"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
மணத்தக்காளி - Manathakkali - Cultivation and Crop Protection.

மணத்தக்காளி - Manathakkali - Cultivation and Crop Protection.

மணத்தக்காளி.

பயன்படுத்தும் விதம் - பயிர் பாதுகாப்பு.

[PART 5]

நாம் மணத்தக்காளியைப்பற்றி தொடர்ந்து சில பதிவுகளாக பார்த்துவருகிறோம். மணத்தக்காளி பற்றிய தொடர்பதிவில் இது ஐந்தாவது பகுதி.

இதன் முந்தைய பதிவான நான்காவது பகுதியில் [PART 4] மணத்தக்காளியின் பண்புகள், அதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள் மற்றும் உணவாகப் பயன்படுத்தும்விதம் பற்றியும் பார்த்தோம். அதனை படிக்காதவர்கள் கீழேயுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து படித்துக்கொள்ளவும்.


>>மணத்தக்காளி - Manathakkali - Methods of use.<<

இந்த பதிவில் மணத்தக்காளியை சாகுபடி செய்யும் விதம் பற்றியும் நோய் பாதிப்பிலிருந்து அதனை பாதுகாக்கும் விதம்பற்றியும் பார்க்கலாம்.

  சாகுபடி & பயிர் பாதுகாப்பு.

  ஆப்பிரிக்க தேசங்களில் பலவகையான உணவுகள் மற்றும் சூப் போன்ற  பானங்களில் மணத்தக்காளியின் தழைகள் அதிக அளவில் சேர்க்கப்பட்டு வருவதால் அங்கெல்லாம் இது தோட்டப்பயிராக சாகுபடி செய்யப்படுகின்றன.

  இது உணவாக மட்டுமல்ல மருத்துவப்பண்புள்ள தாவரமாகவும் பயன்படுத்தப்படுவதால் இது பொருளாதாரத்தை பெற்றுத்தரும் ஏற்றுமதிதரம் வாய்ந்த பணப்பயிராகவும் விளங்குவதால் இதனை சாகுபடி செய்யும் முறையையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

  இது ஓராண்டு வளரும் தாவரம் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். ஆனால் இதில் ஆச்சரியப்படவைக்கும் விஷயம் என்னவென்றால் நன்கு செழித்து வளரும் செடி ஒன்று தன்னுடைய வாழ்நாளில் அதிகப்படியாக ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான விதைகளை உற்பத்தி செய்கின்றன என்பதே!!!

  தன்னுடைய இனத்தைப் பெருக்குவதற்கு இவைகள் விதைகளையே நம்பி இருந்தாலும்கூட மனிதர்களால் தண்டுகள் மூலமாகவும் புதிய தாவரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

  வாருங்கள்... விதைகள் மூலமாகவும், தண்டுகள் மூலமாகவும் இவைகள் எவ்வாறு பயிரிடப்படுகின்றன என்பதனைப் பார்க்கலாம்.

  நிலத்தை தயார் செய்தல்.

  இது அனைத்து வகையான மண்களிலும் வளர்கிறது என்றாலும் அதிக அளவில் நைட்ரஜன் மற்றும் கரிம சத்துக்களை கொண்ட காற்றோட்டமுள்ள வளமான களிமண் நிலங்களிலேயே செழிப்பாக வளர்கின்றன.

  காற்றோட்டமில்லாத களிமண் நிலமாக இருக்கும் பட்சத்தில் வேர்கள் போதிய வளர்ச்சியை எட்டுவதில்லை. இதனால் தாவரத்தின் வளர்ச்சியும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.

  அதேவேளையில் அதிக வெப்பம், அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் வளரும் தாவரங்களும் செழிப்பாக வளர்வதில்லை. எனவே வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிதமான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

  இது பயிரிடப்படும் நிலத்திலுள்ள மண்ணின் pH மதிப்பு 5.5 முதல் 6.5 வரை இருத்தல் வேண்டும்.

  செடிகளை நிலங்களில் நடவு செய்வதற்கு முன்னால் 1 ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்தை 4 டன் சாம்பலும் கலந்து கொட்டி கூடவே உலர்ந்த கோழி எருவையும் சேர்த்து நிலத்தில் சமமாக பரப்பி நன்கு உழுது நிலத்தை முறைப்படி பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.

