"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
சர்வாங்காசனம் - Sarvangasana.

சர்வாங்காசனம் - Sarvangasana.

சர்வாங்காசனம்.

சர்வ + அங்க + ஆசனம் = சர்வாங்காசனம்.

"சர்வம்" என்றால் சகலமும் என்று பொருள்.

"அங்கம்" என்பது உடல் பாகங்களை அதாவது உடல் உறுப்புகளைக் குறிக்கும்.

"ஆசனம்" என்றால் ஒரு நிலையில் உடலை அமரவைப்பது என்று பொருள்படும்.


"சர்வாங்காசனம்" (Sarvangasana) என்றால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் மேம்படும்படி அமரும் பயிற்சி முறை என்று பொருள்.

இந்த ஒரேயொரு பயிற்சியே உங்கள் மொத்த உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

உங்களுக்கு இப்போது ஒரு சந்தேகம் ஏற்படலாம். ஒரேயொரு தனிப்பட்ட பயிற்சியானது எப்படி அனைத்து உடல் அவயங்களையும் மேம்படுத்தும் என்பதுதான் அது.

இதனை புரிந்து கொள்ள வேண்டுமெனில் நம் உடலின் உள் மற்றும் வெளி உறுப்புகளின் செயல்பாடுகளைப்பற்றி அறிந்துகொள்வது அவசியம்.

இவ்வுடல் தொடர்ந்து உயிர்வாழ்வதற்கு நீர், காற்று, உணவு அவசியம் என்றாலும் உடலின் அனைத்து உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் முக்கிய பங்காற்றுபவை உடலிலுள்ள சுரப்பிகள் (Glands) எனலாம்.

உடலிலுள்ள சுரப்பிகளை இருவகையாக பிரிக்கலாம். அவை "நாளமுள்ள சுரப்பிகள்" (Exocrine gland) மற்றும் "நாளமில்லா சுரப்பிகள்" (Ductless glands or Endocrine glands).

நாளமுள்ள சுரப்பிகள் ''என்சைம்'' (enzyme) என்று சொல்லப்படும் நொதிகளை சுரக்கின்றன. இந்த நொதிகளை குழாய் போன்ற நாளங்கள் வழியாக தேவைப்படும் உடல் பாகங்களுக்கு அனுப்புகின்றன. எனவே இவைகளை நாளமுள்ள சுரப்பிகள் என்கின்றோம்.

ஆனால் நாளமில்லா சுரப்பிகளோ ''ஹார்மோன்'' (Hormone) என்னும் திரவங்களை சுரக்கின்றன.

ஹார்மோன்கள் என்பது வேதிப்பொருட்களைக் கொண்ட நீர்ம நிலையிலுள்ள புரதங்கள் (Protein) அல்லது ஸ்டீராய்டுகள் (Steroid).

நாளமில்லா சுரப்பிகள் என்பவை நாளமுள்ள சுரப்பிகளைப் போல் நாளங்களின் மூலமாக ஹார்மோன்களை கடத்தாமல் நேரடியாகவே இரத்தத்தில் ஹார்மோன்களை கலக்கச் செய்து விரைவாக உடலை செயல்பட வைக்கின்றன.

மனித உடலிலுள்ள நாளமில்லா சுரப்பிகளாவன :-

  • பிட்யூட்டரி (ஹைப்போபைஸிஸ்).
  • பினியல் (Pineal ).
  • தைராய்டு.
  • பாரா தைராய்டு.
  • தைமஸ்.
  • அட்ரீனல் சுரப்பி (கார்டெக்ஸ் மற்றும் மெடுல்லா).
  • கணையம் (அ ) பான்கிரியாஸ் (லாங்கர் ஹான் திட்டுகள்).
  • இனப்பெருக்க சுரப்பிகள் (விந்தகம் மற்றும் அண்டச் சுரப்பிகள்).

