"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
கீழாநெல்லியும் நுண்ணுயிர் அழற்சி காமாலையும் - Microorganisms Inflammatory Jaundice.

கீழாநெல்லியும் நுண்ணுயிர் அழற்சி காமாலையும் - Microorganisms Inflammatory Jaundice.

கீழாநெல்லி - மஞ்சள் காமாலை.

[PART - 6]

கீழாநெல்லியைப்பற்றிய தொடர் பதிவில் இது ஆறாவது பகுதி (Part - 6). கீழாநெல்லி குணப்படுத்துவதாகக் கூறப்படும் மஞ்சள் காமாலையைப் பற்றியும், அதனை குணப்படுத்துவதில் "கீழாநெல்லி" என்னும் மூலிகைக்குள்ள திறன்பற்றியும் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இக்கட்டுரையின் முதல் பகுதியை படிக்க கீழேயுள்ள "லிங்க்" ஐ கிளிக் பண்ணுங்க..  இந்த கீழாநெல்லியானது மேகம், நீர்கடுப்பு, பசி மந்தம், நாவறட்சி, தலைசுற்றல், தாது வெப்பம், கண்நோய், கை கால் எரிச்சல், நாட்பட்ட மேகப்புண், இரத்தக்கழிச்சல், சொறிசிரங்கு, ரணம், வீக்கம், பெரும்பாடு, மேக வெட்டை, அசதி, சோகை, அரிப்பு முதலிய நோய்களுக்கு சிறந்ததொரு நிவாரணத்தை தருகின்றன.

  இத்துணை நோய்களை நிவர்த்தி செய்யும் திறனிருந்தாலும் இவை எல்லாவற்றையும் தாண்டி கீழாநெல்லி என்ற உடனேயே நமக்கு ஞாபகத்திற்கு வருவது மஞ்சள் காமாலை நோய்தான்.

  மஞ்சள் காமாலை என்றாலே அதற்கான ஒரே தீர்வு கீழாநெல்லிதான் என்று அதன்பின் ஒரு கூட்டம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இவர்களை தடுத்து நிறுத்தி மஞ்சள் காமாலை என்றால் என்ன என்று கேட்டுப்பாருங்கள்... கண்களும், உடலும் மஞ்சளாக இருந்துவிட்டால் அதுவே மஞ்சள் காமாலை என பதிலளிப்பார்கள். ஆனால் இவைகள் மஞ்சளாக மாறுவதற்கான காரணம் என்னவென்று வினவினோம் என்றால் அதற்கு சரியாக பதில்சொல்ல தெரியாது.

  மஞ்சள் காமாலை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன என்றாலும், பெரும்பான்மை காரணமாக இருப்பது "ஹெப்படைட்டிஸ்" என்னும் வைரஸ். இந்த வைரஸில் A, B, C, D, E, F என நிறைய வகைகள் உள்ளன.

  அதில் ஹெப்படைட்டிஸ் - A மற்றும் ஹெப்படைட்டிஸ் - C வைரஸினால் ஏற்படும் மஞ்சள் காமாலைகளை கீழாநெல்லி குணப்படுத்துவதாக சொல்கிறார்கள். இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. சரி.. அது குணப்படுத்துவதாகவே வைத்துக்கொள்வோம். ஆனால் இந்த இரண்டு வைரஸ்களால் அல்லாமல் வேறு காரணங்களால் உங்களுக்கு மஞ்சள் காமாலை வந்துள்ளதாக வைத்துக்கொள்வோம். குறிப்பாக கல்லீரலில் கட்டி மற்றும் புற்றுநோய்கள் உருவானால்கூட அதன் காரணமாக மஞ்சள் காமாலை வருகின்றன.

  ஆனால், இந்த உண்மையை புரிந்துகொள்ளாமல் நீங்களாகவே A மற்றும் C டைப் வைரஸ்களால்தான் மஞ்சள் காமாலை வந்துள்ளதாக கற்பனை செய்துகொண்டு கீழாநெல்லி கஷாயம் குடித்துக்கொண்டும் காலத்தை விரயம் செய்துகொண்டும் இருந்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம்... என்ன ஆகும்? உயிருக்கே ஆபத்தாகிவிடும் அல்லவா?

