ஹெலிகோனியா கார்டன் - Different Types of Heliconia Garden.

ஹெலிகோனியா கார்டன்.

Heliconia Garden.

Part - 1.

          இயற்கை புன்னகைத்து பார்த்ததுண்டா ?...

          அருகிலுள்ள மலர்களை பாருங்கள் இயற்கையின் புன்னகை அதில் தெரியும்!

          கார்மேகம் பன்னீர் சொரிந்து மண்ணை குளிர்விக்கும்போதெல்லாம் மகிழ்ச்சியை மலர்கள் வாயிலாக வெளிப்படுத்தும் இயற்கை அன்னை இரவு தொடங்கியதும் தாயைக்காணா மகவைப்போல புன்னகை மறந்து சற்று முகம் சோர்கிறாள்.


          ஆனால், ஒரு வாரமானாலும் வாடாமலும், இதழ் மூடாமலும் தொடர்ந்து புன்னகைத்தபடி காட்சி தருவது "ஹெலிகோனியம்" என்னும் அழகிய மலர்கள் மட்டுமே.

          இந்த ஹெலிகோனியா தாவரத்தைப்பற்றி நாம் முன்பே பல பதிவுகளில் விரிவாக பார்த்துள்ளோம். இப்பதிவில் முன்பு பார்க்கப்படாத பலவகையான ஹெலிகோனிய மலர்களைப்பற்றி அறிந்துகொள்ளும் பொருட்டு இதோ "ஹெலிகோனியா கார்டன்" என்னும் இந்த எழில் கொஞ்சும் தோட்டத்திற்குள் உங்களை கூட்டிச்செல்ல போகிறோம் .

          முன்பு எப்போதும் பார்க்காத ஹெலிகோனிய தாவர வகைகளையும், அதில் பூத்துக்குலுங்கும் விதவிதமான மலர்களின் புன்னகையையும் பார்த்து ரசிப்போம் வாருங்கள்.


          மலர்களின் புன்னகையை தரிசிப்பதற்கு முன்னால் தாவரத்தைப்பற்றிய சில அடிப்படை தகவல்களை பார்க்கலாம். இது ஏற்கனவே பல பதிவுகளில் பார்த்தாகிவிட்டது என்றாலும் இதோ மீண்டும் ஒருமுறை உங்களுக்காக...

ஹெலிகோனியா பயோடேட்டா.

Heliconia Biodata.

பெயர் :- ஹெலிகோனியம்.

தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா - Heliconia.

பொதுவான ஆங்கில பெயர் :- Parakeet flower, Parrot flower.

தமிழ் பெயர்கள் :- காட்டுவாழை, பொய்வாழை, கிளி வாழை. பூ வாழை.

தாவர பிரிவு :- பூக்கும் விதை தாவரங்கள் - Angiosperms.

குடும்பம் :- ஹெலிகோனியேசியே (Heliconiaceae).

பேரினம் :- ஹெலிகோனியா - Heliconia.

வரிசை :- Zingiberales.

தாயகம் :- மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா.

வகைகள் :- இதில் 200 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

தோற்றம் :- இது எப்போது தோன்றியது என்பதனை சரியாக கணிக்க முடியாவிட்டாலும் கூட சுமார் 39 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்னால் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. 

தாவரத்தின் தன்மை :- அதன் இனத்தினை பொறுத்து 2 அடி முதல் 15 அடி உயரம் வரை வளர்கின்றன.

           இலைகள் இஞ்சி, மஞ்சளின் இலைகளை ஒத்து, நீள்வட்டவடிவ தோற்றம் கொண்டவையாக உள்ளன. சிலவகை இனங்கள் சிறிய இலைகளையும், இன்னும் சில வாழைமரத்திற்கு இருப்பதுபோன்ற பெரிய இலைகளையும் கொண்டுள்ளன. 

