அரைக்கீரை - Amaranthus dubius.

Amaranthus dubius.

உடலுக்கு அதிக அளவு நன்மை தரக்கூடிய அதேவேளையில் மிக எளிதாக கிடைக்கக்கூடிய உணவுப்பொருளாக கீரைகளைக் குறிப்பிடலாம். இதில் உடலுக்கு அத்தியாவசிய தேவையான உலோக மற்றும் உப்பு சத்துக்களும், உயிர் சத்தாகிய வைட்டமின்களும் நிறையவே உள்ளன.  குறிப்பாக, எலும்பு வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் சத்துக்கள் கீரைகளில் ஏராளமாக உள்ளன. இரத்த உற்பத்திக்கு ஆதாரமான இரும்பு சத்துக்கும் பஞ்சமில்லை. எனவே நாம் அன்றாட உணவில் அவசியம் இடம்பெற வேண்டியது கீரைகள் என்றால் அது மிகையில்லை.

  Arai keerai.

  கீரைகளில் பலவகையான கீரைகள் உண்டென்றாலும் அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு மிக அதிக அளவில் நன்மை தருவது அரைக்கீரை (Arai keerai) எனலாம்.

  அரைக்கீரையை பற்றி அறியாதவர்கள் மிகமிக குறைவே. இது குத்துச் செடியாக வளரும் பசுமையான தாவர இனம். தண்டுக்கீரை இனத்தை சார்ந்தது.

  இது தென்னிந்தியாவில் வீட்டு தோட்டங்களிலும், விவசாய நிலங்களிலும் பயிரிடப்படும் மிக முக்கியமானதொரு கீரையாகும்.

  தேவைக்கேற்ப இதன் தண்டு மற்றும் இலைகளை அறுத்து எடுத்தாலும் மீண்டும் மீண்டும் துளிர்விட்டு வேகமாக வளரும் இயல்புடையது. அதனாலேயே இது "அறுகீரை" என்றும் "அறுப்புக்கீரை" என்றும் அழைக்கப்படுகிறது.

  இந்த பதிவில் பலவிதங்களிலும் சிறப்புப் பொருந்திய அரைக்கீரையைப்பற்றி கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

  அரைக்கீரை.

  திணை :- தாவரம்.

  தாயகம் :- ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா.

  தாவரவியல் பெயர் :- அமராந்தஸ் டூபியஸ். (Amaranthus dubius).

  பொதுவான பெயர் :- Spleen Amaranth.

  தமிழில் பெயர் :- அரைக்கீரை மற்றும் அறுகீரை.

  வரிசை :- காரியோபில்லேஸ். (Caryophyllales).

  குடும்பம் :- அமரந்தேசே. (Amaranthaceae).

  பேரினம் :- அமராந்தஸ். (Amaranthus).

  இனம் :- ஏ. டூபியஸ். (Amaranthus dubius).

  வளரும் பருவநிலை :- வெப்ப மண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் வளருகின்றன.

  பயன்பாடு :- மூலிகையாகவும், உணவாகவும் பயன்படுகிறது.

  காணப்படும் இடங்கள் :- இது தற்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணக்கிடைக்கின்றன. அமெரிக்கா(America), ஆப்பிரிக்கா (Africa), ஆசியா (Asia), ஆஸ்திரேலியா (Australia), பிரான்ஸ் (France), ஜெர்மனி (Germany), கென்யா (Kenya) மற்றும் பசிபிக் பகுதிகளில் இயற்கையாகவே வளருகின்றன.

  வகைகள்.

  இந்த அரைக்கீரையில் சிற்சில மாற்றங்களுடன் பத்திற்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன என்றாலும் குறிப்பாக இருவகைகள் பிரபலமாக உள்ளன. ஒன்று "பச்சை" மற்றொன்று "சிவப்பு".


  Arai keerai - green


  Arai keerai - red


  பச்சை அரைக்கீரையானது தண்டு, இலை முழுவதுமே பச்சை நிறத்தில் காணப்படும். ஆனால் சிவப்பு நிற அரைக்கீரையானது இலைகளின் மேற்பகுதி அடர் பச்சை நிறத்திலும் இலையின் கீழ்ப்பகுதி சிவப்பு, நீலம், பசுமை கலந்த நிறங்களில் காணப்படும். தண்டுப்பகுதிகளும் சிவப்பும் நீலமும் கலந்த நிறத்தில் இருக்கும். இன்னும் சிலவகை அரைக்கீரை இனங்கள் செடி முழுவதுமே இளஞ்சிவப்பு நிறங்களைக் கொண்டுள்ளன. இது மட்டுமல்லாது நிறங்களில் சிற்சில மாற்றங்களுடன் சில கலப்பு இனங்களும் உள்ளன.