  நடவு முறையில் இருவிதமான நடவு முறைகள் உள்ளன. அதில் ஒன்று "விதை நடவு முறை" மற்றொன்று "தண்டு நடவு முறை". இனி இந்த இரண்டுவிதமான நடவுமுறைகளையும் பார்க்கலாம்.

  விதை நடவு முறை.

  விதைகள் முளைப்பதற்கு உகந்த வெப்பநிலை 15 - 30⁰C.

  பழங்கள் உலரவைக்கப்பட்டு நன்கு உலர்ந்தபின் கைகளால் தேய்த்து விதைகள்  பிரித்தெடுக்கப்படுகின்றன.

  இதனுடைய விதைகள் மிக சிறியது என்பது உங்களுக்கு தெரியும். 1 கிராம் அளவில் விதைகளை எடுத்துக்கொண்டால் அதில் சுமார் 1000 விதைகள்வரை இருக்கும்.

  Manathakkali seeds

  இந்த சிறிய விதைகளின் சராசரி ஆயுள் 2 வருடம் மட்டுமே. எனவே விதைகளை 2 வருடங்கள் வரையில் இருப்புவைத்து பயன்படுத்தலாம்.

  அப்படியானால் 2 வருடம் சென்றபின் விதைகள் முளைக்காதா? என்றால்!!..

  முளைக்கும்.

  ஆனால் முளைக்கும் திறன் மிக மிக குறைவாகவே இருக்கும்.

  அதாவது 1 வருடம் பழமையான விதைகளானது 99 % விதைகள் முளைக்கும் திறனை கொண்டுள்ளது. ஆனால் 2 வருடங்கள் கழித்த பிறகு பார்த்தால் வெறும் 27% விதைகளே முளைக்கும் திறனை கொண்டுள்ளன.

  வருடங்கள் செல்லச்செல்ல விதைகள் கொஞ்சம் கொஞ்சமாக முளைக்கும் திறனை இழந்து 8 வருடங்களில் வெறும் 2 சதவீத விதைகளே முளைக்கும் அளவில் அதன் செயல்திறன் சுருங்கிப்போகின்றன.

  8 வருடங்கள் கழிந்தபின்பு ஒருவிதைகள் கூட முளைப்பதில்லை. எனவே இதிலிருந்து இருப்பு வைக்கும் விதைகளின் அதிகபட்ச ஆயுளே 8 வருடங்கள்தான் என்பது தெளிவாகிறது. அதிலும் 8வது வருடத்தில் வெறும் 2 சதவீத விதைகளே உயிர்ப்புடன் இருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

  சரி ... இனி விதைகளை எவ்வாறு விதைப்பது என்பதனை பார்ப்போம்...

  விதைகளை விதைப்பதற்கு முன் ஒரு நாள் தண்ணீரில் ஊறவிடவும். இது முளைப்புத்திறனை துரிதப்படுத்தும். அடுத்தநாள் விதைகளை தண்ணீரிலிருந்து பிரித்தெடுத்து மணலுடன் அல்லது சாம்பலுடன் கலந்து பாத்திகளில் தூவி மேலே லேசாக மண்கொண்டு மூடி நீர் தெளித்துவரவும்.

  அல்லது விதைகளை 10-20 செ.மீ இடைவெளியில் விரல்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறிய துளையில் 3 முதல் 10 விதைகள்வரை இட்டு மண்கொண்டு மூடவும்.

  7 நாட்களில் விதைகள் முளைக்க ஆரம்பித்துவிடும்.

  விதைகளிலிருந்து முளைவிடும் இளம் கன்றுகள் 6 செ.மீ உயரத்தை எட்டியவுடன் அல்லது சராசரியாக 7 இலைகள் வந்தவுடன்அவைகளை பிரித்தெடுத்து விளைநிலங்களில் போதிய இடைவெளியுடன் நடவு செய்யலாம்.

