கீழாநெல்லி - மருத்துவ குணங்கள் - Phyllanthus amarus - Medicinal properties.

கீழாநெல்லி - Keelanelli.

Carry me seed.

[PART - 2]

கீழாநெல்லி பற்றிய பதிவில் இது இரண்டாவது பகுதி. இந்த பகுதியில் கீழாநெல்லியைப்பற்றியும், அதன் மருத்துவக் குணங்களைப்பற்றியும், அதன் சாகுபடி நுட்பங்களைப்பற்றியும் பார்க்கயிருக்கிறோம்.


பில்லாந்தஸ்ஸியே (Phyllanthaceae) என்னும் தாவர குடும்பத்தை சேர்ந்த பேரினத்திலொன்று பில்லாந்தஸ் (Phyllanthus). இந்த பில்லாந்தஸ் என்பது நெல்லி இன தாவரங்களை ஒன்றிணைப்பது.

இதில் சராசரியாக 1200 வகையான தாவரங்கள் உள்ளன. இந்த 1200 வகையான தாவரங்களில் ஒன்றுதான் நாம் இப்போது பார்க்கப்போகும் பைலாந்தஸ் அமரஸ் (Phyllanthus amarus) என்னும் கீழாநெல்லி.

  இந்த பில்லாந்தஸ் பேரினத்தில் சுமார் 750 முதல் 1200 வகையான சிற்றின தாவரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் அதில் சுமார் 12 வகையான இனங்களே நோய்தீர்க்கும் மூலிகைகளாக இனங்காணப்படுள்ளது.

  இந்த 12 வகையான மூலிகைகளை பற்றியும் அவற்றின் பண்புகள் மற்றும் மருத்துவ தன்மைகளைப்பற்றியும் இப்பதிவின் முதல் பகுதியில் விரிவாக பார்த்தோம். அதனை மீண்டும் ஒருமுறை பார்வையிட கீழேயுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.

  >> பில்லாந்தஸ் இனங்களும் கீழாநெல்லியும் - Keelanelli - Phyllanthus Species.<<


  கீழ்க்காய் நெல்லி.

  Phyllanthus amarus.

  திணை - தாவரம்.

  தாவர பிரிவு - பூக்கும் இருவித்திலை தாவரம் (Angiosperms).

  தமிழ் பெயர் - கீழாநெல்லி.

  பெயர்க்காரணம் - பொதுவாக இதனை நாம் "கீழாநெல்லி" என்றே அழைத்துவருகிறோம். ஆனால் இதனுடைய மிகச்சரியான பெயர் "கீழ் காய் நெல்லி" என்பதே. கீழ்காய் நெல்லி என்பதே காலப்போக்கில் கீழாநெல்லி என மருகிப்போனது.

  Phyllanthus amarus

  நெல்லியைப்போன்று இலைகளையும், காய்களையும் கொண்டிருப்பதாலும், இதன் காய்கள் இலைகளின் கீழாக இலைநடுத்தண்டில் வரிசையாக காய்த்திருப்பதாலும் இதற்கு "கீழ்க்காய் நெல்லி" என்று பெயர் ஏற்பட்டது.

  வேறுபெயர்கள் - கீழ்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி, பக்ஷிபத்ரம்.

  சமஸ்கிருதம் பெயர் - பூமியாம்லகி.

  ஹிந்தி பெயர் - ஜார் ஆம்லா.

  ஆங்கிலப்பெயர் - Carry me seed.

  தாவரவியல் பெயர் - பில்லாந்தஸ் அமரஸ் - Phyllanthus amarus.

  வரிசை - Malpighiales.

  தாவர குடும்பம் - Phyllanthaceae.

  துணைகுடும்பம் - Phyllanthoideae.

  பேரினம் - பைலாந்தஸ் - Phyllanthus.

  இனம் - P. amarus.

  தாயகம் - இந்தியா.

  காணப்படும் நாடுகள் - இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா.

  வாழிடம் - இது வெப்ப மண்டல பிரதேசங்களில் வளரும் சதுப்புநில தாவரம். ஈரப்பதமான இடங்களில் செழித்துவளருகிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.

