உயிரினங்களின் ஒளியாற்றல் - Bioluminescence.

பயோலுமினென்சென்ஸ்.

Bioluminescence.

          நம் உடலில் உஷ்ணம் உற்பத்தியாவது போல் சில உயிரினங்களின் உடலில் ஒளி உற்பத்தியாவது உண்டு.

          உடலில் நிகழும் வேதியியல் ஆற்றல் ஒளியாற்றலாக மாற்றப்பட்டு பலவண்ணங்களில் வெளிப்படுவதையே "உயிரியல் ஒளிர்வு" அல்லது "பயோலுமினென்சென்ஸ்" என அழைக்கப்படுகிறது.          இதுவரையில் 1000 க்கும் மேற்பட்ட உயிரின வகைகள் தங்கள் உடலில்  ஒளியை உற்பத்தி செய்யும் தன்மையை பெற்றுள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.

          பொதுவாக கடலில் வாழும் சிலவகை மீன்கள், பாசிகள், ஜெல்லிமீன்கள்,  நத்தைகள், பாலைவன காடுகளில் வாழும் ஒருவகை கரையான்கள் மற்றும் காளான்கள் போன்ற சிலவகை தாவரங்கள் முதலியன ஒளிவீசும் தன்மையை பெற்றுள்ளன.

          கடல்களில் ஒளிவீசும் உயிரின வகைகள் மட்டுமே 1500 க்கும் மேல் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சிலவகை பாஃடீரியாக்களும் அடங்கும். "நொக்டிலுகா சிண்டிலன்ஸ்" (Noctiluca scintillans) என்னும் மிக நுண்ணிய பாசியானது கடலலைகளால் அலைக்கழிக்கும்போது நீலநிற ஒளியை வெளியிடுகின்றன.

          பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்கள் பாசிகள் உட்பட பச்சை மற்றும் நீல நிற ஒளிகளை உற்பத்திபண்ணுகின்றன. ஆனால் அபூர்வமாக சில மீன்கள் மட்டும் சிவப்பு மற்றும் அகச்சிவப்பு ஒளியை வெளியிடுகின்றன. "மலாக்கோஸ்டியஸ்" (Malacosteus) வகை மீனினத்தின் தலை மற்றும் தாடைப்பகுதிகளில் சிவப்பு ஒளி வெளிப்படுவதை பார்க்கலாம். அதேபோல் கடலில் வாழும் "டோமோப்டெரிஸ்" (Tomopteris) என்னும் உயிரினம் மஞ்சள் நிற ஒளிகளை தங்கள் உடல் முழுவதிலும் வெளியிடுகின்றன.


Malacosteus

          நீர்வாழ் உயிரினங்கள் மட்டுமல்லாது நிலத்தில் வாழும் சிலவகை தாவரங்கள், காளான்கள், காடுகளிலுள்ள புற்றுகளில் வாசம் செய்யும் கரையான், ஒருவகையான பூரான் முதலானவைகளும் உடலில் ஒளியை உமிழ்கின்றன. நாம் அடிக்கடி பார்க்கும் மின்மினி பூச்சிகளும் உடலில் ஒளியை உற்பத்திசெய்வதோடு அதனை பலவண்ணங்களில் வெளிப்படுத்தி நம்மை அதிசயிக்கவைக்கின்றன.

          உயிரினங்களின் உடலில் ஒளியை உருவாக்குவதற்கு அடிப்படை பொருளாக இருப்பது "லூசிபெரின்" (luciferin ) என்ற ஒரு வேதியியல் பொருள்.

          இந்த லூசிபெரினில் "லூசிபெரஸ்" என்ற என்சைம் உள்ளது. இந்த என்சைம்மில் உள்ள "அடினோசைன் ட்ரை பாஸ்பேட்" (ATP) என்னும் ஆற்றல் மிகுந்த  வேதியல் கூட்டுப் பொருள் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து ஒளியை உற்பத்தி செய்கிறது.

          ஒரு உயிரினத்தின் உடலிலிருந்து ஒளி வெளிப்படுகிறது என்றால் அந்த ஒளியை மேற்குறிப்பிட்டுள்ளது போல் "லூசிபெரின்" உதவியால் அந்த உயிரினம்தான் தன்னிச்சையாக உற்பத்தி செய்கின்றன என்ற முடிவிற்கு வந்துவிடாதீர்கள். ஏனெனில் கடலில் வாழும் பலவகையான மீன்கள் ஒளி உமிழும் ஒருவகை பாஃடீரியாக்களை தன் உடலில் சேகரித்து வைத்துக்கொண்டு அதிலிருந்த வெளிப்படும் ஒளியை தன் உடலில் இருந்து வரும் ஒளிபோல் "பாவ்லா' காட்டிக்கொண்டு திரிவதுமுண்டு.