  Manathakkali small Plant

  நடப்படும் இடைவெளியை பொறுத்து 1 ஏக்கருக்கு 500 கிராம் முதல் 1 கிலோ வரை விதைகள் தேவைப்படலாம்.

  இரு கன்றுகளுக்கு இடைப்பட்ட இடைவெளி 30 செ.மீட்டரிலிருந்து 45 செ. மீட்டர்வரை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

  செடி நட்ட 20 நாட்களுக்குள் முதல் களையெடுப்பை தொடங்கவேண்டும்.

  விதை விதைத்து 8 முதல் 11 வாரங்கள் காத்திருந்தால் இதில் உருவாகும் முதல்பூவை நீங்கள் கண்டுகளிக்கலாம்.

  விதைகள் விதைத்து 3 மாதங்களில் நீங்கள் முதல் அறுவடையை தொடங்கலாம்.

  தண்டு நடவு முறை.

  விதைகளுக்கு பதிலாக தண்டுகள் மூலமாகவும் இது நடவு செய்யப்படுகிறது. தண்டுகள் மூலம் நடவு செய்வதற்கு பெரிய தண்டுகளை 20 முதல் 30 செ.மீ அளவில் துண்டுகள் செய்து எடுத்துக்கொள்ளவும்.

  இத்துண்டுகளை 25 x 40 செ.மீ இடைவெளியில் நடலாம். இவ்வாறு தண்டுகள் மூலம் பயிர்செய்வதால் கிடைக்கும் நன்மை என்னவெனில் இவைகள் விரைவாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகிவிடுகின்றன. இதிலுள்ள தீமை என்னவென்றால் இதிலிருந்து கிடைக்கும் மொத்த மகசூலானது விதைகள் போட்டு வளரும் தாவரங்களிலிருந்து கிடைக்கும் மகசூலைவிட குறைவாகவே கிடைக்கிறது.

  வளரும் சூழ்நிலை.

  இது ஒரு வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல தாவரம். அனைத்து பருவங்களில் இதனை பயிரிடலாம் என்றாலும் டிசம்பர் மாதம் ஏற்ற பருவம்.

  Manathakkali - Cultivation

  இது நிழலான இடங்களில் கூட வளரும் தன்மையுடையதாதலால் பிற பயிர்களின் நிழல்களில்கூட இவைகள் களைச்செடிகளாக வளர்ந்துவிடுகின்றன.

  எனவே, இதனை தனிப்பயிராக மட்டுமல்லாது பிற பயிர்களின் ஊடாக ஊடுபயிராகவும் இதனை பயிர்செய்யலாம்.

  இது செழிப்பாக வளர சுமார் 20-30⁰C வெப்பமும், முழு சூரிய ஒளி அல்லது பகுதிநேர சூரிய ஒளியும் தேவை. மேலும் 500 மி.மீ அல்லது அதற்கும் அதிகமான மழைவளமும் தேவைப்படுகிறது.

  கரிம சத்து நிரம்பிய நல்ல காற்றோட்டம் உள்ள மண்ணாக இருக்க வேண்டும். காற்றோட்டமில்லாத களிமண் நிலமாக இருந்தால் வேர்கள் கருகி செடிகள் இறந்துபோகும். 

  நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ள மண்ணில் செழித்துவளர்கின்றன.

  உர மேலாண்மை.

  இவைகள் செழித்துவளர்ந்து அதிக அளவில் மகசூல் தரவேண்டுமெனில் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் கரிம சத்துக்கள் தேவை. நைட்ரஜன் உரமானது இலை மகசூலை 2 மடங்காக அதிகரிக்கிறது. பாஸ்பரஸ் உரமானது தாவரத்தை உயரமாக வளர செய்வதுடன் இலைகளின் மகசூலையும் அதிகரிக்கிறது.

  கரிம உரங்களுடன் கணிசமான அளவில் தொழுஉரம் இடுவதும் அவசியம்.

  தொழுஉரத்துடன் சாம்பல் மற்றும் கோழி எருவை சேர்த்து அளிப்பது இன்னும் சிறப்பானது. சாம்பல் மற்றும் கோழி எரு மட்டும் பயன்படுத்தும் பட்சத்தில் ஹெக்டேருக்கு 15 டன் கோழி எரு தேவைப்படும்.

