முகமது அலி ஜின்னா.
Muhammad Ali Jinnah.
[Part - 3]
சட்டம் படிப்பதற்காக லண்டன் சென்ற ஜின்னா அங்கு படிப்பை செவ்வனே முடித்து ''பாரத் லா'' பட்டமும் பெற்று 1896 ல் ஊர் திரும்பினார்.
ஆனால் ஊர் திரும்பிய அவர் மகிழ்ச்சியாக இல்லை. காரணம் அவரை வரவேற்க அவரது தாயாரும் மனைவியும் உயிரோடு இல்லை.
இக்கட்டுரையின் பகுதி 1 ஐ படிக்க அடுத்துள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க..
👉 முகமது அலி ஜின்னா - M A Jinnah - பகுதி 1. 👈
ஆம். அவர் லண்டனில் படித்துக் கொண்டிருந்தபோதே தாயாரும், மனைவியும் உடல் நலக்குறைவினால் மரணத்தை தழுவி இருந்தனர். இது அவருக்கு பேரிழப்பாக இருந்தாலும் விரைவிலேயே அந்த வேதனையிலிருந்து மீண்டு வந்தார்.
அடுத்த கட்டத்திற்கு தன் வாழ்க்கையை நகர்த்தி செல்ல விரும்பிய அவர் 1896 ல் பம்பாயில் வழக்கறிஞராக தன் பணியை தொடங்கினார்.
தன்னுடைய வாதிடும் திறமையால் பிரபலமான வழக்கறிஞராக புகழ்பெற்றார். புகழ் மட்டுமல்ல வருமானத்திற்கும் குறைவில்லை.
ஆங்கில மோகம் அதிகம் கொண்டிருந்த அவர் தன் வாழ்க்கை முறையையும் மேலை நாட்டு நாகரீக முறையிலேயே இருக்கும்படி அமைத்துக் கொண்டார். மேற்கத்தியபாணி உடைகளோடு நவநாகரீகமாக உலாவந்த போதுதான் அவருடைய வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சுதந்திரத்திற்காக போராட்டத்தை வீரியப்படுத்திய காலம் அது. அப்போதுதான் ஜின்னாவிற்கு அரசியலில் ஆர்வம் அதிகரித்தது. இது அவருடைய வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்த ஆர்வத்தை நீருற்றி வளர்த்தவர்கள் இவரின் நண்பர்களான ''தாதாபாய் நவ்ரோஜி'' மற்றும் நவ்ரோவ்ஜியின் செயலாளராக இருந்த காங்கிரஸின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான ''கோபாலகிருஷ்ண கோகலே''. இவர்களின் உதவியுடன் காங்கிரசோடு தன்னுடைய நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டார் ஜின்னா.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்களின் அருகில் அமர்ந்து அவர்களுடைய போராட்டத்தில் தானும் கலந்து கொண்டு, அவர்களில் ஒருவராக பங்குகொள்ளும் அளவுக்கு நெருக்கம் அதிகரித்தது. எனவே தன்னுடைய தொழில் நண்பரான கோபாலகிருஷ்ண கோகலேவை தன்னுடைய அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.
ஜின்னாவின் சுறுசுறுப்பும், திறமையும், கோகலேவிற்கு ஜின்னா மீது ஆழ்ந்த நம்பிக்கையை கொடுத்தது.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் பல இடங்களில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த சமயம் அது. இந்துக்களும் முஸ்லீம்களும் மத அடையாளங்களை கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் ஓரணியில் நின்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினர்.
எனவே, ஆங்கில அரசு ஒற்றுமையாக போராடும் மக்களின் ஒற்றுமையை எப்படி சிதைப்பது என்று வழி தேடியது.
அப்போது அவர்களுக்கு கைகொடுத்தது பிரித்தாளும் சூழ்ச்சி..
உடனேயே பிரித்தாளும் சூழ்ச்சியை செயல்படுத்திப் பார்க்க காய்களை நகர்த்தியது ஆங்கிலேய அரசு.
இந்தியர்களுக்கு மொழியுணர்வு அதிகம் என்பதால் மக்களின் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த அவர்கள் கையில் எடுத்த முதல் ஆயுதம் ''மொழி''.
அடுத்தக்கணமே ஹிந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவித்தனர்.
அப்போது இஸ்லாமியர்களின் விருப்ப மொழியாக ''உருது'' இருந்துவந்தது. எனவே உருது மொழியையும் தேசிய மொழியாக அறிவிக்கும்படி இஸ்லாமியர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கையை ஆங்கிலேய அரசு நிராகரித்தது. இது இஸ்லாமியர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது. தாங்கள் புறங்கணிக்கப்படுவதாக உணர்ந்தனர்.
எனவே, இந்துக்களை தங்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க ஆரம்பித்தனர். இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் ஒற்றுமையில் ஏற்பட்ட முதல் கீறல் இது.
தங்களுடைய பிரித்தாளும் திட்டம் நன்கு வேலை செய்வதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் உற்சாகத்தில் குதித்தனர்.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்த ஜின்னா இந்து முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை பேணிக்காப்பதில் தன் கவனம் முழுவதையும் செலுத்தினார் என்றே கூற வேண்டும்.
1913 ம் ஆண்டு லண்டன் சென்றிருந்த ஜின்னாவை முஸ்லீம் லீக் கட்சி தலைவர்களான ''மவுலானாமுகமது'' மற்றும் ''சையது வாசு உசேன்'' ம் சந்தித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விடுவித்துக்கொண்டு முஸ்லீம் லீக் கட்சியில் சேருமாறு வலியுறுத்தினர்.