          இன்னும் புரியும்படியாக சொல்லவேண்டுமெனில் தங்கள் உடலிலிருந்து வெளிப்படும் இந்த உயிர் ஒளியை உயிரினங்கள் இருவிதங்களில் உற்பத்தி செய்கின்றன. அதில் ஒன்று "பாக்டீரியோஜெனிக்" (bacteriogenic) மற்றொன்று "ஆட்டோஜெனிக்" (autogenic). 

          இதில் பாக்டீரியோஜெனிக் என்பது "போட்டோபாஃடீரியம்" வகையை சேர்ந்த பாஃடீரியாவால் உருவாக்கப்படும் ஒளியாகும். இது நீலம் மற்றும் பச்சைநிற ஒளியை வெளிப்படுத்துகின்றன.

          "விப்ரியோ" (Vibrio) என்னும் இனத்தை சேர்ந்த "சிம்பியோடிக்" (Symbiotic) என்னும் பாக்டீரியாக்கள் அதனிடமுள்ள புரதங்களினால் தன்னிச்சையாக ஒளிரும் தன்மையுடையவை. இந்த பாஃடீரியாக்களை சேகரித்து தன் உடலில் மறைத்து வைத்துக்கொண்டு அதிலிருந்து வெளிப்படும் ஒளியை தன்னுடைய உடலிலிருந்து வெளிப்படும் ஒளிபோல் காட்டி நம்மிடம் சீன்போட்டுக்கொண்டு திரியும் மீன் வகைகள் நிறையவே கடலில் உள்ளன. இதற்கு உதாரணமாக ஸ்க்விட்ஆங்லர்ஃபிஷ் மற்றும் டிராகன்ஃபிஷ் முதலியவைகளை குறிப்பிடலாம்.

          "ஸ்க்விட்' என்னும் மீனானது கண்ணாடிபோன்று ஒளி ஊடுருவும் தன் உடல்பகுதிக்குள் நீலம் மற்றும் பச்சை நிற ஒளிகளை உமிழும் "போட்டோபாஃடீரியம்" என்னும் பாஃடீரியாக்களை நிறைத்துக்  கொள்வதின்மூலம் தன்னுடைய உடலையே வண்ணமயமாக மாற்றிக்கொள்கிறது.

          "ஆங்லர்ஃபிஷ்" ( Angler Fish) மற்றும் "டிராகன்ஃபிஷ்" (dragon fish) போன்ற மீனினங்கள் தன் தலைப்பகுதியில் உள்ள தூண்டில் போன்ற உறுப்பின் நுனியிலுள்ள பல்ப் போன்ற ஒளிஊடுருவும் பகுதியில் லைட் காண்பிக்கின்றன. அட ஆச்சரியமாக இருக்கிறதே நம்ம ஊரு மின்மினிப்பூச்சிக்கு பின்னாடி லைட்டு எரியுதுன்னா இதுக்கு முன்னாடி லைட் எரியுதேன்னு ஆச்சரியப்பட்டு அருகில்சென்று பார்த்தால் .. அதன் பிறகுதான் தெரிகிறது இது ஒரு "டுபாகூர்" என்று.

          ஆம்..., இதன் உடலில் எரியும் லைட் உண்மையில் இதனுடைய உடலில் உற்பத்தியாவது இல்லை. இதன் தாடை மற்றும் தலைப்பகுதியிலுள்ள ஆண்டனா போன்ற உறுப்பில் இரண்டு குழாய்கள் உள்ளன. ஒன்றின்வழியாக ஒளிஉமிழும் போட்டோபாஃடீரியம் என்னும் பாஃடீரியத்தை உறிந்து வைத்துக்கொள்கிறது. இதுதான் லைட்டாக ஒளிவீசுகிறது. அதாவது இரவல் லைட். மற்றொரு குழாய்வழியாக இறந்துபோன பாஃடீரியத்தை வெளித்தள்ளிவிடுகிறது. இந்த இரவல் வெளிச்சத்தால் கவரப்பட்டு வரும் சிறியமீன்களை உடனடியாக வறுவலும் போட்டுவிடுகிறது.


