹெக்டேருக்கு 1000 முதல் 1200 கிலோ விதைகளை மகசூலாக பெறமுடியும். இதில் எண்ணெய் சத்துக்கள் 0.15 % உள்ளன.

  சுஸ்திரா (LCC-219)

  இதுவும் அதிகம் மகசூல் தரும் ரகம்தான். 85-90 நாட்களில் பலன்தரும் நடுத்தரகால பயிர். ஹெக்டேருக்கு 1000 முதல் 1200 கிலோ விதைகளை மகசூலாக பெறமுடியும். இது எண்ணெய் சத்துக்களை  0.59 % வரை கொண்டுள்ளன.

  நோய் பாதிப்புகள்.

  களை பாதிப்பு.

  இவைகளை அதிக அளவில் பாதிப்பது களைச்செடிகளே. எனவே அவ்வப்போது கவனமுடன் களைகளை அகற்றிவரவேண்டும். விதைத்த உடனேயே பெண்டிமெதலின் 30 EC @ (Pendimethalin 30 EC @) என்னும் களைக்கொல்லி மருந்தை தெளிக்க பெரிதாக வளரும் களைகளை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும்.

  வேர் அழுகல் நோய்.

  அடுத்து இதனை அதிகம் பாதிப்பது வேர் அழுகல் நோய்கள். வேர்ப்பகுதியில் அதிக அளவு நீர் தேங்கிநிற்கும் பட்சத்தில் பூஞ்சாண தொற்று ஏற்பட்டு வேர்கள் அழுக ஆரம்பிக்கின்றன. எனவே வேர்அழுகல் நோய்கள் பாதிக்காமல் தடுக்க வேர்களில் நீர்த்தங்காதபடிக்கு சிறந்த வடிகால்வசதி அவசியம்.

  வெள்ளை ஈக்கள்.

  அடுத்ததாக வெள்ளை ஈக்களால் செடிகள் அதிக அளவில் பாதிப்படைகின்றன. இவைகளை அழிக்க எண்ணெய் தடவிய அட்டைப்பொறிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

  அல்லது, டைம்தோயேட் (Dimethoate) என்னும் மருந்தை 1 லிட்டர் நீரில் 2 ml அளவில் கலந்து தெளிக்கலாம்.

  இலைப்பேன்கள்.

  இதனை பாதிக்கும் மற்றொரு பூச்சி இலைப்பேன்கள். இவைகள் இலைகளின் அடியில் இருந்துகொண்டு சாற்றினை உறிச்சி இலைகளை சாறுகள் அற்ற வெளிர்தன்மைக்கு மாற்றுகின்றன.

  இதனை கட்டுப்படுத்த 2 லிட்டர் வேப்பெண்ணெய்யை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளில் தெளிக்கலாம்.

  அல்லது, வேப்பம்பிண்ணாக்கை தண்ணீரில் கரைத்து இலைகளில் தெளித்தும் இதனை கட்டுப்படுத்தலாம்.

  அல்லது, மோனோக்ரோடோபாஸ் (Monocrotophos) மருந்தை 1 லிட்டர் நீரில் 1.6 மில்லி அளவில் கலந்து 10 லிருந்து 15 நாள் இடைவெளியில் தெளித்துவரவும்.

  இலைப்புழுக்கள்.

  இதன் இலைகளை பச்சை நிறத்திலான புழுக்கள் சாப்பிடுவதால் மகசூல் பெருமளவில் பாதிக்கும். செடிகள் சிறியதாக இருக்கும்போதே வேப்பெண்ணய் தெளித்து வருவதால் இப்புழுக்களை ஆரம்பத்திலேயே தடுத்துவிடலாம். இப்புழுக்கள் இருப்பதை கண்ணில் கண்டால் உடனே அவைகளை கைகளால் எடுத்து அழித்துவிடுவது அவைகள் மேலும் பரவுவதை தடுக்கும்.

  புகையிலை கம்பளி பூச்சி.

  மோனோக்ரோடோபாஸ் (Monocrotophos) மருந்தை 1 லிட்டர் நீரில் 1.5 மில்லி அளவில் கலந்து தெளித்துவரவும்.

  மாவுப்பூச்சி.

  மாவுப்பூச்சிகளும் பெருமளவில் மகசூலை பாதிக்கும். இதனை கட்டுப்படுத்த வேப்பெண்ணைகளை நீரில் கலந்து தெளித்துவரலாம்.