  பொதுவாக கீரை வகைகளில் மிக அதிக அளவு சத்துக்கள் நிரம்பிய கீரையாக இந்த அரைக்கீரையைக் குறிப்பிடலாம்.

  சத்துக்களின் விபரம்.

  [100 கிராம் கீரையில்]

  • நீர் (Water)- 84.0 கிராம்.
  • ஆற்றல் (Energy) - 23 Kcal.
  • புரதம் (Protein) - 2.46 கிராம்.
  • கொழுப்பு (Fat) - 0.33 கிராம்.
  • கார்போஹைட்ரேட் (Carbohydrates) - 4.2 கிராம்.
  • நார்சத்து (Dietary Fiber) - 2.2 கிராம்.
  • கால்சியம் (Calcium) - 215 மி. கிராம்.
  • பாஸ்பரஸ் (Phosphorus) - 50 மி.கி.
  • இரும்பு (Iron) - 2.32 மி.கி.
  • தாமிரம் (Copper) - 0.162 mg.
  • துத்தநாகம் (zinc) - 0.90 mg.
  • பி.கரோட்டின் - 5716𝜇g.
  • தயமின் (Thiamin) - 0.027 மி.கி.
  • ரைபோஃபிளேவின் (Riboflavin) - 0.158 மி.கி.
  • நியாசின் (Niacin) - 0.658 மி.கி.
  • அஸ்கார்பிக் அமிலம் - 64 மி.கி.
  • Vitamin A - 2917 IU.
  • Vitamin B5 (Pantothenic acid) - 0.065 mg.
  • Vitamin B6 (Pyridoxine) - 0.192 mg.
  • Vitamin B9 (Folate)- 85𝜇g.
  • கோலின் (Choline) - 69.8 mg.
  • Vitamin C - 43.3 mg.
  • Vitamin E (alpha-tocopherol) - 1.19 mg.
  • Vitamin E (beta-tocopherol) - 0.96 mg.
  • Vitamin E (delta-tocopherol) - 0.69 mg.
  • Vitamin K - 1140 𝜇g.
  • மெக்னீசியம் (Magnesium) - 55மி.கி.
  • மாங்கனீஸ் (Manganese) - 0.885 mg.
  • பொட்டாசியம் (Potassium) - 611 மி.கி.
  • சோடியம் (Sodium) - 20 மி.கி.
  • selenium - 18.7 mcg.
  • பீட்டேன் (Betaine) - 67.6 mg.

  இதுமட்டுமல்லாமல் இலைகள் மற்றும் விதைகளில் மனித உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் அமினோ அமிலமான லைசினும் உள்ளது. வைட்டமின்கள் தாராளமாகவே உள்ளன.

  தாவரத்தின் தன்மை.

  அரைக்கீரையானது அதன் வகைதனைப்பொறுத்து பசுமையான நிறத்திலோ அல்லது இலையின் மேல்பாகம் பசுமையாகவும், அடிப்பாகம் சிவப்பும் நீலமும் கலந்தாற்போன்ற நிறத்திலோ உள்ளன. சராசரியாக 2 அடி முதல் 4 அடிவரை வளரும் தன்மையுடையது. சில நேரங்களில் மிக செழிப்பான இடங்களில் 5 அடி உயரம்கூட வளருவதுண்டு. இது சுமார் ஓராண்டு பலன்தரும் பயிராகும்.

  இலைகளின் தன்மை.

  இதன் இலைகள் முட்டை வடிவமானவை. இலைகள் 2 முதல் 8 செ.மீ நீளமும், 0.6 முதல் 5 செ. மீ அகலமும் கொண்டது. இலைக்காம்புகள் 2 முதல் அதிகப்படியாக 9 செ. மீ நீளம் கொண்டவையாக உள்ளன.

  Amaranthus dubius.

  பூக்களின் தன்மை.

  தண்டுகள் மூலம் நடவு செய்யும் பட்சத்தில் நடவு செய்த 4 முதல் 8 வாரங்களுக்குள் பூக்க ஆரம்பிக்கின்றன.