மலர்களின் தன்மை :- இவைகளின் இனங்களை பொறுத்து சிவப்பு, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, கிரீம் என பல்வேறு வண்ணங்களில் மலர்களை பாதுகாக்கும் மடல்கள் காணப்படுகின்றன. இந்த வண்ண மடல்களுக்குள்தான் மலர்கள் ஒளிந்திருக்கின்றன. பொதுவாக மலர்கள் வெண்மை, மஞ்சள் மட்டுமல்லாது பலவண்ணங்கள் கலந்து சித்திரம் தீட்டப்பட்டிருப்பதுமுண்டு.

Heliconia Flower.

          மலர்கள் தடித்த மஞ்சரிகளையும், மஞ்சரி மடல்களையும் கொண்டுள்ளதால் இம்மலர்கள் அதிகநாட்கள் வாடாமல் இருக்கின்றன.

          மஞ்சரிகளானது சில இனங்களில் மேல்நோக்கியபடியும் இன்னும் சில இனங்களில் மேலிருந்து தொங்கிய நிலையிலும் காட்சியளிக்கின்றன. 

          இது நடவு செய்த 1 வருடத்தில் பூக்க ஆரம்பிக்கின்றன. வருடம் முழுவதுமே பூத்து தன் கவர்ச்சியான மலர்களால் உங்களை திக்குமுக்காட வைப்பதில் தன்னிகரில்லாதது. இம்மலர்கள் அதிகநாட்கள் வாடாமல் இருந்து உங்களை மகிழ்விக்கும்.

          மேலும், இந்த ஹெலிகோனியா இனத்தில் 200 க்கும் மேற்பட்ட இனங்கள் இருப்பதால் மலரைக்கொண்டு வேறுபடுத்திப்பார்ப்பது கடினம். ஏனெனில் சில வெவ்வேறு இனங்களில் மலர்கள் ஒரேமாதிரியாக காட்சியளிப்பது உண்டு. மிகச்சிறிய வேறுபாடுகளே உள்ளன.

காய்களின் தன்மை :- 0.5 செ.மீ விட்டம்கொண்ட முக்கோண வடிவமுடைய பச்சை மற்றும் மஞ்சள்நிற காய்களை உற்பத்தி செய்கின்றன. இவைகள் கனியும்போது நீலநிறங்களை பெறுகின்றன. பழங்கள் பறவைகளுக்கும், ஊர்வனவகை விலங்குகளுக்கும் உணவாகின்றன. இக்கனிகள் ஒவ்வொன்றும் தலா 1 முதல் 3 விதைகளை கொண்டுள்ளன.

இனப்பெருக்கம் :- தடித்த வேர் தண்டு கிழங்கிலிருந்து கன்றுகளை உற்பத்தி செய்தும், தன் இனத்தை தொலைதூரங்களுக்கு கொண்டுசெல்ல விதைகளை பயன்படுத்தியும் இருவழிகளில் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

          விதைகள் முளைக்க 6 லிருந்து 12 மாதங்கள் எடுத்துக்கொள்வதால் வேர்கிழங்குகளில் உற்பத்தியாகும் இளங்கன்றுகள் மூலமாக இனவிருத்தி செய்வதே எளிதாக இருக்கிறது.

          இப்பதிவில் மனதிற்கு மகிழ்வுதரும் சில ஹெலிகோனிய தாவரங்களை அறிந்துகொள்வோம் வாருங்கள்.

Different Types of Heliconia.

ஹெலிகோனியா சாம்ப்னியானா.

Heliconia Champneiana.

          முதலாவதாக "ஹெலிகோனியா சாம்ப்பிளியானா" (Heliconia champneiana) என்னும் இனத்தைப்பற்றி பார்ப்போம். இது பொதுவாக "மாயா கோல்ட்" (Maya Gold) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

          இதன் பூர்வீகம் தென் அமெரிக்கா. 2 முதல் 4 மீட்டர் உயரம்வரை வளரும் தாவரயினம். மஞ்சள் நிறமான மஞ்சரியில் சிவப்புநிறத்தில் கறைகள் போன்ற நிறம் படிந்திருப்பதை காணலாம். இது கூட அதற்கு ஒரு விசேஷ அழகையே கொடுக்கின்றன. 4 முதல் 12 வரையிலான பூ மடல்களை உருவாக்கும் இவைகள் மே முதல் நவம்பர்வரை மலர்களை உற்பத்திசெய்கின்றன. 1 வாரம் கடந்தும் மலர்கள் வாடாமல் வாழ்ந்திருக்கும்.

