"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
சோற்றுக்கற்றாழை - Indian Aloes - Aloe Vera - Sothu kathalai.

சோற்றுக்கற்றாழை - Indian Aloes - Aloe Vera - Sothu kathalai.

 சோற்றுக்கற்றாழை.

[Part - 3].

நாம் அனைவரும் அறிந்த அதேவேளையில் பெரும்பான்மையான வீடுகளில் வளர்க்கப்பட்டுவரும் ஒரு மூலிகை செடி சோற்றுக்கற்றாழை எனலாம்.


இதை பயிரிடும் முறை பற்றி முன்பே இரு பகுதிகளில் பார்த்தோம். அந்த வரிசையில் இது மூன்றாவது பகுதி. முதல் இரு பகுதிகளையும் படிக்க கீழே உள்ள "லிங்க்" ஐ கிளிக் செய்யவும்.

சோற்றுக்கற்றாழை - Sothu kathalai - Indian Aloes - Aloe Vera - Part 1.

சோற்றுக்கற்றாழை - Sothu kathalai - Indian Aloes - Aloe Vera - part 2.

இந்த பகுதியில் கற்றாழையை முறையாக பயன்படுத்தும் விதத்தையும், இதை பயன்படுத்துவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மை தீமைகளையும் பற்றி  ஆராய இருக்கிறோம்.

Indian Aloes.

கற்றாழையின் வேர் முதற்கொண்டு அனைத்துப்பகுதிகளும் மருத்துவத்திற்கு பயன்படுதப்பட்டு வருகிறது. உடல் சூடு, வறட்டு இருமல், பசியின்மை மற்றும் மலச்சிக்கல் முதலியவைகளுக்கு சிறந்த பலனளிப்பதாக இது விளங்குகிறது.

இதில் உடலுக்கு தேவையான 20 ற்கும் மேற்பட்ட அமினோஅமிலங்கள் இருப்பதுடன் பலவித வைட்டமின் தாதுஉப்புக்களும் உள்ளன. என்றாலும் இதனை அளவறிந்து முறையாக பயன்படுத்தவேண்டியது மிக அவசியம். ஏனெனில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சில இரசாயன மூலக்கூறுகளும் இதில் உள்ளன.

பொதுவாக சோற்றுக்கற்றாழை தோல்களில் ஏற்படும் சில பாதிப்புகளுக்கு வெளிப்பூச்சாக உபயோகிக்க மட்டுமே மிகவும் ஏற்றது எனலாம்.

கற்றாழை ஜெல்லில் உள்ள "அலோனின்" (Aloin) என்னும் வேதிப்பொருள் உடலின் உள்ளுறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையுடையதாதலால் தேவைப்படும் பட்சத்தில் மட்டும் மிக குறைந்த அளவில் உள்ளுக்குள்  பயன்படுத்தி வருவது உத்தமம். 

எனவே, இதனை ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸைப்போல உணவாக பயன்படுத்தாமல் சில தனிப்பட்ட நோய்களுக்காக மட்டும் மிக குறைந்த அளவில் குறைந்த நாட்கள் மட்டுமே சாப்பிடவேண்டும் என சித்தர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு ஒருதடவை 1 கிராம் அளவு எடுத்துக்கொள்வதே சரியான அளவுமுறை எனலாம். இதற்கும் கூடுதலாக எடுத்துக்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்.

ஒன்றை நீங்கள் இங்கு புரிந்துகொள்ள வேண்டும் சோற்றுக்கற்றாழை என்பது வெள்ளரிக்காயை போல பசிதீர்க்கும் உணவுப்பொருள் அல்ல. மருந்துப்பொருள். அதுவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நஞ்சு மூலக்கூறுகளை குறைந்த அளவில் கொண்ட ஒரு மூலிகை என்பதனை  கவனத்தில் வைத்திருங்கள்.

கற்றாழை சிறந்த மருத்துவத்தன்மை கொண்ட மூலிகை என்றாலும் இதில் நச்சுத்தன்மையும் அடங்கியுள்ளது என்பதனை கவனத்தில் கொண்டே பயன்படுத்துவதற்குமுன் இதனை ஏழு தடவை நன்கு கழுவி பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.