  அசுவினி பூச்சி.

  மாவு பூச்சிகளைப்போல அசுவினி பூச்சி பூச்சிகளின் செடிகளை கடுமையாக பாதிக்கின்றன. இதற்கும் வேப்பெண்ணைகளை நீரில் கலந்து தெளிப்பதே சிறந்தவழி.

  aphids - Cilantro

  அல்லது, மோனோக்ரோடோபாஸ் (Monocrotophos) மருந்தை 1 லிட்டர் நீரில் 1.6 மில்லி அளவில் கலந்து 10 லிருந்து 15 நாள் இடைவெளியில் தெளித்துவரவும்.

  அல்லது, மீதைல் டெமட்டன் 20 இ.சி என்ற மருந்தை ஏக்கருக்கு 1 லிட்டர் என்ற விகிதாசாரத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

  இலைப்புள்ளி நோய்.

  பாஃடீரியா பாதிப்பதால் ஏற்படும் நோய் இது. இலை நரம்புகளினூடாக தோன்றும் சிறிய புள்ளிகள் நாளாக நாளாக பெரிதாகி அடர்ந்த பழுப்பு நிறமாக மாறும். தண்டுகளில் பழுப்புநிற கோடுகள் உருவாகும்.

  விதைகள் மூலமாகவும், இலைகளில் எந்நேரமும் ஈரம் பட்டுக்கொண்டே இருப்பதாலும் இந்நோய் ஏற்படுகிறது. எனவே விதைப்பதற்கு தரமான விதைகளை தேர்வுசெய்ய வேண்டும். நீர்ப்பாசனம் செய்யும்போது இலைகளில் நீர்ப்படுவதை தவிர்க்க வேண்டும்.

  குறிப்பு :- இத்தாவரம் கீரைகளுக்காக பயிர்செய்யப்படும் பட்சத்தில் எந்த பூச்சித்தாக்குதல்கள் ஏற்பட்டாலும் இது குறுகியகால தழை சார்ந்த உணவுப்பயிர் என்பதால் இரசாயன பூச்சிமருந்துகள் பாவிப்பதை தவிர்க்க வேண்டும்.

  ஊட்ட சத்துக்களின் விபரம்.

  கொத்தமல்லியில் கீரைகள் மற்றும் விதைகள் இரண்டுமே உணவாக பயன்படுத்தப்படுகின்றன. இரண்டுமே சத்துக்கள் நிரம்பியவைதான் என்றாலும் கொத்தமல்லி கீரையில் வைட்டமின்கள் அதிகம். ஆனால் தாது சத்துக்கள் குறைவாக உள்ளன. இதற்கு மாறாக கொத்தமல்லி விதையிலோ வைட்டமின்கள் குறைவாகவும் தாதுசத்துக்கள் அதிகமாகவும் உள்ளன.

  கீரையிலுள்ள சத்துக்களின் விபரம்.

  [100 கிராம் கீரையில்]

  Tamil English Amount of Nutrients
  ஆற்றல் Energy 95 kJ
  கார்போஹைட்ரேட்டுகள் Carbohydrates 3. 67 g
  சர்க்கரை Sugars 0. 87 g
  நார்ச்சத்து Fiber 2. 80 g
  கொழுப்பு Fat 0. 52 g
  MUFA கொழுப்பு MUFA Fat 0.28 g
  PUFA கொழுப்பு PUFA Fat 0.04 g
  நிறைவுற்ற கொழுப்பு Saturated Fat 0.01 g
  புரதம் Protein 2. 13 g
  கரோட்டின் பீட்டா Carotene beta 3930 𝜇g
  கரோட்டின் ஆல்பா Carotene alpha 36 𝜇g
  கிரிப்டோக்சாண்டின் பீட்டா Cryptoxanthin beta 202 𝜇g
  பீட்டா-சிட்டோஸ்டெரால் Beta-sitosterol 2 mg
  லுடீன் - ஜியாகாந்தின் Lutein - zeaxanthin 865 𝜇g
  தயமின் Thiamine (B₁) 0. 07 mg
  ரைபோஃபிளேவின் Riboflavin(B₂) 0. 16 mg
  நியாசின் Niacin(B₃) 1. 11 mg
  வைட்டமின் A Vitamin A 337 𝜇g
  வைட்டமின் B5 Pantothenic acid 0. 57 mg
  வைட்டமின் B6 Pyridoxine 0. 15 mg
  வைட்டமின் B9 Folate 62 𝜇g
  வைட்டமின் C Vitamin C 27 mg
  வைட்டமின் E Vitamin E 2. 5 mg
  வைட்டமின் K Vitamin K 310 𝜇g
  கோலின் Choline 12.8 mg
  கால்சியம் Calcium 67 mg
  பாஸ்பரஸ் Phosphorus 48 mg
  இரும்பு Iron 1.77 mg
  தாமிரம் Copper 0.23 mg
  துத்தநாகம் Zinc 0.50 mg
  மெக்னீசியம் Magnesium 26 mg
  மாங்கனீஸ் Manganese 0.43 mg
  செலீனியம் Selenium 0.9 𝜇g
  பொட்டாசியம் Potassium 521 mg
  சோடியம் Sodium 46 mg
  ஸ்டிக்மாஸ்டரால் Stigmasterol 3 mg
  பைட்டோஸ்டெரால்ஸ் Phytosterols 5 mg
  நீர் Water 92.2 %

