"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
ஹெலிகோனியம் அறிமுகம் - Heliconia Introduction.

ஹெலிகோனியம் அறிமுகம் - Heliconia Introduction.

ஹெலிகோனியம்.

Heliconia.

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே ...
 வாழ்வென்றால் போராடும் போர்க்களமே"

          ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நம்பிக்கையை செதுக்கிய வரிகள்.

இயற்கை செதுக்கிய சிற்பங்களான இந்த மலர்களைக் கண்டு மயங்காதவர்களே இவ்வுலகில் இல்லையெனலாம். மௌன ராகத்தில் பிறந்த ஒவ்வொரு கவிதைகளும் ஒவ்வொரு மலர்களாக விரிகின்றன.

Heliconia.

அவ்வாறான மலர்களில் ரம்மியமான தோற்றத்தை கொண்ட "ஹெலிகோனியம்" என்று அழைக்கப்படும் மலர்களைப்பற்றி நீங்கள் என்றாவது கேள்விப்பட்டதுண்டா?..

  மத்திய அமெரிக்காவை (Central America) தாயகமாக கொண்ட இந்த தாவரத்தையும் அதில் மலரும் மலர்களையும் நீங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கக்கூடும்.

  இந்தவகை தாவரத்தில் சுமார் 200 க்கும் அதிகமான இனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவமான கவர்ச்சிகரமான மலர்களை காட்சிப்படுத்துவது ஆச்சரியமே.

  இந்த அனைத்து வகையான மலர்களையும் நீங்கள் பார்த்திருக்கும் வாய்ப்பு மிக அரிதே. ஆனாலும் இதில் சிலவகை மலர்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். பார்த்தது மட்டுமல்ல அதன் அழகில் மனதை பறிகொடுத்திருக்கவும்கூடும்.

  கொய்மலர்.

  ஹெலிகோனியம் என்னும் இத்தாவரம் வீட்டுத்தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படும் அதேவேளையில் "கொய்மலர்" (koymalar) என்று சொல்லப்படும் அலங்காரப்பூவுகளுக்காகவும் பணப்பயிராக விவசாய நிலங்களில் பயிர் செய்யப்பட்டு வருகிறது.

  கொய்மலர் என்பது திருவிழா மேடைகள், பண்டிகைக்கால வைபவங்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் கல்யாண அலங்கார மேடைகள் முதலியவைகளை அழகுபடுத்த பயன்படுத்தப்படும் பலவகையான அலங்கார மலர்களைக் குறிப்பவை.

  ஹெலிகோனியம் மலர்கள் அவைகளின் வடிவங்கள் மற்றும் கவர்ச்சியான வண்ணங்களினால் மலர் அலங்காரங்களில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. இதன் பூக்கள் சிகப்பு (Red), ஆரஞ்சு (Orange), பச்சை (Green), மஞ்சள் (Yellow) என பல வகைகளில் காணப்படுகின்றன.

  மேடை அலங்காரத்திற்காக மட்டுமல்ல வீடுகள் மற்றும் ஹோட்டல்களின் முகப்புகளில் அலங்காரச்செடிகளாகவும் வளர்க்கப்படுகின்றன.

  இரம்மியமான அழகைக்கொண்டுள்ள ஹெலிகோனியம் என்னும் தாவரத்தைப்பற்றியும் அதன் மனதை மயக்கும் மலரைப்பற்றியும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

  HELICONIA.

  பெயர் :- ஹெலிகோனியம்.

  அறிவியல் பெயர் :- Heliconia.

  பெயர்க்காரணம் :- "ஹெலிகோனியம்" என்பது கிரேக்கத்தில் உள்ள  "ஹெலிகான்" என்னும் மலையை குறிக்கும் சொல்.

  இந்த மலையில் வசிக்கும் தேவதை அழகாகவும், கவர்ச்சியாகவும், எப்போதும் இளமையாகவும் இருப்பதாக நம்பிக்கை. அதேபோல் இந்த செடியில் மலரும் பூக்களும் அந்த தேவதையைப்போலவே அழகாகவும், கவர்ச்சியாகவும், நீண்ட நாட்கள் வாடாமல் இளமையாகவே இருப்பதால் தேவதை வசிக்கும் அம்மலையின் பெயரையே "ஹெலிகோனியம்" என இதற்கும் வைத்துவிட்டனர்.