அவ்வாறு 7 முதல் 10 தடவை கழுவினால்தான் கசப்புத்தன்மை, கற்றாழை வாசம் மற்றும் நச்சுத்தன்மையும் நீங்கி சாப்பிடுவதற்கு உகந்ததாக மாறும். அவ்வாறு பல தடவை கழுவினாலும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள் முழுமையாக அகலுவதில்லை.

இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் உணவுப்பொருளான கீரைகள் போன்ற மூலிகைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்கூட இந்த சோற்றுக்கற்றாழைக்கு சித்தர்கள் கொடுக்கவில்லை என்பதனை புரிந்துகொள்ளுங்கள்.

சமூக வலைத்தளங்கள்மூலம் இதனுடைய தீமைகள் அனைத்தும் முற்றிலுமாக மறைக்கப்பட்டு நன்மைகள் மட்டும் ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டுவிட்டன. அவ்வளவுதான்.

எனவே, இதனை தேவைப்பட்டால் மட்டும் மருந்தாக பயன்படுத்துவதை விட்டுவிட்டு பசிதீர்க்கும் உணவுப்பொருளாக நினைத்துக்கொண்டு அளவிற்கு அதிகமாக சாப்பிடும் பட்சத்தில் அது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.

எனவே இது பெரும்பாலும் வெளிப்பூச்சுகளுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. வெளிப்பூச்சாக பயன்படுத்தும்போது பெரிய அளவில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

ஆனால், வெளிப்பூச்சாக பயன்படுத்தும்போது கூட சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். அப்படியானவர்கள் இதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கற்றாழை மர பால்.

கற்றாழைகளின் இலைகளை ஒடிக்கும்போது ஒடித்த பகுதியிலிருந்து மஞ்சள் நிறமான திரவம் வெளிப்படும். இதனை  "கற்றாழைமர பால்" என அழைக்கின்றனர்.

இந்த திரவத்தை ஒரு நாளைக்கு 1 கிராம் என்ற விகிதத்தில் பலநாட்கள் தொடர்ந்து சாப்பிட நேர்ந்தால் அது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல புற்றுநோய்களை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களையும் இது கொண்டுள்ளது.

இதனை சேகரித்து உலர்த்தி காயவைத்து பெறப்படும் பொருளையே   கரியபோளம், கரியபவளம் அல்லது "மூசாம்பரம்" என சித்தமருத்துவத்தில் அழைக்கிறார்கள். இது சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இருவகையான மூசாம்பரம் கடைகளில் விற்கப்படுகின்றன. லேசான கருமை கலந்த பிரவுண் நிறத்தில் இருப்பது வெளிப்பூச்சுக்காகவும். கருமை நிறத்தில் இருப்பது உள்ளுக்கு சாப்பிடும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சுளுக்கு, அடிபட்ட வீக்கம், சதை முறிவு, நரம்பு பிறழ்வு இவைகளுக்கு வெந்நீரில் மூசாம்பரத்தை பொடித்துப்போட்டு குழம்புபதத்தில் சூட்டொடு பூசினால் குணமாகும்.

வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்க குறைந்த அளவில் உள்ளுக்குள் கொடுக்கப்படுகிறது. ஆனால் இது சில நேரங்களில் உடல் நலத்திற்கு பேராபத்தை விளைவிக்கலாம்.

கர்ப்பிணிகள் இதை உள்ளுக்குள் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படுவதுடன் தாயின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே இதனை உள்மருந்தாக பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

சோற்றுக்கற்றாழை வேர்.