இதில் கணையம் என்னும் சுரப்பியே அளவில் பெரியது என்றாலும்  நாளமுள்ள சுரப்பியின் பண்புகளையும் நாளமில்லாத சுரப்பியின் பண்புகளையும் ஒருங்கே பெற்றுள்ளதாதலால் இது "இரட்டைப்பண்பு சுரப்பி" என்னும் விசேஷ பெயரால் அழைக்கப்படுகிறது.

மேலும் நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் திரவங்களானது வெறும் நோய்களை தீர்ப்பது மட்டுமல்லாமல் உடலின் அன்றாட வளர்ச்சி, வளர்ச்சிதை மாற்றம் முதலிய அனைத்து அனிச்சை விஷயங்களையும் நாளமில்லா சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்களே தீர்மானிக்கின்றன.

மேலும் மனதின் உணர்ச்சிகளான அழுகை, சந்தோசம், கோபம் முதலியவைகளையும் ஹார்மோன்களே நிர்வகிக்கின்றன.

இந்த சர்வாங்காசன பயிற்சியானது மேற்குறிப்பிட்டுள்ள 8 வகையான நாளமில்லா சுரப்பிகளில் குறிப்பிட்ட 4 வகையான சுரப்பிகளை சுறுசுறுப்பாக இயங்குபடி செய்கின்றன. அவை பிட்யூட்டரி (pituitary gland) , பினியல் (pineal glands), தைராய்டு (Thyroid), பாரா தைராய்டு (Parathyroid).

எனவே, சர்வாங்காசனாவைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் இந்த நான்கு வகையான சுரப்பிகளின் செயல்பாடுகளை ஓரளவாவது தெரிந்து கொண்டால்தான் சர்வாங்காசனப் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

பிட்யூட்டரி சுரப்பி - Pituitary gland.

(ஹைப்போபைஸிஸ்)

இது நம்முடைய தலையில் மூளைப்பகுதியில் அமைந்துள்ளது. மூளையின் அடிப்பகுதியில் "ஹைப்போதலாமஸ்"ஸோடு (Hypothalamus) இணைந்துள்ள இந்த சுரப்பியின் அளவு ஒரு பட்டாணியின் அளவே!!

ஒரு பட்டாணி அளவில் அமைந்துள்ள இந்த சுரப்பியின் எடை வெறும் அரை கிராம் அளவு மட்டுமே.

இந்த சுரப்பியானது பொதுவாக உடலின் சமநிலையை ஒழுங்குபடுத்தும் ''ஹோமியோஸ்டாஸிஸ்'' (Homeostasis) என்னும் ஹார்மோனை சுரக்கிறது. அதுமட்டுமல்லாமல் உடலிலுள்ள பிற அனைத்து நாளமில்லா சுரப்பிகளையும் தூண்டக்கூடிய ''டிராபிக்'' (tropic hormone) வகை ஹார்மோன்களையும் இது உற்பத்தி செய்கிறது.

மனித உடலிலுள்ள அனைத்து நாளமில்லா சுரப்பிகளை இயக்குவதும் கட்டுப்படுத்துவதும் மூளையில் அமைந்துள்ள இந்த ''பிட்யூட்டரி'' சுரப்பியின் வேலை!..

பிட்யூட்டரி சுரப்பி பாதிப்படைந்தால் உடலிலுள்ள அனைத்து நாளமில்லா சுரப்பிகளின் இயக்கங்களும் பாதிக்கப்படும் என்பது உறுதி.

இதன் சுரப்பு அளவில் குறைந்தாலும் கூடினாலும் அது உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பிட்யூட்டரி சுரப்பி குறைவாக ஹார்மோனை சுரந்தால் பசியின்மை, உடலில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த குறைவு ஏற்படுவதோடு பெண்களுக்கு பூப்படைதல் தள்ளிப்போவதோடு மாதவிடாய் சுழற்சியிலும் பாதிப்பை உண்டாக்கும்.