  வேறுபெயர்கள் :- இத்தாவரம் கிளி வாழை, பொய் வாழை, காட்டுவாழை, பூக்கும் வாழை, மக்கா மலர் என பலவகையான பெயர்களில்  அழைக்கப்படுகிறது. பலபெயர்கள் இருந்தாலும் பொதுவாக அனைவராலும்  "ஹெலிகோனியம்" என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

  இனப்பிரிவு :- தாவரம் - Plant.

  தாவர பிரிவு :- பூக்கும் விதை தாவரங்கள் - Angiosperms.

  தாயகம் :- மத்திய அமெரிக்கா (Central America) மற்றும் தென் அமெரிக்கா (South America).

  தோற்றம் :- 39 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்னால் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

  பேரினம் :- Heliconia.

  வரிசை :- Zingiberales.

  குடும்பம் :- ஹெலிகோனியேசியே (Heliconiaceae).

  இது முன்னர் "Musaceae" குடும்பத்தில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டது. Musaceae என்பது நம்முடைய வாழைமர குடும்பமாகும். இலைகளை பார்ப்பதற்கும் சிறிய வாழை இலை போலவேதான் இருக்கும். இலைகள் வாழை மற்றும் இஞ்சி செடிகளின் இலைகளை ஒத்ததாக இருக்கின்றன.

  ஆனால் இதன் பிற பண்புகளில் பல்வேறு குழப்பங்கள் நிலவியதால் நமக்கு எதற்கு வம்பு என்று விஞ்ஞானிகள் இதனை "Heliconiaceae" என்ற தனிக்குடும்பமாக அறிவித்து 2003 ம் ஆண்டில் தனிக்குடித்தனம் அனுப்பிவிட்டனர்.

  இனங்கள்.

  இதில் பல கலப்பினங்கள் உட்பட 200 இனங்கள் வரை வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வகைப்படுத்தப்படாத பல இனங்கள் உள்ளன.

  ஹெலிகோனியத்தில் 200 க்கும் மேற்பட்ட இனங்கள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை மத்திய அமெரிக்காவின் (Central America) வெப்பமண்டல பிரதேசங்களை பூர்வீகமாக கொண்டவை. மேலும் சிலவகைகள் மேற்கு பசிபிக் தீவுகளையும், இந்தோனேசிய மாகாணமான மாலுகு (Maluku) வையும் பூர்வீகமாகக் கொண்டவை.

  இவைகள் புளோரிடா (Florida), காம்பியா(Gambia), தாய்லாந்து(Thailand), கோஸ்டாரிகா (Costa Rica) முதலிய இடங்களில் தன்னிச்சையாகவே வளர்கின்றன.

  இந்த குடும்பத்தில் ஹெலிகோனிய இனங்களுக்கு மட்டுமே இடம் உண்டு. வேறு எந்த தாவரத்திற்கும் இடமில்லை. ஆக, நவநாகரீக மனிதர்களைப்போல இதுவும் கூட்டுக்குடும்பத்தை விரும்பவில்லை போலும்.

  வகைகள்.

  அதன் வகைகளை பொறுத்து 2 அடி முதல் 15 அடி உயரம் வரை வளர்கின்றன. இலைகள் நீள்வட்டவடிவ தோற்றம் கொண்டவையாக உள்ளன.

  அமெரிக்காவிலும், மேற்குபசிபிக் பகுதிகளிலும் சுமார் 120 இனங்கள் காணக்கிடைக்கின்றன.

  இதில் சிறிய மாற்றங்களுடன் பல கலப்பினங்கள் உள்ளதால் பெயர் வைப்பதில் மற்றும் வேறுபடுத்திப்பார்ப்பதில் குழப்பங்கள் ஏற்படுவது  தவிர்க்க முடியாதவையாக உள்ளன. தனிக்குடித்தனம் அனுப்பிய  விஞ்ஞானிகளே ஹெலிகோனியத்தின் வகைகளை பிரித்தறிவதில் மகா குழப்பத்தில் உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

  பலவித ரகங்கள்.

  • ஐரிஸ் - Irises.
  • பாக்கி
  • சீகர்
  • லீனா -Lena.
  • டிராபிக்ஸ் - Tropics.
  • வேகினேரியா ரெட்
  • வேகினேரியா மஞ்சள்
  • ஆலன்கார்லே
  • சொர்ணம் கோல்ட்
  • செக்ஸிபிங்
  • அலங்கர்
  • டெம்ரஸ்
  • எல்லோ
  • செக்ஸி பிங்
  • ஷீ
  • அங்குஸ்டா
  • தக்கோமி
  • கென்யா ரெட்
  • ஃபையர் பேர்ட்
  • ஃபையர் பிளாஷ்
  • ஸ்கார்லெட்
  • கரிபியா ரெட்
  • மியானா
  • கோல்டன் டார்ச்
  • ஜேக்குலின்
  • ரெட் கிறிஸ்மஸ்
  • வேகினேரியா பம்கின் என பல்வேறுபட்ட ரகங்கள் இதில் உள்ளன.