கற்றாழை வேரும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை வேர்களை சிறு துண்டுகளாக நறுக்கி நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு மண்பானையில் 2 லிட்டர் பசும்பால் விட்டு பானையின் வாய் பகுதியில் ஒரு துணியை குழிவாக கட்டி அதன்மேல் மேற்படி கற்றாழை வேர் பொடிகளை கொட்டி மேல்சட்டி மூடி பால் பாதியாக சுண்டும் அளவிற்கு எரிக்கவும். அதன்பின் பொடிகளை எடுத்து நிழலில் நன்கு உலர்த்தி பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

இதனை பாலுடன் தினமும் 1 டீஸ்பூன் பொடி கலந்து சாப்பிட்டுவர ஆண்மை பலமடையுமாம்.

aloe vera root

கற்றாழை ஜெல்.

இன்று உடல் சூட்டை தணிக்க கற்றாழை ஜெல் சாப்பிடும் பழக்கம் பரவலாக இருந்து வருகிறது. இதனை அளவறிந்து சாப்பிடுதல் அவசியம்.

மேலும் இதனை அப்படியே சாப்பிடுதல் கூடாது. கண்டிப்பாக சுத்தி செய்த பின்பே சாப்பிடவேண்டும். இல்லையெனில் இதிலுள்ள "அலோனின்" (Aloin) மற்றும் "லேடெக்ஸ்" என்னும் வேதிப்பொருட்கள் உடலின் உள்ளுறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையுடையதாதலால் வயிற்றில் எரிச்சல், தசைப்பிடிப்பு, சோர்வு முதலியன ஏற்படலாம்.

இதை சாப்பிடுவதற்கு முன்னால் முறையாக சுத்தி செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தி செய்வதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்கள் அகற்றப்படுகின்றன.

இனி இதனை எவ்வாறு சுத்தி செய்வது என்பதனை பார்ப்போம்.

சோற்றுக்கற்றாழை சுத்தி.

முதலில் நன்கு பருத்த சதைப்பிடிப்பான கற்றாழை மடலை கொண்டுவந்து துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். அப்போது அதிலிருந்து மஞ்சள் நிறமான திரவம் வெளிப்படும். இது உடலுக்கு தீங்கு விளைவிப்பது. எனவே அது முற்றிலுமாக நீங்கும்படி நன்கு கழுவி எடுக்கவும். பின் ஒவ்வொரு துண்டாக எடுத்து மேல்தோலை சீவி கழிக்கவும்.

சோற்றுக்கற்றாழையில் இருக்கும் மஞ்சள் நிறமான திரவம் விஷத்தன்மை வாய்ந்தது. உடலின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பது. எனவே கற்றாழை ஜெல் - ஐ உணவாக பயன்படுத்துவதற்கு முன்னால் அதில் உள்ள மஞ்சள் நிறமான திரவம் முற்றிலும் நீங்கும் வண்ணம் 7 முதல் 10 தடவை தூய நீரில் நன்றாக அழுத்தி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். 

ஒவ்வொரு தடவை கழுவும்போதும் பழைய நீரை வெளியே கொட்டிவிட்டு புதிய நீரை பயன்படுத்தவும். இவ்வாறு கழுவி சுத்தம் செய்தபின் தூய பனிக்கட்டி போல் வெண்மையான தோற்றத்தில் கிடைக்கும் ஜெல்லையே உள்ளுக்குள் சாப்பிட பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு சுத்தம் செய்யாமல் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படுவதுடன் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். இவ்வாறு சுத்தம் செய்யாமல் அப்படியே சாப்பிட்டால் கற்றாழையில் உள்ள வழவழப்பான மஞ்சள் மற்றும் வெண்மை நிற நீர் மலக்கழிச்சல் மற்றும் வயிற்றில் எரிச்சலை உண்டுபண்ணுவதோடு உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் ஊறுவிளைவிக்கும் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

இவ்வாறு சுத்தம் செய்தபின் இதனை 1 முதல் 2 மணி நேரத்திற்குள்ளாக பயன்படுத்த வேண்டியது முக்கியம். நேரம் செல்லச்செல்ல இது கெட்டுப்போகும் வாய்ப்பு அதிகம்.

கற்றாழையால் ஏற்படும் நன்மைகள்.

இந்த ஜெல்லில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் வாத நோய்களையும், மூட்டு வீக்கத்தையும் குறைக்கிறது.

