"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
மின்மினிப்பூச்சி - Fireflies and their subfamilies.

மின்மினிப்பூச்சி - Fireflies and their subfamilies.

மின்மினிப் பூச்சி.

[Part - 2]

மின்மினியைப்பற்றி நீங்கள் நிறையவே தெரிந்து வைத்திருப்பீர்கள். என்றாலும் நீங்கள் இதுவரை தெரிந்துகொள்ளாத பல விஷயங்களும் இருக்கலாம் அல்லவா!!!. அதையும் தெரிந்துகொள்ளும் பொருட்டு மின்மினிப் பூச்சியைப்பற்றி ஓரளவிற்கு முழுமையாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.


"மின்மினிப்பூச்சி - Fireflies and their subfamilies." என்னும் இப்பதிவானது நாம் அன்றாடம் பார்க்கும் மின்மினி பூச்சிகளைப்பற்றியது. இது இரண்டாவது பகுதி.

இப்பதிவின் முதல் பகுதியாகிய "மின்மினிப்பூச்சி - Fireflies and their Species and Bioluminescence." என்னும் பகுதியில் மின்மினிப் பூச்சியைப்பற்றிய அடிப்படை விஷயங்கள், பயோலூமினஸென்ஸ், மின்மினியின் பேரினங்களைப்பற்றிய குறிப்புகள் மற்றும் சிற்றினங்களைப் பற்றிய விபரங்கள் பலவும் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாகிய "மின்மினிப்பூச்சி - Fireflies and their subfamilies." என்னும் இப்பதிவில் மின்மினி பூச்சிகளின் பலவிதமான துணை குடும்பங்களைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்ள இருக்கிறோம்.. தொடருங்கள்...

இத்தொடரின் முதல்பகுதியை படிக்க கீழேயுள்ள லிங்க் ஐ கிளிக்குங்க 

>>> மின்மினிப்பூச்சி - Fireflies and their Species and Bioluminescence <<<

    துணைக்குடும்பம்.

    மின்மினி பூச்சியில் 2000 க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் இருப்பது நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். அவை அனைத்தையும் அதன் தன்மைகளை பொறுத்து கீழேயுள்ள 5 முக்கிய துணைக்குடும்பங்களாக வகைப்படுத்தியுள்ளனர்.

    1. லம்பிரிடினே - Lampyrinae.
    2. ஃபோட்டூரினா - Photurinnae.
    3. லூசியோலினா - Luciolinae.
    4. சைபோனோசெரினா - Cyphonocerinae.
    5. ஓட்டோடெட்ரினே - Ototetrinae.

    இந்த 5 துணைக்குடும்பங்களின் தன்மைதனை தனித்தனியாக விரிவாக பார்க்கலாம்.

    லம்பிரிடினே - Lampyrinae.

    இத்துணைக்குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்துவகை சிற்றினங்களும் ஒளிர்வதில்லை. என்றாலும் பிற பண்புகளை அடிப்படையாகக்  கொண்டு இவைகளை ஒரே துணை குடும்பத்தின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த துணைக்குடும்பத்திலுள்ள மின்மினி இனங்களை,...

    • க்ராடோமார்பினி (Cratomorphini),
    • ஃபாஸிஸ் (Phausis),
    • பிளோட்டோமினி (Pleotomini),
    • லம்பிரினி (Lampyrini),
    • லாம்ப்ரோசெரினி (Lamprocerini)

    என பல துணைக்குழுக்களாக பிரிக்கின்றனர். இவைகளை தனித்தனியாக பார்ப்போம் வாருங்கள்...

    க்ராடோமார்பினி - Cratomorphini.

    இந்த "க்ராடோமார்பினி" குழுவிலுள்ள முக்கியமான இனம் "பைராக்டோமினா" (Pyractomena). இதனை தமிழில் "தீப்பொறி ஆறுமுகம்" என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    இந்த இனம் சாதாரண மின்மினிப்பூச்சி உருவாக்கும் மஞ்சள் - பச்சை ஒளியை உற்பத்தி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக மஞ்சள் - அரக்கு அதாவது மஞ்சளும், பழுப்புசிவப்பு கலந்த நிறமான அரக்கு நிறத்தை கொண்ட ஒளியை உற்பத்தி செய்கின்றன. இது பார்ப்பதற்கு அச்சுஅசலாக ஒரு "தீப்பொறி" பறப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

    Pyractomena

    ஃபாஸிஸ் - Phausis.

