"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
கீழாநெல்லியும் மஞ்சள்காமாலையும். Keelanelli - Manchakamalai - jaundice.

கீழாநெல்லியும் மஞ்சள்காமாலையும். Keelanelli - Manchakamalai - jaundice.

கீழாநெல்லியும் மஞ்சள்காமாலையும்.

Manchakamalai.

[PART - 3]

கீழாநெல்லியைப்பற்றிய பதிவில் இது மூன்றாவது பகுதி. நாம் முந்தைய இரு பதிவுகளில் கீழாநெல்லி என்னும் மூலிகையைப்பற்றி தொடர்ந்து பார்த்துவந்துள்ளோம். அதன் தொடர்ச்சியே இப்பகுதி.


>> பில்லாந்தஸ் இனங்களும் கீழாநெல்லியும் - Keelanelli - Phyllanthus Species. <<

என்னும் முதல் பகுதியில் "நெல்லி" என்னும் பேரினத்திலுள்ள பலவகை கீழாநெல்லி இனங்களை பார்வையிட்டோம்.

அதேபோல "கீழாநெல்லி - மருத்துவ குணங்கள் - Phyllanthus amarus - Medicinal properties". என்னும் இரண்டாவது பகுதியில் கீழாநெல்லியில் அடங்கியுள்ள சில மருத்துவக்குணங்களை பார்வையிட்டோம்.

அந்த வரிசையில் இது மூன்றாவது பகுதி. இந்த பதிவில் கீழாநெல்லிக்கும், மஞ்சள்காமாலை நோய்க்குமான தொடர்பை அலசி ஆராய இருக்கின்றோம்.


  மஞ்சள்காமாலை.

  கீழாநெல்லி என்ற உடனேயே நமக்கு ஞாபகத்திற்கு வருவது மஞ்சள் காமாலை நோய்தான். அந்த அளவிற்கு பன்நெடுங்காலமாக பாரம்பரிய மருத்துவ முறைகளில் மஞ்சள் காமாலைக்கு சிறந்த நிவாரணமாக கீழாநெல்லியே பரிந்துரைக்கப்பட்டு வந்துள்ளது.

  உண்மையிலேயே மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் திறன் கீழாநெல்லிக்கு உள்ளதா என்பதனை பற்றியும் மஞ்சள் காமாலை நோய் என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது என்பதுபற்றிய சில புரிதல்களை ஏற்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

  இது மஞ்சள் காமாலைக்கான பதிவு இல்லையென்பதால் மஞ்சள் காமாலை நோயைப்பற்றி மிக விரிவாகவோ அல்லது விலாவாரியாகவோ நாம் இங்கு பார்க்கப்போவதில்லை. மாறாக கீழாநெல்லியைப்பற்றிய சில தவறான புரிதல்களிலிருந்து தெளிவுபெறவே இங்கு மஞ்சள் காமாலை பற்றி மிக சுருக்கமாக பார்க்க இருக்கின்றோம்.

  மஞ்சள் காமாலை நோய்க்கு மிகச்சிறந்த நிவாரணம் கீழாநெல்லியே என்னும் கருத்து பன்னெடுங்காலமாக நம் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டுவிட்டது. இன்றும் தொடர்ந்து விதைக்கப்பட்டுவருகிறது.

  ஆனால், மருத்துவத்துறையில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் அபார வளர்ச்சியால் மஞ்சள் காமாலைக்கும் கீழாநெல்லிக்குமான தொடர்பை மறுபரிசீலனைசெய்ய வேண்டியுள்ளது.

  ஏனெனில், மஞ்சள் காமாலை நோய் வருவதற்கான காரணங்கள் பல உள்ளதால் அனைத்து வகையான மஞ்சள் காமாலை பிரச்சனைகளுக்கும் கீழாநெல்லி ஒன்றே தீர்வல்ல என்பதனை புரிந்துகொள்ள வேண்டியது மிகமிக  அவசியம்.

  இதை புரிந்துகொள்ள வேண்டுமெனில் முதலில் மஞ்சள் காமாலை நோயைப்பற்றி ஓரளவாவது தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

  மஞ்சள்காமாலை என்பது என்ன?

  Mancha kamalai - jaundice.