  இனப்பெருக்கம் - இருவித்திலை தாவரம். விதைகள்மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. 

  வகைகள் - இந்தியாவில் மட்டும் 50 சிற்றினங்கள் உள்ளன. இந்த 50 சிற்றினங்களில் 12 சிற்றினங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தோற்றங்களை கொண்டுள்ளன. அவைகளில் நம்முடைய கீழாநெல்லியும் ஒன்று.

  பயன் - மருத்துவத்தில் நோய் தீர்க்கும் மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது.

  சுவை - லேசான கசப்பு. இதன் இலைகளிலுள்ள பைலாந்தின் (Phyllanthin) என்னும் மூலப்பொருளே இதற்கு கசப்பு சுவையை கொடுக்கிறது.

  பயன்படும் பாகங்கள் - மருத்துவத்தில் முழு தாவரமும் பயன்படுத்தப்படுகிறது.

  தாவரத்தின் தன்மை.

  இது வருடாந்திரமாக வாழும் ஒரு சிறு செடி. நிமிர்ந்து வளர கூடிய புதர்வகை தாவரம். அரை அடி முதல் 2 அடி உயரம் வரை வளரக்கூடியது. பக்கக் கிளைகளையும் கொண்டுள்ளன. இது தன்னிச்சையாக அனைத்து சூழ்நிலைகளையும் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு வளரும் ஒரு சிறு தாவரமாகும்.

  இலைகளின் தன்மை.

  சிறகு வடிவ மாற்றிலையடுக்கில் சிறியவடிவ கூட்டிலையைக் கொண்டுள்ளது. இலைகளின் அளவு சுமார் 5 முதல் 10 மி.மீ.

  Phyllanthus amarus sleeping

  இந்த இலைகளிடமுள்ள ஒரு விசேஷ அமைப்பு என்னவெனில், பகல் நேரங்களில் மட்டுமே இவைகள் விரிந்த நிலையில் இருக்கும். இரவு நேரங்களில் இருபக்க இலைகளும் குவிந்த நிலையில் மூடிக்கொள்ளும். அதாவது ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிடுகின்றன. நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் இதனை தூக்கத்திலிருந்து எழுப்பவே முடியாது. அடுத்தநாள் சூரிய உதயத்தை கண்டபின்பே இலைகள் தூக்கம் கலைந்து திறக்கின்றன.

  பூக்களின் தன்மை.

  பூக்கள் இலைகளின் கீழ்ப்பகுதிகளில் உள்ள இலை நடுத்தண்டுகளில் வரிசையாக பூக்கின்றன. வெளிர் பச்சைநிறத்தை கொண்டுள்ளன. 2 மி.மீ அளவுள்ள பூக்கள். பூக்களில் ஆண், பெண் என தனித்தனி பூக்கள் உள்ளது. பூக்கள் ஒவ்வொன்றும் 5 பூவிதழ்களை கொண்டுள்ளன.

  Phyllanthus amarus flower

  வேறு சில இனங்கள் 6 இதழ்களை கொண்டுள்ளன. பெண்மலர்களில் சூலகம் பிளவுபட்டு மூன்றாக பிரிந்த சூல்முடியினை கொண்டுள்ளன.

  காய்களின் தன்மை.

  சாதாரண நெல்லி காய்களைப்போன்று ஆனால் அதைவிட மிகச்சிறிய கடுகளவே கொண்ட காய்களை கொண்டுள்ளது.

  Phyllanthus amarus seed

  2 மி.மீ அளவுள்ள பச்சை நிறமான காய்கள். காய்கள் வெடிகனி வகையை சார்ந்தது. காய்களுக்கு உள்ளே மஞ்சள்நிற விதைகள் காணப்படுகின்றன. காய்கள் ஒவ்வொன்றும் 5 தனித்தனி மெல்லிய திசுக்களால் பிரிக்கப்பட்ட தனித்தனி அறைகளை கொண்டுள்ளன. ஒவ்வொரு அறைக்குள்ளேயும் தலா ஒரு விதைகள் வீதம் ஒரு காய் மொத்தம் 5 விதைகளை கொண்டுள்ளன.

  மருத்துவ தன்மை.

