கீழாநெல்லி - மஞ்சள் காமாலை. Keelanelli - jaundice.

கீழாநெல்லியும் மஞ்சள் காமாலையும்.

சில புரிதல்கள்.

[PART - 4].

கீழாநெல்லி என்னும் மூலிகையைப்பற்றி தொடர் பதிவுகளாக பார்த்துவருகிறோம். அதன் தொடர்ச்சியில் இது நான்காவது பகுதி.

லேசான கசப்பு சுவை கொண்ட இந்த கீழாநெல்லியானது மருத்துவத்தில் நோய் தீர்க்கும் மூலிகையாக பயன்படுத்தப்பட்டுவருகிறது.


இதன் இலைகளிலுள்ள "பைலாந்தின்" (Phyllanthin) என்னும் மூலப்பொருளே இதற்கு கசப்பு சுவையை கொடுக்கிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிற தாவரமான இது வெப்பமண்டல பிரதேசங்களில் வளரும் சதுப்புநில தாவரமாகும். நோய்தீர்க்கும் மருத்துவத்தன்மையுள்ள மூலிகைகளில் இது மிகவும் சிறப்பானது எனலாம்.

உண்மையில் இது பலவித பிணிகளை தீர்ப்பதில் முதன்மையானது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அதேவேளையில், பன்னெடுங்காலமாக மஞ்சட்காமாலை நோயை தீர்ப்பதிலும் இது முதன்மையானதாக கருதப்பட்டுவருகிறது. ஆனால் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக மஞ்சள்காமாலைமீது இதற்குள்ள ஆளுமை கேள்விக்குறியாகியுள்ளது. இதனை புரிந்துகொள்ள வேண்டுமெனில் முதலில் மஞ்சட்காமாலையை பற்றி அறிதல் அவசியமாகிறது. அதுபற்றிய ஒரு சிறிய அலசலே இக்கட்டுரை.

கீழாநெல்லியைப்பற்றிய இப்பதிவின் முதல் பகுதியை படிக்க கீழேயுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.

PART - 1 >> "கீழாநெல்லியும் பல்வகை இனங்களும் - Keelanelli - Phyllanthus Species."

  பிலிருபின் - Bilirubin.

  மஞ்சள்காமாலை என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல என்பதனையும் அது பலவகையான நோய்கள் ஏற்படுத்தும் ஒரு பொதுவான அறிகுறி என்பதனையும் பார்த்தோம்.

  இரத்தத்திலுள்ள "பிலிருபின்" என்னும் காலாவதியான மஞ்சள்நிற நிறமியை கல்லீரலால் முறையாக பிரித்து வெளியேற்றமுடியாத காரணங்களால் இரத்தத்தில் இதன் செறிவு அதிகரிக்க அதனால் ஏற்படுவதே மஞ்சள்காமாலை என்கின்ற தகவல்களையும் முன்பே பார்த்துவிட்டோம்.

  bilirubin - jaundice - Keelanelli

  இப்பதிவில் மஞ்சள்காமாலையை ஏற்படுத்தும் பலவகையான நோய்களைப்பற்றியும், அந்த நோய்களில் எதையெல்லாம் குணப்படுத்தும் திறனை கீழாநெல்லி கொண்டுள்ளது என்பதனையும் இப்பதிவில் பார்க்கவுள்ளோம்.

  மஞ்சள்காமாலை வகைகள்.

  காமாலை நோய்களை நான்கு வகைகளாக பிரிக்கலாம். அவை

  1. ஆபத்தில்லா காமாலை.
  2. இரத்த அழிவு காமாலை.
  3. அடைப்பில்லா காமாலை என்னும் கல்லீரல் பாதிப்பு காமாலை.
  4. அடைப்பு காமாலை.
  இதில் முதல்வகையான ஆபத்தில்லா காமாலை (அ) தான்தோன்றி மறையும் காமாலையைபற்றி முந்தைய பதிவுகளில் ஏற்கனவே பார்த்துவிட்டொம்.

  எனவே.. இனி அடுத்து இரண்டாவதுவகை காமாலையான "இரத்த அழிவு காமாலை" என்னும் காமாலையைப்பற்றி பார்ப்போம் வாருங்கள்.

  இரத்த அழிவு காமாலை.

