முன் கழுத்து கழலை - கண்டக் கழலை - Goiter.

Goiter.

''மிகினும் குறையினும் நோய் செய்யும்''  என்ற முதுமொழிக்கேற்பவும், ''அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு'' என்ற பொன்மொழிக்கேற்பவும் நம்  உடலுக்கு ஊட்டமும், உறுதியும் விளைவிக்கும் அனைத்து சத்துக்களுமே உடலுக்கு தேவைப்படும் அளவைவிட அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அது தீமையை விளைவிக்கும் என்பதனை முதலில் நினைவில் கொள்ளுங்கள்.


முன் கழுத்து கழலை.

உதாரணமாக, ஒருவருக்கு கண்டக்கழலை என்னும் ''முன் கழுத்து கழலை நோய்'' (Goiter) வந்துள்ளது என்றால் உடனே சாதாரணமாக எல்லோரும் பரவலாக சொல்வதுபோல அவருக்கு ''அயோடின்'' பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வந்து நீங்களாகவே திடீர் மருத்துவராக உருமாறி உணவில் அயோடின் அளவை அதிகரித்து சிகிச்சையை ஆரம்பித்து விடாதீர்கள்.

ஏனெனில், உடலில் அயோடின் சத்து குறைவால் முன் கழுத்து கழலை நோய் வருகிறது என்பது நாம் அறிந்ததே. ஆனால் உடலில் அயோடின் சத்தின் அளவு அதிகரித்தால்கூட முன் கழுத்து கழலை நோய் வரும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

அதே வேளையில் ''செலீனியம்'' என்னும் தாது சத்து குறைவினாலும் ''சயனைடு'' தன்மை அதிகமுள்ள சில உணவு வகைகளை தொடர்ந்து உண்டு வருவதாலும் இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எதனால் முன் கழுத்து கழலை நோய் வந்துள்ளது என்பதனை மருத்துவப் பூர்வமாக பரிசோதித்து அறிந்து அதன் பின் அயோடின் கலந்த உணவை எடுத்துக்கொள்வதா அல்லது குறைத்துக்கொள்வதா என முடிவு செய்யவும்.

அதற்குமுன் முதலில் அது முன் கழுத்துக் கழலை நோய்தானா என்பதனை பரிசோதித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சிலவேளைகளில் முன் கழுத்துக் கழலை என நீங்கள் நினைப்பது சாதாரண ''நீர் கட்டி'' யாக கூட இருக்கலாம். அல்லது தைராய்டு கேன்சராகவோ அல்லது உயிரை காவு வாங்கும் உணவுக்குழாய் கேன்சர் (புற்றுநோய் ) நோயாக கூட இருக்கலாம். எனவே மருத்துவ பரிசோதனை அவசியம். சுய மருத்துவம் ஆபத்தை விளைவிக்கலாம்.

thyroid goiter.

சரி, இந்த முன் கழுத்து கழலை நோய் [Goiter] ஏன் வருகிறது என்று பார்ப்போம்.

கண்டக் கழலை.

நம் உடலில் பல நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் ஒவ்வொன்றும் நம் உடலில் பல பணிகளை பொறுப்பேற்று நடத்துகின்றன.

நம் கழுத்துப்பகுதியில் ஒரு சுரப்பி உள்ளது. அதன் பெயர் ''தைராய்டு''. இது ''தைராக்சின்'' என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன் நம் உடலின் வளர்ச்சிக்கும், வளர்ச்சிதை மாற்றத்திற்கும், நோய்கள் எதுவும் அண்டாமல் உடலை தற்காத்துக்கொள்வதிலும் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

இந்த ஹார்மோனில் இருவகையான பொருள்கள் உள்ளன. அவை ''டைரோசின்'' என்னும் அமினோஅமிலம், மற்றும் ''அயோடின்''.

அயோடின்.

