header ads

header ads

முகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah - பகுதி 2.


          முதல் பகுதியில் திரு அவதாரம் எடுத்த ஜின்னாவிற்கு பெற்றோர்கள் வைத்த பெயர் ''முகமது அலி''. தன் தந்தையின் பெயரோடு ''முகமது அலி ஜின்னா'' என்று பின்னாளில் அழைக்கப்பட்டார்.

Muhammad Ali Jinnah part2


          இத்தொடரின் முதல் பகுதியை படிக்க >>இங்கே கிளிக்குங்க <<.

          பிறக்கும் போதே மிகவும் ஒல்லியாக நோய்வாய்ப்பட்ட குழந்தையாகவே பிறந்தார். இது தாய்க்கு மிகவும் வேதனையை தந்தது.

          ஆனால் தந்தைக்கு வேறு ஒரு கவலை இருந்தது. தன்னுடைய மகனுக்கு ஒரு சிறந்த கல்வியை கொடுத்து அறிவும், திறமையும் நிரம்பியவனாக உருவாக்கி தன்னுடைய தொழிலை நிர்வகிக்கும் திறமையுள்ளவனாக உருவாக்க வேண்டும் என்பதுதான் அந்த கவலை.

           எனவே முகமது அலிக்கு 6 வயது நிரம்பியவுடன் ஒரு ஆசிரியரை நியமித்து வீட்டிலேயே கல்வி கற்க ஏற்பாடு செய்தார்.

          ஆனால் குழந்தையான ஜின்னாவிற்கு படிப்பைவிட விளையாட்டே முக்கியமாகப்பட்டது. எனவே அவரை ஒரு சிறந்த பள்ளியில் கல்வி கற்க ஏற்பாடு செய்தார்,

          படிப்பைத்தவிர பொதுஅறிவு, விளையாட்டு போட்டிகளில் முதல் மாணவனாக விளங்கினான் ஜின்னா. விளையாட்டில் ஆர்வம் அதிகரித்ததால் ஜின்னாவால் பிற மாணவர்களுடன் போட்டிபோட்டு கல்வி கற்க முடியவில்லை. இது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. அவமானமாக உணர்ந்தான்.

          எல்லாவற்றிலும் தானே சிறந்து விளங்க வேண்டும். தன்னையே எல்லோரும் தலைவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற குணம் ஜின்னாவிற்கு இயற்கையாகவே அமைந்த ஒன்று .

          அனைவரையும் தவிர்த்து தன்னையே எல்லோரும் ஆச்சரியமாக அண்ணாந்து பார்க்க வேண்டும். அனைவருக்கும் தாமே தலைமை ஏற்கவேண்டும் என்கிற எண்ணமும் அவர் அடிமனதில் ஊறிப்போயிருந்தது.

          நம் நாட்டில் சிலர் ஒரு வறட்டு தத்துவம் சொல்வார்களே "கல்யாணவீடு என்றால் நானே மாப்பிள்ளையாகவும் இழவு வீடு என்றால் நானே பிணமாகவும் இருக்க வேண்டும் ... அப்போதுதான் மாலையும் மரியாதையும் எனக்கே கிடைக்கும்" என்று அப்படிப்பட்ட டைப் ... இது அவருடைய தந்தையிடமிருந்து அவருக்கு கடத்தப்பட்ட குணாதிசயமாக இருக்கலாம். இது சாதாரணமான இயல்பாக இருந்தால் பரவாயில்லை பிடிவாதகுணமாகவே அவர் இரத்தத்தில் ஊறிப் போயிருந்தது.

Jinnah part2

          ''தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்'' என்ற  கூற்றுக்கிணங்க கடைசி வரைக்கும் அவர் இந்த குணத்தை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யவில்லை.

          ஆனால் இந்த வறட்டு பிடிவாத குணமே பின்னாளில் பாகிஸ்தான் என்கிற ஒரு தனி நாடு பிரிவதற்கு காரணமாகவும் அதனால் ஏற்பட்ட கலவரம் மற்றும் இலட்சக்கணக்கான உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணமாக அமைந்து விட்டது. அதுமட்டுமல்ல அந்த உயிரிழப்புகள் பல்வேறு வடிவங்களில் இன்றுவரையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

          ''கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்'' என்பது போல, ...  மரணம் நெருங்கும் தருவாயில்தான் தம் பிடிவாதக்குணம் எவ்வளவு பெரிய இழப்பை இந்த உலகிற்கு தந்துள்ளது என்பதனை முதன்முறையாக உணர்ந்து வருந்தினார். சரி அதைப் பற்றி பின்னால் பார்ப்போம்.