  உண்மையில் மஞ்சள் காமாலை என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. உங்களின் உள்ளுறுப்புகள் ஏதோ ஒருவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை உங்களுக்கு உணர்த்தும் வெளிப்புற அறிகுறி.

  jaundice body

  அதாவது மஞ்சள் காமாலை என்பது ஒரு வித சமிஞ்சை. இந்த அறிகுறியை ஏற்படுத்தும் நோய்கள் நிறையவே உள்ளன.

  அதாவது புரியும்படி சொல்லவேண்டுமென்றால் உடலுக்குள் ஒன்றிற்கு ஒன்று சம்பந்தமே இல்லாத நான்கு வெவ்வேறு வகையான நோய்கள் வெவ்வேறு காலகட்டங்களில் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த நான்கு வெவ்வேறு வகையான நோய்களும் ஒன்றிற்கு ஒன்று முற்றிலும் வெவ்வேறானவை என்பதால் சிகிச்சை முறையும் கண்டிப்பாக வெவ்வேறாகத்தான் இருக்கவேண்டும் அல்லவா?..

  ஆனால், இந்த நான்கு வெவ்வேறான நோய்களும் தங்களின் வருகையை உங்களுக்கு உணர்த்த ஒரே ஒரு ஆயுதத்தைதான் கையிலெடுக்கின்றன. அதுதான் மஞ்சள் காமாலை.

  கையிலெடுத்திருக்கும் ஆயுதம் ஒரே மாதிரியானவை என்பதால் நோயும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கவேண்டும் என்கின்ற அவசியமில்லை. எனவே  அவற்றிற்கான சிகிச்சையும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை.

  ஆகவே, மஞ்சள் காமாலை என்னும் அறிகுறியை ஏற்படுத்தும் பலதரப்பட்ட நோய்களை கீழாநெல்லி என்ற ஒரேயொரு மூலிகையே தீர்த்துவைத்துவிடும் என்று எண்ணுவது முற்றிலும் முட்டாள்தனமானது.

  இன்னும் உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் உள்ளுறுப்பில் ஏற்படும் சிலவகை அழற்சிகள் காமாலை அறிகுறியை உண்டுபண்ணலாம்.    அல்லது சிலவகை வைரஸ் பாதிப்புகள் காமாலை அறிகுறியை உண்டுபண்ணலாம்.

  சிலவகை பாஃடீரியாக்கள் காமாலை அறிகுறியை உண்டுபண்ணலாம். அல்லது குடலில் வாசம் செய்யும் புழு பூச்சிகள் கூட காமாலையை உண்டுபண்ணலாம்.

  jaundice worms

  உறுப்புகளில்வரும் சிலவகை கட்டிகள், புற்றுநோய்கள் கூட காமாலை அறிகுறியை வெளிப்படுத்தலாம். அல்லது நாளங்களில் ஏற்படும் கல் அடைப்பு மற்றும் சதையடைப்புகள்கூட காமாலை அறிகுறியை தோற்றுவிக்கலாம்.

  சில நேரங்களில் மரபணுக் கோளாறினாலும்கூட காமாலை அறிகுறிகள் ஏற்படுகின்றன. சிலவகை பாலின நோய்களால் உள்ளறுப்புகள் பாதிக்கப்படும்போதும் காமாலை அறிகுறிகள் ஏற்படுவதுண்டு.

  இதுபோல மஞ்சள் காமாலை வருவதற்கு இன்னும் ஏராளமான காரணங்கள் உள்ளன. நிலைமை இப்படியிருக்க இது எல்லாவற்றையும் கீழாநெல்லி கஷாயமும், கீழாநெல்லியை அரைத்து தலையில் வைக்கும் தப்பாளமும் குணப்படுத்திவிடும் என்று கூறுவது கொஞ்சம் நகைப்புக்குரியதாக உள்ளதல்லவா?