Angler Fish

          ஆனால், "ஆட்டோஜெனிக்' என்பது இப்படியான இரவல் வெளிச்சம் இல்லை. இந்த முறையில் ஒளியை உமிழும் விலங்குகள் தன் உடலிலேயே வேதிவினைகளின் மூலம் ஒளியை உற்பத்தி செய்கின்றன. இதற்கு உதாரணமாக நம்முடைய மின்மினி பூச்சியை சொல்லலாம்.


உயிரின ஒளியாற்றல்.

          கடலில் வாழ்கின்ற முதுதுகெலும்புள்ள மற்றும் முதுகெலும்பில்லாத உயிரினங்கள்தான் அதிக அளவில் பயோலுமினென்சென்ஸ் என்று சொல்லப்படும் ஒளியை வெளிப்படுத்துகின்றன.

          பெரும்பாலான கடல் விலங்குகள் குறிப்பாக 1500 வகையான மீனினங்கள் இரைகளை கவர்வதற்கு, தகவல் பரிமாற்றத்திற்கு, எதிரிகளை மிரட்ட மற்றும் எதிரிகளிடமிருந்து தங்களின் உருவங்களை மறைத்துக்கொள்ள பயோலுமினென்சென்ஸ்ஸையே நம்பியுள்ளன.

          கடலில் வாழும் மீன்போன்ற உயிரினங்கள் மட்டுமல்லாது பூஞ்சை தாவரங்களான பாசிகள் முதலானவைகளும் ஒளியை உற்பத்தி செய்கின்றன. மிக சிறிய நுண்ணுயிரிகளான சிலவகை பாஃடீரியாக்களும் கூட பயோலுமினென்சென்ஸ் தன்மை கொண்டவையாக உள்ளன.

          பொதுவாக உப்பு தன்மையுள்ள கடல்நீரில் வாழும் உயிரினங்களே அதிக அளவில் இப்படியான ஒளிகளை உற்பத்திசெய்கின்றன. நன்னீரில் வாழும் உயிரினங்கள் இவ்வாறான ஒளிகளை அதிகம் உற்பத்தி செய்வதில்லை. அதற்கு காரணமும் உள்ளது...

          கடல் மிகவும் அழமானவையாதலால் குறிப்பிட்ட ஆழத்திற்கும் கீழே ... குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் சுமார் 200 மீட்டருக்கும் கீழே  செல்லும்போது சூரியஒளி கிடைக்காததால் நாள் முழுவதும் கும்மிருட்டாகவே இருக்கும். எனவே அவ்வாறான இடங்களில் இரையை வேட்டையாட, எதிரிகளை எதிர்கொள்ள, சக இனங்களுடன் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள ஒளி மிகமிக அவசியம் என்பதால் படிப்படியான பரிணாம வளர்ச்சியின் காரணமாக ஒளியை உற்பத்திசெய்யும் திறமையை அவைகள் பெற்றுவிட்டன.

          ஆனால்... குளம், குட்டை, ஆறு முதலிய நன்னீர் நிலைகள் ஆழம்  குறைவாகவே இருப்பதாலும் போதிய அளவு சூரிய வெளிச்சம் கிடைப்பதாலும் நன்னீரில் வாழும் உயிரினங்களுக்கு ஒளியை உருவாக்கவேண்டிய அவசியம் இல்லாமல்போனது.

          தற்போது நியூஸிலாந்திலுள்ள ஆழமான நன்னீர் நீரோடைகளில் வசிக்கும் "லாட்டியா நெரிடோயிட்ஸ்" என்னும் நத்தை மட்டுமே ஒளியை உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டுள்ளது. இது தன் எதிரிகளை திசைதிருப்ப ஒளிரும் கழிவுகளை வெளியிடுவதை கண்டறிந்துள்ளனர்.

          இந்த மாதிரியான உயிரினங்களின் உடல் ஒளிகள் நமக்கு ஆச்சரியத்தை தந்தாலும் சம்பந்தப்பட்ட உயிரினங்களுக்கு இதுவே முக்கிய வாழ்வாதாரமாக  விளங்குகின்றன. இந்த ஒளியை பலவிதங்களுக்கும் அவைகள் பயன்படுத்துகின்றன. தங்களுக்கான இரைகளை கவர்வதற்கு மட்டுமல்லாது தங்களுடைய ஜோடிகளை கவர்வதற்காகவும், எதிரிகளை அச்சுறுத்துவதற்காகவும், தங்கள் இனங்களுடனான தகவல் பரிமாற்றங்களுக்கும் இதனையே பயன்படுத்துகின்றன.