  இரசாயன உரம் பயன்படுத்தும் பட்சத்தில் கோழி எரு 400 கிலோ போதுமானது. எருவுடன் ஒரு ஏக்கருக்கு தழைச்சத்து 25 கிலோ, மணிச்சத்து 15 கிலோ, சாம்பல் சத்து 40 கிலோ உரங்களை அளிக்க வேண்டும்.

  1 மாதம் கழித்து மீண்டும் தழைச்சத்து 25 கிலோ, மணிச்சத்து 15 கிலோ அளிக்கவேண்டும். மீண்டும் 1 மாதம் கழித்து தழைச்சத்து 25 கிலோ, மணிச்சத்து 15 கிலோ அளிக்கவேண்டியது அவசியம்.

  முறையாக உரமிட்டு நீர்தெளித்துவர 3 மாதங்களில் 120 செ.மீ உயரம்வரை வளர்ந்துவிடும். 120 நாட்களில் அறுவடை செய்யலாம்.

  பயிர் பாதுகாப்பு பராமரிப்பு.

  வறண்டகாலங்களில் தினசரி நீர்பாசனமும் பிற காலங்களில் வாரத்திற்கு 2 அல்லது 3 தடவையும் நீர்ப்பாசனம் செய்தல் வேண்டும்.

  சொட்டுநீர் பாசனம் மூலமாகவும் நீர்ப்பாசனம் செய்யலாம்.

  இலைகளில் தண்ணீர் தெளிப்பதை தவிர்க்கவேண்டும். இலைகளில் அடிக்கடி தண்ணீர் படுவதால் பூஞ்சாண தொற்று ஏற்பட்டு எளிதில் தாவரங்கள் நோயினால் பாதிப்படையும் வாய்ப்பு உள்ளது.

  மகசூல்.

  உணவுக்காக பயிரிடும் பட்சத்தில் செடியை வேரோடு பிடுங்காமல் தரையிலிருந்து 2 அங்குலம் விட்டு அறுவடை செய்யலாம்.

  செடி நட்டு முதல் அறுவடையை 5 வாரங்களில் செய்யலாம். அதன்பின் இரண்டு வாரங்களுக்கு ஒருதடவை அறுவடை செய்து வரலாம்.

  ஒரு அறுவடைக்கு ஒரு ஹெக்டேருக்கு 7 லிருந்து அதிகப்படியாக 27 டன் தளிர்களை மகசூலாக பெறமுடியும். 15 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து அறுவடை செய்துவரலாம். இதேபோல தொடர்ந்து 10 தடவைகள் அறுவடை செய்யலாம். அதன்பின்பு பயன்தராது.

  manathakkali-keerai-Cultivation

  ஒவ்வொரு அறுவடையின்போதும் அதற்கு தேவையான உரங்களையும் மறவாமல் செய்துவர வேண்டும். இல்லையேல் மகசூல் கடுமையாக பாதிக்கப்படும்.

  மருத்துவ தேவைகளுக்காக ஏற்றுமதி செய்யவேண்டின் வேருடன் பிடுங்கி பக்குவப்படுத்துவதே சிறப்பு. 3 மாதங்களில் சுமார் 120 செ.மீ உயரம்வரை இவைகள் வளர்ந்துவிடுவதால் 3 மாதங்களில் இவைகளை வேருடன் பிடுங்கி அறுவடை செய்யலாம்.

  செடிகள் வேருடன் பிடுங்கப்பட்டு அதன்பின் வேர்களையும், பழங்களையும் நீக்கி தண்டு, இலைகளை துண்டுதுண்டாக வெட்டி 3 நாட்கள் உலர்த்தவும். இவ்வாறு 3 நாட்கள்வரை காயவைத்தபின் சாக்குப்பைகளில் நிரப்பி விற்பனைக்கு அனுப்பலாம்.

  காய்ந்த செடியில் ஈரப்பதம் 8% மேல் மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் இதனை பூஞ்சாணம் தொற்றாமல் பாதுகாக்கமுடியும்.