உங்கள் செல்களில் நைட்டிரிக் ஆக்ஸைடு மற்றும் சைட்டோக்கீன்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்துகிறது.

காற்றாழை ஜெல்லில் நிறைந்துள்ள வைட்டமின் A , வைட்டமின் E, பீடா கேரோடீன் போன்ற ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் உங்கள் தோலை ஓரளவில் பராமரிக்கிறது.

இதில் "ஆக்சின்" மற்றும் "ஜிப்பர்லின்" சத்துக்கள் இருப்பதால் முகப்பரு முதலியவைகளை நீக்குவதோடு சருமத்தை பாதுகாக்கும். ஆனால் சிலருக்கு இது சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தலாம். அப்படியானவர்கள் உடனடியாக இதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தீராத வறட்டு இருமல் உள்ளவர்கள் கற்றாழை ஜூஸுடன் பனங்கற்கண்டு அல்லது பனை வெல்லம் கலந்து அருந்த வறட்டு இருமல் போயேபோச்சு.

ஒரு சிறிய துண்டை மோரில் போட்டு கடைந்து குடிக்க உடல் சூடு நீங்கும். மோருக்கு பதிலாக 1 டீஸ்பூன் இஞ்சி சாறு கலந்து குடித்து வாருங்கள் உடலிலுள்ள கொழுப்பெல்லாம் கரையும், மலச்சிக்கல் நீங்குவதோடு பித்தமும் குறையும்.

கற்றாழை ஜெல்லும் நல்லெண்ணெயும் சம அளவு எடுத்து மண்சட்டியிலிட்டு சிறு தீயில் பதமுற காய்ச்சி நன்றாக ஆறியபின் பாட்டிலில் சேகரித்து வைத்துகொண்டு தினந்தோறும் தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறியபின் குளித்துவர உடல் சூடு தணியும்.

மேலும் இந்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி முடிவளர்ச்சிக்கான தைலம் தயாரிக்கப்படுகிறது. இதை எவ்வாறு தயாரிப்பது என்பதனை பார்ப்போம்.

குமரி தைலம்.

கற்றாழை ஜெல் - 1கப்.

நயம் தேங்காய் எண்ணெய் - 200 மில்லி .

வெந்தயம் - 2 ஸ்பூன்

கருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்.

கற்றாழை ஜெல் - ஐ சிறிது நீர்விட்டு மிக்சியில் அடித்து எடுத்துக்கொள்ளவும்.

தேங்காய்யெண்ணையை அடுப்பிலேற்றி சிறுதீயால் சூடுபடுத்தவும். பின்பு இதனுடன் அரைத்த கற்றாழை ஜூஸ் ஐ சேர்த்து கிளறவும். பின் இதனுடன் வெந்தயம், கருஞ்சீரகம் சேர்த்து கிளறவும். வெந்தயம், சீரகம் நன்கு பொரிந்தவுடன் (கருக கூடாது) இறக்கவும். நன்கு அறியபின்பு வடிகட்டி  பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

வாரம் இரண்டு அல்லது மூன்று தடவை மட்டும் தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறியபின் குளித்துவர முடி உதிர்வது நீங்கி முடி நன்கு அடர்த்தியாக வளரும்.

இதுவரை முறையாக கற்றாழையை பயன்படுத்தினால் கற்றாழையால் ஏற்படும் நன்மைகளை பார்த்தோம். இனி முறைதவறி பயன்படுத்தும் பட்சத்தில் அதனால் உடலுக்கு ஏற்படும் தீமைகளை பார்ப்போம்.

கற்றாழையால் ஏற்படும் தீமைகள்.

கற்றாழை ஜெல் அனைவருக்கும் ஒத்துப்போகும் என்று சொல்வதற்கில்லை. சிலபேருக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே இது உங்கள் உடலுக்கு ஒத்துப்போகிறதா அல்லது எதாவது பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதனை நன்கு கவனித்து அதன்பிறகு உபயோகப்படுத்தவும்.

