"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பாம்புகள் - அறிமுகம் - snakes Introduction.

பாம்புகள் - அறிமுகம் - snakes Introduction.

பாம்புகள் - அறிமுகம்.

பாம்புகளைப்பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது என்றாலும் பாம்புகளைப்பற்றி அனைவரும் தெரிந்திருக்கவேண்டிய சில அடிப்படை உண்மைகளை பற்றி இங்கு ஆராய்வோம்.

பாம்புகள் பொதுவாக ''சர்ப்பம்'' என்றும் ''அரவம்'' என்றும் அழைக்கப்படுகின்றன.  Snakes Introduction.

  பாம்பு ஊர்வன இனத்தை சேர்ந்த முதுகெலும்புள்ள ஒரு விலங்காகும். இதன் முதுகெலும்பு 200 முதல் 400 எலும்புகளால் கோர்க்கப்பட்டுள்ளன. இவை குளிர் இரத்த பிராணி ஆகும்.

  இவைகளை விஷத்தன்மையுள்ளவை மற்றும் விஷத்தன்மை இல்லாதவை என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். பாம்புகள் தன் விஷத்தை இரைகளை வேட்டையாடவும், எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் பயன்படுத்துகின்றன.

  உலகளவில் பாம்புகளில் 2,500 கும் அதிகமான வகைகள் உள்ளன. இதில் வெறும் 5 சதவீத பாம்புகளே விஷத்தன்மை வாய்ந்தவை. அதாவது சுமார் 600 வகையான பாம்புகளே நச்சுத்தன்மை வாய்ந்தவை.

  இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பு இனங்கள் உள்ளன. அவைகளில் 50 க்கும் குறைவான இனங்களே விஷத்தன்மை வாய்ந்தவையாகும்.

  இந்தியாவில் உள்ள பாம்புகளில் ராஜநாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்றவை கொடிய நச்சுப்பாம்புகள் ஆகும். சிலவகை பாம்புகளின் விஷங்கள் நேரடியாக நரம்புமண்டலத்தையும், சிலவகை பாம்புகளின் விஷங்கள் குருதி உறைதலையும் தடுத்து மரணத்தை ஏற்படுத்துகின்றன.

  கடல் பாம்பு.

  நிலப்பரப்பில் பாம்புகள் வாழ்வதுபோல் நீரில் வாழும் பாம்புகளும் உள்ளன. நீரில் வாழும் பாம்புகளில் அதிக விஷ தன்மையுள்ள பாம்பு எது என்றால் அது கடலில் வாழும் ''Belcher snake'' தான்.

  Belcher snake

  கடல் பாம்புகளில் பலவகைகள் இருக்கின்றன என்றாலும் உடலில் கருப்பு, வெள்ளை வரிகளைக் கொண்ட இந்த பாம்புதான் மிகக் கொடூரமான விஷத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.

  நிலத்தில் வாழும் சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தும் தன்மையைப் பெற்றுள்ளன.

  பாம்புகளின் உடலமைப்பு.

  பெரும்பான்மையான பாம்புகளின் தோல்கள் செதில்கள் போன்ற அமைப்பினால் ஆனது.

  பாம்புகளுக்கு இரு நுரையீரல்கள் இருந்தாலும் அதில் ஒன்றுதான் வேலை செய்கிறது. மற்றொன்று மிகவும் சிறுத்து காணப்படுகிறது.

  பொதுவாகவே பிற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது பாம்பின் நுரையீரல்கள் மிகச் சிறியது. அதிலும் இடது நுரையீரல்கள் வலது பக்க நுரையீரலை விட மிகச்சிறியது. சில பாம்புகளுக்கு இடது நுரையீரல்கள் இருப்பதில்லை. எனவே பெரும்பாலும் பாம்பினங்கள் ஒரேயொரு நுரையீரல் அதுவும் வலதுபக்க நுரையீரலுடன் மட்டுமே வாழ்க்கை நடத்துகின்றன.

  பாம்பின் நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டுக் காணப்படுகின்றன. பாம்புகள் உணவு இருக்கும் இடத்தை நாக்கின் மூலமாகவே உணர்கின்றன. நாக்கை வெளியே நீட்டும்போது உணவுகளின் மெல்லிய வாசனை துகள்கள் அதன் நாக்கில் ஒட்டிக்கொள்கின்றன. பின் அது நாக்கை உள்ளிழுத்து வாயின் உள்புறமுள்ள ''ஜேகப்ஸன்''[Jacobson's]  என்ற பகுதிக்கு கொண்டுசெல்கிறது. அங்கு உணவு துகள்களின் வாசனை துல்லியமாக அளவிடப்பட்டு உணவின் தன்மை, இருப்பிடம் கணிக்கப்படுகிறது. எனவேதான் பாம்புகள் அடிக்கடி நாக்கை வெளியே நீட்டுகின்றன.

  snakes Introduction

  பாம்பின் நாக்கு இரண்டு பகுதிகளாக பிளவு பட்டிருப்பதற்குக் காரணம். V வடிவத்தில் இரு திசைகளில் நீட்டப்படும் பிளவில் எந்த பக்க பிளவில் அதிக வாசனை துகள்கள் ஒட்டுகிறதோ அந்த திசையில் உணவு இருக்கிறது என்பதனை அதனால் எளிதாக ஊகித்துக் கொள்ள முடியும். அதனால்தான் இந்த ஏற்பாடு.