  மேற்குறிப்பிட்டுள்ள ரகங்களில் "டிராபிக்ஸ்" மற்றும் "ரெட் கிறிஸ்மஸ்" முதலியன அதிக மகசூல் தரும் ரகங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

  மேற்குறிப்பிட்டுள்ள பலவகையான ரகங்களில் சிலரகங்கள் தினந்தோறும் பூக்கும். இன்னும் சிலரகங்கள் வாரம் ஒருதடவை பூக்கும், இன்னும் சில ரகங்களோ 6 மாதத்திற்கு ஒருதடவையே பூக்கும். ஒவ்வொரு வகைகளும் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு வண்ணங்களில் பூக்கின்றன.

  தாவரத்தின் பண்புகள்.

  மஞ்சள், இஞ்சி இவைகளைப்போல இதுவும் தடித்த வேர்களை (கிழங்கு போன்ற அமைப்பு) கொண்டுள்ளன. இந்த வேர்களில் கிளைக்கும் கன்றுகள் மூலமாகவும் விதைகள் மூலமாகவும் இனத்தை பெருக்குகின்றன.

  தாய் தாவரம் பூக்க ஆரம்பித்தவுடன் அதன் கிழங்கிலிருந்து பல்வேறு சேய் செடிகள் துளிர்விட ஆரம்பிக்கின்றன. வளர்ந்த தாவரங்கள் ஒவ்வொன்றும் நாணலின் தண்டினைப்போன்று தடித்த தண்டினை கொண்டுள்ளன.

  இவைகளின் இலைகள் வாழை, இஞ்சி, மஞ்சள் இலைகளின் வடிவத்தை ஒத்துள்ளன. பொதுவாக இலைகள் இரு பக்கங்களிலும் பச்சை நிறங்களை கொண்டுள்ளன. சிலவகை தாவரங்கள் அடிப்பகுதியில் பழுப்பு கலந்த சிவப்பு நிறத்தை கொண்டுள்ளன.

  இவற்றின் இலைகள் பலவகையான சிலந்திகள் (Spider), தவளைகள் (Frogs) மற்றும் வௌவால்களுக்கு (Bats) கூட மறைந்து வாழ இடம்கொடுத்து உதவுகின்றன. மேற்கத்திய நாடுகளில் ஒருவித சிறிய வெள்ளை வௌவால்கள் இந்த இலைகளை தங்களுடைய வசிப்பிடமாக மாற்றிக்கொள்கின்றன.

  Heliconia-bats

  கருப்பு நிறமான ஒருவகை பட்டாம்பூச்சிகள் தங்களுடைய முட்டைகளை இதன் இலைகளில் ஒட்டவைக்கின்றன. அதிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் இந்த இலைகளை தின்றே கூட்டுப்புழுக்களாக மாற்றமடைந்து அதன்பின் பட்டாம்பூச்சிகளாகின்றன.

  Heliconia-insects

  இந்த தாவரங்களில் கண்களை பறிக்கும் அழகோடு மலர்கள் மலர்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். நம் கண்களுக்கு அழகிய வண்ணங்களில் தெரிவது உண்மையில் மலர்களே அல்ல. அவைகள் பூக்களை பாதுகாக்கும் தடிமனான வெளிமடலாகும். இந்த மடலுக்குள்ளேதான் பூக்கள் உள்ளன.

  உதாரணமாக, வாழைப்பூவில் உள்ளே இருக்கும் பூக்களின் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு சீப்பு பூக்களின்மேல் அடர் பிரவுன் கலரில் மடல் ஒன்று உள்ளதல்லவா அதுபோலத்தான் இதுவும்.

  ஒவ்வொரு மடலுக்குள்ளேயும் அதிகப்படியாக 50 பூக்கள்வரை இருக்கின்றன. ஒவ்வொரு வகைகளிலும் பூக்களின் எண்ணிக்கை வேறுபடும்.

  Heliconia_true_flower

  மலர்கள் பலவிதமான நீளம் மற்றும் வடிவங்களில் உள்ளன. சில மேல்நோக்கியும், சில கீழ்நோக்கி தொங்கியபடியும் பல வண்ணங்களில் உள்ளன.