  காய்ந்தபின் 1 ஏக்கரில் கிடைக்கும் மொத்த மகசூலானது 1000 லிருந்து 1500 கிலோவரை இருக்கும். 1000 கிலோ எடைகொண்ட மூலிகைகளுக்கு 30,000 வரை மருந்து தயாரிக்கும் கம்பெனிகளால் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் இது நல்ல இலாபம் தரும் பணப்பயிராகவே கருதப்படுகிறது.

  பெரும்பாலும் இவைகள் கீரைகளாக பயன்படுத்துவதற்காக சாகுபடி செய்யப்படுவதில்லை. மாறாக மருந்து தயாரிப்பதற்காகவே பயிர்செய்யப்படுகின்றன.

  நோய் பாதிப்புகள்.

  கம்பளிப்பூச்சிகளும், நத்தைகளுமே இந்த தாவரத்தின் முதல் எதிரிகள். 

  இத்தாவரத்தை அஃபிட்ஸ், சிலந்திப்பூச்சிகள் தாக்குகின்றன. "அஃபிட்ஸ்' தாவரத்தின் சாற்றை உறிஞ்சுவதின் மூலம் இலைகள் சுருண்டுபோகின்றன. இதனால் தாவரங்களின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.

  சிலந்தி பூச்சி தாக்குதலால் தாவரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவது மட்டுமல்லாது பூக்களின் தரமும் பாதிக்கப்படுவதால் விதைகள் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படுகின்றன.

  தண்டு துளைப்பான், மாவுப்பூச்சி, இலைப்புழு, வாடல் நோய், வேர்முடிச்சு புழுக்கள், நூற்புழு முதலியவைகளாலும் இவைகள் பாதிக்கப்படுவதுண்டு.

  இதனை பாதிக்கும் முக்கியமான நோய் "இலைக்கருகல்" நோய். இது "பைட்டோப்தோரா இன்ஃபெஸ்டன்ஸ்" (Phytophthora infestans) மூலம் ஏற்படுகிறது. இது ஒருவித பூஞ்சைகளால் ஏற்படுவது.

  Phytophthora infestans

  இத்தாவரத்திற்கு பூஞ்சைகளை எதிர்க்கும் திறன் முழு அளவில் இயற்கையாகவே உள்ளது என்றாலும் "வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு" என்பதற்கிணங்க "பைட்டோப்தோரா இன்ஃபெஸ்டன்ஸ்" (Phytophthora infestans) என்னும் பூஞ்சைகளால் இவைகள் பாதிக்கப்படுவதுண்டு!!.

  இந்நோய் பாதித்தால் 100% வரை மகசூல் இழப்பு ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த மெட்டாலாக்சில் (Metalaxyl) + மான்கோசெப் (mancozeb) கலவையை 3 வாரங்களுக்கு ஒருமுறை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

  பொதுவாக கீரைவகை தாவரங்களில் பசுமையான இலைகளே உணவாகப் பயன்படுத்தப்படுவதால் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 1 லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வேப்ப எண்ணெய் கலந்து தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

  பூச்சிமருந்து தெளிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால் அறுவடை செய்வதற்கு 20 நாட்களுக்கு முன்னதாகவே மருந்தை தெளித்து முடித்துவிடவேண்டும்.

  மணத்தக்காளி தீங்குகள்.

  வயிற்று புண், குடல் புண், வாய் புண் ஆற்றுதல் என ஒருசில நன்மைகள் இந்த மணத்தக்காளி என்னும் மூலிகைகளால் மனித உடலுக்கு உள்ளது என்றாலும்... இந்த மணத்தக்காளியில் சில தீமைகளும் உள்ளன.

  இத்தாவரத்திலுள்ள "சோலனைன்" (solanin) மற்றும் "அட்ரோப்பைன்" (Atropine) போன்ற ஆல்கலாய்டுகள் மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. எனவே இதனை உணவாக உட்கொள்ளுவதில் கவனமாக இருக்கவேண்டும்.

  ஏனெனில், இத்தாவரமானது அரைக்கீரை, பசளைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரைகளைப்போன்று கீரைவகையை சேர்ந்தது அல்ல. மாறாக இது ஒரு களைச்செடி.