  இதன் மஞ்சரிகள் கதிர் கதிரான வடிவத்தினை பெற்றுள்ளன. பொதுவாக மஞ்சரிகள் 3 முதல் 15 செ. மீ நீளமும், 6 முதல் 8 மில்லி மீட்டர் விட்டத்தையும் கொண்டுள்ளன.

  ஒவ்வொரு கதிரிலும் சிறிது சிறிதாக நூற்றுக்கணக்கான பூக்கள் உள்ளன. பூக்கள் வகைதனை பொறுத்து ஊதா, சிவப்பு, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிறங்களில் தோற்றம் தருகின்றன. பூக்கள் ஓவல் அல்லது முட்டை வடிவமானவை. 1.2 முதல் 2 மில்லிமீட்டர் வரை நீளம் உள்ளன. இது 5 இதழ்களையும் 5 மகரந்த சூல்களையும் கொண்டுள்ளன.

  ஒவ்வொரு இதழ்களும் 1.5 முதல் 2 மி.மீ வரை நீள்வட்ட மற்றும் நீள்சதுர வடிவத்தை கொண்டுள்ளன. இவற்றின் நுனிகள் கூர்மையான வடிவம் கொண்டவை. பெரும்பாலும் ஆண்டு முழுவதுமே பூக்கின்றன. கதிரின் மேல்பகுதியில் ஆண்பூக்கள் என தனியான பூ அமைப்புகள் காணப்படுவது இதன் தனிச்சிறப்பு.

  இனப்பெருக்கம் காற்றின்மூலமாகவே நடைபெறுகின்றன. வேகமாக வீசும் காற்றின்மூலமாக மகரந்தத்தூள்கள் கடத்தப்பட்டு அயல்மகரந்த சேர்க்கை நடைபெறுகின்றன. தாவரத்திற்கு போதிய அளவு நீர் கிடைக்கவில்லையெனில் இது சிறு செடியாக இருக்கும்போதே பூக்க ஆரம்பித்துவிடுகின்றன.

  வேர்களின் தன்மை.

  வேர்கள் வெண்மையானவை இளமையானவை. பால்சுவை கொண்டவை. சில பகுதிகளில் வாழும் மக்களால் இதன் வேர்களும் உணவாக பயன்படுத்தப்படுகின்றன.

  மருத்துவத்தன்மை.

  சுரம், குளிர் சுரம், வாத சுரம், ஜலதோஷம், சீதளம், ஜன்னி, உடல் பலவீனம், உடல்வலி, கபரோகம், வாயு சம்பந்தாமான வியாதிகள், வாதநோய், சளி, இருமல், நீர்க்கோர்வை, மண்டைபீனிசம், பிடரி வலி மற்றும் நரம்பு தளர்ச்சியுடன் நரம்பு வலிகளும் நீங்கும்.

  மேலும் இது மலச்சிக்கல்களையும் நீக்கும் அற்புதமான உணவு எனலாம். உடலில் சேர்ந்துள்ள விஷங்களை முறிக்கும் திறனும் இதற்கு உண்டு.

  அதுமட்டுமல்லாமல் தோல் சம்பத்தப்பட்ட நோய்களையும் இது போக்குகிறது. தொடர்ந்து சாப்பிட்டுவர தேமல், சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகளையும் தடுக்கும். குடல் புண்ணை ஆற்றுவதுடன் குடலுக்கு வலிமையையும் தரும்.

  தான்சானியா நாட்டில் முழுத்தாவரமும் வயிற்றுவலியை குணப்படுத்தும் மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது.

  அரைக்கீரை விதை.

  அரைக்கீரை விதையும் மருத்துவகுணம் நிறைந்ததே. இது அளவில் மிகச்சிறியவை. மூடிய உறைகளுக்குள் விதைகள் உள்ளன. ஒவ்வொரு விதைகளும் தனித்தனி உறைகளுக்குள் பொதியப்பட்டுள்ளன. உறைகள் 1.5 முதல் 1.75 மில்லி மீட்டர் நீளம் கொண்டவை.

  விதைகள் அடர் பழுப்பு நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரையில் பளபளப்பாக காணப்படுகின்றன. சிவப்பு அரைக்கீரையின் விதைகள் லேசான சிவப்பு நிறத்திலும் இருப்பதுண்டு.


  Amaranthus dubius seeds

  ஒரு விதையானது 1 மி.மீ விட்டத்தைக் கொண்டுள்ளது. ஒரு செடி தன் வாழ்நாளில் அதிகப்படியாக 25,000 முதல் 60,000 விதைகளை உற்பத்தி செய்கின்றன.