  பூக்கள் அயல்மகரந்த சேர்க்கையால் கருவுற்று முதிர்ந்து காய்களாக  மாறுகின்றன. 

  இம்மலர்கள் அதிக அளவில் தேன்களையும் உற்பத்தி செய்கின்றன. மலர்களில் மதுவருந்த பெரும்பாலும் பறவைகளே வருகின்றன. "ஹம்மிங்" பறவைகள் (humming birds) பற்றி கேள்விப்பட்டியிருப்பீர்கள் அல்லவா ? ... அவைகளின் மதுவருந்தும் பார்களாக இருப்பது இந்த பூக்கள்தான்.

  ஹம்மிங் பறவைகள் மட்டுமல்லாது வேறுசில சிறியரக பறவைகளும் மதுவருந்த இம்மலர்களைத்தேடி வருவதுண்டு.

  humming birds_heliconia

  அவ்வாறு தேனருந்தும்போது பறவைகளின் பல்வேறு பாகங்களில் பூவிலுள்ள மகரந்தங்கள் ஒட்டிக்கொள்வதால் இப்பறவைகளே அயல்மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. தென் பசிபிக்பகுதிகளில் வௌவால்கள் (Bats) மூலமாகவும் அயல்மகரந்த சேர்க்கை நடைபெறுகின்றன. 

  இதன் கருவுற்ற காய்கள் பச்சை அல்லது இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன. காய்கள் முதிர்ந்து பழுக்கும்போது சிலவகை இனங்களில் பழங்கள் நீலநிறமாகவும், சிலவகை இனங்களில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறமாகவும் மாற்றமடைகின்றன.

  ஒவ்வொரு முதிர்ந்த காய்கள் அல்லது பழங்களினுள்ளும் விதைகள் உள்ளன. ஒரு பழத்தினுள் 1 முதல் 3 விதைகள்வரை இருக்கின்றன. பழங்களை விரும்பி சாப்பிடும் பறவைகள் மற்றும் சிலவகை சிறிய விலங்குகளால் விதைகள் வெவ்வேறு இடங்களுக்கு பரவுவதன்மூலம் இதன் இனம் பெருகுகின்றன.

  வேர் கிழங்கு மற்றும் விதைகள் என இருவழிகளில் இவைகள் இனவிருத்தி செய்கின்றன.

  Heliconia-fruit

  பயன்கள்.

  இந்த தாவரங்களால் நமக்கு ஏற்படும் பயன்கள் என்று பார்த்தால் இவற்றின் அழகிய மலர்களே நமக்கு பயன்படுகின்றன. விழாக்கள் மற்றும் திருமண மேடைகள் முதலியவைகளை அலங்கரிக்க இதனை பயன்படுத்துகிறார்கள்.

  மேலும் வீடுகள் மற்றும் ஹோட்டல்களை அழகுபடுத்துவதற்காக  அவைகளின் முகப்பு பகுதிகளில் இவைகள் வளர்க்கப்படுகின்றன.

  மேலும், இது பணப்பயிராகவும் வளர்க்கப்படுகிறது. வாழை மற்றும் தென்னை முதலியவைகளின் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் பயிர்செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நல்லதொரு வருமானம் தரும் பயிராகவும் இது விளங்குகிறது.

  இதனை சாகுபடி செய்யும் முறைகளைப்பற்றி அடுத்தடுத்து தொடர்ந்துவரும் பதிவுகளில் பார்க்கலாம். மலர்கள் மட்டுமல்லாது  சில வகையான ஹெலிகோனியத்தின் விதைகள் மருத்துவத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

  இதுவரை "ஹெலிகோனியம்" என்னும் தாவரத்தின் பல அடிப்படை விஷயங்களைப்பற்றி தெரிந்துகொண்ட நீங்கள் ஹெலிகோனிய தாவரங்களை எவ்வாறு சாகுபடி செய்வது அல்லது வீட்டில் வளர்ப்பது என்பதைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?. தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்க் - ஐ கிளிக்கவும்.

  >>"ஹெலிகோனியா சாகுபடி - Heliconia - Cultivation and Crop protection."<<

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  2 கருத்துகள்

  1. ஒவ்வொரு நுணுக்கமான தகவல்கள் வியக்க வைக்கின்றது... தேடல் தொகுப்பு மிகவும் அருமை...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் பாராட்டுரை மகிழ்ச்சியை தருகிறது !! ... நன்றி நண்பரே !!!

    நீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.