    இந்த ஃபாஸிஸ் குழுவிலுள்ள முக்கியமான சிற்றினம் "ஃபாஸிஸ் ரெட்டிகுலட்டா" (Phausis reticulata).

    தென்கிழக்கு அமெரிக்கா முழுவதுமாக பரவலாக காணப்படும் இதற்கு இன்னொரு பெயரும் இருக்குங்க. அதுவும் "ஃபாஸிஸ் ரெட்டிகுலட்டா"தான் என்று காமெடி கீமெடியெல்லாம் பண்ணப்போவதில்லை... உண்மையில் இதனுடைய இன்னொரு பெயர் என்னதெரியுமா?..

    "நீல பிசாசு" (blue ghost).

    அம்மாடியோவ்... பெயரே ரொம்ப டெர்ரரா இருக்கேன்னு பாக்குறீங்களா.. வேறொண்ணும் இல்லீங்க.. இது பசுமை கலந்த நீலநிற ஒளியுடன் இரவில்  ஆக்ரோஷமாக வலம் வருவதால் இந்த பெயர்.

    blue ghost

    இதன் ஆண் இனத்திற்கு இறக்கைகள் உள்ளன. எனவே இவைகள் பறக்கும். ஆனால் பெண் இனத்திற்கு இறக்கைகள் இல்லை. எனவே இவைகளால் பறக்கமுடிவதில்லை.

    மேலும் பெண் இனங்கள் உடலமைப்பில் ஆண் இனத்திலிருந்து கொஞ்சம் மாறுபட்டே காணப்படுகின்றன. பெண்ணின் உடல் வெண்மை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ளன.

    இந்த ஃபாஸிஸ் இன மின்மினிப்பூச்சி பற்றியும் அதன் குணநலன் மற்றும்  தன்மைகளைப்பற்றியும் இன்னும் முழுமையாக ஆராய்ச்சி எதுவும்  செய்யப்படவில்லை. எனவே கூடுதல் தகவல்கள் எதுவும் தற்போது நமக்கு கிடைக்கவில்லை.

    பிளோட்டோமினி - Pleotomini.

    "பிளோட்டோமஸ்" ரக மின்மினி பூச்சிகள் இந்த பிளோட்டோமினி குழுவின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. "ப்ளீட்டோமஸ் பாலென்ஸ்" (Pleotomus Pallens) மற்றும் "பிளோட்டோமஸ் நிக்ரிகன்" (Pleotomus nigricans) ஆகிய இரு இனங்களும் தென்மேற்கு அமெரிக்காவை வலம் வருகின்றன. இவைகள்  மெக்ஸிகோவிலும் காணப்படுகின்றன. இதன் லார்வாக்களும் இரவு முழுவதும் அவ்வப்போது ஒளிர்கின்றன.

    Pleotomus larva


    லம்பிரினி - Lampyrini.

    "மைக்ரோஃபோட்டஸ்" (Microphotus) ரக மின்மினி பூச்சிகள் இந்த லம்பிரினி  குழுவின்கீழ் வகைப்படுத்தப்படுகின்றன.

    இது தென் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ பகுதிகளில் இரவில் நட்சத்திரங்களுக்கு போட்டியாக வலம் வரும் சிறிய இனமாகும். இந்த இனத்தில் ஆண்களுக்கு மட்டுமே இறக்கைகள் உள்ளன. பெண்களுக்கு இறக்கைகள் இல்லை. எனவே இவை பார்ப்பதற்கு லார்வாக்களைப்போலவே தோற்றமளிக்கின்றன.