  அதனால்தான் சொல்கிறேன் உங்களுக்கு மஞ்சள் காமாலை எனில்.. காமாலையை விரட்டுவதாக நினைத்துக்கொண்டு கஷாயம் காய்ச்சி குடித்துக்கொண்டும், இலையை அரைத்து தலையில் தப்பாளம் வைத்துக்கொண்டும், உடலில் சூடுபோட்டுக்கொண்டும் நேரத்தை வீணடிக்காமல் மருத்துவமனைக்கு சென்று என்ன காரணத்தினால் மஞ்சள் காமாலை அறிகுறி ஏற்பட்டுள்ளது என்பதனை இரத்தத்தின் மூலம் பரிசோதித்து அறியுங்கள்!!.

  அதன்பின் தப்பாளம் வைக்கலாமா.. அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா.. என்பதனை முடிவுபண்ணலாம்.

  அனைத்து வகையான மஞ்சள் காமாலை நோய்களுக்கும் தற்போது தடுப்பூசி வந்துவிட்டன. இது புரியாமல் கஷாயம் காய்ச்சி காய்சியே உலக அளவில் மஞ்சள் காமாலையால் மட்டும் வருடத்திற்கு 2 கோடிபேர் மரணத்தை தழுவிக்கொண்டிருக்கின்றனர் என்கின்றது ஒரு புள்ளிவிபரம். உண்மையில் இது வேதனைதான். இந்த 2 கோடி மரணங்களும் மக்களின் அறியாமையால்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதுதான் வேதனையின் உச்சகட்டம்.

  பொதுவாக மஞ்சள்காமாலையானது பல்வேறுபட்ட நோய்களால் ஏற்படுத்தப்படும் பொதுவானதொரு அறிகுறி எனலாம். அனைத்துவகையான மஞ்சள்காமாலைகளும் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவை..

  1. ஆபத்தில்லா காமாலை.
  2. இரத்த அழிவு காமாலை.
  3. அடைப்பில்லா காமாலை.
  4. அடைப்பு காமாலை.

  இதில் முதல் இரண்டு காமாலைகளைப்பற்றி முன்னிரு பதிவுகளில் பார்த்துவிட்டோம். அடுத்து மூன்றாவது வகையான அடைப்பில்லா காமாலையைப்பற்றியும் ஓரிரு பதிவுகளில் தொடர்ந்து பார்த்துவருகிறோம். மேலும் அதுசார்ந்த சிலவிஷயங்களை இங்கு தொடர்ந்து பார்க்கலாம்.

  அடைப்பில்லா காமாலை.

  நுண்கிருமிகளாலோ அல்லது வேறு காரணங்களினாலோ கல்லீரல் பாதித்து புண்ணாகி இரத்தத்திலுள்ள கழிவுப்பொருளான "பிலிருபினை" அதனால் வடிகட்டி அகற்ற முடியவில்லையெனில் அதனாலும் மஞ்சள் காமாலை அறிகுறிகள் வெளிப்படுகின்றன. இதனையே  "கல்லீரல் பாதிப்பு காமாலை" (Medical Jaundice) அல்லது "அடைப்பில்லா காமாலை" என அழைக்கின்றோம்.

  இந்த கல்லீரல் செயலிழப்புக்கு பல காரணங்கள் உள்ளன என்றாலும் அவைகள் அனைத்தும் 5 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. அவை..

  1. பொதுவான கல்லீரல் பாதிப்பு காமாலை.
  2. பாக்டீரியாவினால் ஏற்படும் காமாலை.
  3. நுண்பூஞ்சை காமாலை.
  4. நுண்கிருமி அழற்சி காமாலை.
  5. வைரஸ் அழற்சி காமாலை.

  இந்த ஐந்து பிரிவுகளிலும் முதல் மூன்று பிரிவுகளைப்பற்றி நாம் ஏற்கனவே பார்த்து விட்டதால் இப்பதிவில் நான்காவது பிரிவான "நுண்கிருமி அழற்சி காமாலை"யை பற்றி பார்க்கஇருக்கின்றோம்.

  நுண்கிருமி அழற்சி காமாலை.

  கல்லீரல் செல்களில் அதிகப்படியான அளவு சேதம் ஏற்பட்டு அதன்  காரணமாக கல்லீரல் அழற்சி ஏற்படுகின்றன. இந்த கல்லீரல் அழற்சியானது  நுண்கிருமிகளாலும் ஏற்படுகின்றன. இதனால் கல்லீரலின் செயல்திறன் பாதிக்கப்பட்டு "பிலுருபின்" வெளியேறாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனையே "நுண்கிருமி அழற்சி காமாலை" என குறிப்பிடுகின்றோம்.