  பசி மந்தம், கண்நோய், நாட்பட்ட மேகப்புண், நீரழிவு, இரத்தக்கழிச்சல், சொறிசிரங்கு, மேகம், தாது வெப்பம், நீர்கடுப்பு, ரணம், வீக்கம், பெரும்பாடு, தலைசுற்றல், கை கால் எரிச்சல், மேக வெட்டை, அசதி, சோகை, காய்ச்சல், நாவறட்சி, அரிப்பு முதலிய நோய்களுக்கு சிறந்ததொரு நிவாரணத்தை தருகின்றன. இரத்தத்தையும் சுத்தம் செய்கிறது.

  தாவரத்திலுள்ள வேதிப்பொருட்கள்.

  இதில் 50 க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதிலுள்ள முக்கியமான வேதிப்பொருட்கள்
  பைலாந்தின் (Phyllanthin) மற்றும் ஹைப்போ பைலாந்தின் (hypophyllanthine). இதிலுள்ள பிற வேதிப்பொருட்களையும் பார்க்கலாம்.

  இலைகளில் உள்ள வேதிப்பொருட்கள்.

  • கிளைகோசைடுகள் - glycosides.
  • கொழுப்பு - fat.
  • பைலாந்தின் - Phyllanthin.
  • ஹைப்போபைலாந்தின் - hypophyllanthine.
  • கூமரின் - coumarins.
  • தயமின் (vitamin B₁) - Thiamine.
  • சபோனின்கள் - saponins.
  • சர்க்கரை - sugar.
  • டானின் - tannin.
  • ஃபிளாவனாய்டுகள் - flavonoids.
  • ஸ்டெராய்டுகள் - steroids.
  • ஆல்கலாய்டுகள் - alkaloids.
  • அஸ்கார்பிக் அமிலம் - ascorbic acid.
  • பினோலிக்கலவைகள் - phenolic compounds.
  • நார்சத்து - fibre.
  • கார்போஹைட்ரேட் - carbohydrates.
  • லிப்பிடுகள் - lipids.
  • புரதம் - protein.
  • கால்சியம் - calcium.
  • பொட்டாசியம் - potassium.
  • வைட்டமின் C.
  • மெக்னீசியம் - magnesium.
  • சோடியம் - sodium.
  • பாஸ்பரஸ் - Phosphorus.
  • இரும்பு - iron.
  • துத்தநாகம் - zinc.
  • தாமிரம் -copper.
  • ஈயம் - lead.
  • நிக்கல் - nickel.
  • moisture content.
  • terpenoids.
  • Glycosides.

  விதைகளில் உள்ள வேதிப்பொருட்கள்.

  • கார்போஹைட்ரேட் - carbohydrates.
  • கொழுப்பு - fat.
  • நார்சத்து - fibre.
  • புரதம் - protein.
  • மெக்னீசியம் - magnesium.
  • கால்சியம் - calcium.
  • பொட்டாசியம் - potassium.
  • அஸ்கார்பிக் அமிலம் - ascorbic acid.
  • இரும்பு - iron.
  • துத்தநாகம் - zinc.
  • ஆல்கலாய்டுகள் - alkaloids.
  • சபோனின்கள் - saponins.

  மருத்துவ பயன்.

  இது மருத்துவத்தில் இடித்து பிழிந்தெடுத்து சாறாகவும். காயவைத்து பொடியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

  அளவு - சாறு எனில் வேளைக்கு 10 முதல் 20 மில்லி வரையில் பயன்படுத்திவரலாம். பொடி எனில் 4 முதல் 6 கிராம்வரை பயன்படுத்திவரலாம். 

  அதிகாலையில் இதன் இலைசாற்றை 1 வாரம் தொடர்ந்து அருந்திவர சோகை நீங்கும்.

  Phyllanthus amarus juice

  கீழாநெல்லியின் இளங்கொழுந்தை குடிநீரிலிட்டு அருந்திவர சீதக்கழிச்சல் குணமாகும்.

  இதன் இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து சொறி சிரங்குகளின் மீது பூச அவைகள் குணமாகும்.