          சிலவகை தாவரங்கள் தங்களுடைய இனத்தை பெருக்குவதற்கான வித்துக்களை தொலைதூரங்களுக்கு பரப்பவும் இந்த ஒளியையே நம்பியிருக்கின்றன.

          பொதுவாக இந்த பயோலுமினென்சென்ஸ் உயிரினங்களானது பெரும்பாலும் இருவிதமான ஒளிகளை பிரதிபலிக்கின்றன. அவைகளில் ஒன்று நீலம் கலந்த ஊதா. மற்றொன்று மஞ்சள் கலந்த பச்சை. இவைகள் வெளியிடும் ஒளியின் தன்மையை பொறுத்து எதற்காக இவைகள் இதை பயன்டுத்துகின்றன என்பதனை எளிதில் கண்டறிந்துவிடலாம்.

          பொதுவாக நீலம் கலந்த ஊதா பூச்சிகளை கவரும் தன்மையுடையது.

          எனவேதான் ஈ பிடிக்கும் இயந்திரத்தில் (electric insect killer) ஊதா ஒளிகளை உமிழும் விளக்குகளையும் (ultraviolet - UV), கொசு பிடிக்கும் இயந்திரத்தில் (Mosquito Killer) நீல நிற ஒளிகளை உமிழும் விளக்குகளையும் பயன்படுத்துவதை நீங்கள் பார்க்கலாம். இதற்கு காரணம் நீலம் மற்றும் ஊதா நிறங்கள் பூச்சிகளை கவர்ந்திழுக்கும் தன்மையுடையன என்பதால்தான்.

          எனவே, நீலம், ஊதா ஆகிய ஒளிகளை எந்த உயிரினம் வெளியிடுகிறதோ அவைகளெல்லாம் பூச்சிகளை கவர்ந்திழுத்து இரையாக்கி கொள்வதற்காக இதனை பயன்படுத்துகின்றன என கொள்ளலாம்.


electric insect killer

          அதுபோல பச்சை நிற ஒளிகள் பூக்களிலுள்ள மகரந்தங்களையும் தேன்களையும் விரும்பியுண்ணும் சில குறிப்பிட்ட வகையான பூச்சிகளை கவரும் தன்மையுடையன.

          நிலப்பரப்பில் வளரும் காளான்களில் 70 வகையான காளான்கள் ஒளிரும் தன்மையுடையன. இவைகள் 520-630 nano meter அலைநீளத்தில் பச்சைநிற ஒளியை வெளியிடுகின்றன. இவை மின்மினி பூச்சியைப்போல் விட்டு விட்டு ஒளியை உமிழாமல் தொடர்ச்சியாக ஒளியை உமிழ்கின்றன. இந்த ஒளியால் கவரப்படும் பூச்சிகள் இதன்மேல் உட்கார பூச்சிகளின் மேல் இதிலுள்ள மைக்ரோ ரக விதைகள் ஒட்டிக்கொள்ள இதன்மூலம் இதன் விதைகள் தொலை தூரங்களுக்கு பரப்பப்படுகின்றன. இதன்மூலம் தொலைதூரங்களுக்கு தன்னுடைய விதைகளை பரப்பும் தன் நோக்கத்தை இக்காளான்கள் பச்சை ஒளிகளின்மூலம் செவ்வனே நிறைவேற்றிக்கொள்கின்றன.

          இந்த காளான்களைப்போல கடலிலுள்ள "அலிவிப்ரியோ பிஷ்ஷேரி"  (Aliivibrio fischeri) என்னும் பாசி இனமும் பச்சை நிறத்தில் ஒளிரும் தன்மையுடையன.

          மஞ்சள் நிறமானது பாலுணர்ச்சியை தூண்டும் தன்மையுடையன ஆதலால் பச்சை நிறத்துடன் மஞ்சளும் கலந்து ஒளிவீசும் உயிரினங்கள் தங்களுக்கான இரைகளை கவர்வதற்கு மட்டுமல்லாது கூடுதலாக தங்கள் இணையை கவர்வதற்காகவும் இதனை பயன்படுத்திக்கொள்கிறது என்பதனை எளிதாக புரிந்துகொள்ளலாம். இதற்கு உதாரணமாக மின்மினி பூச்சி, glow worms மற்றும் பலவிதமான வண்டினங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

          சிலமீன்கள் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க அவைகளின் முன்னால் ஒளிரும் தன்மையுள்ள திரவத்தை வாய்வழியாக உமிழ்கின்றன. இந்த திடீர் ஒளியைக்கண்டு எதிரிகள் திகைத்து நிற்க இவைகள் எளிதாக தப்பிவிடுகின்றன.