  இந்த நுண்கிருமி அழற்சி நோயை பலவிதமான நுண்கிருமிகளும், ஒட்டுண்ணிகளும் ஏற்படுத்துகின்றன. அவையாவன..

  1. பிளாஸ்மோடியம்.
  2. டாக்ஸோகோரியசிஸ்.
  3. எக்கினோகாக்கோசிஸ்.
  4. லெப்டோஸ்பைரோசிஸ்.
  5. தட்டைப்புழு, நாக்குப்பூச்சி.

  பிளாஸ்மோடியம் - Plasmodium

  பிளாஸ்மோடியம் என்னும் ஒட்டுண்ணி மலேரியா நோய்க்கு காரணமாக  இருப்பவை. இவைகளில் பல்வேறுபட்ட இனங்கள் உள்ளன என்றாலும் அவைகளில் 5 வகையான இனங்களே மனிதர்களுக்கு பல்வேறு தொற்றுநோய்களை உண்டுபண்ணுகின்றன. அவைகளாவன..

  1. பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம். - Plasmodium falciparum.
  2. பிளாஸ்மோடியம் மலேரியா - Plasmodium malariae.
  3. பிளாஸ்மோடியம் விவக்ஸ் - Plasmodium vivax.
  4. பிளாஸ்மோடியம் ஓவலே - Plasmodium ovale.
  5. பிளாஸ்மோடியம் நொலெசி - Plasmodium knowlesi.
  plasmodium

  இவைகள் கொசுக்களின் மூலமாக மனித இரத்தத்தில் ஊடுருவுகின்றன. பின் அங்கிருந்து கல்லீரலுக்குள் சென்று கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தி காய்ச்சல் மற்றும் மஞ்சட்காமாலை பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு :- இந்த ஒட்டுண்ணிகளை அழிக்க "குளோரோகுயின்" (Chloroquine), "ப்ரைமாகுயின்" (Primaquine) சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இதன்மூலம் பூரணமாக குணம்பெற முடியும். ஆனால், இவ்வகையான ஒட்டுண்ணிகளை அழித்துதொழிக்கும் திறன் கீழாநெல்லிக்கு இருப்பதாக தெரியவில்லை.

  டாக்ஸோகோரியசிஸ் - Toxocariasis.

  டாக்ஸோகோரியசிஸ் வகை உருண்டை புழுக்களின் லார்வாக்கள் கல்லீரலை பாதிப்பதாலும் மஞ்சள் காமாலை வருகின்றன.

  இந்த "டாக்ஸோகோரியசிஸ்" (Toxocariasis) உருண்டை புழுவானது நாய் மற்றும் பூனைகளின் குடலில் வாசம் செய்கின்றன.

  Toxocariasis-roundworm

  இந்த லார்வா வகை ஒட்டுண்ணியானது வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் நாய்களிடமிருந்தும் பூனைகளிடமிருந்தும் மனிதனுக்கு பரவுகின்றன. இதில் நாய்களிடமிருந்து பரவும் லார்வாவானது டாக்ஸோகாரா கேனிஸ் (Toxocara canis) எனவும், பூனைகளிடமிருந்து பரவும் லார்வா வகை ஒட்டுண்ணியானது டாக்ஸோகாரா கேட்டி (Toxocara cati) எனவும் அடையாளப்படுத்தப்படுகின்றன.

  இந்த புழுக்களின் முட்டைகள் நாய் மற்றும் பூனைகளின் மலக்கழிவுகள்மூலம் வெளியேற்றப்படுகின்றன. வீடுகளின் முற்றம் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடங்களில் உள்ள இந்த கழிவுகளில் முட்டைகள் நெடுநாட்கள்வரை உயிர்ப்புடன் இருந்து நம்முடைய கைகளிலும் மணல்களை கிளறி விளையாடும் குழந்தைகளின் கைகளிலும் லாவகமாக ஒட்டிக்கொள்கின்றன.

  கைகளை சோப்புப்போட்டு முறையாக சுத்தம் செய்யாமல் உணவு அருந்த முற்பட்டால் நமக்கே தெரியாமல் சைலண்டாக வயிற்றுக்குள் சென்று விடுகின்றன.