ஹெலிகோனியா கர்டிஸ்பாதா.

Heliconia Curtispatha.

Heliconia Curtispatha

          இதன் தாயகம் தென் அமெரிக்கா. 15 அடியிலிருந்து 20 அடி உயரம் வரை வளரும் பிரமாண்டமான ஹெலிகோனிய இன தாவரம் இது. உருவில் வாழைமரம் போன்று காணப்படும் இது வாழை இலைகளைப்போன்று நீளமான இலைகளையும், இலைக்காம்புகளையும் கொண்டுள்ளன.

          ஆகஸ்ட் முதல் ஏப்ரல் வரை பூக்கும் இவைகள் மேலிருந்து கீழ்நோக்கி தொங்கும்படியான பூங்கோத்துக்களை கொண்டுள்ளன. மஞ்சரி என்று சொல்லப்படும் பூ மடல்கள் வெளிர் சிவப்பிலிருந்து அடர் சிவப்பு நிறங்களை கொண்டுள்ளன. அதிகப்படியாக 30 மடல்கள்வரை உற்பத்தி செய்கின்றன. இதனுள் மஞ்சள்நிற பூக்கள் கண்சிமிட்டுகின்றன. 

ஹெலிகோனியா டென்சிஃப்ளோரா.

Heliconia Densiflora.

Heliconia Densiflora flower

          இது ஒரு அழகான சிறியரக ஹெலிகோனியாவாகும். பராபட்சமில்லாமல் அனைவருக்கும் பிடித்த ரகமும்கூட.

          இதன் மலர்களை தொலைவிலிருந்து பார்க்கும்போது நெருப்பு சுடர் போன்ற தோற்றத்தை தருவதால் நம்ம ஊரு "தீப்பொறி ஆறுமுகம்" போல் இதற்கு "நெருப்புச்சுடர் ஹெலிகோனியா" (Fireflash Heliconia) என்ற சிறப்பு பெயரையும் சூட்டியுள்ளனர்.

Heliconia densiflora

          இந்த நெருப்புச்சுடர் ஹெலிகோனியாவானது 2 அடி முதல் 4 அடி உயரம் வரை வளரும் இயல்புடையது.

          இதன் மஞ்சரி (பூ மடல்கள்) சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் 4 முதல் 8 எண்ணிக்கையில் தோன்றுகின்றன. மஞ்சரியினுள் மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு கலந்த வண்ணத்தில் பூக்கள் உள்ளன. இது ஆண்டுமுழுவதும் பூத்து சுடர்விடும். 

          இதை உங்கள் வீட்டுத்தோட்டங்களில் வளர்த்துவந்தீர்கள் என்றால் சந்தேகமேயில்லாமல் அனைவரையும் ஒரு தரம் திரும்பிப்பார்க்க செய்யும்.

ஹெலிகோனியா எபிஸ்கோபலிஸ்.

Heliconia Episcopalis.

Heliconia Episcopalis

          இந்த எபிஸ்கோபலிஸானது 3 முதல் 8 அடி உயரம்வரை வளர்கிறது.

          இதன் மலர்கள் 13 முதல் 26 வரை குவிந்த மடல் மஞ்சரிகளை கொண்டிருக்கின்றன. கீழ் மஞ்சரி சிவப்பு நிறத்திலும் மேலே போகப்போக ஆரஞ்சு நிறத்திற்கு மாறி மேல் நுனிப்பகுதியிலுள்ள மஞ்சரி மஞ்சள் நிறத்திலும் இருக்கும். மஞ்சரிகள் நீளமாக வளர்ந்து புதிய மடல்களை உருவாக்கிக்கொண்டேவர கீழே உள்ள மலர் மடல்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்துகொண்டேவரும்.

ஹெலிகோனியா ஃபிளபெல்லாட்டா.

Heliconia Flabellata.