  வாய்புண், குடல்புண் போன்ற புண் வகைகளை குணப்படுத்தும் திறன் இதற்கு இருப்பதால் ஆரம்பத்தில் மூலிகையாக மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்ட இது ஒருசிலரின் ஆர்வக்கோளாறுகளால் தற்போது உணவுப்பொருளாக அதுவும் கீரையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

  எனவே, இதனை உணவுப்பொருளாக அடிக்கடி உணவோடு பயன்படுத்துவதை தவிர்த்து நோய் தீர்க்கும் மூலிகையாக மட்டுமே பயன்டுத்திவருவது சிறப்பு. 

  இதில் அதிக அளவில் "சோலனம்" மற்றும் "அட்ரோப்பைன்" என்னும் அல்கலாய்டு வகையை சார்ந்த நச்சுப்பொருள் உள்ளதால் உடலுக்கு சில தீங்குகளை ஏற்படுத்துகின்றன என பார்த்தோமல்லவா.. இதில் வேடிக்கை என்னவென்றால் இதனால் ஏற்படும் தீங்குகளையே உடலுக்கு ஏற்படும் நன்மைகளாக கருதி சமூக வலைத்தளங்களில் கன்னாபின்னாவென்று பதிவேற்றப்படும் கருத்துக்கள்தான் ஆச்சரியத்தை தருகின்றன.

  அவ்வாறு இந்த மணத்தக்காளியை பற்றி கூறப்படும் தவறான தகவல்கள் பல உள்ளன என்றாலும் அதில் ஒருசில கருத்துக்களை மட்டும் இங்கு பார்ப்போம்.

  1. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் "மலச்சிக்கல்" நீங்குமாம். எனவே இதனை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டுமாம்... உண்மையில் இதைவிட முட்டாள்தனமான கருத்து வேறெதுவும் இருக்க முடியாது.

  ஏனெனில், இது வயிற்றுபுண் மற்றும் குடல்புண்களை ஆற்றுகின்றன என்றாலும் இதிலுள்ள சிலவித வேதியியல் பொருள்கள் குடலுக்கு சிலவித பாதிப்புகளை ஏற்படுத்துவதால் உடலானது இதனை பாதி ஜீரணித்தும் பாதி ஜீரணிக்காமலும் வெகுவிரைவில் உடலைவிட்டு வெளியேற்ற முயற்சி செய்கின்றன. இதன் விளைவே மலம் இளகலாக போக காரணம்.

  எனவே இதனை புரிந்துகொள்ளாமல் மலம் இளகலாக செல்வதை பார்த்து மலச்சிக்கலை நீக்குகிறது என தவறாக நினைத்துக்கொண்டு இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நலம். அடிக்கடி சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் குடல்திசுக்களில் பாதிப்பு ஏற்படலாம். ஜீரணமண்டலமும் கடுமையாக பாதிக்கப்படலாம்.

  எனவே இதனை தொடர்ந்து சாப்பிடுவதையே வாடிக்கையாக வைத்துக்கொள்ளாமல் குடல்புண், வயிற்றுபுண் இருந்தால் அதனை குணப்படுத்தும் பொருட்டு சிலநாட்கள் எடுத்துக்கொள்வதோடு நிறுத்திக்கொள்வது உத்தமம்.

  2. இந்த மணத்தக்காளியை பற்றி சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் மற்றொரு தவறான தகவல் என்னவென்றால் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் தேக களைப்பை நீக்கி ஆழ்ந்த தூக்கத்தை தருகிறதாம்.

   உண்மைதான்... சூடு போட்டாலும் விழிப்பு வராத அளவுக்கு ஆழ்ந்த தூக்கம் வருவது உண்மைதான்...

  ஆனால் உண்மையில் அது தூக்கம் அல்ல... மாறாக "மயக்கம்".

  ஆம் "போதை மயக்கம்".

  முதலில் ஒன்றை இங்கு புரிந்துகொள்ளுங்கள் "உறக்கம்" என்பது வேறு, "மயக்கம்" என்பது வேறு.