  இந்த இரத்த அழிவு காமாலையானது பச்சிளங்குழந்தைமுதல் நம் பக்கத்து வீட்டு பல்லில்லாத பங்கஜம் பாட்டிவரை வயது வித்தியாசமில்லாமல் பாதிக்கும் இயல்புடையது.

  பச்சிளம் குழந்தைகளை பாதிக்கும் இந்நோயில் பல வகைகள் உள்ளன. அவை..

  1. ரீசஸ் (Rhesus) இரத்த அழிவு நோய்.
  2. தாலசீமியா.
  3. பிறவி ஸ்பீரோசைட்டோசிஸின்
  4. ABO இரத்த அழிவு நோய்.
  5. கோளவடிவ சிவப்பணு நோய்.
  6. முட்டைவடிவ சிவப்பணு நோய்.
  7. கதிர் அரிவாள்வடிவ சிவப்பணுநோய்.

  ரீசஸ் (Rhesus) இரத்த அழிவு நோய்.

  பச்சிளம் மகவை பாதிக்கும் இந்த ரீசல் இரத்த அழிவு நோயைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டுமெனில் முதலில் நம் உடலிலுள்ள இரத்தத்தின் சில அடிப்படை தன்மைகளைப்பற்றி முதலில் அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.

  குருதியின் நிறம் மனிதர்களாகிய நம் அனைவருக்குமே சிவப்புதான். ஆனால் அனைத்து குருதிகளும் ஒரே பிரிவை சேர்ந்தது அல்ல. குருதிகளில் பல பிரிவுகள் உள்ளன என்பது அனைவருக்குமே தெரியும். அதில் "A" - "B" - "AB" - "O" என நான்கு பிரதான வகைகள் உள்ளன என்பதுவும் அனைவருக்கும் தெரியும்.

  அதேபோல இந்த இரத்த வகைகளுக்குள்ளாகவே துணை வகைகளும் உள்ளன. அதாவது A  இரத்த வகையில் A1, A2 எனவும், AB இரத்தவகையில் A1B, A2B என துணை வகைகளும் உள்ளன.

  இந்த துணை வகைகள் இரத்த சிவப்பணுக்களிலுள்ள "Rh" என்னும் ஆண்டிஜனை அடிப்படையாகக்கொண்டு பிரிக்கப்படுகின்றன. இந்த Rh ஆண்டிஜனை "ரீசஸ்" என்னும் குரங்கு இனங்களின் ரத்தத்தின் வாயிலாகவே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த துணை இரத்த வகைகளை "Rhesus factor" என அடையாளப்படுத்துகின்றனர்.

  Rhesus monkey

  தாயின் இந்த இரத்த துணை வகைக்கும், சேயின் இரத்த துணை வகைக்கும் ஒத்துவராமை அல்லது ஒவ்வாமை இருந்தால் அதன் காரணமாக குழந்தைக்கு மஞ்சள்காமாலை வரும். இதனையே "ரீசஸ் இரத்த அழிவு நோய்" என அழைக்கின்றனர்.

  இந்த இரத்த அழிவு நோய் தாயின் வயிற்றிலிருக்கும்போதே கருவை பாதிக்க தொடங்கிவிடும்.

  இந்த பாதிப்பு குழந்தை பிறந்தபின் 24 மணி நேரத்திற்குள்ளாக வெளிப்பட ஆரம்பிக்கும். குழந்தையின் உடல்முழுவதுமே மஞ்சள்பூத்ததுபோல மாறிவிடும். கல்லீரலும், மண்ணீரலும் வீக்கமடைந்து அதன் காரணமாக வயிறு உப்பிபோய் காணப்படும். இரத்தசோகையும் காணப்படும்.

  Rhesus factor jaundice

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு - இந்த நோயை குணப்படுத்துவதற்கான தடுப்பு மருந்துகள் உள்ளன. ஆனால் இந்த நோயினால் குழந்தை மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையை காப்பாற்ற ஒரேஒரு வழிதான் உள்ளது. அதுதான் இரத்தமாற்று சிகிச்சை. குழந்தையின் உடலிலுள்ள மொத்த இரத்தத்தையும் வெளியேற்றிவிட்டு வேறு புதிய இரத்தம் பாய்ச்சுவதே ஒரே வழி.

  அப்படியென்றால் கீழாநெல்லி?