  எனவே, வெவ்வேறு நோய்களின் ஒரே அறிகுறியாக வெளிப்படும் மஞ்சள் காமாலையை ஒரேயொரு தனிப்பட்ட நோயாகக்கருதி.. யாரோ சிலர் சொல்கிறார்கள் என்பதற்காக கீழாநெல்லியை அரைத்து குடித்துக்கொண்டும், தலைக்கு தப்பாளம் வைத்துக்கொண்டும் அதன்பின் சிலநாட்களிலேயே நோய் முற்றிப்போய் மேளதாளம் சங்குசத்தத்தோடு இறுதி யாத்திரைக்கு தயாராவதைவிட.. ஆரம்பத்திலேயே மஞ்சள் காமாலை என்னும் அறிகுறியானது எந்த நோயினால் ஏற்பட்டுள்ளது என்பதனை முறையான பரிசோதனைமூலம் கண்டறிந்து அந்த தனிப்பட்ட நோய்க்கு சிகிச்சை செய்துகொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும் அல்லவா?

  வாருங்கள்! மஞ்சள் காமாலை என்பது என்ன? எந்தெந்த நோய்களெல்லாம் இந்த மஞ்சள் அறிகுறியை உடலில் ஏற்படுத்துகின்றன? அந்த நோய்களில் எவற்றையெல்லாம் கீழாநெல்லி குணப்படுத்துகின்றன? எதையெல்லாம் கீழாநெல்லி குணப்படுத்துவதில்லை? என்பதனை அறிவியல் பூர்வமாகவே அலசுவோம்.

  மஞ்சள்காமாலையும் அறிகுறிகளும்.

  ஒருவர் மஞ்சள்காமாலை அறிகுறிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பதனை எவ்வாறு அறிந்துகொள்வது?

  சம்பந்தப்பட்டவரின் கைவிரல், நகங்கள், உடலின் திசுக்கள் உட்பட  கண்களிலுள்ள வெண்படலம் மஞ்சளாக தோன்றுவது முதற்கொண்டு சிறுநீர் மஞ்சளாகப்போவது முதலிய அறிகுறிகள் ஒருசேர இருந்தால் மஞ்சள் காமாலையால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற முடிவுக்குவரலாம்.

  ஒரே ஒருநாள் மட்டுமே சிறுநீர் மஞ்சளாக கழிகிறது என்பதற்காக உடனேயே மஞ்சள் காமாலை என்கின்ற முடிவுக்கு வந்துவிடுதல் கூடாது.

  ஏனெனில், சிலவகை மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுவதால் நீர் மஞ்சளாக போகலாம் அல்லது போதிய அளவு நீர் அருந்தாமல் வெயிலில் அலைந்து திரிந்தாலும் நீர் மஞ்சளாக போகலாம்.

  எனவே, ஒருநாள்மட்டுமல்லாமல் தொடர்ந்து நீர் மஞ்சளாக போனாலோ கூடவே நகக்கண், முகக்கண், தோல்கள் முதலியன மஞ்சளாக மாறினாலோ மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக முடிவு செய்யலாம்.

  சரி, இந்த மஞ்சள் காமாலை நோய் எதனால் வருகிறது என்பதனை கொஞ்சம் பார்ப்போம்.

  பிலிருபின்.

  இந்த மஞ்சள் காமாலைக்கு அடிப்படைக் காரணமாக அமைவது இரத்தத்திலுள்ள "பிலிருபின்" (Bilirubin) என்னும் பொருள்.

  பிலிருபின் என்பது என்ன? What is bilirubin?

  பிலிருபின் என்பது இரத்தத்திலுள்ள ஒரு கழிவு நிறமிப் பொருள். இதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

  Hemoglobin

  ஹீமோகுளோபின்.

  ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு விதமான புரதச்சத்து ஆகும். இதனுடைய பணி உடல் திசுக்களுக்கு ஆக்சிஜனை கொண்டுசெல்லும் பணியை செய்வதோடு உடல் திசுக்களிலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை நுரைஈரலுக்கு எடுத்துவரும் பணியையும் இதுவே செய்கிறது.

  இரத்தத்திலுள்ள இந்த ஹீமோகுளோபினுடைய ஆயுள் வெறும் 120 நாட்கள் மட்டுமே.

  "புதியன புகுதலும் பழையன கழிதலும் மரபு" என்பதற்கிணங்க நாள் தோறும் நம் இரத்தத்தில் சில மில்லி கிராம் அளவுகளில் புதிய ஹீமோகுளோபின் உருவாகுவதால் 120 நாட்கள் பழமையான அதாவது காலாவதியான பழைய ஹீமோகுளோபின்கள் சிதைவுறுதல் செய்யப்பட்டு அழிக்கப்படுகின்றன.