பிட்யூட்டரி சுரப்பி அதிகமாக ஹார்மோனை சுரந்தால் இரத்த அழுத்தம், தலைவலி அதிகரிப்பதோடு பார்வைக்குறைபாடும் உண்டாகும். உடல் எடை அதிகரிக்கும். இன்னும் பலவித பாதிப்பையும் ஏற்படுத்தும்.

பிட்யூட்டரி அனைத்து நாளமில்லா சுரப்பிகளையும் கட்டுப்படுத்தும் தலைமை சுரப்பி ஆதலால் இதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பிற அனைத்து நாளமில்லா சுரப்பிகளும் கடுமையான பாதிப்புக்குள்ளாகும்.

பினியல் சுரப்பி.

Pineal glands.

இதுவும் நம்முடைய தலையின் மூளைப்பகுதியிலேயே அமைந்துள்ளது. இந்த சுரப்பியானது ''மெலட்டோனின்'' (Melatonin) என்னும் ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன் சூழ்நிலைக்கு ஏற்ப நம்முடைய தூக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

தைராய்டு சுரப்பி.

Thyroid.

நம் கழுத்துப்பகுதியில் ஒரு சுரப்பி உள்ளது. அதன் பெயர் ''தைராய்டு''. மனித உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளில் மிகப் பெரியது தைராய்டுதான். இது உடலுக்கு மிகவும் இன்றியமையாத சுரப்பியாகும்.

இந்த சுரப்பி நம்முடைய கழுத்தின் முன்பகுதியில் குரல்வளைக்கும் கீழ் 4 செ.மீ உயரத்துடனும் 15 முதல் 20 கிராம் எடையுடனும் காணப்படுகின்றன.

நம்முடைய உடலின் முறையான வளர்ச்சிக்கும். உடலில் ஏற்படும் பலவித வளர்ச்சிதை மாற்றத்திற்கும் முக்கிய காரணியாக திகழ்வது தைராய்டு சுரப்பி. எனவே இது உடலின் ''ஆளுமை சுரப்பி'' என அழைக்கப்படுகிறது.

இது ''தைராக்சின்'' (Thyroxine) என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன் நம் உடலின் திசு வளர்ச்சி, எலும்புகள் வளர்ச்சி, நரம்புகள் வளர்ச்சி, மூளை வளர்ச்சி இவைகளுக்கு துணைபுரிவதோடு நோய்கள் எதுவும் அண்டாமல் உடலை தற்காத்துக்கொள்வதிலும் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.

மேலும் நாம் சாப்பிடும் உணவிலுள்ள சர்க்கரை, புரதம், கொழுப்பு, முதலியவைகளை சக்தியாக மாற்றும் தன்மையை கல்லீரலுக்கு அளிக்கிறது. நம் உடலின் சீதோஷ்ணத்தை சமநிலை படுத்தும் வேலையையும் இதுவே கவனித்து கொள்கிறது.

மேலும், நம் உடலின் தலையாய உறுப்புகளான மூளை, இருதயம், சிறுநீரகம், இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியங்களிலும் தீவிர பங்காற்றுகிறது.

தைராய்டு சுரப்பு குறைவாக சுரந்தால் பலப்பிரச்சினைகள் உடலில் ஏற்படலாம். அவை கைகால் உளைச்சல், தசைப்பிடிப்பு, உடல்வலி, உடல்பாரம், உடல் பருமன், வறண்ட தோல், பசியின்மை, சோம்பல், தூக்கம், பரபரப்பு, அதிக வியர்வை, முடி கொட்டுதல், மறதி மற்றும் மலச்சிக்கல் ஆகிய உடல் உபாதைகள் காணப்படலாம்.

மேலும் இள வயது பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படுவதுண்டு. அதாவது அதிக ரத்த போக்குடைய மாதவிடாய் கோளாறு ஏற்படலாம். கருத்தரித்தலிலும் பிரச்னை ஏற்படலாம். பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படலாம்.