  என்னாது.. கீழாநெல்லியா? ம்.. ம்ம்.. மேலேயுள்ள குழந்தையை ஒருதரம் பாருங்கள். அது எந்த அளவிற்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதனையும் பாருங்கள்.. அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றி கொடுக்கும் அளவிற்கு கீழாநெல்லியெல்லாம் ஒன்றும் சஞ்சீவி மூலிகை இல்லீங்கோ..

  💢💢💢💢

  தாலசீமியா பிரச்சனை.

  "தாலசீமியா" என்னும் நோயினாலும் குழந்தைகளுக்கு இரத்தத்தில் சிவப்பணுக்கள் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை ஏற்படலாம்.

  உடல் போதுமான அளவில் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்ய முடியாதபோது உடல் முழுக்க ஆக்சிஜன் விநியோகிப்பதில் தடை ஏற்பட்டுவிடுகிறது. இதனாலேயே "தாலசீமியா" என்னும் பிரச்சனை தலைதூக்குகிறது.

  இது சில குழந்தைகளுக்கு மரபணு குறைபாடுகளால் கூட ஏற்படலாம். இந்த தாலசீமியா பிரச்சனை மிதமாக இருக்கும் பட்சத்தில் இரத்தசோகையை மட்டுமே ஏற்படுத்துகிறது. அதுவே கடுமையாகும் பட்சத்தில் காமாலை நோயை ஏற்படுத்திவிடுகின்றன.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு - தாலசீமியா என்பது ஒரு மரபணுசார்ந்த பிரச்சனை என்பதால் மரபணு சிகிச்சையின் மூலமாகவே சரிசெய்யமுடியும். கீழாநெல்லி வேலைக்காகாது.

  மேலும் இந்த நோயினால் குழந்தைகளுக்கு இரத்தசோகை கடுமையாக இருக்குமாதலால் அடிக்கடி இரத்தம் ஏற்ற வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். அப்படியிருந்தும் இவர்களால் 20 அல்லது 30 வயதை தாண்டி வாழ்வது என்பது கடினமே. இந்த லட்சணத்தில் கீழாநெல்லி கொடுத்தீர்கள் என்றால் 5 வயதை தொடுவதுகூட சிரமமாக மாறிவிடும்.

  பிறவி ஸ்பீரோசைட்டோசிஸின்.

  சில குழந்தைகளுக்கு "பிறவி ஸ்பீரோசைட்டோசிஸின்" (Congenital Spherocytosis) என்னும் இரத்த சிவப்பணு கோளாறுகளால் மண்ணீரல் மற்றும் பித்தப்பை கடுமையாக பாதிக்கப்படுவதாலும் மஞ்சட்காமாலை ஏற்படலாம்.

  ABO இரத்த அழிவு நோய்.

  குழந்தை பிறந்த ஓரிரு நாட்களில் இந்நோய் தன்னை வெளிப்படுத்தி காட்டும். அதாவது ஓரிரு நாட்களில் குழந்தையின் உடலில் மஞ்சள் பூக்க ஆரம்பித்துவிடும்.

  இதுவும் தாய் மற்றும் சேயின் இரத்த ஒவ்வாமையால் வரக்கூடியதே. ஆனால் ஒரே ஆறுதலான விஷயம் என்னவென்றால்.. இது ரீசஸ் (Rhesus) மஞ்சள்காமாலையைப்போல கொடூரமானது அல்ல.

  ABO factor jaundice

  தாயின் இரத்தவகை "O"வாக இருந்து பிறக்கப்போகும் சேயின் இரத்தவகை "A" அல்லது "B" ஆக இருந்தால் இந்நோய் ஏற்படுகிறது.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு - தீவிர கண்காணிப்பும் சிகிச்சையும் கொடுக்க குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் தப்பித்துவிடும். ஆனால் இந்த கீழாநெல்லி சிகிச்சையெல்லாம் இங்கு பலன்தராதுங்க.

  💢💢💢💢

  கோளவடிவ சிவப்பணு நோய்.

  இது ஒரு பரம்பரை நோய். இந்நோய் பாதித்த குழந்தைகளின் சிவப்பணுக்கள் பிறவியிலேயே கோளவடிவில் அமைந்திருக்கும். 

  சாதாரணமாக சிவப்பணுவானது சிறிது தட்டையாக இருபக்கமும் குழிவிழுந்து காணப்படும். ஆனால் அது இங்கு கோளவடிவில் காணப்படுவதுதான் பிரச்சனையே.