    Microphotus

    இந்த இனம் பிற மின்மினி பூச்சிகளைப்போல் வலுவான ஒளியை வெளியிடுவதில்லை. விரலுக்கேற்ற வீக்கம் என்பதுபோல தன் தகுதிக்கேற்ற  நடுத்தரமான ஒளியை உற்பத்தி செய்கின்றன.


    லாம்ப்ரோசெரினி - Lamprocerini.

    "டெனாஸ்பிஸ்" (Tenaspis) ரக மின்மினி பூச்சிகள் இந்த லாம்ப்ரோசெரினி  குழுவின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. இவை மற்ற மின்மினி பூச்சிகளைவிட அளவில் பெரியவை. பருமனானவை. காண்பதற்கு அரிதானவையும் கூட. அதனால் இதனுடைய "லார்வா" எவ்வாறு இருக்கும் என இதுவரையில் அறியப்படவில்லை.

    "டெனாஸ்பிஸ் ஆங்குலரிஸ்" (Tenaspis angularis) என அழைக்கப்படும் இது அமெரிக்காவின் வளைகுடா நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.

    Tenaspis angularis

    💢💢💢💢

    ஃபோட்டூரினா - Photurinnae.

    ஐந்து முக்கிய துணைக்குடும்பங்களில் இது இரண்டாவது துணைக்குடும்பம்.

    1. ஃபோட்டினஸ் பைரலிஸ் (Photinus Pyralis).
    2. ஃபோட்டினஸ் கரோலினஸ் (Photinus Carolinus).
    3. ஃபோட்டினஸ் டிமிஸ்ஸிஸ் (Photinus Dimissis).
    4. ஃபோட்டினஸ் டெக்சனஸ் (Photinus Texanus).
    5. ஃபோட்டினஸ் ஸ்டெல்லாரிஸ் (Photinus Stellaris).
    6. ஃபோட்டினஸ் கான்சிசஸ் (Photinus Concisus).
    7. ஃபோட்டூரிஸ் (Photuris).
    8. பைராக்டோமினா (Pyractomena).

    என இதில் இன்னும் பலவகையான சிற்றினங்கள் உள்ளன. இதில்...

    ஃபோட்டினஸ்மஞ்சள் மற்றும் பச்சை கலந்த ஒளியை உருவாக்குகின்றன.

    ஃபோட்டூரிஸ் - அடர்த்தியான பச்சைநிற ஒளியை உருவாக்குகின்றன.

    பைராக்டோமினா - மஞ்சள் நிற ஒளியை உருவாக்குகின்றன.

    இவைகளில் "ஃபோட்டினஸ் டிமிஸ்ஸிஸ்" - 5.7 மி.மீ. அளவுகொண்ட சிறியரக மின்மினி பூச்சி.

    இதில் "ஃபோட்டினஸ் கான்சிசஸ்" என்னும் இனம் 9.3 மி.மீ - 12.5 மி.மீ அளவு கொண்டது.

    மேலும் "ஃபோட்டூரினா" துணைக்குடும்பத்திலுள்ள அத்தனை சிற்றினங்களும் மிகவும் ஆபத்தானவை. நமக்கு அல்ல பிற இன மின்மினி பூச்சிகளுக்கு.

    "ஃபோட்டினஸ்" இனத்தை சேர்ந்த பெண்பூச்சிகள் ஆண் பூச்சிகளைப்போல் பறப்பதில்லை. அதுமட்டுமல்லாது இவைகள் சிறிய மின்மினிப்பூச்சிகளை பிடித்து உண்பதுமுண்டு. அதுமட்டுமல்ல சிலநேரங்களில் தன்னோடு உறவுகொள்ளும் ஆண் மின்மினிப்பூச்சிகளைக்கூட உறவு முடிந்தவுடன் "நல்லா இருந்திச்சுல்ல... இனி அப்படியே செத்துப்போ" என்று சொல்லிக்கொண்டே செட்டி நாட்டு சிக்கன் பிரியாணி ரேஞ்சுக்கு மிச்சம் வைக்காமல் தின்று தீர்ப்பதுமுண்டு.