  கீழாநெல்லி செடியை மென்று பல்துலக்கிவர பல்வலி குணமாவதோடு ஈறுகளில் உள்ள நோய்களும் குணமாகும். பல் கூச்சம் உள்ளவர்கள் இதன்வேரை வாயில் போட்டு இரண்டு நிமிடநேரம் மென்றால் பல்கூச்சம் நீங்கும்.

  கீழாநெல்லியை சுத்தம்செய்து உரலிலிட்டு இடித்து சாறுபிழிந்து ஒரு அவுன்ஸ் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து 1 வாரம் தொடர்ந்து சாப்பிட மூத்திரத்தாரையில் இரத்தம் கலந்து வருவது நிற்கும்.

  உடலில் அடிபட்டு திசுசிதைவு உண்டானால் இதன் இலையை அரைத்து பற்று போட்டுவர குணம் கிடைக்கும்.

  கீழாநெல்லி இலை 3 பங்கும் வெங்காயம் 1 பங்கும் சேர்த்து இடித்து சாறுபிழிந்து 3 நாள் தொடர்ந்து நானூறு மில்லி அளவில் அருந்திவர பித்தசோகை அதனால் ஏற்பட்ட வீக்கம் குணமாகும்.

  கீழாநெல்லி இலை மற்றும் அதன் வேர் வகைக்கு 25 கிராம் எடுத்து சுத்தம்செய்து மண்சட்டியில்போட்டு 300 மி.லிட்டர் தண்ணீர்விட்டு காய்ச்சவும். தண்ணீர் பாதியாக சுண்டியவுடன் இறக்கி ஆறவிடவும். ஆறியபின் இதனை அருந்திவரலாம். இவ்வாறு ஒருநாளைக்கு மூன்று வேளையாக சிலநாட்கள் அருந்திவர உடல்சூடு, எரிச்சல் குணமாகும்.

  Phyllanthus amarus syrup

  இதன் வேரை மட்டும் அரைத்துக்கொடுக்க பெரும்பாடு நீங்கும்.

  கீழாநெல்லி சமூலத்தை சுத்தம் செய்து (சமூலம் என்றால் இலை, தண்டு, வேர் உட்பட முழு செடியையும் குறிக்கும்) பசும்பாலில் அரைத்து பசும்பாலுடன் கலந்து குடித்துவர வாத, பித்தம், இரத்தகுறைவினால் ஏற்பட்ட பாண்டு, உடல் வெளுப்பு நீங்கி இரத்தம் உற்பத்தியாகும். கண்கள் குளிர்ச்சிபெறும்.

  கீழாநெல்லி தைலம்.

  தேவையான பொருட்கள்.

  கீழாநெல்லியை நிழலில் காயவைத்து இடித்தெடுத்த சூரணம் – 1 கிலோ.

  தண்ணீர் – 5 படி.

  சீரகம் – 40 கிராம்.

  பசும்பால் – 20 மில்லி.

  நல்லெண்ணெய் – 200 கிராம்.

  மேற்கண்ட சூரணத்தை 5 படி நீரிலிட்டு முக்கால் படியாக வற்றும்படி காய்ச்சி இதனுடன் பசும்பாலால் சீரகத்தை நன்றாக அரைத்து கலந்து நல்லெண்ணையும் கலந்து மீண்டும் காய்ச்சி தைல பதம் வந்தவுடன் இறக்கி வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

  இந்த தைலத்தை பயன்படுத்தி வாரம் இரண்டுமுறை தலைமுழுகிவர அழலை, கைகால் எரிச்சல், கண்களில் உஷ்ணம், தலைசுற்றல், மயக்கம், பித்தம், கிறுகிறுப்பு, நடுக்கம், உட்சுரம், வாந்தி முதலியன குணமாகும்.

  உடல்சூடு தணிய தைலம்.

  கீழாநெல்லி இலையை சுத்தம் செய்து இடித்து 500 மி.லி. சாறு எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 1 லிட்டர் தேங்காய்யெண்ணை சேர்த்து சிறுதீயில் காய்ச்சவும். அதிலுள்ள நீர் எல்லாம் சுண்டியவுடன் இறக்கி நன்கு ஆறியபின் காற்று புகாத பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

  Phyllanthus amarus oil

  இதனை தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் ஊறவிட்டு அதன்பின் பாசிப்பயறு மாவு தேய்த்து குளித்துவர கணச்சூடு தணிந்து உடல் குளிர்ச்சி பெறும்.