  அவ்வாறு சிதைவுறும்போது அவைகள் "ஹீம்" மற்றும் "குளோபின்" என இருவேறு பகுதிகளாக சிதைவுறுகின்றன. இதில் "ஹீம்" ஆனது பல்வேறு சிதைவுறு மாற்றத்தை அடைய அதில் கடைசி கழிவுப்பொருளாக மிஞ்சுவதே இந்த "பிலிருபின்" என்னும் மஞ்சள்நிற நிறமிப்பொருள்.

  bilirubin

  உடலுக்கு தேவையில்லாத இந்த கழிவுப் பொருளை இரத்தத்திலிருந்து வடிகட்டி அகற்ற வேண்டுமல்லவா? அந்த வேலையை கனகச்சிதமாக செய்து முடிப்பதே நம்முடைய கல்லீரலின் பணி.

  காலாவதியான இந்த பிலிருபினானது கல்லீரலின் உதவியால் இரத்தத்திலிருந்து  வடிகட்டப்பட்டு கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீருடன் கலந்து குடற்பகுதிக்குள் வந்து மலம்வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த பிலிருபின் நிறம் மஞ்சள் என்பதால்தான் மலத்தின் வழியாக வெளியேறும்போது மலமும் மஞ்சள் நிறத்தைப் பெறுகின்றன. மலத்திற்கு மஞ்சள் நிறத்தை கொடுப்பது இந்த பிலிருபின்தான்.

  பிலிருபினை வெளியேற்றும்பணி  எந்தவிதமான தொய்வும் இல்லாமல் அன்றாடம் நம் உடலில் ரெகுலராக நடக்கவேண்டிய தலையாய பணி மட்டுமல்ல மிக அவசியமான பணியும்கூட.

  இந்த வேலை மிக சரியாக நடைபெற வேண்டுமெனில் இதை பொறுப்பேற்று நடத்தும் கல்லீரல் மிகச்சரியாக இயங்கவேண்டும். மாறாக கல்லீரலில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அதன்பணி பாதிக்கப்பட்டால் இரத்தத்திலுள்ள பிலிருபின் முறையாக வடிகட்டப்படாமல் இரத்தத்திலேயே தங்கிவிடும். இதனால் இரத்தத்தில் மஞ்சள்நிறம்கொண்ட பிலிருபின் செறிவு அதிகரிக்க அதனால் இரத்தம் மஞ்சள்நிறமாக மாறுதலடைய இதன் காரணமாக கண்கள் மற்றும் உடலும் மஞ்சள்நிறமாக மாறுதலடைய மஞ்சட்காமாலை நோய் வந்துவிட்டதை உணருகின்றோம்.

  சுருக்கமாக சொல்லப்போனால் தினந்தோறும் கழிவாக வெளியேற்றப்பட வேண்டிய "பிலிருபின்" என்னும் மஞ்சள்நிற பொருள் முறையாக வெளியேற்றப்படாமல் இரத்தத்திலேயே தங்கிவிட்டால் அதுதாங்க "மஞ்சள் காமாலை".

  கல்லீரல்.

  கல்லீரல் என்பது வயிற்றின் வலது பக்கத்தில் கொஞ்சம் மேலாக உதரவிதானத்திற்கு கீழாக இருக்கும் மிகு முக்கியமான உறுப்பு. இதன் எடை சராசரியாக 1.6 கிலோ இருக்கும். பெண்களுக்கு இந்த எடை சற்று குறைவாக இருக்கலாம்.

  கல்லீரலானது நம் உடலில் பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் ஒரு மாபெரும் தொழிற்சாலை. நம் உடலுக்கு தேவையான பல்வேறு ரசாயனங்களை உற்பத்தி செய்வதோடு நம் உடலுக்கு தேவைப்படும் பல்வேறு சக்திகளின் சேமிப்பகமாகவும் திகழ்கிறது.

  கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்வது, இரத்தம் உறைதலுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வது இவைகளுடன் பல்வேறு சத்துக்களின் சேமிப்பகமாக விளங்குவதோடு பல்வேறு வளர்ச்சிதை மாற்றத்திற்கும் காரணமாக அமைகிறது.