  இந்த மாறுபட்ட வடிவினால் சிவப்பணுக்கள் வேகமாக அழிந்து இரத்த சோகையையும், காமாலையையும் உண்டுபண்ணுகின்றன. இந்த சிவப்பணு பாதித்த குழந்தைகளின் உடலில் பிறக்கும்போதே மிதமான மஞ்சள் காமாலையும், இரத்தசோகையும் நிரந்தரமாகவே குடியேறிவிடும். இதன் காரணமாக மண்ணீரலும் பெருத்துக்காணப்படும்.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு - இது ஒரு பரம்பரை சார்ந்த நோயென்பதால் கீழாநெல்லியால் எந்த பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை. முறையான சிகிச்சையை கொடுத்தால் மட்டுமே காமாலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

  முட்டைவடிவ சிவப்பணு நோய்.

  இதுவும் ஒரு பரம்பரை நோய்தான். இந்நோய் பாதித்த குழந்தைகளின் இரத்த சிவப்பணுக்கள் குழிவிழுந்து தட்டையாக இருப்பதற்கு பதிலாக முட்டை வடிவில் காணப்படும். இதனால் சிவப்பணுக்கள் விரைவாக அழிந்து காமாலையும், இரத்த சோகையும் ஏற்படும். இதனால் பிறக்கும்போதே குழந்தைகளின் உடலில் மிதமான மஞ்சள்காமாலையும், இரத்தசோகையும் நிரந்தரமாக குடிகொண்டுவிடும். சிலநேரங்களில் மண்ணீரலும் வீங்கி காணப்படலாம்.


  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு - இதுவும் மரபணுசார்ந்த பிரச்சனை என்பதால் கீழாநெல்லியால் எந்தவித பயனும் இல்லை. இரத்தப்பரிசோதனையுடன் முறையான சிகிச்சை கொடுக்கும் பட்சத்தில் காமாலையை தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.

  கதிர் அரிவாள்வடிவ சிவப்பணு நோய்.

  இந்நோய் பாதித்த குழந்தைகளின் இரத்த சிவப்பணுக்கள் கதிர் அரிவாளை ஒத்த வடிவில் வளைந்து காணப்படும்.


  முன்பு பார்த்த கோளவடிவ மற்றும் முட்டைவடிவ சிவப்பணு நோய்களைவிட இதுவே மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. சம்பந்தப்பட்ட குழந்தைக்கு கை, கால்களில் வீக்கமும், வலியும் ஏற்படும். அதுமட்டுமல்ல மண்ணீரலில் வீக்கம் ஏற்பட்டு வயிறும் பெருத்த நிலையில் காணப்படும்.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு - முறையான பரிசோதனையுடன் அதற்குத்தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் உயிர் தப்பிக்கலாம். இதற்கு கீழாநெல்லி சிகிச்சையெல்லாம்  பலனளிக்காது சாமியோவ்!.

  பெரியவர்களை பாதிக்கும்

  இரத்த அழிவு நோய்.

  இந்த இரத்த அழிவு காமாலையானது ஈவு இரக்கமே இல்லாமல் பச்சிளங்குழந்தைகளை கூட பாதிக்கிறது என்றால் பெரியவர்களைமட்டும் விட்டுவைக்குமா என்ன?... இளைஞர்களையும் வயதான பெரியவர்களையும் கூட பிடித்து ஒரு ஆட்டு ஆட்டத்தான் செய்கிறது.

  Haemolytic_Jaundice

  ஆனால் குழந்தைகளை பாதிக்கும் அதே ரூபத்தில் பெரியவர்களிடம் வருவதில்லை. முற்றிலும் வேறு வடிவத்தில்.. வேறுவடிவத்தில் என்றால் முகத்தைமட்டுமல்ல முகவரியையும் மாற்றிக்கொண்டே வருகிறது..

  ஆம், Haemolytic Jaundice என்று பெயர்தாங்கிவரும் இது பார்க்க மஞ்சளாக மங்களகரமானதாக இருக்கிறது என்பதற்காக ஆரத்தியெடுத்தா வரவேற்கமுடியும்..

  வாருங்கள்! பெரியவர்களை தாக்கும் Haemolytic Jaundice என்னும் இரத்த அழிவு காமாலையைப்பற்றியும் கொஞ்சம் பார்ப்போம்..

  Haemolytic Jaundice.