    இதைவிட ஆபத்தானவை "ஃபோட்டூரிஸ்" (Photuris) ரக  மின்மினிப்பூச்சிகள். இவைகள் அளவில் கொஞ்சம் பெரியவை. சில பூச்சிகள் அதிகப்படியாக 1 அங்குலம் நீளம்கூட இருப்பதுண்டு. ஃபோட்டினஸ் ஐ விட இது மிகவும் ஆபத்தானவை. 


    Photuris firefly.

    ஆம், ஒவ்வொரு வேறுபட்ட இனத்தை சேர்ந்த மின்மினிப்பூச்சிகளுக்கும் "மினுக்" "மினுக்" என அணைந்து அணைந்து எரியும் ஒளியின் காலஅளவு ஒன்றுபோல இருப்பதில்லை. வித்தியாசப்படுகின்றன என முன்பே பார்த்துள்ளோம்.

    ஒரு இனத்தைப்போல மற்றொரு இனத்தால் அச்சுஅசலாக "பிளாஷ்" அடிப்பதென்பது முடியாத காரியம். இந்த கால இடைவெளியை வைத்துதான்  தன் இனத்தை இவைகள் எளிதாக இனம் கண்டறிகின்றன.

    ஆனால், இந்த சிஸ்டம் சரி இல்லையோ என்று நாம் சந்தேகப்படுமளவிற்கு "ஃபோட்டூரிஸ்" இதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன.

    தன் காதலியை தேடி கலர்கலர் கனவுகளோடு ஆசையாக பறந்துவரும் ஆண் மின்மினி பூச்சியை நோக்கி அதன் காதலியைப்போலவே அது எந்த இன மின்மினியாக இருந்தாலும்சரி அதைப்போலவே அச்சுஅசலாக பிளாஷ் அடித்து மிமிக்கிரி செய்வதில் இவர் வல்லவர்.

    ஃபோட்டூரிஸின் இந்த சிக்னலை உண்மையென்று நம்பி ஏமாறும் ஆண்  மின்மினி பூச்சிகள் ஆசையாக மில்லியன் கணக்கான கனவுகளோடு இதன் அருகில் வர சிக்கிட்டாண்டா சிக்கன்65 என ஒரே தாவலாக தாவி.. அதன் முதுகில் அமர்ந்துகொண்டு... அதனை பறக்க முடியாமல் செய்து.. அப்புறமென்ன... ஃபோட்டூரிஸ்ற்கு தேவையான மிட் நைட் மெனு ரெடி.

    எனவேதான் இவைகளை கொலைகார "ஃபெம்ஃபேடேல்" மின்மினி பூச்சிகள் என அழைக்கின்றனர்.

    (ஃபெம்ஃபேடேல் - என்பது ஒரு நாவலின் பெண் கதாபாத்திரம்.   ஆண்களை கொடூரமாக கொல்லும் ஒரு பெண்ணின் பெயர்).

    இந்த ஃபோட்டூரிஸில் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 17 வகையான இனங்கள் உள்ளன. அத்தனையுமே கொலைகார படுபாவிகள்தான்.

    லூசியோலினா - Luciolinae.

    மின்மினி பூச்சிகளின் மிகப்பெரிய துணைக்குடும்பம் இதுவே ஆகும். சும்மா சொல்லக்கூடாது உண்மையிலேயே ராயல் பேமிலிதான். ஏனெனில் ஆசியா, ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா முழுவதும் இக்குடும்பத்தை சேர்ந்த இனங்கள் பரவி காணப்படுகின்றன.

    இக்குடும்பத்திலுள்ள அத்தனை சிற்றினங்களுமே மனதைக்கவரும் பிளாஷ் லைட்டுகளை ஒளிரச்செய்பவை. இத்துணைக்குடும்பத்திலுள்ள இனங்களை இரு குழுக்களாக பிரிக்கின்றனர். அவை..

    • பெரோப்டிக்ஸ்.
    • லூசியோலா.

    என்ற தனித்தனி குழுக்களின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன.

    பெரோப்டிக்ஸ் - Peroptyx.