  ஜீரணத்திற்கு தேவைப்படும் பித்தநீரை உற்பத்தி செய்வதும் இதே கல்லீரல்தான். இவ்வளவு வேலைகளும் போதாதென்று இரத்தத்திலிருந்து  பிலிருபினை வடிகட்டி பிரித்தெடுத்து வெளியேற்றும் வேலையையும் இதே கல்லீரல்தான் செய்கிறது.

  இவ்வாறு பிரித்தெடுக்கப்படும் பிலிருபின் மஞ்சள்நிறம் கொண்டதாதலால் இவை கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் பித்தநீருடன் கலந்து பித்தநீருக்கும் மஞ்சள்நிறத்தை கொடுக்கின்றன.

  நாம் உண்ணும் உணவு குடலில் முறையாக ஜீரணமாக வேண்டுமெனில் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படும் பித்தநீர் உணவுடன் கலக்கவேண்டியது அவசியம். தினந்தோறும் 500 மி.லி முதல் 1 லிட்டர் வரை பித்தநீரை கல்லீரல்  உற்பத்தி செய்கின்றன. இந்த பித்த நீர் 85 % நீரும் 15 % பித்த அமிலங்களையும் கொண்டிருக்கும். இது சதாசர்வகாலமும் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும்.

  இந்த பித்தநீரும் கல்லீரலால் வடிகட்டப்பட்ட பிலிருபினும் ஒன்றுகலந்து நேராக பித்தப்பைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சேமித்து வைக்கப்படுகின்றன. அங்குதான் இதிலிருக்கும் அதிகப்படியான நீர் நீக்கப்பட்டு பித்தநீர் கொஞ்சம் அடர்த்தியானதாக மாற்றப்படுகிறது.

  liver

  பித்தப்பை.

  பித்தப்பை என்பது  சிறிய பை போன்ற அமைப்பு. இது கல்லீரலின் அடிப்பகுதியில் இருக்கிறது. 8 செ.மீ நீளமும், 4 செ. மீ அகலமும் கொண்டது. இதில் பெரும்பாலும் 50 மில்லி அளவிற்கு பித்தநீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

  குடலில் உணவு ஜீரணமாகும் வேளைகளில் பித்தப்பையிலுள்ள பித்தநீரானது குடலுக்குள் செலுத்தப்பட்டு வயிற்றிலுள்ள பாஃடீரியாவால் பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு "ஸ்டர்கோனோஜின்" என்னும் பொருளாக மாறி மலத்துடன் வெளியேறுகிறது.

  இந்த கல்லீரலில் எதாவது நோய்தொற்று ஏற்பட்டாலோ அல்லது பித்தநீரை வெளியேற்றும்பகுதிகளில் அதைசார்ந்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டாலோ குடலில் சேரவேண்டிய பித்தநீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் தடைபட... இதனால் கல்லீரலின் இயக்கமும் தடைபட... இதனால் இரத்தத்தில் பிலிரூபின் என்ற மஞ்சள் நிற நிறமியின் செறிவு அதிகரித்து மஞ்சள்காமாலை என்னும் பிரச்சனையை கொண்டுவருகிறது.

  இதனால் மூளை, நரம்புமண்டலம் முதலியன பாதிப்படைவதோடு கண்கள், கைகள், தோல் முதலியன மஞ்சள் நிறமாக மாறுவதுடன் சிறுநீரும் மஞ்சளாக நிறமாற்றமடைகிறது. இதனையே நாம் மஞ்சள்காமாலை நோய் என்கிறோம்.

  இப்போது உங்களுக்கு ஒரு உண்மை தெரிந்திருக்கும். மஞ்சட்காமாலை என்பது உண்மையில் ஒரு நோயல்ல என்பதுவும், கல்லீரலில் ஏற்படும் பிரச்சனை அல்லது வேறுவிதமான நோய், அல்லது ஏதாவதொரு காரணத்தால் கல்லீரலில் ஏற்படும் வேலைநிறுத்தமே வெளியில் நமக்கு மஞ்சள்காமாலை என்னும் அறிகுறியாக வெளிப்படுகிறது என்பது புரிகிறததல்லவா?... சரி மஞ்சட்காமாலை நோய் வராமல் உடலை பாதுகாக்கவேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

  கல்லீரலின் ஆரோக்கியம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும். கல்லீரலை பலப்படுத்தும், உணவுப்பொருட்களை தேடி தேடி உண்ணவேண்டும் எங்கிறீர்கள்தானே. ரொம்ப கரெக்ட்.