ஆனால், முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக முஸ்லீம் லீக் கட்சியில் இணைய ஜின்னா மனசாட்சி இடம்கொடுக்கவில்லை. என்றாலும், முஸ்லீம் லீக் கட்சியில் இணையாமல் காங்கிரஸ் கட்சியில் இருந்தபடியே முஸ்லீம் லீக்கின் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று இறுதியில் முடிவு செய்தார்.
1914 ம் ஆண்டு தொடங்கி 1919 ம் ஆண்டு வரை நடந்த முதலாம் உலகப் போர் இந்தியாவிற்கு மிகப் பெரிய பாதிப்பை கொடுத்தது. ஆங்கிலேய அரசோ தனக்கு போரினால் ஏற்பட்ட மாபெரும் இழப்பை ஈடுசெய்ய இந்தியாவில் உள்ள பொருள் வளத்தையும், மனித வளத்தையும் சுரண்ட ஆரம்பித்தன. இதனால் மக்கள் பெரிதும் கொதிப்படைந்தனர்.
அந்த காலக்கட்டத்திலும் காங்கிரசின் முக்கிய தலைவருள் ஒருவராக ஜின்னா வலம் வந்து கொண்டிருந்தார். கட்சியின் முக்கிய முடிவுகள் இவரிடமும் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்கப்பட்டன. ''சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு'' என்ற சொற்றொடருக்கு ஏற்ப கட்சியில் இவரது செல்வாக்கு ஏறு முகமாகவே இருந்தது.
இந்த சமயத்தில்தான் சிங்கத்தை சீண்டி பார்க்க சிறுத்தை ஒன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து ''ஏலேய் !! நான் வந்துட்டேன்னு சொல்லு.. சீறும் சிறுத்த.. திரும்பி வந்துருக்கேன்னு சொல்லுல'' என்று உறுமியபடியே இந்தியா வந்து இறங்கியது.
ஆம்,.. அந்த சிறுத்தை வேறு யாருமல்ல, அவர்தான் காந்தி!.. ''மிஸ்டர் காந்தி''!.
தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக அறவழிப்போர் நடத்தியதால் காந்தியின் புகழ் உலகம் முழுக்க பரவி இருந்தது. எனவே காங்கிரஸ் கட்சி அவரையும் தன்னோடு இணைத்துக் கொண்டது.
விரைவிலேயே காங்கிரசின் மாபெரும் தலைவர்களில் ஒருவராக வலம் வந்தார் காந்தி. இது ஜின்னாவின் மனதில் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தியது,
ஆரம்பத்தில் காந்தியுடன் நெருக்கமாக பழகினாலும் நாளாக, நாளாக அவருடைய கொள்கையில் முரண்பட்டார். அதற்கு காரணம் நெடுநாளைய உறுப்பினரான தனக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட நேற்றைய உறுப்பினரான காந்திக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது அவர் அடிமனதில் காந்தியின் மீது ஒருவித வெறுப்பை ஏற்படுத்தியது.
இந்த வெறுப்புதான் காலப்போக்கில் விஷ விருட்சமாக வளர்ந்து தனிநாடு கோரிக்கைக்கு அடிப்படை காரணமாகவும் அமைந்தது.
தனி நாடு அமைத்து அதற்கு தலைவனாகி காட்டுவது அதன்மூலம் காந்தியை பழிதீர்ப்பது என்கிற அவருடைய தனிமனித வெறுப்பு பல இலட்சக்கணக்கானவர்களின் மரணத்திற்கு அடிப்படை காரணமாக அமைந்து விட்டது. என்றாலும், ஆரம்பத்தில் காந்தியும், ஜின்னாவும் கட்சியில் பிரிக்க முடியாத இரு முக்கிய தலைவர்களாகவே இருந்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில்தான் ஜின்னா ஒரு விபரீதமான முடிவை எடுத்தார்.
''ஐம்பதிலும் ஆசை வரும்'' என்பார்கள் அல்லவா. ஆனால் ஜின்னாவிற்கோ அப்போது வயது ரொம்ப அதிகமெல்லாம் இல்லை. வெறும் நாற்பதுதான் 😞😯😵. இந்த வயதில் ஆசை மட்டுமல்ல ஆசை, தோசை, அப்பளம், வடை எல்லாம் சேர்ந்து வருவது இயற்கைதானே.
எனவே, 40 வயதான ஜின்னாவிற்கும் ஆசை வந்தது, கூடவே காதலும் வந்தது. அதுவும் ஒரு 16 வயதே நிரம்பிய தேவதையின் மீது.
தேவதை மீது வைத்த காதல் இனித்ததா அல்லது வதைத்ததா என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
இதன் தொடர்ச்சி "Part 4" ஐ படிக்க கீழேயுள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க..
>>"முகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah - The pain of love life. Part 4."<<
6 கருத்துகள்
good...
பதிலளிநீக்குநன்றி!!
நீக்குநாற்பது வயது காதல் நாய் படும்பாடு என்பார்களே...
பதிலளிநீக்குKILLERGEE Devakottai ''நாய் படும்பாடு'' ... ஹஹா. அய்யோ அத போய் இப்போ ஞாபக படுத்திட்டீங்களே ...
நீக்குதற்கால வசனங்களை அந்தக் காலத்துக்கு உபயோகப்படுத்திக் கொண்டிருப்பது புன்னகைக்க வைக்கிறது. அது சரி, ராதாபாய்நவ்ரோஜியா தாதாபாய் நவ்ரோஜியா?
பதிலளிநீக்குஸ்ரீராம் .. தவறுக்கு வருந்துகிறேன் நண்பரே ... நீங்கள் கூறியது போல தாதாபாய் நவ்ரோஜிதான் ... பிழைகளை சுட்டிக்காட்டியதற்காக அன்பு கலந்த நன்றி !! .. தற்போது தவறுகள் திருத்திக்கொள்ளப்பட்டன ... நன்றி !!!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.