    ஆசியாவின் வெப்பமண்டல பகுதிகளில் இவைகள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. கண்ணைப்பறிக்கும் மஞ்சள் கலந்த பச்சைநிற ஒளிகளை வெளியிடுவதில் சிறப்பானவை.

    லூசியோலா - Luciola.

    இவைகள் ஜப்பானில் அதிகம் காணப்படுவதால் "ஜப்பானிய மின்மினி பூச்சி" என அழைக்கப்படுகின்றன. ஆண், பெண் இரு இனங்களுக்குமே இறக்கைகள் உள்ளன.

    இறந்த தங்கள் முன்னோர்களின் ஆன்மாக்களே லூசியோலாவாக வலம் வருகின்றன என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை. எனவே இவைகளுக்கு அமாவாசை தினங்களில் விழா எடுத்து கொண்டாடுகின்றனர்.

    இவைகள் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா மற்றும் தெற்கு ஐரோப்பியாவரை பரவலாகக் காணக்கிடைக்கின்றன. இந்த லூசியோலா குழுவில் "லூசியோலா லூசிடானிகா",  "லூசியோலா அன்சி",  "லூசியோலா ப்ரூஸ்டா" என 50 க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. இவைகளைப்பற்றி அடுத்தடுத்து வரும் பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்.

    Luciola lusitanica

    லூசியோலா லூசிடானிகா என்ற சிற்றினத்தில் ஆண் பூச்சிகளுக்கு மட்டுமே பறக்கும் தன்மை உள்ளது. பெண் பூச்சிகள் பறப்பதில்லை. போர்த்துக்கீசிய மின்மினிப்பூச்சி என அழைக்கப்படும் இவைகள் அதிக முட்டைகளை இட்டு தன் இனத்தை பெருக்குவதில் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றன.

    சைபோனோசெரினா - Cyphonocerinae.

    இத்துணைக்குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள சிற்றினங்கள் அனைத்துமே மிகப்பழமையானதாகக் கருதப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் இவைகள் பரவலாக காணப்படுகின்றன.

    இக்குடும்பத்திலுள்ள "பொல்லாக்லாஸிஸ்" இனமானது மிக குறைந்த அளவு ஒளியையே உற்பத்தி செய்கின்றன. இன்னும் இக்குடும்பத்திலுள்ள ஒருசில வகையான இனங்கள் மட்டுமே ஒளிர்கின்றன. பலவகையான இனங்கள் ஒளியை உற்பத்தி செய்யும் திறனை முற்றிலுமாக இழந்து நிற்கின்றன. எனவேதான் இந்த துணைக்குடும்பத்தை மின்மினிபூச்சி இனத்துடன் இணைப்பதற்கு பல விஞ்ஞானிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

    இத்துணைக்குடும்பத்திலுள்ள பழமையான "பொல்லாக்லாஸிஸ் பிஃபாரியா" (Pollaclasis bifaria) இனத்தை சேர்ந்த ஆண் மின்மினிப்பூச்சியை கீழே உள்ள படத்தில் காணலாம்.


    Pollaclasis bifaria

    ஓட்டோடெட்ரினே - Ototretinae.

    இத்துணைக்குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள சிற்றினங்கள் அனைத்துமே மிக மிக பழமையானதாக கருதப்படுகின்றன. இவ்வினங்களை மின்மினி பூச்சிகளின் இனங்களோடு சேர்க்கவேண்டுமா என விஞ்ஞானிகள் அதிகமாகவே விவாதிக்கின்றனர்.

    Ototretinae

    ஏனெனில், மின்மினிகளின் பிற குணாதிசயங்கள் இவைகளுக்கு  இருந்தாலும்கூட இந்த துணைக்குடும்பத்திலுள்ள எந்த சிற்றினங்களுமே மின்மினி பூச்சியைப்போன்று ஒளியினை உற்பத்தி செய்வதில்லை. அதுமட்டுமே காரணமல்ல உடலமைப்பிலும் சிறிது வேறுபடுகின்றன. இவ்வினங்கள் ரஷ்யா மற்றும் வட அமெரிக்காவில்தான் அதிகமாக வாழ்கின்றன.