  விதைகள் அரைக்கப்பட்டு உணவாக உண்ணப்படுகிறது. நாட்பட்ட பல நோய்களை அரைக்கீரை விதை நீக்குமென்பதால் இதில் பல பதார்த்தங்கள் செய்து விருப்பமுடன் உண்ணப்படுகிறது. இதை கஞ்சியாக காய்த்தும் உண்ணலாம்.

  இந்த வித்துக்கள் அதிகமான எண்ணெய் சத்துக்களைக் கொண்டுள்ளன. ஆயுர்வேத மருத்துவத்தில் இது மிக முக்கியமான மூலப்பொருளாகும். மேலும் இக்கீரை விதைகளைக்கொண்டு தலைகுழுக தைலமும் தயாரிக்கப்படுகிறது. இதில் தயாரிக்கப்படும் தைலம் கண்ணிற்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது.

  அரைக்கீரை விதைகளை விதை விற்பனை நிலையங்களிலும் ஆன்லைன் நிறுவனங்களிலும் எளிதாக வாங்கலாம்.

  கீரை சாகுபடி.

  ஆண்டு முழுவதுமே பயிர் செய்யலாம். செம்மண் நிலம் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. இக்கீரை தண்டுகளின் அடிப்பகுதியிலிருந்து ஏராளமான கிளைகள் உற்பத்தியாகின்றன. இக்கிளைகளை ஒடித்துவைப்பதின்மூலம் இதனை எளிதாக நடவு செய்யலாம்.

  இதனை விதைகள் மூலமாகவும் பயிரிடலாம். விதைகள் விதைத்து 3 அல்லது 5 நாட்களுக்கு பிறகு முளைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. 1 ஹெக்டேருக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும்.

  1 ஏக்கருக்கு 4 டன் எருவுடன் 5 டன் தொழுஉரம் இட்டு நன்கு உழவு செய்து பாத்திகள் அமைத்து நடவு செய்யலாம். நடவு செய்வதற்கு நல்ல தரமான விதைகளை தேர்வுசெய்து விதைகளுடன் மணல் கலந்து பாத்திகளில் தூவவும். பின் கைகளால் கிளறி விதைகள் பாத்திகளில் மணலினுள் மூழ்கும்படி செய்து அதன்பின் நீர் தெளிக்கவும். பின் வாரத்திற்கு இருமுறை நீர்தெளித்துவரவும்.

  ஒருவார காலத்திற்குள் விதைகள் முளைவிட ஆரம்பிக்கும். 15 நாட்கள் கழித்து தேவையில்லாத களைச்செடிகளை அகற்றவும். கீரைச்செடிகள் மிக நெருக்கமாக முளைத்திருக்கும் இடத்தில் அவைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும்விதமாக அவற்றின் ஊடாக சிலசெடிகளை அகற்றவும். தேவைக்கேற்ப நீர்ப்பாசனம் செய்துவரவும்.

  உரமிடுதல்.

  தொழுஉரம் பயன்படுத்தலாம். ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

  பயிரை தாக்கும் நோய்கள்.

  இதனை கம்பளி பூச்சிகள், வெட்டுக்கிளிகள் மற்றும் தண்டு துளைப்பான்கள் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றை கட்டுப்படுத்த இயற்கை பூச்சிவிரட்டி மருந்துகளை பயன்படுத்தவும். இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

  அறுவடை.

  தண்டுகள் மூலம் விதைக்கப்பட்டால் விதைத்த 5 அல்லது 6 வாரங்களில் முதல் அறுவடையை தொடங்கலாம். அதன்பிறகு 3 வாரங்களுக்கு ஒருதடவை அறுவடை செய்து வரலாம். தரைமட்டத்திலிருந்து 5 செ.மீ உயரம் விட்டு அறுவடை செய்தல் வேண்டும். விதைகள்மூலம் சாகுபடிசெய்தால் போதிய அளவு வளர்ந்தபிறகு அறுவடையை தொடங்கலாம்.

  உணவாக பயன்படுத்தும் விதம்.

  இத்தாவரத்திலுள்ள பூ கதிர்கள் நீக்கப்பட்டு பசுமையான இலைகளும் இளந்தண்டுகளும் பக்குவமாக சமைக்கப்பட்டு உண்ணப்படுகின்றன.

  தென்கிழக்கு ஆசியா மட்டுமல்லாது கென்யா, ஆப்பிரிக்காவிலும் மிக முக்கிய உணவாக இது கருதப்படுகிறது.