உடல் வளர்ச்சியை தூண்டும் இந்த ஹார்மோனில் அடிப்படை பொருளாக அயோடின் உள்ளதால் இந்த சுரப்பி நன்கு ஆரோக்கியமாக இயங்க வேண்டுமெனில் நம் உணவில் போதிய அளவில் அயோடின் என்னும் தாது சத்து அவசியம்.

Thyroid  - iodized salt

நமக்கு அன்றாடம் வயதிற்கேற்ப 50 மைக்ரோ கிராம் முதல் 150 மைக்ரோ கிராம் வரை அயோடின் தேவைப்படுகிறது.

நாம் உண்ணும் உணவில் போதிய அளவில் அயோடின் இல்லாமல் போனால் உடலில் அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டு தைராய்டு சுரப்பியின் இயக்கத்தில் தடை ஏற்பட்டு தைராய்டு வீக்கம் கொள்ளும். இதனையே "முன் கழுத்து கழலை" என்கிறோம் .

உடலில் அயோடின் குறைந்தால் முன் கழுத்து கழலை நோய் வருவதுடன் மூளை வளர்ச்சியையும் பாதிக்கும்.

கருவுற்ற பெண்களுக்கு தினந்தோறும் 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவை. இதில் ஏதாவது குறைவு நேர்ந்தால் கரு சிதைவு ஏற்படும். பிறக்கும் குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி இருக்காது. அறிவுத்திறன் மற்றும் கற்றல் திறனை வெகு அளவில் பாதிக்கும்.

இந்த அயோடின் கிடைப்பதற்கு மிக அரிதான பொருள் என்றாலும் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்புகளில் எளிதாக கிடைக்கிறது. மேலும் கடலிலிருந்து கிடைக்கும் கடல் உணவுகளான மீன், நண்டு, நத்தை போன்ற கடல்வாழ் உயிரினங்களிலும் கடல் தாவரங்களிலும் நிறைய உள்ளன.

100 கிராம் காய்கறி, மாமிசம் அல்லது முட்டையில் 25 மைக்ரோ கிராம் அளவில் அயோடின் சத்து உள்ளது.

உணவில் அயோடின் பற்றாக்குறையை போக்குவதற்காகவே நம்முடைய அரசாங்கம் அயோடின் கலந்த Iodized salt ஐ வாங்கி உணவில் பயன்படுத்த பரிந்துரைக்கிறது.

இதில் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ளவும். உணவில் அயோடின் சத்து குறைவதால் '' முன் கழுத்து கழலை'' (Goiter). நோய் வருவதில்லை. கழுத்துப் பகுதியிலுள்ள ''தைராய்டு'' என்னும் சுரப்பி வேலை நிறுத்தம் செய்வதாலேயே சம்பந்தப்பட்ட உறுப்புகளில் வீக்கம் ஏற்பட்டு ''முன் கழுத்து கழலை'' நோய் ஏற்படுகிறது.

இந்த தைராய்டு சுரப்பி பழுதில்லாமல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமெனில் சரியான அளவில் உணவில் அயோடின் இருக்கவேண்டியது அவசியம்.

உடலில் அயோடின் சத்து குறைந்தால் தைராய்டின் இயக்கத்தில் தடை ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் அதே வேளையில் நான் முன்பு சொன்னதுபோல உடலில் அயோடின் அளவு அதிகரித்தால் கூட தைராய்டு சுரப்பியின் இயக்கத்தில் தடை ஏற்பட்டு முன் கழுத்துக் கழலை நோய் ஏற்படலாம். அல்லது இந்நோய் ஏற்பட வேறு சில காரணங்களும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Goitre doctor

எனவே, நீங்களாகவே சுயபரிசோதனையில் ஈடுபடாமல் முறையான மருத்துவப்பரிசோதனை செய்து நோய்க்கான சரியான காரணத்தை கண்டறிந்து முறையான சிகிச்சை மேற்கொண்டால் கடினமான உடல் பிரச்சனைகளிலிருந்து எளிதாக விடுபடலாம். நன்றி!.

💢💢💢💢

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...


கருத்துரையிடுக

4 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.