          பாடசாலையில் ஜின்னாவால் அவரது தாய்மொழியான உருது மொழியில் சிறப்பாக கல்வி கற்க முடியவில்லை. தன்னால் பிற மாணவர்களுடன் போட்டிபோட்டு படிக்கமுடியவில்லையே என்ற இயலாமையும் தன்னால் மாணவர்களுக்கு தலைமையேற்க முடியவில்லையே என்கிற எண்ணமும் அவரை வாட்டி வதைத்தது.

          எனவே பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம் பிடித்தார். பெற்றோர்கள் எவ்வளவோ வற்புறுத்திய பின்பும் தான் பள்ளிக்கூடம் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

          அதனால் வேறு வழியில்லாமல் அவருடைய தந்தை அவரை தன்னுடைய வியாபார அலுவலகத்திற்கு அழைத்து செல்ல ஆரம்பித்தார். அங்கு அவருக்கு வரவு செலவு பார்க்கிற '' கணக்காப்பிள்ளை'' வேலை. ஆனால் அங்கும் இவருக்கு கணக்கு வழக்கு சரியாக வரவில்லை என்பதால் இவருக்கான முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பதனை உணர்ந்தார்.

Jinnah shop

          எனவே வேறு வழியில்லாமல் சிலமாத இடைவெளியில் மீண்டும் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தார்.

          பாடசாலையில் ஆங்கில மொழியை கற்பதில் அதிகம் ஆர்வம் காட்டினார். ஆங்கிலம் கற்பது எளிமையாக அவருக்கு தோன்றியதால் ஆங்கிலத்தில் புலமை பெற்றார்.

          அதன்பின் தொடக்கக்கல்வியை மும்பையில் பயின்றார். உயர்கல்வியை கராய்ச்சியில் தொடர்ந்தார்.

          ஆங்கில மொழியை சிறப்பாக கற்று தேர்ந்ததால் தன்னுடைய வாழ்க்கையையும் மேற்கத்திய பாணியிலேயே அமைத்துக் கொண்டார். எப்போதும் கோட்டு சூட்டுடன் நேர்த்தியாக உடை அணிந்து ஆங்கிலேயருக்கு இணையாக தன்னுடைய பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொண்டார். பள்ளிப்படிப்பை முடித்த அவர் லண்டன் சென்று சட்டம் படிக்க ஆர்வம் கொண்டார்.

          லண்டன் சென்று சட்டம் பயில அவருடைய தந்தை அனுமதி அளித்தாலும் தாய் எதிர்ப்பு தெரிவித்தார்.

          மகன் லண்டன் சென்றால் படிப்பு முடிந்து திரும்பி வரும்போது அங்குள்ள மேற்கத்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்துவிடுவானோ  என்ற பயம்தான். எனவே மகனுக்கு ஒரு நிபந்தனை விதித்தார்.

          லண்டன் செல்வதாக இருந்தால் இங்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து விட்டு அதன்பின் லண்டன் செல் என்பதுதான் அந்த நிபந்தனை. ஆனால் ஜின்னா அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் தாயாரோ தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தாயின் கோரிக்கைக்கு ஜின்னா பணிந்தார்.

Muhammad Ali Jinnah

          இதனால் மகிழ்ச்சியுற்ற தாய் தன் உறவினர் மகளான ''எமிபாய்'' என்னும் 14 வயது பெண்ணை தன் மகனுக்கு மணம் முடித்தார். அப்போது ஜின்னாவிற்கு வயது 15.

          திருமணம் முடிந்த கையோடு மனைவியை இங்கேயே விட்டுவிட்டு சட்டம் படிக்க லண்டன் சென்றார். படிப்பை செவ்வனே முடித்து ''பாரத் லா'' பட்டமும் பெற்று 1896 ல் ஊர் திரும்பினார்.

          ஆனால் ஊர் திரும்பிய அவர் மகிழ்ச்சியாக இல்லை . சோகமே அவரை வாசற்படியில் நின்று வரவேற்றது.

          அப்படி என்ன சோகம் ... அதனை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

[சோகம் தொடரும்] ...

இந்த தொடரின் ''பகுதி 3'' ஐ படிக்க >>இங்கு கிளிக்குங்க <<.


கருத்துரையிடுக

4 கருத்துகள்

 1. நல்ல விறுவிறுப்பாக செல்கிறது நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. KILLERGEE Devakottai .. விறுவிறுப்பாகவா ... அப்போ விடாமல் பின்னாடி தொடருங்கோ !!! ...

   நீக்கு
 2. சோகத்தைத் தெரிந்துகொள்ள அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்.

  பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.