  வெள்ளை, வெட்டை குணமாக.

  கீழாநெல்லியை 1 எலுமிச்சம்பழம் அளவில் அரைத்துதெடுத்து மோருடன் கலந்து காலை 1 வேளை மட்டும் சாப்பிடவும். இவ்வாறு தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பிட்டாலே போதுமானது வெள்ளை, வெட்டை மற்றும் மூத்திர சம்பந்தமான வியாதிகள் குணமாகிவிடும். இந்த மருந்து சாப்பிட்டுவரும் காலங்களில் உணவில் உப்பு சேர்க்காமல் பத்தியமாக இருக்க வேண்டியது அவசியம்.

  1 பிடி கீழாநெல்லி இலையை 1 லிட்டர் நீரில் நசுக்கிப்போட்டு அரைலிட்டராக வற்ற காய்ச்சி காலை, மாலை அருந்திவர வெள்ளைப்படுதல் குணமாகும்.

  குழந்தைகளுக்கு மந்தம் குணமாக.

  கீழாநெல்லி இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு பால் அல்லது நீரில் கலந்து வாரத்திற்கு 3 தடவை கொடுத்துவர வயிறு மந்தம், சீதபேதி குணமாகும்.

  சொறி சிரங்கு நீங்க.

  கீழாநெல்லி இலையை பசுமோர்விட்டு அரைத்து உடல் முழுவதும் பூசி சிறிதுநேரம் ஊறவிட்டு குளித்துவர அரிப்பு, நமைச்சல், சொறி, சிரங்கு, சிறியரக புண்கள் முதலியன குணமாகும்.

  கீழாநெல்லி இலையும் உப்பும் சேர்த்து அரைத்து குளிப்பதற்கு முன்னால் உடலில் பூசி சிறிதுநேரம்கழித்து குளித்துவர சொறி, சிரங்கு நீங்கும்.

  கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசி அரைமணிநேரம் கழித்து குளிக்க தோல்நோய்கள் குணமாகும்.

  கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் நலம்பெற.

  கீழாநெல்லியுடன் கரிசலாங்கண்ணி கீரை சம அளவு எடுத்து நீரில் நன்றாக சுத்தம்செய்து அரைத்து நாள்தோறும் தொடர்ந்து இருவேளை நெல்லிக்காய் அளவு எடுத்து பசும்பாலுடன் கலந்து அருந்திவர கல்லீரல், மண்ணீரல் நோய்கள், சிறுநீரக வீக்கம், மாலைக்கண், இரத்தசோகை முதலியன நீங்கி இரத்தம் சுத்தமடையும்.

  சர்க்கரை நோயை கட்டுப்படுத்த.

  கீழாநெல்லியை காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு மூன்றுவேளை உணவுக்குமுன் சாப்பிட்டு நீர் அருந்திவர சர்க்கரைநோயை கட்டுக்குள் வைக்கலாம்.

  அற்புத மருத்துவத் தன்மையை கொண்டுள்ள இந்த மூலிகையை முறையாக பயிர்செய்து விற்பனைக்கு அனுப்பி அதிக லாபம் ஈட்டலாம். இதனை பயிர் செய்வது எப்படி என்பதனை பார்க்கலாம்.

  கீழாநெல்லி சாகுபடி.

  Phyllanthus amarus Cultivation

  இந்த கீழாநெல்லியானது வெப்ப மற்றும் துணைவெப்ப மண்டல பகுதிகளில் செழிப்பாக வளரும் இயல்புகொண்டது. இது கசப்புத்தன்மை பொருந்திய தாவரமாகையால் நோய்களால் தாக்குதலுக்குள்ளாவதும் மிக குறைந்த அளவே ஏற்படுகின்றன.

  பயிர்செய்வதற்கு ஏற்ற இரகங்கள்.

  இதில் பலவகையான ரகங்கள் உள்ளதென்றாலும் "நவ்யாகிரிட்" என்னும் ரகமே அதிக அளவில் பயிர்செய்யப்படுகிறது.