கற்றாழை பெரும்பாலும் வெளிப்பூச்சுக்கான மருந்தே ஒழிய உள்ளுக்குள் சாப்பிடக்கூடிய பொருள் அல்ல. அப்படி சாப்பிட வேண்டுமெனில் ஒரு நாளைக்கு அதிகப்படியாக 15 மில்லி அளவே சாப்பிடவேண்டும். அதுவும் தொடர்ந்து 1 மாதத்திற்குமேல் சாப்பிடுதல் கூடாது. இதற்கு மேலும் சாப்பிட வேண்டுமெனில் 2 மாதம் இடைவெளிவிட்டு அதன்பின் ஒருமாதம் சாப்பிடலாம். 

தொடர்ந்து சாப்பிட்டாலோ அல்லது அதிக அளவில் சாப்பிட்டாலோ வயிற்றுவலி, டயரியா ஏற்படலாம். மேலும் தசைகளின் வலிமையும் குறையும்.

கற்றாழையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் அழகு க்ரீம், பாடிலோஷன், சோப்பு முதலியவைகளை பயன்படுத்தும்போது சிலருக்கு தோலில் அரிப்பு, வீக்கம், சிவந்துபோதல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால் உங்களின் உடலுக்கு இது அலர்ஜி ஒத்துக்கொள்ளாது என்பதனை புரிந்துகொண்டு ஒதுக்கிவிடவும்.

அதேபோல் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவுவதால் சிலருக்கு தோலில் எரிச்சல் உண்டாகும். இப்படியான பிரச்சனை உள்ளவர்கள் இதனை பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். மீறி தொடர்ந்து பயன்படுத்தினால் தோல்கள் தடித்துவிடும் வாய்ப்பு உள்ளது.

நம் உடலுக்கு இது ஒத்துக்கொள்ளவில்லையே என்று நீங்கள் கவலைகொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினாலும் உங்கள் உடலில் ஒன்றும் பெரிய  மாற்றம் வந்துவிடப்போவதில்லை. மேற்கண்ட பொருட்களை தொடர்ந்து பயன்படுத்திவந்தவர்கள் அதனால் "சிவப்பழகு" பெற்றதாக வரலாற்று குறிப்பு எதுவும் இல்லை. எனவே வருந்தற்க.

கற்றாழை ஜெல் அல்லது கற்றாழையில் தயாரிக்கப்படும் ஜூஸ் உடலுக்கு நன்மைதான் என்றாலும் அளவிற்கு அதிகமாக சாப்பிடும் பட்சத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

சில குறிப்பிட்ட நோய்களுக்காக தொடர்ந்து ஆங்கில மருந்து சாப்பிட்டு வருபவர்கள் கற்றாழை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கற்றாழையில் காணப்படும் "லாக்கேசி" என்னும் உட்பொருள் குடலுறிஞ்சிகளின் செயல்பாட்டை மந்தப்படுத்துகிறது. இதனால் மாத்திரைகள் சரியாக ஜீரணிக்கப்படாமல் மருந்து மாத்திரைகள் உடலில் வேலை செய்வதை பல நேரங்களில் தடுத்துவிடுகிறது.

சில குறிப்பிட்ட உடல் பிரச்னை உள்ளவர்கள் இதனை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இரத்தம் உறைதல் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து மேற்படி நோய்க்கு மருந்து சாப்பிட்டு வந்தால் கற்றாழை ஜெல்லையோ அல்லது கற்றாழை ஜூஸையோ சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஏனெனில், கற்றாழை ஜூஸானது குடித்த சிறிது நேரத்திற்குள் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை தீடீரென குறைக்கும் என்பதால் ஏற்கனவே தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு பன்மடங்கு குறைந்து அதனால் தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

அதுபோல ரத்தம் உறைதல் பிரச்சனை உள்ளவர்கள் அதற்காக தொடர்ந்து மருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் கற்றாழையை கண்டிப்பாக அருந்துதல் கூடாது. 