    பளபளப்பு புழுக்கள்.

    மின்மினி பூச்சிகளை நீங்கள் ஏற்கனவே நிறைய பார்த்திருக்கலாம். அல்லது நிறையவே கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் மின்மினி பூச்சியோடு தொடர்புள்ள பளபளப்பு புழுக்களைப்பற்றி (ஒளிரும் புழுக்கள்) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் வாருங்கள் அதையும் பார்த்துவிடலாம்..

    Glow worm.

    மின்மினி பூச்சிகளைப்பற்றிய பேச்சு எழுந்தாலே அங்கு "Glow worm" என்று சொல்லக்கூடிய பளபளப்பு புழுக்களைப்பற்றிய விவாதமும் எழுவது இயற்கையே.

    இங்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம் அதாவது இந்த "பளபளப்பு புழு" (ஒளிரும் புழுக்கள்) என்று சொல்லப்படும் இனமும், "மின்மினிப்பூச்சி" என்று சொல்லப்படும் இனமும் ஒன்றுதானா என்பதே...

    உங்களுக்கான பதில்..

    இரண்டுமே ஒன்றுதான்.

    Firefly - Glow worm

    ஆனால் மின்மினி பூச்சிகள் மட்டுமே "glow worm" என்ற லிஸ்ட்டுக்குள் அடங்குவது இல்லை. புழு போன்ற அமைப்புடன் எந்தெந்த உயிரினமெல்லாம் பளபளப்பான ஒளியை உற்பத்திசெய்து அதன்மூலம் பளபளக்கிறதோ அதுவெல்லாம் "பளபளப்பு புழுக்கள்" (Glow worm) என அழைக்கப்படுகின்றன.

    புழுக்கள் ஒளியை உற்பத்திசெய்தால் அவைகளை பளபளப்பு புழுக்கள் என்று அழைக்கலாம்தான். ஆனால் பறக்கும் வடிவில் இருக்கும் மின்மினி பூச்சிகள் ஏன் பளபளப்பு புழுக்கள் என அழைக்கப்படுகின்றன என கேட்கிறீர்களா?அதற்கு காரணமும் இருக்கின்றன.

    மின்மினி பூச்சிகளில் சில இனங்களில் மட்டுமே ஆண் மற்றும் பெண் பூச்சிகள் பறக்கும் தன்மையுடன் இருக்கின்றன. இன்னும் சில இனங்களில் பெண் பூச்சிகளுக்கு இறக்கைகள் இருந்தாலும் கூட ஆண் இனத்தைப்போல் அதிக உயரம் பறப்பதில்லை.

    ஆனால், இதே மின்மினி பூச்சியில் இன்னும் பல சிற்றினங்கள் உள்ளன. அவைகளில் பெண்களுக்கு பறப்பதற்கான இறக்கைகளே கிடையாது. எனவே இவைகள் பார்ப்பதற்கு லார்வாக்கள் போன்ற தோற்றத்தில்தான் இருக்கின்றன. ஆனால் இவைகள் உண்மையில் லார்வாக்கள் அல்ல. வளர்ந்த பூச்சிகள்தான். ஆனால் இதற்கு ஆண் பூச்சிகளுக்கு இருப்பதுபோல் இறக்கைகள் இல்லாததாலும் புழு போன்ற தோற்றத்தில் பளபளப்பான ஒளியை உற்பத்தி செய்வதாலும் இதனை "பளபளப்பு புழுக்கள்" என்கின்றனர்.

    firefly love

    சில நேரங்களில் மின்மினி பூச்சிகளின் லார்வாக்களையும் பளபளப்பு புழுக்கள் என அழைப்பதுண்டு. ஏனெனில் புழு வடிவில் இருக்கும் இந்த லார்வாக்களின் உடலிலும் ஒளி வீசுகின்றன.