ஒளியின் பயன்பாடு.

          இந்த ஒளியை பயன்படுத்தும் உயிரினங்களுக்கு இந்த ஒளியானது எந்தவகையிலெல்லாம் பயன்படுகிறது என்பதனை பார்ப்போம்.

 1. தன்னுடைய எதிரிகளை பயமுறுத்த அல்லது அவைகளின் கவனத்தை  திசைதிருப்ப அல்லது ஒளிக்குப்பின்னால் தன் உடலை மறைத்துக்கொள்ள  பயன்படுத்துகிறது.
 2. வெளிச்சத்தால் ஈர்க்கப்படும் சிறியரக மீன்கள், வண்டுகள், பூச்சிகளை கவர்ந்திழுத்து இரையாக்கிக்கொள்ள பயன்படுத்துகிறது.
 3. தனக்கு பொருத்தமான துணையை கவருவதற்காகவும் இதனை பயன்படுத்துகின்றன.
 4. தன்னுடைய இனங்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காகவும் பயன்படுத்துகின்றன.
 5. காளான் போன்ற சிலவகை தாவரங்கள் தன்னுடைய விதைகளை தொலைதூரங்களுக்கு பரப்பவும் இந்த ஒளியை உற்பத்தி செய்கின்றன.

          உலகில் இதுவரையில் சுமார் 71 வகை காளான்கள் ஒளியை உற்பத்தி செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

          சரி, இனி "பயோலுமினென்சென்ஸ்" என்னும் இவ்வொளிகளை உற்பத்தி செய்யும் சில உயிரினங்களைப்பற்றிய விபரங்களை பார்ப்போம்.


பாஃடீரியாக்கள்.

 • விப்ரியோ பிஷ்ஷெரி (Vibrio fischeri).
 • விப்ரியோ ஹார்வி (Vibrio harveyi).
 • ஃபோட்டோபாக்டீரியம் பாஸ்போரியம் (அ) விப்ரியோ பாஸ்போரியம்.
 • ஷெவனெல்லா ஹனடாய் (Shewanella hanedai).
 • ஷெவனெல்லா வூடி (shewanella woodyi).

நீர்வாழ்வன.

 • ஸ்க்விட்.
 • பயோலுமினென்சென்ஸ் ஆக்டோபஸ்.
 • சால்ப்ஸ்.
 • ஆங்கிலர்ஃபிஷ்.
 • கேட்ஷார்க் (catshark).
 • குக்கீக்குட்டர் சுறா (Cookiecutter shark).
 • குல்பர் ஈல் (Gulper eel).
 • Lantern fish.
 • மரைன் ஹட்செட்ஃபிஷ் (Marine hatchet fish).
 • பினெகோன் ஃபிஷ் (Pinecone fish).
 • மிட்ஷிப்மேன் ஃபிஷ் (Midshipman fish).
 • வைப்பர் ஃபிஷ் (Viper fish).
 • பிளாக் டிராகன் ஃபிஷ். (Black dragon fish).
 • ரெனிலா ரெனிஃபார்மிஸ் (Renilla reniformis).
 • பவளம் (Coral).

ஒளி உமிழும் ஜெல்லி மீன்கள்.

 • அக்வோரியா விக்டோரியா (அ) கிறிஸ்டல் ஜெல்லி (Aequorea victoria).
 • செட்டோனோபோரா (Ctenophores).
 • பெலஜியா நொக்டிலுகா (Pelagia noctiluca).

          இதுமட்டுமல்லாமல் ஆழ்கடலில் வசிக்கும் பெரும்பான்மையான ஜெல்லிமீன் இனங்கள் பயோலுமினென்சென்ஸ் தன்மை கொண்டதாகவே உள்ளன.


நட்சத்திர மீன்கள்.

 • ஓபியூரிடா (Ophiurida).
 • ஆம்பியுரா ஃபிலிஃபார்மிஸ் (Amphiura filiformis).
 • ஓபியோப்சிலா அரேனியா (Ophiopsila aranea).
 • ஓபியோப்சிலா கலிஃபோர்னிகா (Ophiopsila californica)
 • ஆம்பிஃபோலிஸ் ஸ்குவாமாட்டா (Amphipholis squamata).