  நில சீரமைப்பு.

  நிலத்தின் காரத்தன்மை 7.5 ஆகவும், அமிலத்தன்மை 6.5 என்னும் விகிதாசாரத்திலும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். களிமண்கலந்த சதுப்புநிலம் பயிரிட ஏற்றது.

  பயிரிடப்படும் நிலத்தில் 10 முதல் 20 டன் அளவில் தொழுஉரத்துடன் தழைச்சத்து மற்றும் சாம்பல்சத்து வகைக்கு 50 கிலோ, மணிச்சத்து 10 கிலோ இவைகளை கலந்து அடியுரமாக இட்டு இரண்டு அல்லது மூன்றுமுறை நன்கு உழுது அதன்பின் நிலத்தை சமன்படுத்தி பண்படுத்தவும்.

  சாகுபடி.

  1 ஹெக்டேருக்கு 1கிலோ அளவில் விதை தேவைப்படும். விதைகளை பயன்படுத்தி முதலில் நாற்றுகளை உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். விதைகளை விதைப்பதற்குமுன் 30 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து எடுத்து அதன்பின் தனியாக ஒரு இடத்தை தேர்வுசெய்து விதைகளை தூவி நீர் தெளித்துவர சரியாக 1 வாரத்தில் விதைகள் துளிர்விடும்.

  20 முதல் 30 நாட்கள்வரை அவற்றை நாற்றங்கால்களிலேயே வைத்து பராமரித்து வரவேண்டும். அவ்வப்போது நீர்தெளித்துவருதல் அவசியம்.

  1 ஹெக்டேருக்கு பயிர்செய்ய சுமார் 8 லட்சம் நாற்றுகள்வரை தேவைப்படும்.

  20 முதல் 30 நாட்களான நாற்றுகளை கவனமாக பிடுங்கி பிரதான நிலத்தில் 10 × 15 என்ற இடைவெளியில் நடவுசெய்ய வேண்டும்.

  Phyllanthus amarus plant

  செடியின் வேர்பகுதிகளில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதை பயிரிடும் நிலம் சிறந்த வடிகால் வசதியுள்ளதாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம்.

  உர மேலாண்மை.

  ஏற்கனவே தொழு உரம், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து இவைகளை அடிஉரமாக கொடுத்துள்ளோம். இனி நடவு செய்த 30 வது நாளில் மணிச்சத்து 10 கிலோவும், அடுத்து ஒரு 30 நாள் கழித்து மீண்டும் மணிச்சத்து 10 கிலோவும் கொடுத்தால் போதுமானது.

  பயிர் பாதுகாப்பு.

  பொதுவாக இது கசப்புசுவை பொருந்திய தாவரமாகையால் இதனை பூச்சிகள் பெரும்பாலும் தாக்குவதில்லை. எனவே அதிக அளவு பராமரிப்பு தேவைப்படாத தாவரம் என்றே இதனை சொல்லலாம். பூச்சிகள் ஏதாவது தாக்குவதாக உணர்ந்தால் வேப்ப எண்ணையை மாதம் ஒருமுறை தெளித்துவரலாம். வேப்பஇலைகளை தழையுரமாக பயன்படுத்துவதாலும் பூச்சிகளிடமிருந்து பயிரை பாதுகாக்கமுடியும்.

  அறுவடை.

  இது குறுகியகால பயிர். எனவே நடவுசெய்த மூன்றாவது மாதத்திலேயே அறுவடைக்கு தயாராகிவிடும்.

  மகசூல்.

  ஹெக்டேருக்கு சராசரியாக 17 டன் தழைகளை மகசூலாக பெறமுடியும்.

  கீழாநெல்லி - மஞ்சட்காமாலை.

  சில புரிதல்கள்.

  இதுவரையில் கீழாநெல்லியின் மருத்துவ குணங்களைப் பற்றியும், அதனை மூலிகை பயிராக சாகுபடி செய்யும் விதம் பற்றியும் அறிந்துகொண்டோம். இதுமட்டுமல்லாது இன்னும் மிக முக்கியமான ஒரு விஷயத்தை பற்றியும் ஆராய வேண்டியுள்ளது.