  குடல் பகுதிக்குள் செல்லும் முட்டைகள் அங்கு பொரித்து லார்வாக்களாக வெளிவருவதுடன், அங்கிருந்து கல்லீரல் வழியாக ஊடுருவி இரத்த ஒட்டத்திலும் கலந்துவிடுன்றன.

  பின்னர் அவை தசை, நரம்பு, இதயம், நுரைஈரல் மற்றும் மூளைவரை பயணிக்கின்றன. இவைகள் கல்லீரல் மற்றும் நுரைஈரல்களில் வீக்கத்தை ஏற்படுத்தி காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறலுடன் மஞ்சள் காமாலை அறிகுறிகளையும் ஏற்படுத்துகின்றன.

  இந்த ஒட்டுண்ணியின் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கை என்னவென்றால் சிலநேரங்களில் மையநரம்புகளில் ஊடுருவி கண்களுக்குள் சென்று விழித்திரையில் வீக்கத்தை ஏற்படுத்தி மீட்கவேமுடியாத பார்வை இழப்பையும் ஏற்படுத்திவிடுகின்றன.

  இவைகளிடமுள்ள இன்னுமொரு குணம் என்னவென்றால் நாய், பூனைகளின் குடல்களில் வாசம் செய்வதுபோல நம் குடல்களில் இவைகள் குடித்தனம் நடத்துவதில்லை. குடலைத்தவிர பிற எல்லாஉறுப்புகளிலும் மாதவாடகைகூட கொடுக்காமல் ஓராண்டுவரையில் குடித்தனம் நடத்துவதுடன் ஊரே கூடி ஒப்பாரி வைத்து கும்மியடிக்கவும் வைத்துவிடுகின்றன.

  இதிலுள்ள இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் இந்த லார்வாக்கள் உடலில் புகுந்த சிலமாதங்களுக்கு எந்த அறிகுறியும் தெரிவதில்லை. அவைகள் உடலிலுள்ள உறுப்புகளை கடுமையாக பாதிக்க ஆரம்பித்தபின்பே பாதிக்கப்பட்ட உறுப்புகளைக்கொண்டு பாதிப்புகள் பட்டியலிடப்படுகின்றன. அவைகள்...

  • காய்ச்சல்.
  • இருமல்.
  • மூச்சுத்திணறல்.
  • பசியின்மை.
  • வயிறு வலி.
  • கல்லீரல் வீக்கம்.
  • கண்சிவப்பு.
  • பார்வை மங்கல்.
  • சுரப்பிகளில் வீக்கம்
  • காமாலை முதலியன.

  பொதுவாக இந்த "டாக்ஸோகோரியசிஸ்" குழந்தைகளையே அதிகம் பாதிக்கின்றன என்றாலும்கூட பெரியவர்களையும் விட்டுவைப்பதில்லை. சிறிய குழந்தைகளுக்கு இதன் பாதிப்புகள் அவ்வளவாக தெரிவதில்லை. தெரிந்தாலும் அவர்களால் சரியாக வெளிப்படுத்த முடிவதில்லையாதலால் சிலகாலங்கள் அவர்களின் உடலில் வாசம் செய்யும் இந்த ஒட்டுண்ணி அதன்பின் இறந்துபோவதால் பாதிப்புகளும் நீங்கிவிடுகின்றன.

  ஆனால் சிலநேரங்களில் இவைகள் நுரைஈரல், கண் போன்ற முக்கியமான உறுப்புகளை தாக்கினால் பாதிப்புகள் பயங்கரமானதாக மாறிப்போகின்றன.

  டாக்ஸோகோரியசிஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள :-

  செல்லப்பிராணிகளை அடிக்கடி குளிப்பாட்டி சுத்தமாக இருக்கும்படி செய்யுங்கள். அவைகளை குளிப்பாட்டி முடித்தவுடன் உங்கள் கைகளை சோப்பினால் மற்றும் கிருமி நாசியினால் நன்கு சுத்தமாக கழுவுங்கள்.

  உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை அவ்வப்போது கால்நடை மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதித்து கிருமி நீக்கம் செய்யுங்கள்.

  செல்லப்பிராணிகளுடன் உங்கள் குழந்தைகள் விளையாடியபின் உடல் மற்றும் கைகளை நன்கு சுத்தம் செய்ய சொல்லுங்கள்.