  மணத்தக்காளி கீரையை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வதால் வருவது ஆழ்ந்த உறக்கம் அல்ல... "போதையுடன் கூடிய மயக்கம்".

  மணத்தக்காளி கீரையை அதிக அளவில் உட்கொண்டால் இதிலுள்ள "solanin", "Atropine", "Coumarins", "nicotine" போன்ற ரசாயன மூலக்கூறுகள் உடலில் ஒருவித போதையை ஏற்படுத்துகின்றன. எனவேதான் ஆப்பிரிக்காவில் இதன் இலைகளை போதைதரும் பொருளாக பயன்படுத்துவதோடு இதன் இலைகளை காயவைத்து பொடித்து "கஞ்சா" போன்று புகைக்கவும் செய்கிறார்கள். 

  ஆப்பிரிக்காவில் அதிக அளவில் இதன் இலைகளை மிதமான அளவில் போதைதரும் பொருளாக பாவிக்கின்றனர் என்பதனையும் கருத்தினில் கொள்ளவும். இதனாலேயே அங்கு அதிக அளவில் இவைகள் சாகுபடியும் செய்யப்படுகின்றன.

  இதன் இலைகளை அதிக அளவில் உணவாக எடுத்துக்கொண்டால் தலைசுற்றல், வியர்வை, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, கை கால் பிடிப்பு, தசைவலி, வயிற்றுபோக்கு ஏற்படுவதுடன் ஒருவிதமான போதை மயக்கதை ஏற்படுத்தி ஆழ்ந்த உறக்கத்தில் தள்ளுகின்றன. இந்த "போதை" மயக்கத்தை அமைதிதரும் உறக்கமாக கருதிக்கொண்டு அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக்கொண்டு ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

  இந்த கீரையை [உண்மையை சொல்லப்போனால் இது கீரையே அல்ல... ஒருவித களைச்செடி என்பதே உண்மை...] வாரம் இரண்டுநாள், மூன்று நாள் என அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் நாட்கள் செல்ல செல்ல பக்கவாதத்தை ஏற்படுத்துவதோடு சிறுநீரக செயலிழப்பையும் ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது.

  3. சமூக வலைத்தளங்களில் இத்தாவரத்தைப்பற்றி பரப்பப்படும் மற்றொரு தவறான தகவல் என்னவென்றால் கர்ப்பிணி பெண்கள் இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் கரு பலப்படுமாம். சுகப்பிரசவமும் ஆகுமாம்.

  (ச்சோ... இப்பவே கண்ண கட்டுதே...)

  இத்தோடு நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை.... இன்னும் ஒருபடி மேலாக சென்று குழந்தை இல்லாத பெண்கள் இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்றும், உடனடியாக கருத்தரிக்க வைத்துவிடும் எனறும் கதைகட்டுகிறார்கள்....

  அப்படி இதனை சாப்பிட்டதால் எத்தனை பேருக்கு இதுவரையில் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது என்று இப்படி வாய்க்கு வந்தபடி கூவுகிறார்கள் என்றுதான் நமக்கு புரியவில்லை!!.

  உண்மையை சொல்லப்போனால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கண்டிப்பாக இந்த கீரையை சாப்பிடவே கூடாது. மீறி தொடர்ந்து சாப்பிட்டால் குழந்தை பிறக்கும்போதே பிறவிக்குறைபாட்டோடு பிறக்க அதிக அளவு வாய்ப்பிருக்கிறது.

  மேலும் குழந்தைகள் நரம்புசார்ந்த பிரச்சனைகளோடு மனநலம் பாதித்த குழந்தையாக பிறக்கவும் 90% (தொண்ணூறு சதவீதம்) வரை வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

  அதுபோல தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இந்த கீரையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீறி உண்டால் குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே நரம்புசார்ந்த பிரச்சனை ஏற்படுவதோடு மன அழுத்த பிரச்னையையும் ஏற்படுத்திவிடும்.

  எனவே கர்ப்பிணியாக இருக்கும் தாய்மார்கள் கண்டிப்பாக இந்த மணத்தக்காளியை எந்த வடிவத்திலும் சாப்பிடாமல் இருப்பதே சிறந்தது.