  பாம்பு காது.

  பாம்பிற்கு காதுகள் கிடையாது. அதாவது புறச்செவி, செவித்துளை, செவிப்பறை என எதுவுமே இல்லை. அப்படியென்றால் பாம்பிற்கு காது கேட்காதா என்றால் கேட்கும் எப்படி என்கிறீர்களா? நம்மைப்போல ''K.P . சுந்தராம்பாள்'' பாடலை இனிமையாக தாள சுருதியுடன் ரசித்து கேட்க முடியாது. மாறாக ஒலியின் அதிர்வுகளை உணர்ந்துகொள்ள முடியும் அவ்வளவே.

  பாம்பின் கபால எலும்புகளில் ஒன்றான ''குவாட்ரேட்'' பகுதியும், ''காலுமல்லா'' என்ற குருத்தெலும்பு பகுதியும் ஒட்டி இணைந்து காணப்படுகின்றன. இந்த அமைப்பு மிகவும் தொலைவில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக்கூட உணர்ந்துகொள்ளும் வகையில் உள்ளன. எனவே அது தரையில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக்கூட உடல் வழியாக உள் காதிற்கு அனுப்பி ஓசைகளை உணருகின்றன.

  100 Hz முதல் 700Hz வரையுள்ள அதிர்வுகளை உணரும் திறன் பாம்புகளுக்கு உண்டு.

  இதன் கண்கள் 90 டிகிரி பார்வை கோணத்தில் சுழலும் தன்மை கொண்டது. பாம்புகளின் கண்களில் இமைகள் கிடையாது.

  பாம்புச் சட்டை.

  பாம்புகளுக்கு கால்கள் இல்லாததால் அவைகள் உடலின் மூலமாகவே தரையை உந்தித்தள்ளி வேகமாக பயணிக்கின்றன. அவ்வாறு பயணிக்கும்போது கரடுமுரடான தரையின் உராய்வினால் அவைகளின் உடலில் அடிக்கடி சிராய்ப்புகள், காயங்கள் ஏற்படலாம். இந்த ஆபத்துகளில் இருந்து தப்பிக்கவே  அவைகளுக்கு வழவழப்பான செதில்கள் போன்ற சிராய்ப்புகள் ஏற்படுத்த முடியாத  ஒருவிதமான மெல்லிய தோலை இயற்கை கொடுத்துள்ளது.

  ஆனால் காலம் செல்லச்செல்ல இந்த தோல்பகுதி தன் பாதுகாப்புத் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடுகின்றன. எனவே இதன் கீழடுக்குத் தோல் பாம்பின் பாதுகாப்பிற்கு புதிதாக பொறுப்பேற்றுக்கொள்ள இனியும் பயன்படுத்த முடியாத மேலடுக்குத்தோலை பாம்புகள் உரிந்தெடுத்து களைந்து விடுகின்றன.

  pambu sadai

  கண்களின் மேற்பகுதியில் கண்ணாடி போன்ற ஒளிஊடுருவும் படலம் உள்ளது. இதன் வழியாகவே பாம்புகள் பார்க்கின்றன. எனவே எப்போதும் கண்ணாடி போட்டுக்கொள்ளும் உயிரினம் எது என்றால் பாம்பைக்  குறிப்பிடலாம். இவைகள் தோல் உரிக்கும்போது இந்த கண் படலத்தையும் சேர்த்தே உரிக்கின்றன.

  இந்நிகழ்வு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். இது பாம்பு தன்னைப் புதுப்பித்துக்கொள்ள எடுக்கும் ஒரு நடவடிக்கை எனலாம்.

  அவைகள் தன் பாதுகாப்பிற்காகவும், சௌகரியத்திற்காகவும் செய்யும் இந்த நிகழ்வையே ''பாம்பு சட்டை உரித்தல்'' என்று குறிப்பிடுகிறோம்.

  உணவுப்பழக்கம்.