  செல்லப்பிராணிகளை தொட்டுவிளையாடிய பின்போ அல்லது மணல்களை கிளறிய பின்போ கைகளை வாயில் வைக்கவேண்டாம் என்று சொல்லிக்கொடுங்கள். கைகளை நன்கு சுத்தம் செய்தபின்பே சாப்பிட அமரவேண்டும் என்பதனையும் கற்றுக்கொடுங்கள்.

  கோழிகள், வாத்துகள் ஆகியவைகளின் இறைச்சிகள் வழியாகவும் இவைகள் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதால் இறைச்சியை நன்கு சமைத்து பயன்படுத்துங்கள்.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு :- இந்த "டாக்ஸோகோரியசிஸ்" ஒட்டுண்ணியானது குழந்தைகளின் கல்லீரலை தாக்கினால் அதன்வாயிலாகவும் மஞ்சள் காமாலை வருகின்றன என்பதனை பார்த்தோம் அல்லவா... கல்லீரலில் இருக்கும் இந்தவகை ஒட்டுண்ணிகளை தாக்கி அழிக்கும் திறனெல்லாம் கீழாநெல்லிக்கு இல்லையாதலால் இந்த ஓட்டுண்ணியினால் ஏற்பட்ட மஞ்சட்காமாலையை குணப்படுத்தும் திறனும் இதற்கு இல்லையென்பது துணிபு.

  இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு லார்வாக்களை தாக்கி அழிக்கக்கூடிய ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகளான "அல்பெண்டசோல்" (albendazole) மற்றும் "மெபெண்டசோல்" (mebendazole) போன்ற ஆன்டிபராசிடிக் மருந்துகளே பயனுடையவையாக இருக்கின்றன.

  எக்கினோகாக்கோசிஸ்.

  நாய்கள் மற்றும் பூனைகளின் குடல்களில் வாசம் செய்யும் ஒருவகை நாடாப்புழு "எக்கினோகாக்கோசிஸ்" (Echinococcosis). சுமார் 9 மி.மீ நீளம் கொண்ட இது குடல்களில் தன்னை இணைத்துக்கொள்ள கொக்கிபோன்ற அமைப்பையும் கொண்டுள்ளது. இதன்மூலம் குடலில் மட்டுமல்ல உடலின் எந்த உறுப்புக்குள்ளும் சென்று தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும்.

  Echinococcosis

  நாய் மற்றும் பூனைகளின் குடல்களில் வளரும் நாடாப்புழுக்கள் அவைகளின் மல கழிவுகளின் வழியாக தங்களின் முட்டைகளை வெளியேற்றுகின்றன.

  மேற்கண்ட பிராணிகள் புல், பூண்டு, புதர்கள் மட்டுமல்லாது நாம் பயன்படுத்தும் காய்கறிச்செடிகள், கீரைகள் இவைகளினூடாகவும் மலம் கழிக்கும் வழக்கமுடையவை. இதன்காரணமாக நாம் பயன்படுத்தும் காய்கறிகள் கீரைகளிலும் நாடாப்புழுக்களின் முட்டைகள் ஒட்டிக்கொள்கின்றன.

  இந்த முட்டைகள் வெகுநாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் தன்மையுடையனவாதலால் மேற்கண்ட காய்கறிகள் மற்றும் கீரைகளை முறையாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினோமெனில் அவைகள் எளிதாக நம் வயிற்றுக்குள் சென்றுவிடுகின்றன.

  மேலும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் உடலிலும் இம்முட்டைகள் ஒட்டிக்கொண்டிருக்கும் வாய்ப்புகள் அதிகமென்பதால் அதனுடன் விளையாடும் குழந்தைகள் தங்கள் கைகளை வாயில் வைத்தாலோ சுத்தம் செய்யாமல் உணவு உட்கொண்டாலோ குழந்தைகளின் வயிற்றுக்குள் எளிதாக சென்றுவிடுகின்றன.

  வயிற்றுக்குள் செல்லும் இம்முட்டைகள் பொரித்து லார்வாக்களாக உருமாறி பித்தநாளங்கள் வழியாக சென்று கல்லீரலை அடைந்து எளிதாக ரத்த ஓட்டத்துடன் கலந்து உடல்முழுக்க வலம்வர ஆரம்பித்துவிடுகின்றன. 