Heliconia Flabellata flower

          இது ஒரு கலப்பினம். தென் அமெரிக்காவை தாயகமாக கொண்டது. "Heliconia episcopalis" மற்றும் "Heliconia standleyi" ஆகிய இரு இனங்களையும் கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட இனமாகும். இது 10 முதல் 16 அடி உயரம்வரை வளருகின்றன. இதன் பொதுவான பெயர் "ஃபிளபெல்லாட்டா" (Flabellata), மற்றும் "ஆரோகெட்" (arrowhead).

Heliconia Flabellata

          இது அக்டோபர் தொடங்கி மே மாதம் வரை பூக்கும் தன்மையுடையது. நடவு செய்து ஓராண்டில் பூக்க ஆரம்பித்துவிடும். இவைகள் மேலிருந்து கீழாக தொங்கும் பூக்களை உற்பத்தி செய்கின்றன. 12 முதல் 18 மஞ்சரிகளை உருவாக்குகின்றன .

          தண்டின் அடிப்புற மடல்கள் சிவப்பு நிறமும் மடலின் நுனிப்பகுதி பச்சை கலந்த மஞ்சள் நிறம் கொண்டதாகவும், தண்டின் மேல்புற மடல்கள் அடிப்பகுதி சிவப்பாகவும் நுனிப்பகுதி மஞ்சள் நிறம் கொண்டதாகவும் இருக்கின்றன.

ஹெலிகோனியா எக்செல்சா. 

Heliconia Excelsa.

          இதனுடைய பூர்வீகம் தென் அமெரிக்காவின் எக்குவடோர் (Ecuador) என்னும் தேசம்.

          இந்த தாவரமானது வாழைமரம்போல 7 அடி முதல் 15 அடி உயரம்வரை வளருகின்றது. வாழை இலைகளைப்போன்ற அகன்ற நீளமான இலைகளையும் கொண்டுள்ளன.

          இலைகள் மட்டுமல்ல கிழங்குகள்கூட நம்முடைய வாழைமரத்திற்கு இருப்பதுபோல கிட்டத்தட்ட பெரியதாகவே உள்ளன. பிற ஹெலிகோனிய இனங்களின் கிழங்குகள் பார்ப்பதற்கு கிழங்குகள்போல் இருப்பதில்லை. தடித்த வேர் போன்ற அமைப்பிலேயே இருக்கும். அதிலிருந்தே இளஞ்செடிகள் புதிதாக கிளைக்கின்றன. ஆனால் "எக்செல்சா" என்னும் இந்த இனத்திலோ கிழங்குகள் பெரிதாக காட்சியளிக்கின்றன. கிழங்குகளின் எடை சராசரியாக 1 கிலோ அளவில் இருக்கும்.

Heliconia Excelsa

          இதன் மஞ்சரி 10 லிருந்து 30 வரையான பூ மடல்களை கொண்டது. மஞ்சரி மற்றும் மடல்கள் சிவப்பிலிருந்து இளஞ்சிவப்புவரை நிறத்தை கொண்டுள்ளன. அதனுள்ளேயே மஞ்சள்நிற அழகிய மலர்களும் உள்ளன. ஒரு மஞ்சரிக்குள் சுமார் 6 லிருந்து 10 வரை பூக்கள் உள்ளன.

          இந்த மலரானது மலர் அலங்காரங்களுக்காக மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்பும்கூட அதிகநாட்கள் வாடாமல் பசுமையாக இருந்து பலன் கொடுக்கின்றன.

ஹெலிகோனியா போர்கேனா.

Heliconia Bourgaeana.

Heliconia Bourgaeana

          இது மெக்ஸிகோவில் இயற்கையாகவே வளரும் இனம். இது 4 முதல் அதிகப்படியாக 18 அடி உயரம்வரை வளர்கிறது. நன்கு பெரிய சிவப்பு நிறமான மடல்களை உருவாக்குவதுடன் மடல்களுக்குள் மஞ்சள்நிற பூக்களையும் கொண்டுள்ளது. இந்த மடல்கள் வழவழப்பான மெழுகு பூச்சினை பெற்றுள்ளன. இது மேல்நோக்கி வளர்ந்தாலும் பூவின் தண்டுகள் ஊதா நிறத்தில் பல நெளிவுகளுடன் நளினமாக இருப்பதால் அனைவரையும் கவரும் அழகுடன் விளங்குகின்றன.