  அது யாதெனில்,

  கீழாநெல்லி என்ற உடனேயே சட்டென நம் நினைவுக்கு வருவது மஞ்சள் காமாலைதான். கிராமப்புறங்களாகட்டும் அல்லது நகர்புறமாகட்டும் யாருக்காவது மஞ்சட்காமாலை நோயின் அறிகுறி தென்பட்டால் உடனே அவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனையாக பரிந்துரைக்கப்படுவது "கீழாநெல்லி கஷாயம்".

  உண்மையிலேயே இந்த கீழாநெல்லிக்கு மஞ்சட்காமாலையை குணப்படுத்தும் திறன் உள்ளதா? என்கின்ற சந்தேகம் நமக்குள் எழுவது இயல்பு.

  jaundice eyes

  மனிதர்களுக்கு வரும் நோய்கள் மொத்தம் 4448 இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நோய்களில் அதிக அளவு மனிதர்களின் உயிரை குடிக்கும் நோய் எது தெரியுமா? மஞ்சட்காமாலைதான்.

  ஆம், உலக அளவில் மஞ்சட்காமாலை நோயினால் வருடத்திற்கு சராசரியாக 2 கோடி பேர் இறந்துகொண்டிருக்கின்றனர். அதிக அளவில் மனித உயிர்களை குடிக்கும் நோய்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்த மஞ்சட்காமாலை.

  ஐயகோ... இரண்டுகோடிபேர் இறக்கிறார்களா? அப்படியென்றால் இந்த மஞ்சட்காமாலை நோய்க்கு மருந்தே இல்லையா என்கிறீர்களா ?

  இருக்கிறது.

  இருக்கிறது என்றால் அதன் பின் ஏன் இவ்வளவு இறப்பு நிகழ்கிறது?

  புரிதல் இல்லாமை.

  யாருக்கு?

  வேறு யாருக்கு? நம்முடைய மக்களுக்குதான்.

  என்ன புரிதல் வேண்டும்?... அதுதான் மஞ்சட்காமாலை நோய்க்கு அற்புத பலன்தரக்கூடிய "கீழாநெல்லி" என்னும் மூலிகை அனைவரது வீட்டு கொல்லைப்புறங்களிலும் வளர்ந்து நிற்கிறதே. அதனை நாசுக்காக பறித்து வந்து சட்டுன்னு கஷாயமிட்டு மடக் மடக் என்று பல்லில்படாமல் குடிப்பதோடு கொஞ்சம் அரைத்து உச்சந்தலையிலும் "தப்பாளம்" போட்டுவிட்டால் மூன்றே நாளில் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடியே போகிறது. அப்படியும் போகாவிட்டால் இருக்கவே இருக்கு பழுக்க காய்ச்சிய "இரும்பு கம்பி". நன்கு பழுக்க காய்ச்சி விலா பக்கத்துல எலும்பு வெளில தெரியுற அளவுக்கு ரெண்டு இழுப்பு இழுத்தா மஞ்சட்காமாலை போயே போச்சு. இதற்கு ஏன் வருடத்திற்கு இரண்டுகோடிபேர் இறக்கவேண்டும். புரியவில்லையே!.

  அதைத்தான் சொல்கிறேன் மக்களுக்கு இன்னும் சரியான புரிதல் இல்லையென்று.

  கீழாநெல்லியை பற்றியா?

  இல்லை.. இல்லை..

  அப்படியென்றால் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியை பற்றியா?

  அதுவும் இல்லை.

  அப்படியென்றால் எதைப்பற்றிய புரிதல் வேண்டும்?

  மஞ்சட்காமாலையைப்பற்றிய புரிதல்.

  yellow eye for jaundice eyes

  என்ன புரிதல் வேண்டும்?