  கல்லீரலை பலப்படுத்தும் உணவுப்பொருட்கள் பல இருந்தாலும் கூட நோயென்று வந்துவிட்டால் உடனடி ஆக்க்ஷன் எடுப்பதற்கு விரைவாக செயல்படக்கூடிய மூலிகை ஏதாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்கிறீர்களா?

  உங்கள் கவலையை தீர்ப்பதற்கும் ஒரு மூலிகை இருக்கிறது. அதுதான் கீழாநெல்லி.

  ஆம் கீழாநெல்லியில் கல்லீரலை பலப்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளன என்பதனை பல்வேறு ஆராய்ச்சிகள்  நிரூபித்துள்ளன.

  ஹையா! அப்புறமென்ன மஞ்சட்காமாலை வந்தால் கல்லீரலை பலப்படுத்தும் கீழாநெல்லியை அரைத்துக்குடித்து அப்படியே கொஞ்சம் தலைக்கும் தப்பாளம் வைப்பதோடு தேவைப்பட்டால் கீழாநெல்லிவேர் கஷாயத்தையும் ஒரு பார்வைபார்த்தால் மஞ்சட்காமாலை ஓடியே போய்விடுகிறது என்கிறீர்களா?

  இங்குதான் ஒரு சிக்கல் உள்ளது.

  என்னாது சிக்கலா? என்ன சிக்கல்?

  வேறொன்றுமில்லை... மஞ்சட்காமாலைக்கு நிவாரணமாக கீழாநெல்லியையே நீங்கள் நம்பி இருந்தீர்கள் என்றால், காமாலை போகிறதோ இல்லையோ அதற்கு  முன்னதாகவே பூமாலையோடு நீங்கள் போக ஆரம்பித்துவிடுவீர்கள்..

  என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? உண்மைதான்..

  ஏனென்றால் கீழாநெல்லி உங்களை வெறும் 5 சதவீதம் மட்டுமே நோயிலிருந்து காப்பாற்றும் மீதி 95 சதவீதம் நெற்றிக்காசு வைப்பதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுத்துவிடும்.

  ஏனென்றால், கீழாநெல்லி கல்லீரலில் ஏற்படும் ஓரிரு அழற்சியை மட்டுமே குணப்படுத்தும் திறனை கொண்டுள்ளன. ஆனால் மஞ்சட்காமாலை கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் பலவீனத்தால் ஏற்படுவது வெறும் 5 சதவீதம் மட்டுமே... மீதி 95 சதவீதம் வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. அவைகளை நிவர்த்தி செய்யும் திறன் இந்த கீழாநெல்லிக்கு கிடையாதென்பது ஏற்றுக்கொள்வதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும் கூட அதுதான் உண்மையும் கூட.

  எனவேதான் மஞ்சட்காமாலை என்று வந்துவிட்டால் அதற்கு ஒரே தீர்வு கீழாநெல்லிதான் என்று இருந்துவிடாமல் மஞ்சட்காமாலை எந்த காரணங்களால் ஏற்பட்டுள்ளது என்பதனை பரிசோதனைமூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

  bilirubin-test

  சரி, இனி  மஞ்சட்காமாலை அறிகுறிகளை ஏற்படுத்தும் பல்வேறு வகையான நோய்களை பற்றி பார்ப்போம்.

  💢💢💢💢

  மஞ்சள்காமாலை வகைகள்.

  காமாலை நோய்களை நான்கு வகைகளாக பிரிக்கலாம். அவை

  1. ஆபத்தில்லா காமாலை.
  2. இரத்த அழிவு காமாலை - Haemolytic Jaundice.
  3. அடைப்பில்லா காமாலை என்னும் கல்லீரல் பாதிப்பு காமாலை.
  4. அடைப்பு காமாலை.

  ஆபத்தில்லா காமாலை.

  [தான்தோன்றி மறையும் காமாலை].