இறால் மீன்கள்.

 • ஆஸ்ட்ராகோட்ஸ் (Ostracods).
 • கோபேபோட்ஸ் (Copepods).
 • கிரில் (krill).

நத்தை இனங்கள்.

 • குவாண்டூலா ஸ்ட்ரைட்டா (Quantula striata).
 • லாட்டியா (latia).
 • கிளாம் (clams).
 • நுடிபிரான்ச் (nudibranchs).
 • ஹினியாபிரேசிலியானா (Hinea brasiliana).

ஆக்டோபஸ் போன்ற தலைகாலிகள். 

 • பொலிடெனிடே (Bolitaenidae).
 • செபியோலிடா (Sepiolida).
 • மாஸ்டிகோடூதிடே (Mastigoteuthidae).
 • ஃ பயர்ஃபிளை ஸ்க்விட் (Firefly squid).
 • Colossal Squid.

நுண்ணுயிரிகள்.

 • நொக்டிலுகா சிண்டிலன்ஸ் (Noctiluca scintillans).
 • பைரோடினியம் பஹாமென்ஸ் (Pyrodinium bahamense).
 • பைரோசிஸ்டிஸ் பியூசிஃபார்மிஸ் (Pyrocystis fusiformis).
 • லிங்குலோடினியம் பாலிட்ரா (Lingulodinium polyedrum).

தாவரங்கள்.

 • காளான்கள்.

          காளான்கள் ஒன்றல்ல இரண்டல்ல 70 க்கும் மேற்பட்ட இனங்களுக்கு ஒளி உமிழும்தன்மை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


வண்டுகள்.

 • மின்மினி பூச்சி (fireflies).
 • பைரோபோரினி (pyrophorini).
 • பால்கஸ் (Balgus).
 • காம்பிலோக்செனஸ் (Campyloxenus).
 • பைரோ போரஸ்.
 • டீலிலேட்டர்.

ஒளி உமிழும் புழுக்கள்.

 • glow worms.
 • railroad worms
 • அன்னெலிட் (Annelids).
 • ஸ்பேடெல்லா செபலோப்டெரா (Spadella cephaloptera).
 • டோமோப்டெரிஸ் ஹெல்கோலாண்டிகா (Tomopteris helgolandica).
 • சைட்டோக்நாத்ஸின் (Chaetognaths).

ஊர்வன.

 • சென்டிபீட்ஸ்.
 • மோட்டிக்ஸியா (Motyxia).

கணுக்காலிகள், பூச்சிகள்.

 • ஒருசில கணுக்காலிகள்.
 • மைசெட்டோபிலிடே ஈ (Mycetophilidae).

பாஃடீரியாக்களின் உதவியால் ஒளிர்பவை.

          கடலில் வாழும் பல மீன்கள் ஒளி உமிழும் பாஃடீரியாக்களை தன் உடலில் சேமித்து வைத்துக்கொண்டு அதிலிருந்து வெளிப்படும் ஒளியை இரைகளை கவர பயன்படுத்துகின்றன. அவைகளில் முக்கியமானவைகள்.

 • ஆங்கிலர்ஃபிஷ் (Anglerfish).
 • டிராகன்ஃபிஷ் (Dragon fish).

          இவைகள் இரண்டைத்தவிர மேலும் பல மீனினங்கள் பாஃடீரிய ஒளிகளை திறம்பட பயன்படுத்தி தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்  கொள்கின்றன.

          மேற்குறிப்பிட்டுள்ள உயிரினங்கள் மட்டுமல்லாது இன்னும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் தங்களுடைய வாழ்க்கையின் சில அடிப்படைத் தேவைகளுக்காக "பயோலுமினென்சென்ஸ்" என்னும் உயிரொளியையே முக்கிய துருப்புசீட்டாக பயன்படுத்திவருகின்றன. இனிவரும் பதிவுகளில் "பயோலுமினென்சென்ஸ்" உயிரினங்களைப்பற்றி தனித்தனியாக விரிவாக பார்க்கலாம். நன்றி!கருத்துரையிடுக

4 கருத்துகள்

 1. ஒவ்வொரு தகவலுக்கும் வியக்க வைக்கின்றன...

  அவற்றை படிப்படியாக தரும் விளக்கம் அற்புதம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் நண்பரே ! தங்களின் வருகைக்கும், எண்ணத்தின் வண்ணங்களுக்கும் நன்றி !!

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.