ஏனெனில், கற்றாழை இரத்தத்தை நீர்த்துப்போக செய்யும் தன்மை கொண்டது. இரத்தம் உறைதலை தடுக்கும் மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வரும் இவர்களின் இரத்தம் மாத்திரையின் தன்மையால் ஏற்கனவே கொஞ்சம் நீர்த்து போய்தான் இருக்கும். இது போதாதென்று இவர்கள் கற்றாழை ஜூஸீம் சாப்பிட்டால் மேலும் இரத்தம் அதிக அளவில் நீர்ம நிலையை அடைய அது உடல் வீக்கம் மற்றும் அதிக இரத்தப்போக்கையும் ஏற்படுத்திவிடும். எனவே இப்படியானவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கற்றாழை சாப்பிடுவது அதிக ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

aloe vera indian aloes

கர்ப்பிணி பெண்கள் இதனை அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கருப்பையில் அதிக அளவில் சுருக்கங்களை ஏற்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. இதனை தொடர்ந்து அருந்தினால் கருப்பையில் அதிக அளவில் சுருக்கங்களை ஏற்படுத்தி பிரசவத்தை சிக்கலாக்கிவிடும் ஆபத்து உள்ளது. இதனால் கருச்சிதைவும் ஏற்படலாம்.

மேலும் கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்லாது, பாலூட்டும் தாய்மார்கள், அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள், அல்லது வேறு ஏதாவது நோய்க்கு பலமாதங்களாக தொடர்ந்து ஆங்கில மருந்து சாப்பிட்டுவருபவர்கள் கற்றாழை ஜூஸ் அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

12 வயதிற்கும் குறைவான குழந்தைகள் தொடர்ந்து கற்றாழை ஜூஸ் அருந்துதல் கூடாதென மருத்துவ அறிக்கை அறிவுறுத்துகிறது.

சிறு குழந்தைகளுக்கு தொடர்ந்து கற்றாழை சாறு கொடுப்பது தற்போது பாதிப்பு எதுவும் இல்லைபோல் தென்பட்டாலும் பிற்காலத்தில் அவர்களுக்கு கிட்னி பாதிப்பை ஏற்படுத்தலாம். அதிக அளவு தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஓரிரு வருடங்களில் நீரழிவு நோயையும் ஏற்படுத்தலாம்.

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும்போது கற்றாழை ஜூஸ் குடித்தால் வயிற்றுபோக்கு பிரச்சனை அதிகரிக்கும். இதனால் வயிற்று கடுப்பு, உடல் சோர்வு ஏற்படலாம். எனவே வயிற்றில் பிரச்சனை உள்ளவர்கள் ஜூஸ் அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதுபோல சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களும் இதனை அருந்துதல் கூடாது.

நம் உடலுக்கு பொட்டாசியம் சத்து மிகமிக அவசியம். ஆனால் தினம்தினம் கற்றாழை ஜூஸ் குடிக்கும் பட்சத்தில் ரத்தத்திலுள்ள பொட்டாசியத்தின் அளவு குறையும். இதனால் உடல்சோர்வு ஏற்படலாம். மேலும் தூக்கமின்மை பிரச்சனையையும் ஏற்படுத்துகின்றன.

எனவே கற்றாழையின் நன்மைகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அதிலுள்ள சில தீமைகளையும் கருத்தில் கொண்டு நோய்தீர்க்கும் மூலிகைகளை தேவைப்படும் பட்சத்தில் அவைகளை நோய்தீர்க்கும் மருந்தாக மட்டும் பயன்படுத்துவோம். மாறாக பசிதீர்க்கும் விருந்தாகவோ அல்லது தாகம் தீர்க்கும் பானமாகவோ பயன்படுத்துவதை தவிர்ப்போம்.

💢💢💢💢

இந்த பதிவின் முதல் பகுதியை [PART 1] படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க...


🌵🌵🌵🌵🌵🌵🌵

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

 1. நீங்கள் சொன்ன தைலத்தை செய்து பார்க்கிறோம்... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், தங்களின் கருத்தைப் பதிவு செய்தமைக்கும் நன்றி நண்பரே!!

   நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.