  இலைகளில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இந்த நார்ச்சத்தானது உடலிலுள்ள கொழுப்பை குறைப்பதால் இதயநோய்களை தடுப்பதுடன் உடல் எடையையும் குறைக்கிறது.

  அரைக்கீரையுடன் சுக்கு, மிளகு, பூண்டு, வெங்காயம், பெருங்காயம் சேர்த்து சமைத்து உண்டுவர வாதம், வாய்வு நீங்குவதோடு உடல்வலியும் நீங்கும். அல்லது கீரையுடன் வெள்ளைப்பூண்டு, சீரகம், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து கடைந்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டுவரலாம்.

  அரைக்கீரையுடன் புளிசேர்த்து கடைந்து உண்டுவர வாய் ருசியின்மை, பசியின்மை நீங்கும்.

  அரைக்கீரையுடன் அதிக அளவில் வெள்ளைப்பூண்டு சேர்த்து கடைந்து சாப்பிட்டுவர சளி, இருமல் கட்டுப்படும்.

  கீரையுடன் துவரம்பருப்பு, உலர்ந்த மிளகாய் சேர்த்து தாளிதம் செய்து பொரியலாக சாப்பிட்டுவர இருமல், கப இருமல் மற்றும் சுரம் நீங்கும்.

  கீரையுடன் வெங்காயம் அதிகமாக சேர்த்து பொரியல் செய்து சாப்பிட சளி, இருமல், நீர்க்கோர்வை நீங்கும். பெருங்காயம் மற்றும் வெங்காயம் அளவோடு சேர்த்து பொரியலாக செய்து உண்டுவர ஜலதோஷம், குளிர்ச்சுரம், ஜன்னி முதலியன கட்டுப்படும்.

  சின்ன வெங்காயத்தோடு சேர்த்து வதக்கி தினந்தோறும் உண்டுவர மலச்சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

  அரைக்கீரையுடன் பூண்டு, மிளகு, சீரகம் காய்கறிகள் சேர்த்து சாம்பார் வைத்தும் சாப்பிடலாம். இதனால் உடலிலுள்ள வலிகள் தீருவதுடன் உடலில் ஆரோக்கியமும் மேம்படும்.

  சுக்கு, மிளகு, பூண்டு, பெருங்காயம் சேர்த்து கடையலாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிட்டுவர வாதம், உடல்வலி, நீங்குவதோடு வாய்வு சம்பந்தமான சகல பிரச்சனைகளும் நீங்கும்.

  இதனை அடிக்கடி கடையலாகவோ, பொரியலாகவோ சாப்பிட்டுவர பலவீனமும் நரம்புதளர்ச்சியும் நீங்கும். தாது புஷ்டியும் உண்டாகும். அதுமட்டுமல்லாமல் இதனை தொடர்ந்து சாப்பிட்டுவர முக வனப்பையும் உண்டாக்கும்.

  இது நார்சத்து அதிகமுள்ள உணவாகையால் வாரம் இருமுறை இதனை உணவோடு சேர்த்துவர மலச்சிக்கல் நீங்கும். இடுப்புவலி, முதுகுவலி, தலைபாரமும் நீங்கும்.

  இது தாதுபுஷ்டி தரும் கீரைகளில் முதன்மையானது. இதனை புளி சேர்த்து பொதுவாக சமைக்கப்படுவதுண்டு. ஆனால் புளி சேர்க்காமல் மிளகு சேர்த்து நெய்விட்டு சாப்பிட தாது பெருகும். வாயுவையும் போக்கும். குளிர்ச்சியான தேகத்தை கொண்டவர்களுக்கு ஏற்ற உணவு.

  பிரசவித்த பெண்களுக்கு அரைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துவர தாய்க்கும் சேய்க்கும் நோயெதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். சீதளம் வராமல் தடுக்கும்.

  இக்கீரையில் தேவையான அளவு இரும்பு சத்துள்ளதால் குருதிபோக்கால் பலவீனமடைந்துள்ள உடலை தேற்றி புது இரத்தத்தை உடலில் உற்பத்தி செய்யும். நெய்விட்டு வதக்கியோ அல்லது கடைந்தோ சாப்பிட்டுவரலாம். இதனால் இழந்த சக்தியை மீண்டும் உடல் பெறுவதுடன் குழந்தைகளுக்கு தேவையான அளவு பாலும் உற்பத்தியாகும்.

  இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துவர தலைமுடி செழித்து வளர்வதோடு கருமையாகவும் காட்சியளிக்கும்.