  இது பெரியவர்களை பாதிக்கும் கொடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்படும் பெரியவர்கள் பார்ப்பதற்கு அரைத்த மஞ்சளில் குளித்த மாம்பழம்போல் பார்ப்பதற்கு பளபளப்பாக அழகாகத்தான் இருப்பார்கள். ஆனால் உள்ளிருக்கும் வேதனையை வெளியில்சொல்லி மாளாது. இந்த நோய் எப்படி உருவாகிறது என்பதனை கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள்.

  நாள்தோறும் நம் இரத்தத்தில் புதிய ஹீமோகுளோபின் உருவாகுவதால் காலாவதியான பழைய ஹீமோகுளோபின் செல்கள் சிதைவுறுதல் செய்யப்பட்டு அழிக்கப்படுகின்றன என்று முன்பே பார்த்தோம் அல்லவா.. ஆனால் சிலநேரங்களில் வழக்கத்திற்கு மாறாக இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் சாதாரணமாக எவ்வளவு அழிக்கப்பட வேண்டுமோ அதைவிட அதிகளவில் அழிக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால் அதேவேகத்தில் பாவம் கல்லீரலால் இந்த பிலிருபினை வடிகட்ட முடிவதில்லை. (பாவம் அதுவும் ஒற்றை ஆளாக நின்று எவ்வளவுதான் வடிகட்டும்... கஷ்டம்தான்).

  இதனால் இரத்தத்தில் இந்த காலாவதியான பிலிருபினின் செறிவு அதிகரிக்க fair and lovely நிறத்தில் இருந்த உங்கள் உடல் மங்காத்தாவின் நிறமான மஞ்சள்நிறத்திற்கு மாறிவிடுகின்றன.

  Haemolytic Jaundice

  இம்முறையில் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் வழக்கத்திற்கு மாறாக வேகமாக அழிவதால் இதனையும் "இரத்த அழிவு காமாலை" (Haemolytic jaundice) என்கிறோம்.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு - இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு "ஸ்டெம்" செல் சிகிச்சை மற்றும் மரபணு சிகிச்சையே பலனளிக்கும். இதை குணப்படுத்துவதில் கீழாநெல்லிக்கு எந்த பங்கும் இல்லை. சொல்பேச்சு கேட்காமல் கீழாநெல்லியை தேடி அலைந்தீர்கள் என்றால் அப்புறம் சங்குதான்.

  ஆதலால், இந்த நோயின் ஆபத்தை உணராமல் சாதாரண மஞ்சட்காமாலை நோய்தானே என்று கீழாநெல்லி கஷாயம் காய்ச்சிக்கொண்டு இருந்தீர்கள் என்றால் அதைகுடித்த கையோடு அப்படியே சுடுகாடு பக்கம்போய் படுத்துக்கொள்ள வேண்டியதுதான். எனவே இந்த இரத்த அழிவினால் ஏற்படும் காமாலையை கீழாநெல்லியால் மருந்துக்கும்கூட குணப்படுத்தவே முடியாது என்பதே உண்மை.

  சரி, இனி அடுத்து மூன்றாவது காமாலையான "அடைப்பில்லா காமாலை" என்னும் "கல்லீரல் பாதிப்பு காமாலை"யைப்பற்றி பார்ப்போம்.

  கல்லீரல் பாதிப்பு காமாலையை பார்பதற்கு முன்னால் பச்சிளம் குழந்தைகளை பாதிக்கும் மேலும் ஒருசில காமாலையை சுருக்கமாக பார்த்துவிட்டு அதன்பின் கல்லீரல் பாதிப்பு காமாலையை பார்க்கலாம்.

  💢💢💢💢

  தாய்ப்பால் காமாலை.

  Breastmilk Jaundice.

  நாம் இப்போது பார்க்கப்போவது குழந்தையை பாதிக்கும் தாய்ப்பால் காமாலையை பற்றியது.

  சில குழந்தைகளுக்கு மஞ்சட்காமாலை அறிகுறி 1 வாரத்தில் குணமாவதில்லை. மாறாக அதிகரித்துக்கொண்டே போகும். அதாவது சில சமயங்களில் 3லிருந்து 10 வாரங்கள்வரை நீடிக்கும். இது உடலின் உள்ளுறுப்பில் ஏதோ பாதிப்பிருப்பதை காட்டுகிறது.