  பெரும்பாலும் இவைகள் மனிதர்களில் கல்லீரல் மற்றும் நுரைஈரல்களில்தான் தங்கள் ஆதிக்கத்தை காட்டுகின்றன. அங்கு இதன் பாதிப்பு அதிகரிக்க உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நீர்கட்டிகள் உருவாகின்றன. இதன்மூலமும் மஞ்சள் காமாலை வருகின்றன.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு :- இது மனிதர்களுடைய குடல் பகுதிகளில் மட்டுமே வாசம் செய்வதில்லை. மாறாக கல்லீரல், நுரைஈரல், மூளை முதலிய முக்கியமான உறுப்புகள் பலவற்றிலும் தன் கைவரிசையை காட்டுகின்றன. எனவே இவைகளால் ஏற்படும் மஞ்சள் காமாலை நோய்களை கீழாநெல்லியால் குணப்படுத்த முடிவதில்லை. 

  ஆரம்பத்தில் அறிகுறி எதையும் வெளிப்படுத்தாமலேயே இருக்கும் இதன் இருப்பை கண்டறிய இரத்த பரிசோதனை மற்றும் சிறுநீரக பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

  வயிற்றுபகுதியில் இதன் இருப்பை கண்டறிய அல்ட்ராசவுண்ட் பயன்படுத்தப்படுகிறது.

  மூளையில் இதன் இருப்பை கண்டறிய CT அல்லது MRI ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது.

  மார்புப்பகுதியில் இதன் இருப்பை கண்டறிய CT மற்றும் X - Ray பயன்படுத்தப்படுகிறது.

  இந்த வகை ஒட்டுண்ணிகளின் பாதிப்பால் மேற்கண்ட உறுப்புகளில் ஏற்படும் நீர்கட்டுகளை அறுவை சிகிச்சைகளால் அகற்றினால் மட்டுமே அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும்.

  லெப்டோஸ்பைரோசிஸ்.

  எலிகள் மூலம் பரவக்கூடிய "லெப்டோஸ்பைரோசிஸ்" (Leptospirosis) என்னும் நோய்க்கிருமிகளால் சிவப்பணுக்கள் பாதிக்கப்பட்டு அதன்மூலமாகவும் மஞ்சள்காமாலை பாதிப்புகள் ஏற்படுவதுண்டு.

  எலிகளின் கழிவுகள் மூலமாக மனிதர்களுக்கு இந்த நுண்கிருமிகள் பரவுகின்றன. "லெப்டோஸ்பைரோசிஸ்" என அழைக்கப்படும் இக்கிருமி மனிதர்களை பாதிக்கும் பட்சத்தில் கடுமையான காய்சலை உண்டுபண்ணுகின்றன. இது "எலிக்காய்ச்சல்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

  Leptospirosis

  "லெப்டோஸ்பைரோசிஸ்" பாதிப்பால் காய்ச்சல் மட்டுமல்லாமல் தலைவலி, உடல்வலி, தசைவலி, நடுக்கம்தரும் குளிர், சோர்வு, வாந்தி முதலியனவும் ஏற்படலாம். தோள்களில் சிவந்த தடிப்புகளும் ஏற்படுகின்றன. சிறுநீரக செயலிழப்புகூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வெறும் 10% பேர்களுக்கு மட்டுமே கடுமையான மஞ்சள் காமாலை பாதிப்பை உண்டுபண்ணுகின்றன என்பது ஆறுதலான செய்தி.

  "லெப்டோஸ்பைரோசிஸ்" கிருமிகளால் பாதிக்கப்பட்ட எலிகள் நடமாடும் இடங்களிலுள்ள நீர்நிலைகள் மற்றும் மணல்பகுதிகளில் இந்த ஒட்டுண்ணிகள் கலந்துவிடும் வாய்ப்புகள் உள்ளன. மண் மற்றும் நீரிலுள்ள லார்வாக்கள் நம் உடலிலுள்ள புண்களுடன் தொடர்புகொண்டால் அதன் வழியாக உடலுக்குள் சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு - முறையான சிகிச்சை மேற்கொள்ளும் பட்சத்தில் லெப்டோஸ்பைரோசிஸ் கிருமிகளால் ஏற்படும் மஞ்சள் காமாலையை குணப்படுத்திவிடமுடியும். ஆனால் மேற்குறிப்பிட்டுள்ள நுண்கிருமிகளை கொல்லும் திறனெல்லாம் கீழாநெல்லிக்கு கிடையாதென்பது நிரூபிக்கப்படுள்ள உண்மை.