  முதலில் மஞ்சட்காமாலை என்பது உண்மையில் ஒரு தனிப்பட்ட நோய் அல்ல என்கின்ற புரிதலும், இரண்டாவதாக அது நம் உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் 20 க்கும் மேற்பட்ட கொடிய வெவ்வேறு வகையான நோய்களுக்கான வெளிப்புற அறிகுறி மட்டுமே என்கின்ற புரிதலும், மூன்றாவதாக உள்ளுறுப்புகளை தாக்கும் 20 க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை விட்டுவிட்டு அந்த நோய்கள் ஏற்படுத்தும் வெளிப்புற அடையாளங்களுக்கு மட்டுமே சிகிச்சை செய்துகொண்டிருப்பது கடைந்தெடுத்த பயித்தியக்காரத்தனம் என்கின்ற புரிதலும் வேண்டும்.

  புரியவில்லை..

  புரியும்படியாகவே சொல்கிறேன்.. "பன்றி காய்ச்சல்" கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது எதனால் வருகிறது தெரியுமா?

  "ஏ-இன்ப்ளூயென்சா" வகை வைரஸ் கிருமிகளால் வருகிறது.

  சபாஷ்... இப்போது உங்களிடம் ஒரு கேள்வி?

  கேளுங்கள்.

  பன்றி காய்ச்சலை குணப்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால் "ஏ-இன்ப்ளூயென்சா" என்னும் வைரஸை கொல்வதற்கான மருந்தை சாப்பிடுவீர்களா? அல்லது அதன் வெளிப்புற அறிகுறியான காய்ச்சல் என்னும் உடல்சூட்டை நீக்குவதற்காக குளிர்ச்சியூட்டும் எண்ணெய்களை உடலெங்கும் பூசிக்கொண்டும் நேரத்தை வீணடிப்பீர்களா? உங்களுடைய முயற்சி இரத்தத்தில் கலந்துள்ள வைரஸை அழிப்பதில் இருக்கவேண்டுமா? அல்லது அதன் வெளிப்புற அறிகுறியான உடல்சூட்டை தணிப்பதில் இருக்கவேண்டுமா?

  வைரஸை அழித்தொழிப்பதில்தான் இருக்கவேண்டும். அதுதான் புத்திசாலித்தனமும் கூட... நீங்கள் சொல்வதை பார்த்தால் மஞ்சட்காமாலை நோயை குணப்படுத்தும் திறன் கீழாநெல்லிக்கு இல்லையென்று சொல்கிறீர்களா?.

  நான் அப்படி சொன்னேனா?. மஞ்சட்காமாலை நோயை குணப்படுத்தும் திறன் கீழாநெல்லிக்கு உள்ளதா இல்லையா என்பதனை இரண்டாவதாக பார்க்கலாம்.. முதலில் மஞ்சட்காமாலை என்றால் என்ன? மஞ்சட்காமாலை என்னும் வெளிப்புற அறிகுறி உடலில் ஏன் ஏற்படுகிறது. அந்த அறிகுறிகளை உண்டுபண்ணுவது வைரஸ்களா? அல்லது வேறு ஏதாவது உடல் பாதிப்புகளா?  உடல்பாதிப்புகள் என்றால் .. அது எந்தவிதமான பாதிப்புகள் என்பதெல்லாம் தெரிந்துவைத்துள்ளீர்களா?

  இல்லையே..

  உயிர்குடிக்கும் கொடிய நோயைப்பற்றிய எந்தவிதமான அடிப்படை புரிதலும் இல்லாமல் உடலின் வெளியே இந்தவிதமான அறிகுறிகள் தென்பட்டால் அதற்கு இதுதான் மருந்து என்று நீங்களாகவே எப்படி முடிவெடுக்கிறீர்கள்?

  தவறுதான்.. மஞ்சட்காமாலை நோயைப்பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதனை ஒப்புக்கொள்கிறேன். விளக்கமாகச் சொன்னால் தெரிந்துகொள்கிறேன்..

  நல்லது.. அடுத்த பதிவில் புரியும்படி கொஞ்சம் விரிவாகவே அலசுவோம்..

  நன்றி!

  இப்பதிவின் மூன்றாவது பகுதியை [PART - 3] படிக்க கீழேயுள்ள சுட்டியை தட்டுங்க..

  >>"கீழாநெல்லியும் மஞ்சள்காமாலையும். Keelanelli - Manchakamalai - jaundice"<<


  இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


  கருத்துரையிடுக

  4 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.