  Breastmilk Jaundice

  இந்த பாதிப்பில் பலவகைகள் உள்ளன. சிலநேரங்களில் தாய்க்கு மஞ்சட்காமாலை இருந்தால் அது தாய்பால்வழியாக கடத்தப்பட்டு குழந்தையையும் பாதிக்கலாம். இதனாலும் மஞ்சட்காமாலை குறையாமல் நீடிக்கலாம். ஆனால், இதுமட்டுமே காரணமல்ல. வேறுகாரணங்களும் இருக்கலாம்.

  இந்த வித பாதிப்புள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை 2 அல்லது நான்கு நாட்கள் வரை நிறுத்திவைத்தால் இரத்தத்திலுள்ள பிலிருபின் அளவு குறைந்து மஞ்சள்காமாலை நோயும் குறைந்துவிடுகிறது. நான்கு நாட்களுக்குப்பிறகு மீண்டும் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தால் திரும்பவும் காமாலை வருவதில்லை. குறைந்தது குறைந்ததுதான். எனவேதான் இதனை "தாய்ப்பால் காமாலை" (Breastmilk Jaundice) என பெயரிட்டு அழைக்கின்றனர்.

  எந்த வகையான பாதிப்பால் குழந்தைக்கு மஞ்சட்காமாலை குறையாமல் நீடிக்கிறது என்பதனை கண்டறிய முறையான பரிசோதனையும் உடனடி சிகிச்சையும் தேவை. தவறினால் ரத்தத்திலுள்ள பிலுருபின் மூளையைத்தாக்க காய்ச்சல், வலிப்பு ஏற்படலாம்.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு - இந்நோயை குணப்படுத்துவதற்கு கீழாநெல்லி எந்தவிதத்திலும் பயன்படபோவதில்லை.

  💢💢💢💢

  குறை தைராய்டு நோய்.

  Hypothyroidism & Jaundice.

  இதுவும் பச்சிளம் குழந்தையை பாதிக்கின்ற மஞ்சட்காமாலை அறிகுறிகளை ஏற்படுத்துகின்ற ஒருவகை நோய்தான்.

  hypothyroidism and jaundice

  இது குழந்தைகளுக்கு "தைராய்டு" ஹார்மோன் மிக குறைவாக சுரப்பதால் வரும் பிரச்சனை. இந்த தைராய்டு குறைபாட்டால் பலவிதமான பிரச்சனைகள் வரும். அதில் இந்த மஞ்சள்காமாலையும் ஒன்று. இதனால் வரும் மஞ்சள்காமாலை தொடர்ந்து பலநாட்கள் நீடிக்கும். குழந்தை பால் குடிக்காததோடு கரகரப்பான குரலில் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கும். முறையான சிகிச்சை கொடுப்பது அவசியம்.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு - இது தைராய்டு சார்ந்த பிரச்சனை என்பதால் தைராய்டு சார்ந்த சிகிச்சையே பயன்தரும். தைராய்டு சம்பந்தமான இந்நோயை குணப்படுத்துவதற்கு கீழாநெல்லி எந்தவிதத்திலும் பயன்படபோவதில்லை.

  💢💢💢💢

  குழந்தை கல்லீரல் அழற்சி நோய்.

  Neonatal hepatitis.

  பிறந்த முதல் 30 நாட்களுக்குள் குழந்தைகளுக்கு கல்லீரல் அழற்சியால் மஞ்சள்காமாலை பிரச்சனை ஏற்படுகிறது.

  Neonatal hepatitis.

  குழந்தைகளுக்கு வைரஸ், பாக்டீரியா, நுண்கிருமி மற்றும் வளர்சிதை மாற்ற பாதிப்புகளால் கல்லீரல் அழற்சி ஏற்பட்டு மிதமான அளவில் மஞ்சட்காமாலை ஏற்படுகிறது. இதனால் கல்லீரலும், மண்ணீரலும் வீக்கம் அடைகின்றன.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு - சில குழந்தைகளுக்கு சிறிய அளவிலான சிகிச்சையிலேயே பூரணமான குணம் தெரியும். இன்னும் சில குழந்தைகளுக்கு அதிக அளவு கண்காணிப்பும் கட்டுப்பாடான சிகிச்சை முறைகளும் தேவைப்படும்.

  இதற்கு கீழாநெல்லி சிகிச்சை எந்தவித பயனையும் தரப்போவதில்லை. மேலும் பச்சிலை சிகிச்சையானது குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

  💢💢💢💢

  பித்தநாள வளர்ச்சி குறைபாடு.