  உங்கள் குழந்தைகள் சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமா? மூளை வலிமை பெறவேண்டுமா? நினைவாற்றல் அதிகரிக்க வேண்டுமா? அப்படியெனில் உணவோடு சேர்த்து வாரம் இருமுறை இக்கீரையையும் ஊட்டி வாருங்கள்.

  அரைக்கீரை தைலம்.

  நல்ல தரமான தேங்காய் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு துளையிட்டு அதனுள் இருக்கும் நீரை வெளியேற்றிவிட்டு போதிய அளவு அரைகீரை விதையை உள்ளே செலுத்தி துளையை அடைத்து சதுப்பு நிலத்தில் புதைக்கவும்.

  நாற்பது அல்லது ஐம்பது நாட்களுக்கு பின் எடுத்து தேங்காயின் ஓட்டை மட்டும் நீக்கிவிட்டு தேங்காயை விதையுடன் சேர்த்து நல்லெண்ணெய் கலந்து எரித்து தைல பக்குவத்தில் வடித்து பத்திரப்படுத்தவும்.

  Amaranthus dubius - oil

  இதனை தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவிட்டு குளித்துவர தலைபாரம் நீங்கும். தலைமுடியும் நன்கு கருத்து வளரும்.

  முக்கிய குறிப்புகள்.

  அரைக்கீரையை சமைக்கும்போது அதிகமாக வேகவைத்தல் கூடாது.

  மூலநோய் உள்ளவர்களுக்கு இது ஆகாது என்பதால் அவர்கள் இக்கீரையை தவிர்ப்பது நலம்.

  கீரையில் நார்சத்து அதிகமென்பதால் இது ஜீரணிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே இரவில் ஜீரணசக்தி மந்தமாக இருக்குமாதலால் இதனை இரவில் சாப்பிடுவதால் ஜீரணக்கோளாறுகளை உண்டுபண்ணலாம். எனவே இரவில் அதிக அளவில் கீரைகள் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.

  100 கிராம் கீரையில் ஆக்சாலிக் அமிலம் (Oxalic) சுமார் 1.09 கிராம் அளவில் காணப்படுவதால் இது சிலருக்கு சீறுநீர் பாதைகளில் "ஆக்சலேட்" கற்களாக படிவதற்கு வாய்ப்புகள் அதிகமிருப்பதால் சிறுநீர் பாதையில் கல்லடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் இக்கீரையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

  சிலருக்கு காரணமே இல்லாமல் இரத்தகுழாய்களில் அடிக்கடி இரத்தம் உறைந்துபோகும் பிரச்சனை ஏற்படலாம். இதனால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து இருக்கலாம். இப்படியானவர்கள் இரத்தம் உறையாமல் இருப்பதற்காக மருத்துவரின் ஆலோசனையின்பேரில் "வார்ஃபரின்" (Warfarin) என்னும் மருந்தை தொடர்ச்சியாக உட்கொண்டுவருவர். இப்படியானவர்கள் இந்த அரைக்கீரையை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இக்கீரையில் "Vitamin K" அதிக அளவில் உள்ளதால் இது இரத்தம் உறைதலை ஊக்கப்படுத்தும் என்பதால் வார்ஃபரின் செயல்பாட்டில் குறுக்கீடு விளைவிக்கலாம்.

  எச்சரிக்கை.

  பொதுவாக கீரைகள் புழு, பூச்சிகளின் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாவதால் விற்பனைக்காக கீரை தோட்டங்கள் வைத்திருப்பவர்கள் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிமருந்து தெளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  அதுமட்டுமல்லாமல் கீரைகளை சுத்தமான சூழ்நிலைகளில் விற்பனைக்கு கொண்டுவருவதும் இல்லையென்பதால் இவைகளை கடைகளில் வாங்கி பயன்படுத்துவதை விட நீங்களே உங்கள் வீட்டுத்தோட்டங்களில் பயிர்செய்து அவ்வப்போது பயன்படுத்திவருவதே சாலச்சிறந்தது.

  சரி, இதுவரையில் அரைக்கீரையைப்பற்றி தெளிவாக தெரிந்துகொண்ட நீங்கள் "ஆரைக்கீரை" என்னும் ஒருவகை கீரையைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையெனில்.. தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை தட்டுங்க...

  >> ஆரைக்கீரை - Aarai Keerai - European water clover.<<

  💢💢💢💢

  இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...
  கருத்துரையிடுக

  4 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.