தைராய்டு சுரப்பு அதிகமாக சுரக்கும் பட்சத்தில் அதிக தாகம், அதிக பசி, நடுக்கம், எரிச்சல், இருதய பாதிப்பு, கண்பார்வை குறைபாடு, எடை குறைவு,  மாதவிடாய் குறைவு முதலிய பாதிப்புகள் ஏற்படலாம்.

Sarvangasana

பாரா தைராய்டு.

Parathyroid.

தைராய்டு சுரப்பியின் அருகிலேயே பின்புறத்தில் பக்கத்திற்கு இரண்டு என்னும் விகிதத்தில் வட்டவடிவில் நான்கு சிறு திட்டுகளாக அமைந்துள்ளது. இதற்கு ''பாரா தைராய்டு'' (Parathyroid ) என்று பெயர்.

இது ''பாராதார்மோன்'' (Parathormon) என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது மனித உடல் மற்றும் இரத்தத்தில் ''கால்சியம்'' மற்றும் ''பாஸ்பரஸின்'' அளவை நிர்வகிக்கிறது.

இதிலிருந்து நம் உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் கட்டிக்காக்கும் பொறுப்பு பிட்யூட்டரி, பினியல், தைராய்டு, பாரா தைராய்டு என்னும் இந்த நான்கு வகையான சுரப்பிகளுக்கு இருப்பதை நம்மால் உணரமுடிகிறது.

மேற்குறிப்பிட்ட இந்த சுரப்பிகள் ஆரோக்கியமாக இருந்தால் நம் உடலும் நலமாக இருக்குமல்லவா?

இந்த நான்கு சுரப்பிகளையும் வளப்படுத்தும் வேலையைத்தான் இந்த சர்வாங்காசனம் என்னும் யோக பயிற்சி செம்மையாக செய்து முடிக்கிறது. எனவேதான் இந்தப்பயிற்சி உடலின் மொத்த உறுப்புகளையும் நலப்படுத்தும் பயிற்சியாக இனங்காணப்பட்டுள்ளது. இது எவ்வாறு இந்த சுரப்பிகளை இயக்குகிறது என்பதை பார்ப்பதற்கு முன்னால் இதனை பயிற்சி செய்வது எப்படி என்பதனை முதலில் பார்ப்போம்.

சர்வாங்காசனம்.

Sarvangasana.

குறிப்பு - இந்த பயிற்சியை தொடங்குவதற்கு முன்னால் பொதுவாக யோகாசனப் பயிற்சி செய்யும்போது கடைபிடிக்கவேண்டிய முக்கியமான விதிமுறைகளைப்பற்றி அறிந்துகொள்ள கீழேயுள்ள "லிங்க்" ஐ கிளிக் செய்து 

மேற்குறிப்பிட்ட பதிவில் சென்று தெளிவாக அறிந்துகொண்டு அதன்பின் இப்பயிற்சியை தொடங்கவும்.

செய்முறை - ஒரு கெட்டியான ஜமுக்காளத்தை நான்காக மடித்து தரையில் விரித்துக்கொள்ளுங்கள். அதன்மீது அமர்ந்து கால்களை நேராக நீட்டி மல்லாந்து படுத்து கைகளை பக்கவாட்டில் உடலை தொட்டாற்போல வைத்திருங்கள்.

மூச்சுக்காற்றை வெளியேற்றியபடியே கால்களின் முட்டியை மடக்கி பிருஷ்டம் மற்றும் இடுப்பை மேலே உயர்த்தி இருகைகளாலும் இடுப்பில் முட்டுக்கொடுத்து உள்ளங்கைகளால் தாங்கிப்பிடிக்கவும்.