  Biliary Atresia.

  இந்த பித்தநாள வளர்ச்சி குறைபாட்டால் குழந்தை பிறந்த இரண்டாவது வார தொடக்கத்திலேயே மஞ்சள்காமாலை தலைகாட்ட ஆரம்பித்துவிடும்.

  Biliary Atresia jaundice

  பிறவிலேயே கல்லீரலுக்கு வெளிப்புறமுள்ள பித்தநாளங்கள் போதிய அளவு வளர்ச்சி பெறாமையால் இந்நோய் ஏற்படுகின்றன. எனவே இது ஒரு பிறவிக்குறைபாடு நோய். இதனால் சிலவாரங்களில் குழந்தையின் கல்லீரலும் மண்ணீரலும் வீக்கம்பெற ஆரம்பித்துவிடும். இதனால் வயிறு பெரிய அளவில் வீங்கிவிடும்.

  Biliary Atresia

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு - இது பிறவிசார்ந்த குறைபாடுள்ள நோயென்பதால் இந்நோயிலிருந்து விடுபட அறுவைசிகிச்சை ஒன்றே வழி. கீழாநெல்லி சிகிச்சையெல்லாம் வேலைக்காகாது.

  💢💢💢💢

  கெர்னிக்டிரஸ்.

  kernicterus.

  சிலநேரங்களில் அதிகரித்த மஞ்சள்காமாலை பச்சிளம் குழந்தைகளுக்கு மூளைப்பாதிப்பை ஏற்படுத்திவிடுவதுண்டு. இதனையே "கெர்னிக்டிரஸ்" என அழைக்கின்றனர்.

  இது ஒரு கொடூர நோய். இந்த நோயைப்பற்றி நினைக்கும்போதே இதயம் வேதனையில் நொறுங்கிப்போகின்றது.

  Jaundice Brain Damage - kernicterus

  குழந்தை பிறந்த 1 வாரத்தில் இந்நோய் ஏற்படும். இந்நோய் பாதித்தால் உடல் முழுக்க மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். குழந்தை சோர்வாக இருப்பதுடன் எப்போதும் அழுதுகொண்டே இருக்கும். கைகால்கள் விரைத்துப்போகும்.

  இந்நோய் பாதித்த 70 சதவீத குழந்தைகள் மரணத்தையே தழுவுகின்றன. பிழைத்துக்கொள்ளும் 30 சதவீத குழந்தைகளுக்கு இரத்தமாற்று சிகிச்சை செய்தால் குணம்பெறும். தவறினால் மூளைவளர்ச்சி குன்றுவதோடு கைகால்களின் வளர்ச்சியிலும் குறைபாடு ஏற்படும். கண்கள் மாறுகண்களாக மாறிப்போகும். காதுகள் கேட்காது. மூளைவளர்ச்சியும் பெருமளவில் பாதிக்கப்படும்.

  kernicterus

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு
   - இந்நோயிலிருந்து விடுபட இரத்தமாற்று சிகிச்சை ஒன்றே வழி. கீழாநெல்லி சிகிச்சையெல்லாம் இவ்விடத்தில் பயன்படாது.

  💢💢💢💢

  இந்த பதிவில் காமாலையின் இரண்டாவது வகையான இரத்த அழிவு காமாலைபற்றியும், ஒரு பாவமும் அறியாத பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் சிலவகை காமாலைபற்றியும், அதற்கான தீர்வு பற்றியும், மேற்படி காமாலைகளை குணப்படுத்தும் திறன் கீழாநெல்லிக்கு எந்த அளவிற்கு உள்ளது என்பதுபற்றியும், வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல் அறிவியலுக்கு உட்பட்டு பார்த்தோம்.

  இதன் அடுத்தப்பதிவாகிய ஐந்தாவது பதிவில் காமாலை என்றாலே உடனே நினைவிற்கு வருகின்ற "கல்லீரல் அழற்சி" என்னும் அடைப்பில்லா காமாலையைப்பற்றி பார்க்க இருக்கிறோம். அதனைப்பற்றி தெரிந்துகொள்ள கீழேயுள்ள தொடுக்கை சொடுக்கவும்...

  >>கீழாநெல்லியும் மஞ்சள்காமாலையும். Phyllanthus amarus - Medical jaundice.<<


  இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


  கருத்துரையிடுக

  4 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.