  தட்டைப்புழு மற்றும் நாக்குப்பூச்சி.

  உடலமைப்பு தட்டையாக உள்ளதால் இது தட்டைப்புழு என அழைக்கப்படுகிறது. இது ஒரு ஒட்டுண்ணி வகையை சார்ந்தது. இதில் பூனை தட்டைப்புழு, பன்றி தட்டைப்புழு, மாடு தட்டைப்புழு என பலவகை இனங்கள் உள்ளன.

  இதில் பூனை தட்டைப்புழுவானது நதிகளில் காணப்படுகின்றன. நதிகளில் வாழும் மீன்களின் உடலுக்குள் சென்று ஒட்டுண்ணியாக வாழ்க்கை நடத்துகின்றன.

  பன்றி தட்டைப்புழுவானது ( Fasiolopsis buski) பன்றிகளின் உடலில் வாழ்கிறது.

  Fasiolopsis-buski

  மாடுகளின் உடலில் "Fasciola hepatica" என்னும் தட்டைப்புழு வாசம் செய்கிறது.

  Fasciola hepatica

  இந்த தட்டைப்புழுக்களைப்போல வயிற்றிலுள்ள நாக்குப்பூச்சிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளால்கூட மஞ்சள் காமாலை அறிகுறிகள் ஏற்படுகின்றன.

  தட்டைப்புழுக்களாகட்டும் அல்லது நாக்குப்பூச்சிகளாகட்டும் இரண்டுமே கெட்டுப்போன மீன் மற்றும் இறைச்சியின் வாயிலாக அல்லது நன்கு சமைக்கப்படாத இறைச்சிகளின் மூலமாகவே மனித உடலுக்குள் வருகின்றன. 

  இவைகள் பொதுவாக பித்தநாளத்திலுள்ள ரத்தநாளங்களில் ரத்தத்தை உறிச்சி உயிர்வாழும் தன்மையுடையது. இதனால் பித்தநாளங்களில் தடையேற்பட்டு மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

  இந்நோயை குணப்படுத்துவதில் கீழாநெல்லியின் பங்கு - குடலில் வாழும் புழுக்களை வேண்டுமானால் கீழாநெல்லி கொல்லலாம். மறுப்பதற்கில்லை. ஆனால் கல்லீரலிலும், பித்த நாளங்களிலும் வாழும் தட்டைப்புழுக்களை அழிக்கும் திறன் இதற்கு இல்லையென்பதே உண்மை.

  இந்த தட்டைப்புழுக்களால் ஏற்படும் அத்தனை பிரச்சனைகளையும் போக்க "பிராசிக்குவான்டெல்" (Praziquantel) மற்றும் "நைக்குளோசமைடு" (niclosamide) என்னும் இரசாயன மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவைகளை மருத்துவரின் கண்காணிப்பிலேயே எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

  💢💢💢💢

  இப்பதிவில் நுண்கிருமி அழற்சி காமாலையைப்பற்றியும் அதனை குணப்படுத்தும் திறன் கீழாநெல்லிக்கு எந்த அளவிற்கு உள்ளது என்பது பற்றியும் பார்வையிட்டோம்.

  இதன் தொடர்ச்சியாக வரும் அடுத்த பதிவில் "வைரஸ் அழற்சி காமாலை" மற்றும் "அடைப்பு காமாலை" பற்றியும், அவைகளை குணப்படுத்தும் திறன் கீழாநெல்லிக்கு எந்த அளவிற்கு உள்ளது என்பதுபற்றியும், காலங்காலமாக நம்பி வரும் வெறும் நம்பிக்கையை வைத்து மட்டுமே அலசாமல்.. விஞ்ஞான பூர்வமாக உள்ளது உள்ளபடி அலச இருக்கிறோம்..

  இப்பதிவின் தொடர் பகுதியாகிய ஏழாவது பகுதியை [ PART - 7 ] படிக்க கீழேயுள்ள சுட்டியை தட்டுங்க...

  >>கீழாநெல்லியும் வைரஸ் அழற்சி காமாலையும் - Viral jaundice Hepatitis A - Keelanelli.<<

  🌿 🌿 🌿 🌿 🌿 🌿 🌿

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  2 கருத்துகள்

  1. சுய மருத்துவம் கூடாது என்பதை பல விளக்கங்கள் மூலம் அருமையாக விவரித்து உள்ளீர்கள்...

   பதிலளிநீக்கு

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.