Sarvangasana steps by steps

பின் மூச்சுக்காற்றை இயல்பாகவிட்டுக்கொண்டு உடலை அசுவாசப்படுத்திவிட்டு மூச்சுக்காற்றை வெளிவிட்டபடியே உடலை மெதுவாகவும் நளினமாகவும் செங்குத்தாக மேலே உயர்த்தவும். உடலை திடீரென்று ஏற்றி இறக்குவது ஆபத்தை விளைவிக்கும். எனவே பயிற்சியை மிதமான வேகத்தில் செய்யவும்.

இந்நிலையில் தலை, கழுத்து, தோள்கள் மற்றும் முழங்கைகள் மட்டுமே தரையை தொட்டபடி இருக்கவேண்டும்.

முதுகு, இடுப்பு, பிருஷ்டம் மற்றும் கால்கள் நேராக தரைக்கு செங்குத்தாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இருகால்களின் பாதம் மற்றும் விரல்கள் மேல்நோக்கி இருக்க வேண்டும். உடலின் எடைகள் முழுவதையும் தலை, கழுத்து மற்றும் தோள்பட்டை தாங்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

Sarvangasana female

இந்நிலையில் 3 முதல் 5 நிமிடம்வரை இருக்கலாம். மூச்சுக்காற்றை இயல்பாக விடவும். இந்த சமயத்தில் மனதை இங்கும் அங்கும் அலைபாய விடாமல் அதன் முழு கவனமும் உங்கள் உடல்மீதே இருக்க வேண்டியது அவசியம். 3 அல்லது 5 நிமிட நேரம் அப்படியே இருந்துவிட்டு இடுப்பை மெதுவாக இறக்கி சகஜ நிலைக்கு வரவும். இப்பயிற்சியை 2 முதல் 3 தடவை செய்துவரலாம்.

பயன்கள்.

உடலின் மொத்த எடையையும் தோள்பட்டை, கழுத்து, தலை இவைகளே தாங்குவதால் சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள உள்ளுறுப்புகள் நன்கு வலுவடைகின்றன.

இப்பயிற்சியால் உடல் தலைகீழாக்கப்படுவதால் கழுத்திலுள்ள நாளமில்லா சுரப்பிகளான தைராய்டு, பாராதைராய்டு முதலியவவைகள் நன்கு அழுத்தப்பட்டு தூண்டப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் தலைப்பகுதியிலுள்ள பிட்யூட்டரி, பினியல் சுரப்பிகளுக்கும் சுத்த இரத்தம் செலுத்தப்பட்டு புத்துணர்வு பெறுகின்றன.

தலை மற்றும் கழுத்திலுள்ள நாளமில்லா சுரப்பிகளுக்கு இப்பயிற்சி நல்லதொரு அழுத்தம் நிறைந்த மசாஜாக இருப்பதால் உடலிலுள்ள சர்வ அங்கங்களுக்கும் இப்பயிற்சி ஆரோக்கியத்தைக் கொடுக்கின்றன.

மேலும் இப்பயிற்சியின்மூலம் குடலிறக்கப்பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இப்பயிற்சி சுவாசமண்டலம், இரத்தவோட்டமண்டலம், ஜீரணமண்டலம் முதலியன சிறப்பாக பணியாற்ற உதவுகின்றன.

சிறுநீரக கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள், சர்க்கரை வியாதி, வெரிகோஸ் வெயின், குதிகால்வலி மற்றும் பாதநோய்கள் குணமாகும்.

இப்பயிற்சியால் முதுகுத்தண்டும் நன்கு பலம்பெறுகின்றன. மேலும் மூலநோய் நீங்குவதோடு மலச்சிக்கலும் முடிவுக்கு வருகின்றன. இளமை அதிகரிக்கும்.

Sarvangasana male

மாற்று ஆசனம்.

இந்த ஆசனத்தை செய்து முடித்தவுடன் இதற்கு அடுத்த ஆசனமாக "மச்சாசனத்தை" கண்டிப்பாக செய்ய வேண்டியது அவசியம்.