    ஏற்கனவே சொன்னதுபோல இந்த பளபளப்பு புழுக்களின் லிஸ்ட்டில் மின்மினி பூச்சிகள் மட்டுமே இடம்பெறுவதில்லை. மின்மினி பூச்சிக்கு சம்பந்தமே இல்லாத வேறுசில புழுக்களும் பளபளப்பான ஒளியை உற்பத்திசெய்வதால் அவைகளும் இந்த பளபளப்பு புழுக்களின் லிஸ்ட்டில் இடம்பிடிக்கின்றன. அதில் ஒன்று "ரயில் பாதை புழு" என்று அழைக்கப்படும் "railroad worm".

    railroad worm

    வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் இந்த 'railroad worm' பரவலாக காணப்படுகின்றன. வளர்ச்சியடைந்த புழுக்கள் மற்றும் இதன் லார்வாக்கள் உடலில் ஒளியை உற்பத்தி செய்கின்றன.

    உடலின் ஒவ்வொரு கணுக்களிலும் பச்சை நிற ஒளியையும், அதன் தலைப்பகுதியில் சிவப்பு நிற ஒளியையும் வெளியிடுகின்றன. இரவு முழுக்க பச்சைநிற ஒளியை வெளியிடும் இது ஏதாவது ஆபத்து வந்தாலோ அல்லது யாராவது இதற்கு தொந்தரவு செய்தாலோ அந்த வேளைகளில் மட்டும் எதிரிகளை எச்சரிக்கும் விதமாக தலைப்பகுதியில் சிவப்புநிற ஒளியை வெளியிடுகின்றன.

    இதைப்போல மற்றொரு புழுவும் பளபளப்பு புழு லிஸ்ட்டில் உள்ளன. அது நியூசிலாந்து குகைகளில் வாழும் "அராச்னோகாம்பா லுமினோசா" (Arachnocampa luminosa) என்னும் ஒரு வகை புழு.

    இது தன்னுடைய உடலிலிருந்து சிலந்திவலை போன்ற ஒரு நூலை உற்பத்தி செய்கின்றன. அந்த வலையில் தன் உடலில் உற்பத்தியாகும் சளி போன்று துளித்துளியாய் ஒட்டும் திரவத்தை பதித்து குகைகளில் தொங்கவிடுகின்றன. அதன்மீது தன் உடலிலிருந்து வெளிப்படும் மெல்லிய வெளிர் பச்சை நிறமான ஒளியை பாய்ச்ச பசைத்துளிகள் ஒளிபட்டு மணிமணியாக மின்னுகின்றன.

    இத்தனை முன்னேற்பாடுகளையும் செய்துவைத்துக்கொண்டு "அராச்னோகாம்பா லுமினோசா" என்னும் இப்புழு "ஐ ஆம் வெயிட்டிங்" என காத்திருக்கின்றன. இந்த ஒளியால் கவரப்பட்டுவரும் பூச்சிகள் இந்த பசை போன்ற திரவத்தில் ஒட்டிக்கொள்ள. நம்ம கைப்புள்ளைக்கு அன்றைக்கு தேவையான "சில்லி பக்கோடா" ரெடி.

    Arachnocampa luminosa

    சரி, இப்பதிவில் மின்மினி பூச்சியின் துணை குடும்பங்களைப்பற்றி தெரிந்துகொண்ட நாம் தொடர்ந்து அடுத்துவரும் "மின்மினிப்பூச்சி - The nature of Fireflies and their life cycle" என்னும் மூன்றாவது பகுதியில் மின்மினி பூச்சிகளின் தன்மை மற்றும் அதன் வாழ்க்கை சுழற்சி பற்றிய கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்வோம். தொடருங்கள்...

    இப்பதிவின் தொடர்ச்சியாகிய 3 வது பகுதியை படிக்க கீழேயுள்ள லிங்க் ஐ கிளிக்குங்க..

    >> மின்மினிப்பூச்சி - The nature of Fireflies and their life cycle <<

    👼👼👼👼👼👼

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    2 கருத்துகள்

    1. பதில்கள்
      1. வருக நண்பரே! ...
        ஆம் ... உண்மையே ... பிரமிப்பை அதிகரிக்க இன்னும் நிறைய வர இருக்கின்றன ... நன்றி !!!

        நீக்கு

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.