  சில குழந்தைகளுக்கு பிறந்த முதல் 3 நாட்கள் கழித்து 7 நாட்களுக்குள்ளாக மஞ்சட்காமாலை அறிகுறிகள் ஏற்படுகின்றன. முதலில் மஞ்சள் நிறமானது நெற்றியில் தொடங்கி படிப்படியாக உடல்முழுக்க பரவலாம்.

  இந்த காமாலை வருவதற்கான காரணம் குழந்தையின் உடலிலுள்ள தேவைக்கதிகமான குருதி கொள்ளளவால் அதிக "பிலிருபின்" உற்பத்தியாவதும், சிவப்பணுக்களின் மிகக்குறைந்த ஆயுளும் காரணமாக இருக்கின்றன. 

  இந்த வகை மஞ்சள்காமாலையினால் குழந்தைகளின் உயிருக்கு பாதிப்பு எதுவுமில்லை. சிகிச்சையும் தேவையில்லை. காமாலை தோன்றி 6 நாட்களுக்கு பிறகு படிப்படியாக குறைந்து 2 வாரத்தில் தானாகவே குணமாகிவிடும். எனவே இதனை ஆபத்தில்லா காமாலை என குறிப்பிடுகின்றனர். ஆபத்தில்லா காமாலையென்றாலும் முறையான பராமரிப்பு மிகமிக அவசியம்.


  jaundice-baby

  ஆனால், சில குழந்தைகளுக்கு இந்த காமாலையானது ஓரிரு வாரங்களில் முழுமையாக குணமாகாமல் நீடித்தபடி இருக்கும். இதற்கு காரணம் அந்த குழந்தை குறைமாதத்தில் பிறந்ததாக இருக்கலாம். குறைமாதத்தில் பிறந்ததாதலால் உள்ளுறுப்புகள் போதிய அளவு வளர்ச்சிபெறாமல் இருப்பதால் மஞ்சள்காமாலை உடனடியாக குறையாமல் நீடிக்கலாம்.

  மேலும் உடல் வெப்பநிலை குறைவாக இருத்தல், இரத்தத்தில் குளுகோஸின் அளவு குறைவாக இருத்தல், உடலுக்கு பொதிய அளவு பிராணவாயு கிடைக்காமல் இருப்பதாலும் மஞ்சட்காமாலையின் கால அளவு நீடிக்கலாம். 

  ஆனால், இன்னும் சில பச்சிளம் குழந்தைகளுக்கு இரத்தகாமாலை முதற்கொண்டு மேலும்சில ஆபத்தான காமாலைகள் கருவிலேயே ஏற்படுகின்றன. எனவே வந்திருப்பது ஆபத்தான காமாலையா? அல்லது ஆபத்தில்லாத காமாலையா? என்பதனை பரிசோதனைமூலம் அறிந்து முறைப்படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு :- தானாகவே குணமாகும் தன்மையுடையதாதலால் கீழாநெல்லி பயன்படுவதில்லை. பச்சிளம் குழந்தையென்பதால் பயன்படுத்திப்பார்ப்பதுவும் முறையில்லை. குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகலாம்.


  💢💢💢💢

  இந்த பதிவில் மஞ்சள்காமாலை என்றால் என்ன என்பதுபற்றியும், அதனை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு என்ன என்பது பற்றியும் பார்த்தோம். மேலும் மஞ்சட்காமாலையின் பிரதான நான்கு வகைகளுள் முதல் வகையான "ஆபத்தில்லா காமாலை" பற்றியும் பார்த்தோம். அடுத்த மூன்று பிரதான வகைகளான..

  • இரத்த அழிவு காமாலை - Haemolytic Jaundice.
  • அடைப்பில்லா காமாலை என்னும் கல்லீரல் பாதிப்பு காமாலை.
  • அடைப்பு காமாலை.

  ஆகியவைகளை பற்றியும், இவைகளை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்குபற்றியும் அறிந்துகொள்ள இக்கட்டுரையின் நான்காவது பகுதிக்கு [PART - 4] வாருங்கள்.

  நான்காவது பகுதியை படிக்க [PART - 4] கீழேயுள்ள "லிங்க்" ஐ கிளிக் செய்யுங்கள்.

  >> "கீழாநெல்லி - மஞ்சள்காமாலை. Keelanelli - jaundice." <<

  🍂🍃 🍂🍃 🍂🍃 🍂🍃

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  0 கருத்துகள்