  எல்லா பாம்புகளுமே ஊணுண்ணிகள்தான். ஊர்வன, எலிகள், தவளைகள், விலங்குகள், பறவைகள், பறவைகளின் முட்டைகள் இவைகள்தான் இவைகளின் வழக்கமான ''தம்பிரியாணி''கள். சில நேரங்களில் மனிதர்களையும் இவைகள் ''கொத்துப்பரோட்டா''  போடுவதுண்டு.

  snakes food

  பாம்புகளே பாம்புகளை பிடித்து சாப்பிடும் பழக்கத்தையும் கொண்டுள்ளன.

  பிற விலங்குகளைப்போல பாம்புகள் தினந்தோறும் 3 வேளை உணவு எடுத்துக் கொள்வது இல்லை. முதல் தடவை சாப்பிட்ட உணவு நன்றாக செரித்த பின்பே அடுத்த உணவு எடுத்துக்கொள்ளும்.

  பாம்புகள் உணவை வாயினால் நன்றாக மென்று கூழாக்கி சாப்பிடுவதில்லை. விலங்குகள், எலிகள், தவளைகள் மற்றும் பாம்புகளை முழுதாகவே விழுங்கி விடுகின்றன. அவ்வாறு விழுங்கப்பட்ட விலங்குகளின் உடல்கள் மற்றும் எலும்புகள் முதலியன ஒரேநாளில் செரிப்பதில்லை

  உணவாக்கப்படும் விலங்குகளின் எலும்புகள் ஜீரண நீரினால் முழுமையாக கரைக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்குமேல் ஆகிவிடுகின்றன. எனவே பாம்புகள் பெரும்பாலும் உணவின் தன்மையை பொறுத்து வாரத்திற்கு 1 தடவை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை மட்டுமே உணவு எடுத்துக்கொள்கின்றன.

  நம்மைப்போல் தினம் 3 வேளை உணவு சாப்பிடுவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

  இனப்பெருக்கம்.

  பாம்புகள் ஆண், பெண் இணைந்து இனவிருத்தியில் ஈடுபடுகின்றன.

  சாரைப்பாம்பு மற்றும் நல்ல பாம்பு இரண்டும் இணைந்து ''ஜல்சா'' செய்யும் என்பதெல்லாம் முட்டாள்தனம். சாரைப்பாம்பு என்பது வேறு நல்ல பாம்பு என்பது வேறு. இரண்டிலும் ஆண் பெண் தனித்தனியாக உண்டு. எனவே இவை இரண்டும் இணைசேர்வதற்கு வாய்ப்பே இல்லை.

  குருட்டு பாம்பு.

  ஆனால் பாம்பினங்களில் ''குருட்டு பாம்பு'' என்று ஒன்று இருக்கிறது. இதற்கு கண்களே கிடையாது. அதனால்தான் இதனை குருட்டுப்பாம்பு என அழைக்கிறோம். இதனைப் பொறுத்தளவில் "உலகம் ஒரு இருட்டறை". எனவே இது மட்டும் ஆண் துணை இல்லாமல் தன்னிச்சையாக கருவுருகிறது.

  kuruddu pampu

  வரதட்சனை பிரச்சனை ஒன்ணும் இல்லீங்கண்ணா.. இந்த இனத்தில் ஆண் இனமே கிடையாது. அப்படியே ஆண் இனம் இருந்தாலும் இதற்கு சுத்தமாக கண் தெரியாது என்பதால் 'மணாளன்' இருக்கும் இடத்தை தேடி கண்டறிவது என்பது மகா கஷ்டம். அதனால்தான் இயற்கை அதற்கு இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து கொடுத்துள்ளது..

  இந்த குருட்டு பாம்பு மட்டுமல்ல உலகில் உள்ள பல சிறிய உயிரினங்கள், சிலவகை கடல்வாழ் உயிரினங்கள், மற்றும் காடுகளில் வாழும் ஒருவகை பல்லி இனம் ஆகியன ஆண் துணையில்லாமலேயே சுய இனவிருத்தியில் ஈடுபடுகின்றன என்பதை இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளவும்.

  இதன்மூலம் ஆண் என்ற ஒரு இனம் இல்லாமலேயே இந்த உலகில் உயிர்கள் பல்கிபெருகி வாழமுடியும் என்பது தெளிவாகிறது. எனவே ''நான் ஆண் பிள்ளையாக்கும்'' என்று மீசையை முறுக்கிக்கொண்டு தம்பட்டம் அடிப்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.

  பாம்பு குட்டியும், முட்டையும்.

  பாம்புகள் பெரும்பாலும் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. ஆனால் சிலவகை பாம்புகள் குட்டிபோடுகின்றன. பாம்பு முட்டையானது கோழிமுட்டை போல் கெட்டியான தோடுகளுடன் உடையும் தன்மையுடன் இருப்பதில்லை. மாறாக தோல் போன்று துவளும் தன்மையுடன் இருக்கும். 