பொதுவாக யோகாசன பயிற்சியில் முதலில் செய்யப்படும் ஆசனத்தில் எந்தப்பக்கமாக உடல் திருக்கப்படுகிறதோ அல்லது வளைக்கப்படுகிறதோ அதற்கு எதிர்பக்கமாக உடல் திருகப்படும் விதத்தில் அல்லது வளைக்கப்படும் விதத்தில் இரண்டாவதாக பயிற்சி செய்ய தேர்ந்தெடுக்கப்படும் ஆசனம் அமையவேண்டும். இதனை "மாற்று ஆசனம்" என்பர்.

இதுபோல பல ஆசனங்களுக்கு மாற்று ஆசனங்கள் உண்டு. அதனை முழுமையாக அறிந்துகொண்டு முறையாக பயிற்சி செய்யவேண்டும். அப்படி தேர்ந்தெடுத்து பயிற்சி செய்தால்தான் தேவையில்லாத தசைப்பிடிப்பு, நரம்பு சுளுக்கிலிருந்து தப்பிக்க முடியும். இது யோகாசனப்பயிற்சியின் பொதுவான விதி.

அந்தவகையில் இந்த சர்வாங்காசனம் பயிற்சியில் கழுத்து உட்பக்கமாக வளைக்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம். எனவே இந்த ஆசனம் செய்து முடித்தவுடன் இதற்கு அடுத்த இரண்டாவது ஆசனமாக கழுத்து வெளிப்பக்கமாக வளைக்கப்படும் "மச்சாசனத்தை" [மச்சாசனம்] தேர்தெடுத்து பயிற்சி செய்யவேண்டியது மிகமிக அவசியம்.

இவ்வாறு பயிற்சி செய்தால்தான் உடல் எல்லாப்பக்கமும் பிரீயாக ரப்பர்போல் வளையும் தன்மையைப்பெறும். இந்த விதிமுறையை கடைபிடிக்க தவறினால் கழுத்துவலி மற்றும் கழுத்து ஒருபக்கமாக சுளுக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

Machasana

மச்சாசனம் பயிற்சி செய்வது எப்படி என்பதனை கீழேயுள்ள "லிங்க்" ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

>> மச்சாசனம் - அர்த்த மச்சாசனம் - Matsyasana - Machasana - Half Fish Pose <<

எச்சரிக்கை.

சர்வாங்காசன பயிற்சியில் கால்களை மேலே தூக்கி செங்குத்தாக இருக்கும்போது உடல் முன்னும் பின்னும் அசையாமல் நேராக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

தலை, கழுத்து, தோள்பட்டை, முதுகு, இடுப்பு இவைகளில் வலிசார்ந்த பிரச்சனைகள் ஏதாவது இருந்தால் சர்வாங்காசனம் பயிற்சி செய்வதை தவிர்க்கவும்.

இரத்த அழுத்தம், இதய பலவீனம் மற்றும் இதய நோயுள்ளவர்கள் சர்வாங்காசனம் பயிற்சியில் ஈடுபடுதல் கூடாது. வேறு எளிய யோகாசானப் பயிற்சிகள் பயின்று மேற்கூறிய நோய்கள் நீங்கியபின் இப்பயிற்சியை தொடங்கலாம்.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் இப்பயிற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும்.

சர்வாங்காசன பயிற்சி மற்றும் மச்சாசனம் ஆகிய இரு பயிற்சிகளுடன் நிறுத்திவிடாமல் இதனுடன் மேலும் சில ஆசனங்களையும் சேர்த்து பயிற்சிசெய்து வருவது மிகமிக அவசியம். இது மேலும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

அன்றைய ஆசனப்பயிற்சிகள் நிறைவுபெற்றபின் கடைசி ஆசனமாக >> "சவாசனம்" (சாந்தி ஆசனம்) << என்னும் உடலை ரிலாக்ஸ் செய்யும் ஆசனத்தை கண்டிப்பாக பயிற்சி செய்த பின்பே அன்றைய பயிற்சியை நிறைவு செய்யவேண்டும்.

💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.