  கொத்தமல்லி விதையிலுள்ள சத்துக்கள்.

  சதவீதத்தில் (%)

  Tamil English Amount of Nutrients
  பொட்டாசியம் Potassium 3.6 %
  நார்சத்து Fiber 16.8 %
  இரும்பு Iron 9.1 %
  தாமிரம் Copper 4.9 %
  மாங்கனீஸ் Manganese 9.5 %
  கால்சியம் Calcium 7.1 %
  மெக்னீசியம் Magnesium 8.2 %
  பாஸ்பரஸ் Phosphorus 4.1 %
  செலினியம் Selenium] 3.7 %
  துத்தநாகம் Zinc 3.1 %
  நீர் Water 8.9 %

  இவைகளுடன் வைட்டமின் A மற்றும் வைட்டமின் K யும் நிறையவே உள்ளன.

  கொத்தமல்லி - தீங்குகள்.

  பொதுவாக கொத்தமல்லி உடலுக்கு அதிக அளவு நன்மை மட்டுமே தரக்கூடியவை. பெரும்பாலும் இவைகளால் உடலுக்கு தீங்கு இல்லையென்றே சொல்லவேண்டும். ஆனால் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அவ்வாறானவர்கள் அளவினை குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

  இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கலாம். எனவே உங்களுக்கு சர்க்கரைநோய் இருக்கும் பட்சத்தில் அதற்கான மருந்து உட்கொண்டிருக்கும் வேளையில் இந்த கீரையையும் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உங்கள் சர்க்கரை அளவை கவனமுடன் கண்காணித்து வாருங்கள்.

  அதேபோல் உங்களுக்கு அறுவைசிகிச்சை எதுவும் நிகழ்த்தப்பட இருந்தால் அறுவை சிகிச்சை தொடங்குவதற்கு இரண்டுவாரத்திற்கு முன்பிருந்தே கொத்தமல்லி கீரை சாப்பிடுவதை நிறுத்திவிடவும். ஏனெனில் இவைகள் இரத்தம் உறைதலை சிறிதளவு கட்டுப்படுத்துகின்றன.

  கொத்தமல்லி இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். எனவே இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்னையுள்ளவர்கள் இரத்த அழுத்தத்தை அவ்வப்போது கவனித்துவருவது அவசியம்.

  கொத்தமல்லி அதிகமாக உண்டால் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். அவை உதடு மற்றும் நாக்குகளில் வீக்கம், அரிப்பு, படை நோய், இருமல், வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுபோக்கு, மூச்சு திணறல், சுவாசிப்பதில் சிரமம், தலைசுற்றல், விழுங்குவதில் சிரமம், முகம் வீங்குதல் முதலியன.

  எனவே, கொத்தமல்லி அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை எடுக்கும்போது மேற்குறிப்பிட்ட பாதிப்புகள் உங்கள் உடலில் தென்பட்டால் அளவினை குறைத்துக்கொள்ளவும்.

  சிலர் இதன் கீரையை சுவையாக உணர்கின்றனர். இன்னும் சிலரோ இதனை சுவையாக அங்கீகரிப்பதில்லை. சோப்பின் சுவையை கொண்டிருப்பதாக உணர்கின்றனர். இப்படியான அலர்ஜி உள்ளவர்கள் கொத்தமல்லி தழைகளை உணவில் சேர்ப்பதை தவிர்க்கலாம்.