ஹெலிகோனியா கார்மேலே.

Heliconia Carmelae.

Heliconia Carmelae

          "ஹெலிகோனியா கார்மேலே" என்னும் இந்த இனமானது கிடைப்பதற்கு அரிய அதேவேளையில் அழகான நெளிவு சுழிவுகளுடன் கூடிய மேலிருந்து கீழாக தொங்கும் பூங்கொத்துக்களை கொண்ட தாவர இனம். இது கொலம்பியா தேசத்தை பூர்வீகமாகக்கொண்டு வளரும் இனம்.

Heliconia Carmelae 3

          மஞ்சரி என்று சொல்லப்படும் மடல்கள் சிவப்புநிறத்தை கொண்டுள்ளன. மடல்களின் அடிப்பகுதி மஞ்சள்நிறத்தை கொண்டுள்ளன. மடல்கள் தண்டிலிருந்து மேல்நோக்கியவண்ணம் பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளன. மொத்தத்தில் எழில்நிறைந்த பூங்கொத்துக்களை தரும் இனம் என்றே இதனை குறிப்பிடலாம்.

ஹெலிகோனியா வாக்னெரியானா.

Heliconia Wagneriana.


          இது நடுத்தரமான இனம். வெப்பமண்டலங்களில் நன்கு வளரும் தன்மையுடையது. 6 முதல் 8 அடி உயரத்தை கொண்டுள்ளது. கொலம்பியா, புவேர்ட்டொ ரிக்கோ(Puerto Rico) மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது.

          இதன் மடல்கள் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்திலும், மடல்களின் இரு ஓரங்களிலுள்ள விளிம்புகள் மெல்லிய பச்சை நிறத்திலும் காணப்படுகின்றன. 5 முதல் 10 மடல்களை கொண்டு பூக்கின்றன. படகுபோன்ற மடல்களுக்கு உள்ளே பசுமையான பூக்கள் ஒளிந்தபடி காணப்படுவது கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தினாலும்கூட பார்ப்பதற்கு அழகாகவே உள்ளன.

          இது ஜனவரி முதல் ஜூலை வரை பூக்கின்றன. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக அளவில் பூக்கின்றன. அதனாலேயே இதனை "ஈஸ்டர் ஹெலிகோனியா" எனவும் அழைக்கின்றனர்.

ஹெலிகோனியா மெட்டாலிகா.

Heliconia Metallica.

          இது அமெரிக்க கண்டத்திலுள்ள கொலம்பியாவை பூர்வீகமாகக் கொண்டது. இந்த இனத்தில் மட்டுமே 194 சிற்றினங்கள் உள்ளன.

Heliconia Metallica

          வெப்பமண்டல மழைக்காடுகளிலும், அதிக ஈரப்பதம்கொண்ட பள்ளத்தாக்குகளிலும் செழித்து வளரும் இது அதிகப்படியாக 7 அடி உயரம்வரை வளரும்.

          இதன் இலைகள் வாழை இலைகள் போன்ற அமைப்புடன் அதனைவிட கொஞ்சம் நீளம் குறைவானதாக உள்ளது. இலையின் மேல்பகுதி பச்சை நிறத்திலும் அடிப்பகுதி உலோகத்தின் நிறத்தை பிரதிபலிப்பது போன்றும் இருப்பதால் இதற்கு "ஹெலிகோனியா மெட்டாலிகா" என்று பெயர்.

          இவ்வினத்தில் 194 சிற்றினம் உள்ளதால் இனத்தைப்பொறுத்து இவைகளின் மலர்கள் வடிவத்திலும், நிறத்திலும் வேறுபடுகின்றன. ஆனால் அனைத்து வகையான சிற்றினங்களும் இலைகளின் கீழ்ப்புறங்களில் ஒரேமாதிரியான உலோக நிற பிரதிபலிப்பையே வெளிப்படுத்துகின்றன.

[பயணங்கள் தொடரும்]...

கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.