  முட்டைக்குள்ளிருக்கும் பாம்பு குட்டிகளுக்கு மூக்கின் நுனியில் கூர்மையான ஒரு பல் போன்ற அமைப்பு இருக்கும். அதன் துணைகொண்டு முட்டையோட்டைக் கிழித்துக்கொண்டு வெளிவருகின்றன. சிலநாட்களில் இந்த தற்காலிக பல் தானாகவே விழுந்துவிடும்.

  மலைப்பாம்புகள் 40 முதல் அதிகப்படியாக 100 முட்டைகள் வரை இடும். முட்டைகளை இறுக அணைத்தபடி அடைகாக்கும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவர  28 டிகிரி  செல்ஸியஸ் வெப்பநிலை தேவை.

  snakes egg

  இரட்டைத்தலை பாம்புகள்.

  எல்லா உயிரினங்களிலும் இரண்டு தலை உள்ள குழந்தைகள் பிறப்பதுபோல் பாம்பினங்களிலும் இருதலை குட்டிகள் பிறப்பதுண்டு. உடல் ஒன்றுதான் இருக்கும் ஆனால் தலை மட்டும் இரண்டு இருக்கும்.

  இரண்டு தலைகளும் தனித்தனியாக இயங்கக் கூடியவை என்றாலும் இரண்டும் ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே அவைகளால் தொடர்ந்து இயங்க முடியும். பொதுவாக இரட்டைத்தலை பாம்புகள் சில மாதங்களுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை.

  Two head snakes

  பாம்பு வழிபாடு.

  இந்தியா, இலங்கை, சீனா, பாரசீகம், ஜப்பான், பர்மா,அரேபியா, எகிப்து, பெரு, கிரீஸ், அமெரிக்கா முதலிய நாடுகளிலெல்லாம் பாம்பு வழிபாடு நடை பெற்றதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

  இந்த வழிபாட்டு முறைகள்யாவும்  நம் முன்னோர்களுக்கு பாம்பின் மீதிருந்த பயத்தினால் ஏற்பட்டதாக இருக்கலாம். சில நாடுகளில் பாம்புகள் நல்ல தெய்வங்களாகவும் சில நாடுகளில் கெட்ட தெய்வங்களாகவும் வழிபடப்படுகின்றன.

  மதம் பிடித்த மூட நம்பிக்கைகள்.

  அயர்லாந்து நாட்டில் பாம்புகளே இல்லை. அதற்கு காரணம் பைபிளில் ஏதேன் தோட்டத்தில் ஏவாளை ஒரு பாம்பு வஞ்சித்ததாக வருவதால் கிறிஸ்தவ சமயத்தில் பாம்புகள் தீய உயிரினமாக கருதப்படுகிறது.

  ''புனித பேட்ரிக்'' என்பவர் அயர்லாந்தில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப சென்றபோது அவரின் முட்டாள்தனமான கட்டளையால் அங்குள்ள பாம்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டன. தற்போது அயர்லாந்தில் பாம்புகள் இல்லாமல் போனதற்கு இதுவே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

  மனிதனுக்கு மதவெறி பிடித்துவிட்டால் ஒரு இனமே அழிந்து போகும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். வருங்காலத்தில் இதே போன்றதொரு அழிவிலிருந்து மனித இனமும் காப்பாற்றப்பட வேண்டுமெனில் நாம் மதவெறிகளில் இருந்து படிப்படியாக விடுபட வேண்டும்.

  பாம்பை பற்றிய பழமொழிகள்.

  பாம்பைப் பற்றி பல பழமொழிகள் வழக்கத்தில் உள்ளன என்றாலும், கீழே உள்ள பழமொழிகள் மட்டுமே பிரபலமாக வழக்கத்தில் உள்ளன. அவை.

  1. பாம்பின் கால் பாம்பறியும்.
  2. பாம்பென்றால் படையும் நடுங்கும்.
  3. விதி முடிந்தவனைத்தான் விரியன் கடிக்கும். 
  4. கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்தது போல்.

  இதுவரை பாம்பினங்களின் பொதுவான குணங்களை மட்டுமே பார்த்தோம். இனிவரும் பதிவுகளில் ஒவ்வொரு வகையான பாம்புகளைப்பற்றியும் தனித்தனியாக விரிவாக பார்க்கலாம்.

  பாம்புகளின் பொதுவான சில விஷயங்களை தெரிந்துகொண்ட நீங்கள் பாம்புகளுடைய விஷத்தின் தன்மைகளைப்பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும்தானே. எனவே பாம்புகளுடைய விஷத்தின் தன்மைகளைப்பற்றி அறிந்துகொள்ள தட்டுங்க.

  >> "பாம்பு விஷம் - ஒரு அறிமுகம் - An Introduction to Snake Venom." <<

  💢💢💢💢

  📕இதையும் படியுங்களேன்.

  கருத்துரையிடுக

  0 கருத்துகள்