  எச்சரிக்கை.

  கொத்தமல்லியும், பார்த்தீனியமும்.

  பார்த்தீனியம் என்பது மனித உடலுக்கு மட்டுமல்லாது அனைத்து விலங்குகளுக்கும் தீங்கிழைக்கும் குறுஞ்செடி.

  இதில் பார்த்தீரின், ஹிஸ்டிரின், ஹைமினின், அம்புரோசின் உள்ளிட்ட நச்சுக்கள் உள்ளதால் இவைகள் மனிதர்களுக்கு மட்டுமல்லாது கால்நடைகளுக்கும் மிகப்பெரிய தீங்குதரும் களைச்செடியாக அனைத்து இடங்களிலும் தற்போது வேகமாக பரவிவருகிறது.

  இந்த பார்த்தீனியம் செடியால் மூட்டுவலி, சுவாசக்கோளாறு, தோல்வியாதி, அலர்ஜி, அரிப்பு, கண்ணெரிச்சல், கிட்னி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதன் மகரந்தங்களை சுவாசிப்பதால் ஆஸ்துமா மற்றும் சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

  இப்போது பிரச்சனை என்னவென்றால் கொத்தமல்லி விளைவிக்கும் இடங்களிலும் அவைகளின் ஊடாக களைச்செடிகளாக இவைகள் வளர்ந்துவிடுகின்றன. கொத்து மல்லியின் இலைகளும் பார்த்தீனியத்தின் இலைகளும் பார்ப்பதற்கு ஒன்றுபோல இருந்தாலும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆனால் மேலோட்டமாக பார்க்கையில் வேறுபாடுகள் சட்டென புலப்படுவதில்லை.

  Coriander & Parthenium

  எனவே, கொத்துமல்லி கீரை அறுவடையின்போது எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும்கூட மேலோட்டமாக பார்க்கும்போது இரு இலைகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் தெரிவதில்லை என்பதால் சிலநேரங்களில் கொத்துமல்லி தழைகளுடன் சேர்ந்து விற்பனைக்கு வந்துவிடுகின்றன.

  எனவே, கடைகளில் கொத்துமல்லி கீரை வாங்கி பயன்படுத்துவதற்கு முன் அதில் வேறு எதாவது களைச்செடிகள் உள்ளதா என்பதனை நன்கு கவனமுடன் ஆராய்ந்து பார்த்து அதன்பின் சமையலுக்கு பயன்படுத்தவும்.

  Coriander & Parthenium plant

  அதுமட்டுமல்லாது கொத்துமல்லி கீரையின் இலைகளில் பார்த்தீனிய செடியின் மகரந்தம் மற்றும் அதன் நுண்ணிய மைக்ரோ அளவுள்ள விதைகள் கண்டிப்பாக ஒட்டியபடி இருக்குமாதலாலும், இந்த மகரந்தம், விதைகள் கூட மனித உடலுக்கு தீங்கிழைப்பவை என்பதால் கொத்தமல்லி கீரையை மிக நன்றாக நீரினால் சுத்தம் செய்தபின்பே சமையலுக்கோ, மருத்துவத்திற்கோ பயன்படுத்தப்படவேண்டும் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  4 கருத்துகள்

  1. ஆமாம் கொத்தமல்லியுனுடன் பார்த்தீனியமும் சேர்ந்து வரும் சில சமயம். மிகவும் ஆய்ந்து பார்த்து எடுப்பதுண்டு. அது போல நன்றாகக் கழுவித்தான் பயன்ப்டுத்துவதும்.

   நல்ல தகவல்கள்.

   துளசிதரன்

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நன்று சகோதரி! நாம் உட்கொள்ளும் உணவு ஆரோக்கியமானதாக இருந்தால்தான் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே உணவுபொருட்களை கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டியது மிக மிக அவசியம். தங்கள் கருத்துகளுக்கு நன்றி !!!

    நீக்கு
  2. அருமையான விளக்கங்கள்...

   கொத்தமல்லி : பார்த்தவுடன் என் மனதிற்கு புதுப்பொலிவுடன் உற்சாகம் தரும்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மை ஐயா! ரசித்தால் மனதிற்கும், புசித்தால் உடலுக்கும் உற்சாகம் தரும் அற்புத மல்லி ... கொத்தமல்லி மட்டுமே !!!

    நீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.