  Pregnant woman

  4. இத்தாவரத்தைப்பற்றி பரப்பப்படும் மற்றொரு விஷயம் என்னவென்றால் இது "ஆஸ்துமா" நோயை குணப்படுத்துகிறதாம். (அப்படிப்போடு அருவாளை...)

  இதுவரையில் இது எத்தனை ஆஸ்துமா நோயாளிகளை சுகப்படுத்தியுள்ளது என்பது அவர்களுக்கே வெளிச்சம். இப்படியான தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் அதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பித்தால் நன்றாக இருக்கும்.

  உண்மையை சொல்லப்போனால் இதனை அதிக அளவில் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் படிப்படியாக பாதிப்பை ஏற்படுத்தி சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்திவிடுகின்றன என்பதே உண்மை.

  5. அதேபோல இக்கீரையைப்பற்றி பரப்பப்படும் மற்றொரு தவறான தகவல் என்னவென்றால் இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடலின் அழகை கூட்டுமாம். அப்படி இதனை சாப்பிட்டதாலேயே அழகு கட்டுக்கடங்காமல் அதிகரித்து எத்தனைபேர் அழகுபதுமைகளாக வளையவருகிறார்கள் என்றும் தெரியவில்லை.

  எச்சரிக்கை.

  இறைச்சி உண்ணும் காலங்களில் இதனை உண்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

  இது கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்துவதோடு குடல்புண், வயிற்றுபுண், மற்றும் பலதரப்பட்ட பூஞ்சாண பாதிப்புகளால் உடலில் ஏற்படும் "தேமல்" போன்ற தோல்நோய்களை குணமாக்கும் ஒரு மூலிகை தாவரம் அவ்வளவுதான். உணவுப்பொருள் அல்ல. எனவே குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

  இதன் இலைகளையோ அல்லது காய்களையோ குழந்தைகள் அதிக அளவில் பச்சையாக சாப்பிட்டால் இதிலுள்ள சில நச்சு ஆல்கலாய்டுகள் குழந்தைகளின் இதயத்துடிப்பை குறைத்து மூச்சுத்திணறலை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணலாம்.

  இதன் இலைகள் மற்றும் காய்கள் கசப்பானவை என்பதால் குழந்தைகள் தானாக இதனை பறித்து சாப்பிடுவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் கூட சில அதிபுத்திசாலிகளான "ஏழாம் அறிவு" படைத்த வைத்திய சிகாமணிகளின் தூண்டுதலின் பேரில் இதன் இலைச்சாறு வயிற்றுப்புண்களை ஆற்றும் என காரணம்காட்டி இலைகளில் சாறுபிழிந்து கதற கதற குழந்தைகளின் வாயில் புகட்டாமல் இருக்கவேண்டியது அவசியம்.

  கடைசியாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த மணத்தக்காளியானது எல்லோரும் சொல்வதுபோல கீரையல்ல. உண்மையில் இது ஒரு களைச்செடி.

  வாய்ப்புண், வயிற்றுப்புண், குடல்புண் மற்றும் கல்லீரலில் ஏற்படும் புற்றுநோய் இவைகளோடு பூஞ்சைகளால் ஏற்படும் தோல் நோய்களை குணப்படுத்தும் திறன் இதற்கு உண்மையாகவே உள்ளது என்பதால் இதனை மூலிகை செடியாக அங்கீகரிக்கலாம்.. தப்பில்லை...

  ஆனால் இது பிற கீரைகளை போன்று அடிக்கடி சமைத்து சாப்பிடுவதற்கான உணவுப்பொருள் அல்ல என்பது ஏற்றுக்கொள்ள சிறிது கடினமாக இருந்தாலும்கூட அதுதான் உண்மை. இந்த செடியில் அடங்கியுள்ள சுவையை போன்றே இதுவும் கசப்பான உண்மைதான் என்பதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

  💢💢💢💢

  மணத்தக்காளி பற்றிய இப்பதிவின் முதல் பகுதியை [PART 1] படிக்க கீழேயுள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க...


  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  3 கருத்துகள்

  உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.